டியர் முரளி,
'அன்னையின் ஆணை' வெகுநாட்கள் பார்க்கவேண்டும் என்று துடித்து, பின்னர் கல்லூரி நாட்களில் சென்னை ஓடியன் திரையரங்கில் ஒரு வாரம் மட்டும் திரையிடப்பட்டபோது, ஓடிச்சென்று பார்த்து மகிழ்ந்த படம். அதன்பிறகு பார்க்க முடியாததால், கிட்டத்தட்ட அதன் சம்பவங்கள் மறந்து போன நிலையில், தற்போது உங்கள் திறனாய்வுக்கட்டுரை படித்தபோது, முழுத்திரைப்படமும் அப்படியே மனதில் நிழலாடியது. பின்னே, விவரித்திருப்பது நீங்கள் ஆயிற்றே.
அப்போதைய திரைப்படங்களில் இடம் பெற்ற சாம்ராட் அசோகன் (இப்படம்), அனார்கலி (இல்லற ஜோதி), சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் (ராஜா ராணி) ஆகிய ஓரங்க நாடகங்கள் அப்போது பள்ளி, கல்லூரி விழாக்களில் மாணவர்களால் மேடைகளில் நடிக்கப்பட்டனவாம். (தகவல்: என் தந்தையார்). 1976-ல் ரோஜாவின் ராஜா படத்திலும் இதே 'சாம்ராட் அசோகன்' நாடகம் நடிகர்திலகத்தால் நடிக்கப்பட்டது. ஆனால் நடிகர்திலகத்தின் சாம்ராட் அசோகன் நாடகத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக, சுருளிராஜனை விட்டு 'கட்டபொம்மன்' நாடக வசனம் பேச வைத்திருந்தபோது மனம் வலித்தது. அதேபோல 'விடுதலை' படத்தில் நடிகர்திலகமே மீண்டும் போலீஸ் அதிகாரி உடையில் 'கட்டபொம்மன்' வசனம் பேசியபோதும் சுவைக்கவில்லை.
அன்னையின் ஆணையில் நடிகர்திலகம், நடிகையர் திலகத்துக்கு அடுத்து நம்மைக்கவர்பவர் நம்பியார்தான். (இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச்சொல்ல வேண்டும். வழக்கமாக திரு எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லும்போது கூடவே நம்பியார் பெயரையும் குறிப்பிடுவார்கள். அதாவது அவர்கள் இருவரும் அதிகப்படங்களில் இணைந்து நடித்திருப்பதாகத்தான் பெரும்பாலோரது எண்ணம். ஆனால் சமீபத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரது படப்பட்டியலை (செம்மொழியில்: பிலிமோகிராபி) ஒப்பிட்டுப்பார்த்தபோது ஒரு ஆச்சரியம் கண்டேன். மக்கள் திலகத்தை விட நடிகர்திலகத்துடன்தான் திரு எம்.என்.நம்பியார் அதிகப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதே சமயம் நடிகர்திலகத்துடன் மிக அதிகப்படங்களில் இணைந்து நடித்திருப்பவர் என்ற பெருமை பெற்றவர் 'பெரியவர்' வி.கே.ராமசாமி அவர்கள்).
திருச்சி வெலிங்டன் என்றதும், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது, முதல் ப்டமான 'பராசக்தி'யை 245 நாட்கள் ஓடவைத்து மாபெரும் வெற்றிப்படமாக்கியதன் மூலம், தமிழ்த்திரையில் திருப்பம் ஏற்படக் காரணமாயிருந்த திரையரங்கம் என்பதுதான். அன்னையின் ஆணையும் அங்கேயே அதிக நாட்கள் ஓடியிருப்பது கூடுதல் சிறப்பு.
(திருச்சியில் ஒரே காம்பவுண்டுக்குள் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன், ராக்ஸி அரங்குகளில் (உரிமையாளர்கள் ஷம்சுதீன், பாஷா என்ற அண்ணன் தம்பிகள்) 1961-ல் வெலிங்டனில் நடிகர்திலகத்தின் ‘ஸ்ரீவள்ளி’யும், ராக்ஸியில் மக்கள் திலகத்தின் ‘சபாஷ் மாப்பிளே’யும் ஓடியபோது, இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு வன்முறையாக மாறி, ரத்தக்களறி ஏற்பட்டு, போலீஸ் அதிகாரிகள் வந்து, இரண்டு நாட்கள் படக்காட்சிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் இரண்டு படங்களுமே வெவ்வேறு இடங்களிலுள்ள வேறு தியேட்டர்களுக்கு மாற்றப்பட்டு, வெலிங்டனில் ஜெமினி படமும் (பனித்திரை..?), ராக்ஸியில் எஸ்.எஸ்.ஆர். படமும் (பணம் பந்தியிலே...?) திரையிடப்பட்டன).
'அன்னையின் ஆணை'யை மீண்டும் எழுத்துருவில் திரையிட்டமைக்கு நன்றி.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.