குறுகிய காலத்தில் 1,000 பதிவுகள் இட்டு, அதிலும் வரலாற்று ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
குறுகிய காலத்தில் 1,000 பதிவுகள் இட்டு, அதிலும் வரலாற்று ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள் திலகத்தின் '' சபாஷ் மாப்பிளே'' 14.7.1961
55வது ஆண்டு துவக்கம் . மக்கள் திலகம் -எம் ஆர் ராதா கூட்டணியில் வந்த முதல் படம் .மிக சிறந்த நகைசுவை படம் .
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி சகோதரர் திரு.ஹயாத் அவர்களின் தாயார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். திரு.ஹயாத்துக்கு எனது அனுதாபங்கள். புனித ரமலான் நோன்பு காலத்தில் கடைசி 10 நாட்கள் மிகவும் தீவிரமான நோன்பு நாட்கள். அந்த புனித நாளிலே மறைவெய்திய திரு.ஹயாத்தின் தாயார் ஒரு புனித ஆத்மா.
ஹதீஸ் கூறுகிறது...
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன் (அபூதாவூத்)
..........மத நம்பிக்கையாளர்களின் கருத்துக்களின்படி, சகோதரர் ஹயாத்தின் தாயார் நிச்சயம் சுவர்க்கத்தில் அல்லாஹ்வின் திருவடியில் சேர்ந்திருப்பார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘உன் சீரிளமைத் திறம் வியந்து.....’
மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற திரை இசை சக்ரவர்த்தி, மெல்லிசை மன்னர், எம்.எஸ்.வி. என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் அமரராகிவிட்டார். இசையும் அவரும் இரட்டைப் பிறவிகள். அவருடனே இசையும் பிறந்தது. 13 வயதிலேயே மேடையில் கச்சேரி செய்யும் அளவுக்கு மேதையாக விளங்கியவர். இசை ஆர்வம் இருந்தாலும் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் அவருக்கு ஆசை. மிகவும் குள்ளமாக இருந்ததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அது தனது துரதிர்ஷ்டம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நமது அதிர்ஷ்டம் அது. இல்லாவிட்டால் அந்த மேதையின் தேனிசையில் நாம் மூழ்கி இருக்க முடியுமா?
ஏறத்தாழ, 60 ஆண்டுகளாக ஆர்மோனியப் பெட்டியில் ஜாலம் புரிந்த தனது விரல் நுனிகளில் வைத்திருந்த இசையால், தமிழர்களை கட்டிப் போட்டவர். கடந்த 3 தலைமுறையைச் சேர்ந்த தமிழன் எவனும் அவரது பாடல்களை முணுமுணுக்காமல் இருக்க மாட்டான்.
நடிகராகும் ஆசையில் கோவை ஜூபிடர் பிக்சர்ஸில் சேர்ந்து, அது நிறைவேறாமல் பழம்பெரும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் இசை பயின்று, பின்னர் இசையமைப்பாளர் திரு.சி.ஆர்.சுப்பராமன் இசைக்குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியாற்றி, திரு.சுப்பராமன் அவர்களின் திடீர் மறைவால், அவர் ஒப்புக் கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை முடித்துக் கொடுத்தார். மக்கள் திலகம் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் 4 பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ‘பணம்’ திரைப்படம் மூலம் திரு.சுப்பராமன் இசைக்குழுவில் வயலின் கலைஞராக இருந்த ராமமூர்த்தியுடன் இணைந்து முதன்முதலில் இசையமைத்தார்.
அதிலிருந்து, மக்கள் திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் வரை சுமார் 700 படங்களுக்கு இரட்டையர்களின் இசைப்பயணம் தொடர்ந்தது. அதன் பிறகும் 500 படங்களுக்கு மேல் எம்.எஸ்.வி. தனித்து இசையமைத்துள்ளார்.
திரை இசையில் கர்நாடக சங்கீதத்தின் தாக்கமே அதிகமாக இருந்த காலத்தில், அதை பாமரனும் கேட்டு ரசிக்கும்படி இசையை எளிமையாக்கிக் கொடுத்த மேதை திரு.எம்.எஸ்.வி. அவர்கள். கர்நாடக இசையில் மேற்கத்திய இசையை கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக்கினார். எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. ஆனால், திரையில் அவர் இசையமைத்த பல பாடல்களைக் கேட்டுத்தான் இந்த பாட்டு இந்த ராகம் என்று அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய அளவுக்கு என்னைப் போன்ற பாமரனுக்கும் எளிமையாக இசையை புகட்டியவர் அவர். பின்னணிப் பாடகர்களைக் கொண்டு மெல்லிசைக் கச்சேரிகளை முதன் முதலில் மேடையில் அரங்கேற்றியவர் என்ற பெருமைக்குரியவர் . 1965-ம் ஆண்டு போர்முனைக்குச் சென்று தனது குழுவினரோடு பாடி நமது வீரர்களை உற்சாகப்படுத்திய தேசபக்தர்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழர்களை இசையால் கட்டிப் போட்டிருந்த மேதைக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பது வேதனை. 2012-ம் ஆண்டில் ஜெயா டிவி சார்பில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் பாராட்டு விழா நடந்தது. முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், அந்த இசை மேதைகளுக்கு தனித்தனியே ஃபோர்டு ஃபியஸ்டா காரும், தங்கக் காசுகள் கொண்ட பொற்கிழியும் பரிசளித்தார். ‘திரை இசை சக்ரவர்த்தி’ என்ற பட்டமும் வழங்கினார்.
அப்போது பேசிய செல்வி. ஜெயலலிதா அவர்கள் ‘‘பத்ம விருதுகளுக்காக மெல்லிசை மன்னர்களின் பெயரை பரிந்துரை செய்தபோதும் மத்திய அரசு அதை நிராகரித்தது’’ என்று குறிப்பிட்டார். எவ்வளவு வருத்தப்பட வேண்டிய விஷயம்? இன்று கூட செல்வி. ஜெயலலிதா அவர்கள் தனது இரங்கல் செய்தியில் மீண்டும் இதை தெரிவித்துள்ளார்.
மக்கள் திலகம் நடித்த காவல்காரன் படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது...’ பாடலில் பெர்ஷியன் இசையையும் உலகம் சுற்றும் வாலிபனில் ‘பன்சாயி...’ பாடலில் ஜப்பானிய இசையையும் நாம் ரசிக்க கொடுத்த மேதை எம்.எஸ்.வி. அவர்கள். பெர்ஷிய இசை, ஜப்பானிய இசை என்றெல்லாம் தெரியாமலேயே இந்தப் பாடல்களை பாமரனும் பாடச் செய்தவர்.
அவரது திரை இசையின் உச்சம் என்று நான் கருதுவது உலகம் சுற்றும் வாலிபன். இசைக்காகவே அதிகம் செலவழிக்கப்பட்ட படம். படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, படம் முழுவதும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள், புத்தர் கோயில் சண்டைக் காட்சி, ஹோட்டல் துஸித்தானி காட்சி, எக்ஸ்போ 70-ல் எடுக்கப்பட்ட காட்சிகள், கிளைமாக்சில் ஸ்கேட்டிங் சண்டை காட்சி என்று ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப அவரது இசை ஜாலம் புரியும். கண்ணை மூடிக் கொண்டு படத்தின் இசையை மட்டும் கேட்டால், நாமே ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். அதுதான் அவரது வெற்றி.
அந்தப் படத்தின் பாடல்களுக்காக, திரு.எம்.எஸ்.வி. எத்தனையோ டியூன்களைப் போட்டும் மக்கள் திலகம் அவற்றை எல்லாம் திருப்தியாக இல்லை என்று சொல்லி நிராகரித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இனி முடியாது என்று எம்.எஸ்.வி. சொல்லிவிட்டார். பிறகு, அவரை மக்கள் திலகம் அழைத்து இசையமைத்ததற்காக பணம் கொடுத்திருக்கிறார். ‘உங்களுக்கு திருப்தி இல்லை என்று நீங்கள் சொன்ன பிறகு பணம் வாங்க மாட்டேன்’ என்று மறுத்திருக்கிறார் எம்.எஸ்.வி.
மக்கள் திலகம் சிரித்துக் கொண்டே, ‘நீ போட்ட மெட்டுக்கள் நன்றாகத்தான் இருந்தன. மேலும், சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகத்தான் திருப்தியாக இல்லை என்று சொன்னேன்’’ என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார். அப்போதும் பணம் வாங்க அவர் மறுத்த நிலையில், ‘சரி, போ’ என்று சொல்லிவிட்டு, எம்.எஸ்.வி.யின் தாயாருக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார் மக்கள் திலகம். அந்தப் பணம், தமிழ் திரையுலகில் இசையமைப்புக்காக அதுவரை யாரும் பெறாத பெரும் தொகை.
பாடல்கள் நன்றாக வரவேண்டும், ரசிகர்களுக்கு விருந்தாக்க வேண்டும் என்று, எந்த அளவுக்கு மக்கள் திலகமும், அவரது விருப்பத்துக்கேற்ப ஏராளமான டியூன்கள் போட்டு, அவர் திருப்தியடையவில்லை என்பதால் பணம் வாங்க மறுத்து எம்.எஸ்.வியும், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுள்ளனர் என்பதை நினைத்தால் மனம் சிலிர்க்கிறது.
எம்.எஸ்.வி.யின் ஈடுபாட்டுக்கும் இசையில் சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும் மற்றொரு உதாரணம். இன்று காலையில் தனியார் தொலைக்காட்சியில் நான் பார்த்ததை கூறுகிறேன். தான் நினைத்தபடி பாடல் வரவில்லை என்றால் பாடகர்களை எம்.எஸ்.வி. கடுமையாக திட்டுவாராம். இன்று காலை தனியார் தொலைக்காட்சியில் எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி நிகழ்ச்சியாக எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம் பேட்டி எடுத்தனர். ஈஸ்வரி அவர்கள் கூறும்போது, ‘‘பாடலை அவர் நினைத்த வகையில் நான் பாடவில்லை என்றால் கடுமையாக திட்டுவார். திட்டு என்றால் உங்க வீட்டு திட்டு, எங்க வீட்டு திட்டு அல்ல, அப்படி திட்டுவார். அதேபோல, நன்றாக பாடி முடித்ததும் அவரைப் போல யாரும் பாராட்ட முடியாது’’ என்றார்.
அப்படி, பாடல்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக இரவு, பகலாக தான் உழைத்தது மட்டுமின்றி மற்றவர்களிடமும் அதே பர்ஃபெக்க்ஷனை எதிர்பார்த்துள்ளார் எம்.எஸ்.வி., மக்கள் திலகத்தைப் போல.
அப்படி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போலவே, அதில் நடித்த மக்கள் திலகத்தைப் போலவே, படத்தின் இசையும் இன்றும் இளமையாகவே உள்ளது.
அவரை இழந்து நாம் எல்லாருமே துயரில் வாடும்போது யாருக்கு யார் ஆறுதல் சொல்லி தேற்றுவது?
உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் உடல் இயக்கத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக, இளமையாகவே இருந்தார் எம்.எஸ்.வி.
அவருக்கு உள்ள சிறப்புகளிலேயே மிகப் பெரிய சிறப்பு.... மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த....’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவர் இசையமைத்தது. எந்த ஒரு முக்கிய விழாவும் அவரது இசை ஒலிக்காமல் நடக்காது. தமிழ் என்றாலே இளமை, அழகு, மோகனம்தானே. அதனால், அந்தப் பாட்டுக்கும் மோகன ராகத்திலேயே மெட்டமைத்தார் அந்த பிறவி மேதை.
தமிழ்த் தாய் வாழ்த்தின் கடைசியில் ‘உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்று தமிழன்னையை வாழ்த்துவதாக முடியும். திரு.எம்.எஸ்.வி. உடலால் மறைந்திருக்கலாம். என்றும் இளமை ததும்பும் அவரது இசை மறையாது. அவரது இசையை நாளைய உலகமும்......
சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தும்.
வாழ்க திரை இசை சக்ரவர்த்தியின் புகழ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்