வாரிசை நடிகர் ஆக்காத ஜெய்சங்கருக்கு புகழாரம்!
Jai Shankar’s son to launch website
வாரிசுகளை நடிகராக்கி பணம் சம்பாதிக்கும் சினிமாத்துறையிவர் மத்தியில், தனது வாரிசை டாக்டர் ஆக்கி சமூக நலப்பணிகளில் ஈடுபட வைத்திருப்பவர் மறைந்த நடிகர் ஜெய்சங்கர். வாழ்ந்த வரை பலருக்கு பலவித உதவிகளை செய்து நல்ல மனிதர் என பெயரெடுத்தவர் நடிகர் ஜெய்சங்கர். தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்ட ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் பிரபல கண் மருத்துவ நிபுணர். சங்கர் ஐ கேர் என்ற பெயரில் சென்னையில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஆர்.ஏ.புரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஏராளமான இலவச கண் மருத்துவ முகாம்களை நடத்தி சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் விஜய் சங்கர் தனது தந்தை *ஜெய்சங்கர் பெயரில் ஒரு இணையதளத்தை (
www.jaishankar.in) தொடங்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சி விஜய்சங்கரின் மருத்துவமனையில் நடந்தது.
இதில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கமிஷனர் ராஜேந்திரன் பேசுகையில், ஜெய்சங்கரின் சமூக சேவையை எடுத்துரைத்தார். "தனது வாரிசை நடிகன் ஆக்க முயற்சிக்காத அரிய கலைஞர் ஜெய்சங்கர். எத்தனையோ பேருக்கு வெளியில் தெரியாமல் உதவியவர். டாக்டர் விஜய்சங்கரும் நடிப்பு துறைக்கு போகாமல் அப்பாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த இணையதளம் அவரது சமூகப் பணிகளுக்கு உதவியாக இருக்கும்" என்று கமிஷனர் ரஜேந்திரன் பேசினார்.