Quote:
அமுதகானம்-1000
மனதை கவரும் பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தொகுப்பாக மெகா டிவியில் `அமுதகானம்' என்ற நிகழ்ச்சி தினமும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. பாடல்களின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர்கள், படம் வெளியான வருடம், பாடல்கள் உருவான சுவாரசியமான தகவல்களை திரைப்பட இயக்குனர் ஆதவன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது.
தற்போது ஆயிரம் எபிசோடுகளை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் வெற்றி விழா சென்னை காமராஜர் அரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியும் நடத்தினார்.
அமுதகானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இயக்குனர் ஆதவன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு விருதுகள் வழங்கி கவுரவித்தார். மெகா டி.வி. நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தங்கபாலு வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் படஅதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர்கள் சி.வி.ராஜேந்திரன், எஸ்.பி. முத்துராமன், பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், பாடகிகள் பி.சுசீலா, எம்.எஸ். ராஜேஸ்வரி, கவிஞர்கள் காமகோடியன், முத்துலிங்கம், புலவர் புலமைப்பித்தன், பூவை செங்குட்டுவன் மற்றும் ஏ.எல்.எஸ்.ஜெயந்தி கண்ணப்பன்,திண்டுக்கல் லியோனி, நடிகைகள் சச்சு, சி.ஐ.டி. சகுந்தலா, ராஜஸ்ரீ உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சி மெகா டிவியில் விரைவில் ஒளிபரப்பாகிறது