-
http://padamhosting.com/out.php/i123...h37m34s195.png
இரு மலர்கள் ... 1.11.1967 அன்று வெளியாகி இன்றுடன் 47 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மறக்கமுடியுமா அந்நாட்களை.. ஒரு பக்கம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு ஊட்டி வரை உறவு மறுபக்கம் குடும்ப பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட இருமலர்கள் - இரு வேறு பட்ட கதையம்சங்களை ஒரே நாளில் வெளியிட்டு இரண்டுமே வெற்றி பெற வைத்த சிறப்பினைப் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே.
http://www.youtube.com/watch?v=zVGrq48SEGI
ஸ்டைல்... இந்த வார்த்தைக்கு அகராதியில் சிவாஜி கணேசன் என கூறி விடலாம்.. வானில் விழும் வில் போல் என்ற வரிகளின் போது இரு விரல்களை புருவத்திற்க்கு நேராக கொண்டு சென்று அவர் காட்டும் அபிநயம் அதே சமயத்தில் முகத்தில் காட்டும் பாவனை ... ஆஹா... பார்க்கவும் ரசிக்கவும் இறைவன் படைத்த அற்புதக் கலைஞன்...
பார்க்கப் பல கலைஞர்கள் வரலாம்..
ஆனால் பார்த்து ரசிக்க.. ரசித்துக் கொண்டே பார்க்க... பார்த்துக் கொண்டே ரசிக்க...
ஹ்ம்ம்ம்...
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே...
-
Thanks to Mr Parthasarathy
"நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின், இந்தக் கட்டுரையை மறுபடியும் எழுதுவதில் பேருவகை அடைகிறேன்.
1952-க்குப் பிறகு, தமிழ்க் கலையுலகில், எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளில், நடிகர் திலகத்தின் பங்கு நான்கில் மூன்று பங்கு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இருக்காது. சினிமா என்கிற விஷுவல் மீடியத்தை எப்படி நடிகர் திலகம் புதிய கோணத்தில், விஷுவலாகக் கையாளத் துவங்கினார் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறேன். நிற்கும் விதம் (posture), உடல் மொழி (கை கால்களை மனம் போன போக்கில் அசைக்காமல், அளவோடும், அழகாகவும்) மற்றும் மூவ்மென்ட். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். (இன்னமும் நிறைய பேர் பத்தாம் பசலித் தனமாக, சில படங்களில் வந்த வசனங்களைப் பற்றியும், ஓரங்க நாடகங்களைப் பற்றியும் மட்டுமே, (வேறு எதுவும் கிடைக்காததால்) பேசிக் கொண்டிருக்கின்றனர்!)
அந்த வகையில், இதோ நடிகர் திலகத்தின் இன்னுமொரு புதிய முயற்சி -
எப்போதும் டூயட்டுகளில், ஆணும் பெண்ணும் பாடியது போக, இரண்டு ஆண்கள் பாடும் புதுமை இந்தப் பாடலில் இதே படத்தில் மறுபடியும் இடம் பெற்றது. ("பொன்னொன்று கண்டேன்" பாடலை வேறொரு கட்டுரையில் எழுதி விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
இது ஒரு நிறைய பேரின் பங்களிப்பு கொண்ட ஒரு குழுவின் பாடல் (குரூப் டான்ஸ்). இந்தப் பாடலில், பாடும் இரு கதாநாயகர்களும், அவர்களைப் பற்றியும், சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், அந்தக் குழுவினரோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும்.
இந்தப் பாடலின் துவக்கத்திலேயே, ஒரு வித அசுர வேகம் தெரியும்.
இந்தப் பாடல் துவங்குவதற்கு முன்னர், படித்த அண்ணன் (பாலாஜி), படிக்காத எப்போதும் வேட்டையாடிக் கொண்டு பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் கள்ளமில்லா மனம் கொண்ட தம்பி (நடிகர் திலகம்) இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து, அதில் அண்ணன் மட்டும் நினைத்த மாதிரியே மனைவியை அடைந்து விடுவார். ஆனால், தம்பி, துரதிர்ஷ்டவசமாக, பொருத்தமில்லாத படித்த ஒருவரை மணம் புரிந்து, மனைவி, அவரைத் தன்னைப் படித்தவன் போல் நடித்து ஏமாற்றித் திருமணம் புரிந்து விட்டார் என்று வெறுப்புடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடுவார். இந்த விஷயம், தம்பி தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. இருப்பினும், எல்லோரும் சொந்த கிராமத்துக்கு (எஸ்டேட்) செல்ல, அங்குள்ளவர்கள், இவர்களை வாழ்த்தும் விதமாக கூட்டமாக நடனமாடி மகிழ்விக்கத் துவங்குகையில், அண்ணன் பாடத் துவங்குவார்.
அண்ணன் (பாலாஜி) பல்லவியைத் துவக்கி முடித்தவுடன், சற்றும் எதிர்பாராதவிதமாக, தம்பி (நடிகர் திலகம்) அனு பல்லவியைத் துவங்குவார். தன்னுடைய குணாதிசயத்தை அழகாகக் கூறுவார் - "உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை - ஊருக்குத் தீமை செய்தவனில்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்" என்று பாலாஜியின் பின்னாலிருந்து முகத்தை மட்டும் காட்டும் போது அந்த முகத்திலும், அந்தக் கண்களிலும் தெரியும் அந்தக் குழந்தைத்தனம், மறுபடியும், அந்த வரிகளைப் பாடி அசாத்திய வேகத்துடன், பாலாஜியை நோக்கித் திரும்பி நிறுத்தும் ஸ்டைல்!
இப்போது, சரணம் -
பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை .... சேர்த்துக் கட்டிய முல்லை" எனும்போது ஒரு வித ஸ்டைல்.
"இல்லை இல்லை என்று என்றும் சொன்னவர் இல்லை" என்று பாலாஜி பாடும் போது, இவரது ரியேக்க்ஷன்!
அடுத்து, இரண்டாவது சரணம் -
"சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்" - அந்த ஆர்ப்பரிப்பைக் கவனியுங்கள் - கைகளை வானத்தை நோக்கி அசாத்திய வேகத்துடன் உயர்த்தும் விதம்! "கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்" எனும் போது காட்டும் பாவனை! பாலாஜி பதிலுக்கு, "தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்; தூய உள்ளம் வேண்டும், என்றும் சேவை செய்ய வேண்டும்" எனும்போது, நடிகர் திலகம், இரண்டு கைகளையும் ரொம்பவே லூசாக வைத்துக் கொண்டு இலேசாக ஆடுவது -அவருடைய ஸ்டைலையும் சேர்த்து! குறும்பு கொப்பளிக்கும்!!
இந்தப் பாடல், இந்தப் படத்தின் அந்தச் சூழலுக்குத் தேவையில்லை என்றே தோன்றினாலும், அதற்கு முன்னர் ஏற்படும் ஒரு விதமான இறுக்கமான சூழலை மக்களை மறக்க வைத்து, வேறு ஒரு சூழலை, மக்களுக்கும், ஏன் அந்தப் பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குமே கூடத் தரும்.
பாடல் நெடுகிலும், நடிகர் திலகத்திடம் காணும் அசுர வேகமும், ஸ்டைலும், அதன் மூலம், அவருடைய பாத்திரத்தின் குண நலன் என்ன, பாங்கு என்ன என்பதையும் அவர் காட்டியிருக்கும் விதமும், அற்புதமாக இருக்கும். அவரது குடும்பத்தில் இவர் ஒருவர் தான் காட்டிற்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வதாலும், அவர் எல்லோருடனும் கள்ளம் கபடமின்றி பழகுவதாலும், அவர் மட்டும் பந்தா இல்லாமல் எல்லோரையும் போல் தன்னை மறந்து ஆடி இருப்பார்!
உத்தம புத்திரன் படத்தில் "யாரடி நீ மோகினி" பாடலில், எப்படி பார்வையாளர்களாக நின்ற கொடிய வில்லன்கள் நம்பியார் மற்றும் ஓஎகே தேவர் ஆகியோரையும் சேர்த்து கைத் தட்ட வைத்தாரோ, அதே போல், இந்தப் பாடல் முடிவில், பார்வையாளர்களான, எம்.ஆர்.ராதா மற்றும் ஏ.கருணாநிதி அவர்களையும் சேர்த்து ரசிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு, பாடலும், நடிகர் திலகத்தின் பிரத்யேக வேகமும், நடிப்பும், துடிப்பும், ஸ்டைலும், அந்த இடத்தையும், பார்ப்பவர்களையும் சேர்த்து மயிர்க் கூச்செறிய வைத்து விடும். பாடல் முடிந்து, சில கணங்கள், அந்த பாதிப்பு நீங்காமலேயே இருக்கும்!
குழுவினர் ஆடிக் கொண்டிருக்கும்போது, நடிகர் திலகமும், பாலாஜியும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, நடிகர் திலகம் மட்டும் ஒரு வித தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கலாம்.
என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!
-
Thanks to Mr Parthasarathy
"நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்
இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.
மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.
பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.
இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.
பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).
இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!
இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.
முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.
முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!
"எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!
திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.
இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.
கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!
பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.
இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!
நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?
நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!
-
Thanks to Mr Parthasarathy
"எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.
இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.
சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!
இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.
இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.
முதலில் வாயசைப்பு:-
“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.
அடுத்தது, முக பாவம்:-
பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!
இப்போது, மேளம் தட்டும் அழகு.
பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.
ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.
ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".
ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.
இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).
-
Thanks to Mr Parthasarathy
"எங்கே நிம்மதி" படம்:- புதிய பறவை (1964); பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழுவினர்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் சரோஜா தேவி.
இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் புதிய முறையில் அளிக்கப் பட்ட பாடல். பொதுவாக, கனவுப் பாடல்கள் பெரும்பாலும் டூயட்டுகளாகவே இருக்கும் நிலையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் அவனை நிம்மதி இல்லாத மன நிலைக்கு இட்டுச் செல்ல, அவன் நனவுலகத்திலிருந்து விலகி, கனவுலகத்திற்குச் சென்று அங்கும் அல்லல் படுவதை, ஒரு வகை "fantasy " என்று சொல்லக் கூடிய முறையில் எடுத்திருப்பார்கள்.
இதற்கு முன்னரே, "நிச்சய தாம்பூலம்" படத்தில், "படைத்தானே" பாடலில் இந்த முறையை நடிகர் திலகம் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அந்தப் பாடலை விட, "எங்கே நிம்மதி" பாடலை இன்னமும் செம்மைப் படுத்தியிருந்ததால், இந்தப் பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.
இந்தப் பாடலின் பல்லவியான "எங்கே நிம்மதி" வரிகள் முதலில் கவியரசருக்குக் கிடைக்கவில்லை எனவும், கவியரசு, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் நடிகர் திலகம் மூவரும் பாடல் எடுப்பதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்த பின்னரும் அந்த முதல் வரி எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் (ஏனென்றால், கவியரசு எப்போதுமே முதல் வரியிலேயே மொத்தப் பாடலின் காலத்திற்கு அவரும் சென்று கேட்பவரையும் அழைத்துச் சென்று விடுவார், நடிகர் திலகம் நடிப்பில் காட்டுவது போல் - "கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே" என்று ஒரு கரிய நிறம் கொண்ட பெண்ணின் இறைவன் கண்ணனை நோக்கிய முறையீட்டில் தந்தவர். இது ஒரு சிறிய ஒரு உதாரணம். இது போல் பல உதாரணங்கள் கூறலாம்.), வீடு சென்றதாகவும், நள்ளிரவில், திடீரென்று நடிகர் திலகமே, அந்த வரிகள் மனதில் வரப் பெற்று, மற்ற இருவருக்கும் தொலைபேசி செய்து, அன்றிரவே, பாடலைப் பதிவு செய்ததாகவும் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். பொதுவாக, நடிகர் திலகம் பிற துறைகளில் அதீதமாகத் தலையிட மாட்டார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள் என்றாலும் இந்தக் கூற்று உண்மையல்ல. இந்தப் பாடலே அதற்கு உதாரணம். இது போல் பல படங்களைச் சொல்லலாம். அவர் அதீதமாகத் தலையிட மாட்டாரே தவிர, படம் முழுமையாக வர, அவரது ஆலோசனைகளை வழங்கி, முழு ஈடுபாட்டினையும் காட்டித்தான் வந்திருக்கிறார் - சக கலைஞர்களின் பங்களிப்பையும் பட்டை தீட்டுவது உட்பட.
இந்தப் பாடல் பல ஆண்டுகள், உலகின் எந்த மூலையில் மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் மறக்காமல் முயற்சி செய்து பாடப்பட்ட பாடல். இன்றும் இது தொடர்கிறது. மெல்லிசை மன்னர்களின் மிகச் சிறப்பான டியூனும், எண்ணற்ற வாத்தியக் கருவிகளின் ஆர்ப்பரிப்பும், இன்றளவும் ஒவ்வொரு இசையமைப்பாளரையும் இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாடல் வரிகளோ கேட்கவே வேண்டாம். முக்கியமாக, "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" சிரஞ்சீவித்தன்மை பெற்ற வரிகள். டி.எம்.எஸ்ஸின் அற்புதப் பங்களிப்பில், பாடல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்த அனைத்து கலைஞர்களின் நடிப்பும் இன்றளவும் புதிதாகத் தோற்றமளிக்கிறது.
இப்போது, நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சிக்கு வருவோம். இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது, நடிகர் திலகம் அவருடைய முயற்சியில் தோற்று (சௌகாரின் கை ரேகையை பிரதி எடுக்க முயன்று தோற்று, நடிக வேள் எம்.ஆர். இராதாவால் மேலும் மனம் உடைந்து போயிருப்பார்) மிகுந்த மன உளைச்சலுடன் படுக்கையில் புரளுவார் - "என் நிம்மதியே போய்டும் போலிருக்கே!" - அப்போதே, திரை அரங்கம் ஆர்ப்பரிக்கத் துவங்கி விட்டது. அப்போதே எனக்கும் விளங்கி விட்டது - படத்தின் மிக முக்கியமான highlight பாடலான "எங்கே நிம்மதி" வரப் போகிறதென்று.
இந்தப் பாடல் முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழி கொடி கட்டிப் பறக்கும். பாடல் முழுவதிலும், அவரது கைகளும், கால்களும் காண்பிக்கும் அபிநயங்களை வேறெந்த நடிகன் முயற்சித்திருந்தாலும், நகைப்புக்கிடமாகத்தான் போயிருக்கும். எந்த விஷயத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதில் (சோதனை முயற்சி சில முறை ஜெயிக்கலாம் சில முறை தோற்கலாம். ஆனால் அதைப் பற்றி என்றுமே கவலைப் படாமல், கடைசி படம் வரை, வித்தியாசப் படுத்தி நடிப்பதில் பிடிவாதம் காட்டியவரல்லவா?) முனைப்பு காட்டும் நடிகர் திலகம் இந்த முறை, ஏற்கனவே "படைத்தானே" பாடலில் செய்த சோதனை முயற்சியை விட பல படிகள் முன்னே போய், அவரது நம்பிக்கைக்குரிய குழுவின் மூலம் (கவியரசு/டி.எம்.எஸ்./மெல்லிசை மன்னர்கள் - "படைத்தானே"வும் இதே குழு தான்!) ஒரு பரீட்சார்த்த பாடல் முயற்சியை செய்திருப்பார்.
அந்த மெல்லிய வெள்ளை சட்டை, முழங்கைக்கு மேல் மடித்து விட்ட விதம், அந்த வெளிர் நீல பாண்ட், சரியாக சவரம் செய்யப்படாத முகம் - இவைகளை மட்டும் வைத்துக் கொண்டே, துவக்கத்திலேயே, அந்தப்பாடலின் சூழலுக்கு உடனேயே சென்று, பார்க்கும் அனைவரையும் இழுத்துச் சென்று விடுவார் வழக்கம் போல்.
பாடல் துவங்கி கேமரா கீழே படுத்துக் கொண்டிருக்கும் அவர் மீது zoom செய்யப் பட, கோரஸில், பலர் "ஒ..." என்று கூவத் துவங்கும்போதே, அவர் எச்சிலை மிடறு விழுங்கி அந்தச் சூழலின் பயங்கரத்தைக் காண்பிப்பார். உடனே தொடரும் ஒரு அதிரடி இசைக்கு சட்டென பின்னோக்கி நடக்கும் போது அரங்கம் அதிரத் துவங்கும்.
"எங்கே நிம்மதி" எனப் பல்லவி பாடும் போது, இரண்டு கைகளையும் ஒரு விதமாக relaxed - ஆக stretch செய்து, மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனின் ஆயாச உணர்வினை எடுத்துக் காட்டும் விதம் பிரமிக்க வைக்கும்; கூடவே அரங்கமும் அதிரும்.
பல்லவி முடிந்தவுடன் சௌகார் மற்றவர்கள் சகிதம் வந்து அவரை இம்சை செய்யத் துவங்கியவுடன், அந்த இம்சையை எதிர் கொள்ளும் விதம்!
இப்போது சிறிய சரணம். அந்தக் கூட்டத்திடமிருந்து விலகி ஓடி வந்து, வலது கையை மட்டும் ஸ்டைலாக மேலே பின்னோக்கித் தூக்கி "எங்கே மனிதன் யாரில்லையோ" என்று சொல்லி இப்போது இடது கையைத் இலேசாக மேலே தூக்கி "அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவார். இதற்கும் அரங்கம் அதிரும்!
இப்போது சரணம். "எனது கைகள்" எனும்போது, இடது கையை மேலே தூக்கி, "மீட்டும் போது வீணை அழுகின்றது" எனும் போது வலது கையை இடது கை அருகாமையில் கொண்டு சென்று வீணை போல் மீட்டி, "எனது கைகள் தழுவும் போது" என்று கூறும் போது, கைகளை உடனே X (எக்ஸ்) போல் ஆக்கி, தழுவுவது போல் வித்தியாசமாய்க் கைகளைக் கையாண்டிருப்பார். பொதுவாகத் தழுவுவது என்பது கைகளை நேரிடையாகத் தழுவுவது போல் தான் வரும். இருப்பினும் அதற்கு முன்னர் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வீணை வாசிக்கும் பாவனையைக் காட்டிக் கொண்டே, அதே கோணத்தில், எதிரிடையாக X (எக்ஸ்) குறியில், தழுவும் பாவனையைக் காண்பித்திருப்பார். (ஆங்கிலத்தில், follow through என்று கூறுவார்களே, அது தான் இந்த நடிகர் திலகத்திடம் எத்தனை முறை பாடம் காண்பிக்கப்பட்டிருக்கிறது!) அப்படியே, பின்னோக்கிப் போய்க் கொண்டே "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே; ஓ! இறைவன் கொடியவனே" எனும் போது மேலே தூக்கிய இரண்டு கைகளையும் சட்டென்று கீழே இறக்கி "இறைவன் கொடியவனே" என்று சரியான follow through முறையில் கீழே கொஞ்சம் வேகமாகவும், ஒரு வித அலுப்பு கலந்த வன்மையோடும் கீழே இறக்கி அந்த வரிகளுக்கு அதாவது "இறைவன் கொடியவனே" என்ற அந்த வரிகளுக்குரிய வன்மையைக் காட்டியிருப்பார்.
முதல் சிறிய சரணம் முடிந்து அனு பல்லவியில் "எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி...அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று அந்த மேல் நோக்கிச் செல்லும் வழியில் ஏறும் போது, அலுப்பையும் ஆயாசத்தையும் நடையில் காட்டிய நடிப்புலக மன்னர் மன்னன், இந்த இரண்டாம் சரணம் முடிந்து - அதாவது "எனது கைகள் மீட்டும் போது..." என்கிற சரணம் - ஒரு வித வேகத்துடன் "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி" என்று இரு புறமும் திரும்பித் திரும்பி நடித்திருப்பார் - ஏன்? முதல் முறை, ஆயாசத்தையும், இரண்டாவது முறை, வேகத்தையும், பாடிய டி.எம்.எஸ். தந்ததால்!
மூன்றாவது சரணம் - "பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே" சரோஜா தேவி அருகில் வந்ததும், பாலைவனத்தில் சோலையைக் கண்ட மன நிலையுடன், ஒரு வித ஆயாசம் கலந்த relief-உடன் சென்று, அவரை முழுமையாகத் தழுவாமல், "உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்" என்ற மன நிலையில் கண்ணியத்துடன் தழுவி நடந்தவுடன், திரும்பவும் "பழைய பறவை போல ஒன்று" என்று அதே சரணம் இரண்டாவது முறை வரும் போது, உள்ளே இருந்து சௌகார் வேகமாக வந்தவுடன், அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து, ஸ்டைலாக பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அரங்கம் அதிரும்! மறுபடியும் சரோஜா தேவி வந்தவுடன், "என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே என்று வேதனையுடன் (அளவான) கூறி அப்படியே கீழே உட்கார்ந்து, அவரது மடியில் படுத்து, "இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே" என்று கூறி, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?" என்று படுத்துக் கொண்டு சரோஜா தேவியைப் பார்க்கும் போது, அப்போது தான் முதன் முறையாக அவரது முகத்தில், ஒரு வித relief தெரியும்! சௌகாரின் இம்சை போய், காதலி சரோஜா தேவியைப் பார்த்த திருப்தியில்!
மீண்டும் அனு பல்லவி துவங்கி, பலர் சௌகாருடன் சேர்ந்து அவரை இம்சித்து, அப்படியே, நடிகர் திலகம் சௌகாரின் பிடியில் freeze ஆகி நிற்பது போல் முடியும்.
நடிகர் திலகம் வேறொரு உலகத்திற்குச் சென்று, பார்க்கும் எல்லோரையும் அந்த உலகிற்கு அழைத்துச் சென்றிருப்பார்! பாடல் முடிந்து, நனவுலகதிற்குச் சென்று மீண்டும், அவரது முகம் க்ளோசப்பில் காட்டப்படும் போது, அவர் முகத்தில் தெரியும் ஆயாசம் கலந்த அதிர்ச்சி நம்மையும் தொற்றியிருக்கும்!!
அந்தப் பாடல் முடியும் போது இருக்கும் shot - சௌகாரின் பிடியில் freeze -ஆகி நிற்கும் காட்சி - ஆங்கில நாடகங்களில் பாலே போன்ற நடன நாடகங்களின் inspiration தெரியும்! இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடலும் (இந்தப் பாடலையும் சேர்த்து!), அரங்க அமைப்பும், நடை/உடை/பாவனைகளும், களமும், கலைஞர்களின் உழைப்பும் (நடிகர் திலகம் துவங்கி), ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கும்.
கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, "ahead of times" என்று கூறிய, இன்றும், படத்தைப் பார்ப்பவர்கள் (இன்றைய தலைமுறையினர் உட்பட) வாய் பிளந்து அதிசயிக்கும் இந்தப் படத்தை, almost ghost direct செய்தது நடிகர் திலகமே தான் என்று கூறுவார்கள். பின் எப்படி, அவருக்கு சினிமா என்ற ஊடகத்தில், பிற துறைகள் அந்த அளவிற்குத் தெரியாது என்று சொல்லப் போயிற்று?!!!!
-
Thanks to Mr Parthasarathy
அந்த நாள் ஞாபகம்"; படம்:- உயர்ந்த மனிதன் (1968); பாடல்:- வாலி; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் மேஜர் சுந்தரராஜன் (வசன நடை); இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- கிருஷ்ணன்/பஞ்சு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தரராஜன்.
இந்தப் பாடலை இயற்றியது வாலியா அல்லது கவியரசா என்றொரு குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்த டிக்ஷனரி திரு. முரளி அவர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு முன் பதிவிட்ட "மாமா மாப்ளே" (பலே பாண்டியா படம்) பாடலில் நடிக வேளுக்குக் குரல் கொடுத்தது எம்.எஸ். ராஜு என்று கூறிய திரு. ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்னும் எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும், ஒவ்வொரு தமிழனும், தன்னுடைய வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் போதும், கடந்த கால நினைவுகளை அசை போடுவது எந்த ஒரு ஊடகத்தில் விவாதிக்கப் பட்டாலும், மேற்கோள் காட்டப்பட்டாலும், மேற்கூறிய வரிகள் "அந்த நாள் ஞாபகம்" - உடனேயே ஒவ்வொருவராலும் எடுத்துரைக்கப்படும். ஒருவராலும் தப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு, காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.
இரு நண்பர்கள் - சமூகத்தில், அவர்கள் வேறு அந்தஸ்தில் இருந்தாலும், அடிப்படையில் நண்பர்கள். இதில், ஏழை டிரைவர் அந்த அளவுக்கு வாழ்க்கையில் அடிபடா விட்டாலும், பணக்காரன் மட்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விடுகிறான். அந்தப் பணக்காரன் பல வருடங்களுக்குப் பிறகு சிறு வயதில், அவனும் அவனது காதலியும் பழகிய ஊட்டிக்குச் செல்ல நேரும்போது (அந்தக் காதலியை ஒரு கோர தீ விபத்தில் இழந்து விடுகிறான் - அவனது பணக்காரத்தந்தை திட்டம் போட்டுச் செய்த கொலை - காரணம் ஏழை என்கிற அந்தஸ்து பேதம்!), தன்னை அறியாமல் அவனது கடந்த கால ஞாபகங்கள் அலை மோதுகிறது. அப்போது, அவன் அந்த நினைவுகளைக் கூறும்படியாக அமைகின்ற பாடல்.
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வரிகள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே; அது ஏன்? ஏன்? நண்பனே!" அவனது இந்த நாள் அனுபவங்கள் கசப்பாக உள்ளன என்பதை உடனே எடுத்துரைக்கும் வரிகள்!
முதல் சரணத்தில், பள்ளி வாழ்க்கையை இலேசான நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் வரிகள் "உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்" அன்று போல் இன்று இந்த சமூகத்தில் பழக முடியவில்லையே எனும் ஏக்கம். அந்த மனிதனின் உண்மையான குணாதிசயத்தை இயம்பும் வரிகள்.
இரண்டாவது சரணம் இலேசான சோகம் - பள்ளிப்பருவம் முடிந்த பின்னர் நடந்த நிகழ்வுகள். கடமையும் வந்தது; கவலையும் வந்தது - என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள். எல்லா வசதிகளும் எல்லா சொந்தங்களும் வந்த பின்பும் அமைதி மட்டும் இல்லை என்னும் கூற்று நிறைய பேருக்குப் பொருந்தும்.
மூன்றாவது சரணம் - பல நாட்கள் வானொலியில் வராமல் இருந்தது. இப்போதெல்லாம் வருகிறது. அந்த மனிதனின் கடந்த கால சோகம் தெறித்து விழும் வரிகள். "தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்." தன் காதலியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து நினைத்துத் துடிக்கும் அந்த மனிதனின் குமுறல்கள் வெடிக்கும் வரிகள். வாலி அவர்கள் எழுதிய அத்தனை பாடல்களிலும் இன்றளவும் அவர் பேர் சொல்லும் முதல் இரண்டு பாடல்களில் இது ஒன்று எனலாம்.
இப்போது பாடியவர். முதலில் நடிகர் திலகம் ஓட்டப் பந்தயம் வைத்து, ஓடி முடித்து, நின்று, மூச்சு வாங்கிக் கொண்டே பாடத் துவங்குவதாக ஆரம்பிக்கும் போது, அந்த மூச்சிரைப்பைக் கண் முன் நிறுத்த ஆரம்பிப்பவர், அந்தப் பாடலில் தெறிக்கும், அத்தனை உணர்வுகளையும், அற்புதமாக வடித்திருந்தார். மறுபடியும், நடிகர் திலகம் தான் பாடினார் என்கிற அளவுக்குப் பாடிய திரு. டி.எம்.எஸ்ஸைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அடுத்தது இசை. கொஞ்சம் அசந்தாலும், வெறும் வசனமாகி விடக்கூடிய பாடல். இந்தப் பாடலின் தன்மையை அழகாகப் புரிந்து கொண்டு, நகைச்சுவை வரும்போது ஒரு இசை, சோகம் வரும்போது ஒரு இசை, மிடுக்கு வரும்போது ஒரு கம்பீர இசை என்று மிக லாகவமாக இசை அமைத்து, இடையிடையே, மேஜர் அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் கூட அந்த இசை பிசகா வண்ணம் அமைத்து, அவரையும் மிகச் சரியாக குரல் கொடுக்க வைத்து, இந்தப் பாடல் முழு வெற்றியடைய வைத்து விடுகிறார்.
அடுத்து இயக்கம். நண்பர்கள் ஊட்டிக்குச் செல்லுவதாகக் கதையமைத்து, உடனேயே, ஒரு பாடலையும் அமைத்து, பழைய நினைவுகளை அசை போடுவதாக வைத்து, அந்தப் படத்தின் சுவாரஸ்யம் மேலும் மெருகேற வழி வகுத்து, முழு வெற்றி அடைகிறார்கள் இயக்குனர் இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள். அப்போதெல்லாம், ஒரு படத்தின் இடைவேளைக்குப் பின் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கச் செய்தன. ஆனால், இப்போதோ?
இப்போது நடிப்பு. இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் இயக்கமும் சற்றேறக்குறைய நடிகர் திலகம் தான் செய்தார் எனலாம் (இன்னும் இது போல் பட படங்கள்; காட்சிகள்; பாடல்கள் உண்டு என்றாலும்!). பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் வெளி வந்த கட்டுரையில் படித்தது. முதலில், இந்தப் பாடலை நடிகர் திலகமும் மற்றவர்களும் காரில் போய்க் கொண்டே பாடுவதாகத் தான் வைத்தார்களாம். நடிகர் திலகம் தான், "வேண்டாம் இந்தப் பாடல் சிறு வயது நினைவுகளை அசை போடுவதாக வருகிறது. சிறு வயது என்பதால், ஏதோ ஒரு விளையாட்டை விளையாடுவதாக வைத்தால் பொருத்தமாக இருக்கும். என்னைக் கேட்டால், ஓட்டப் பந்தயம் வைத்து, கடைசியில், மூச்சு வாங்கிக் கொண்டே பாடுவதாய் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்" என்று செட்டியாரிடம் சொல்ல, அவரும் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம்.
தனக்கேயுரிய ஸ்டைலில் ஓடத் துவங்கி, மூச்சு வாங்கிக் கையிலுள்ள தடியை ஒரு வித சுழற்று சுழற்றி அதை மேஜரின் மார்பில் வைத்து எடுக்கும் விதம் அற்புதம் என்றால்; முதல் சரணத்தில், புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே என்று சொல்லி சிரிக்கும் விதம் அதியற்புதம். நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் என்று சொல்லி வேகமாய் நடந்து அந்தப் பாடலின் டெம்போவை எகிறச்செய்யும் விதம்; உயர்ந்தவன் என்று சொல்லி தடியை வானுக்கு உயர்த்துபவர்; ஒரு வித ஸ்டைலுடன் தாழ்ந்தவன் என்னும் போது சிலிர்க்கும்!! (இந்த ஒரு விதத்தைப் பார்த்தால் தான் புரியும்!)
இரண்டாவது சரணம் - பாசமென்றும் - ஒரு வித ஸ்டைல்; நேசமென்றும் - வேறொன்று; வீடு என்றும் - இன்னும் ஓர் ஸ்டைல்; மனைவி என்றும் - பிய்த்து உதறுவார்; நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே என்று இலேசாக துயரத்தை வெளிப்படுத்துவார். உடனேயே, சமாளித்துக் கொண்டு வேகமாக அந்த நாள் ஞாபகம் என்று நடை போடத்துவங்கும் சரளம் பிரமாதமாக இருக்கும்.
மூன்றாவது சரணம் - பெரியவன், சின்னவன், நல்லவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாவம், கடைசியில், கெட்டவன் என்னும்போது கையை ஒரு மாதிரி அசைப்பார் - மற்றொரு இலக்கணம். எண்ணமே சுமைகளாய் (வலது புருவத்தை தனக்கேயுரிய பாணியில் உயர்த்துவார்), இதயமே பாரமாய் - ஒரு மாதிரி. மறுபடியும், சோகம் - தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான், அழுகிறான் எனும்போது எப்படி அவர் முகத்தை சோகம் கவ்வுகிறது! மறுபடியும், சமாளித்து, பல்லவி, அந்த நாள் ஞாபகம் என்று கடைசியில், கைத்தடியை லாகவமாக சுழற்றியபடியே செல்லும்போது, மேஜர், சிவகுமார், பாரதி மட்டுமல்லாமல், பார்க்கும் அனைவரும் அல்லவா வியந்து மெய் மறக்கிறார்கள்!!
இந்தப் பாடலில், மேஜர் அவர்களும், நடிகர் திலகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து, இந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார் என்பதை மறக்க முடியாது. எனக்குத் தெரிந்து, இப்படத்திற்குப் பின்னர் தான், இவர்களின் காம்பினேஷன் தொடர்ந்து வரத் துவங்கியது.
இந்தப் பாடலும், ஒரு சிறப்பான பாடலுக்குரிய அனைத்து அம்சங்களிலும் முதல் இடத்தைப் பிடித்து, பாடல் வெளி வந்த நாள் முதல், இன்று வரை, அனைவராலும் ஒரே மாதிரி ரசிக்கப் படுவதால், இந்தக் கட்டுரையில், அதாவது நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் இடம் பெறுகிறது.
-
Thanks to Mr Parthasarathy
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை"; படம்:- சிவந்த மண் (1969); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்:- எல்.ஆர்.ஈஸ்வரி; இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- ஸ்ரீதர்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் காஞ்சனா.
மறுபடியும் நடிகர் திலகம் இடம் பெறும் பாடல்களில், அவர் பாடுவதாக வராது போனாலும், அவரது தன்னிகரற்ற உடல் மொழியால், அனைவரின் கவனத்தையும், தன் மீதும் நிலை நிறுத்திய பாடல்.
படத்தின் நாயகன் பாரத் (நடிகர் திலகம்), தாய் நாட்டை மாற்றானிடம் விற்று விடத் துடிக்கும் சர்வாதிகார திவானிடமிருந்து (எம்.என்.நம்பியார்), தாய் நாட்டைக் காப்பாற்ற, அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்து, அதற்காக வகுக்கும் பல திட்டங்களில் ஒன்றாக, அவனை ஒரு மேல் நாட்டு நடனக் காட்சிக்காக வரவழைத்து, அவனைக் கொல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பாடல்.
இந்தப் பாடலுக்குப் பல சிறப்புகள் உண்டு. இருப்பினும், முதன்மையானது - பாடல் முழுவதும் நிறைந்திருக்கும் அந்தப் பரபரப்பு மற்றும் சஸ்பென்ஸ். இத்தனைக்கும், பாடல் துவங்குவதற்கு முன்னர், நாயகன் நடிகர் திலகத்தை எம்.என். நம்பியாரிடம் அறிமுகப்படுத்தும்போது, நம்பியார் அவரது வலது கரத்திலுள்ள தழும்பைப் பார்த்து விடுவார். ஏற்கனவே ஒரு முறை இருவருக்கும் நடந்த சண்டையின் போது, நடிகர் திலகத்தின் கரத்திலுள்ள தழும்பைப் பார்த்திருப்பார். அதை வைத்து, அங்கு வந்திருப்பது விடுதலைக்காக தலை மறைவாக இருந்து, தன்னுடன் போர் புரியத் திட்டமிட்டிருக்கும் கும்பலின் தலைவன் பாரத் - அதாவது நடிகர் திலகம் தான் என்று தெரிந்து கொள்வார். மேலும், பாடல் துவங்கும்போது, நடிகர் திலகத்தின் கையிலுள்ள துப்பாக்கியையும் பார்த்து விடுவார். உடனே, தன்னுடைய கைத்துப்பாக்கியையும் எடுத்து மறைவாக வைத்துக் கொள்வார். ஆக, எதற்காக அந்த நடனத்தை ஆரம்பிக்கின்றார்களோ, அந்தத் திட்டம் துவக்கத்திலேயே தெரிந்து விடும். அந்த சஸ்பென்ஸ் முதலிலேயே உடைந்தும், அந்தப் பாடல் முழுவதும், கொஞ்சம் கூட தொய்வு ஏற்படா வண்ணம் எடுத்திருப்பார் இயக்குனர் ஸ்ரீதர். அதனால், இந்தப் பாடலின் ஆணிவேரான ஸ்ரீதரே இந்தப் பாடலின் முதல் நாயகன்.
இரண்டாவது, அரங்க வடிவமைப்பு. பங்களிப்பு - ஸ்ரீதரின் ஆஸ்தான கலை இயக்குனர் கங்கா. என்ன ஒரு கற்பனை வளம். எகிப்து நாட்டையே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அந்த பிரமிடுகளும், பிரமிக்க வைக்கக் கூடிய மற்ற அரங்குகளும், சுழலும் தட்டும்! பாடல் துவங்கும் போதே, களை கட்டத் துவங்கி விடும்.
மூன்றாவது, பாடல் வரிகள். மறுபடியும், ஒரு சூழ்நிலை அதற்கேற்றாற்போல் பார்க்கும் ஒவ்வொருவரையும், அந்தச் சூழலுடன் இணைத்துக் கொண்டுவிடும் வரிகள். சாட்டை கொண்டு பாடச் சொன்னால் எங்கே பாடும் பாடல், தட்டித் தட்டி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள் - துடித்து எழுந்ததே, கொதித்து சிவந்ததே, கதை முடிக்க நினைத்ததே என்னும் போது, உடனே, அந்த வரிகளை சரியாக நம்பியார் புரிந்து கொள்வார். இப்படி பாடல் முழுவதும், சூழலுக்கேற்ற வரிகள். இனி ஒருவன்தான் பிறக்க வேண்டும் கவியரசுக்கு இணையாக - அது குதிரைக் கொம்புதான்!
இப்போது பாடியவர். எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் வாழ்க்கையில், அவருக்கு மிகப் பெரிய புகழ் சம்பாதித்துக் கொடுத்த பாடல். அதிலும், குறிப்பாக, அஹ்... அஹ்... அஹ்... என்று விம்முவது அற்புதம். இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தில், ஆஷா போன்ஸ்லேயால் இந்த விம்மலை சரியாக செய்ய முடியாமல் போக, ஈஸ்வரி அவர்கள் அவருக்கு உதவி செய்ததாகக் கூறுவர். இருப்பினும், அவரால் ஈஸ்வரி அளவுக்குப் பாட முடியாமல் போனது. கதாநாயகியின் அந்தக் கொலை வெறித் திட்டம் அவரது நடனத்திலும், முக பாவங்களிலும் எந்த அளவுக்குப் பிரதிபலித்ததோ, அதற்கு ஈடாக அவருக்குப் பாடிய ஈஸ்வரியின் குரலும் சவால் விட்டது.
அடுத்தது இசை. இந்தப் பாடல் வந்த புதிதில், நிறைய இசைக்கருவிகளை உபயோகித்து இசையமைக்கப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று என்று மெல்லிசை மன்னர் கூறியிருந்தார். இந்தப் பாடலில், நாயகனின் கொலை வெறித் திட்டம், நடனங்களில் தெறிக்கும் நளினம் மற்றும் பாவங்கள், பாடல் நெடுகிலும் தேவைப் படுகின்ற பரபரப்பு மற்றும் சஸ்பென்ஸ் மற்றும் அந்த பிரம்மாண்ட அரங்கத்துக்கேற்ற மிக பிரம்மாண்டமான இசை - அத்தனையும், தெறிக்க வேண்டும்; பார்ப்பவரைப் பற்றி தொற்றிக்கொள்ள வேண்டும். அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இப்போது, நடிப்பு. காஞ்சனா மேலே கூறியபடி, அத்தனை உணர்வுகளையும், காட்டியிருப்பார். இந்தப் பாடலில், அவர், கொலை வெறித்தனத்தையும் காட்டியாக வேண்டும்; சாட்டையால் அடி வாங்கும் போது வேறு விதமான பாவனையையும் காட்ட வேண்டும். அதாவது, பார்ப்பவர்களை, இது வெறும் பாட்டு தான் அதற்கு என்னுடைய நடனம் ஒரு நடிப்பு தான் என்றும் சொல்லியாக வேண்டும். அதே சமயம் அவருடைய மனதிலிருக்கும் கொலை வெறித்தனத்தையும் தன்னை அறியாமல் வெளிப்படுத்த வேண்டும். மிக அருமையாக இதை பேலன்ஸ் செய்திருப்பார். நம்பியார் இந்தப் பாடலுக்கு மேலும் சுவை சேர்த்திருப்பார். துவக்கத்திலேயே, அவர் இந்த நடனம், தன்னைக் கொல்ல வந்ததன் திட்டம் என்று அறிந்து கொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும், குறிப்பாக "கதை முடிக்க நினைத்ததே" என்ற வரிகள் பாடப் படும் போதெல்லாம், ஒரு மாதிரி முகம் முழுக்க வேர்த்து விறுவிறுத்து, அட்டகாசமாக, "உனக்கு நான் ஒன்றும் இளைத்தவன் இல்லை, என்னிடமும் துப்பாக்கி இருக்கிறது" என்றும் பாவனையால் கூறிக்கொண்டிருக்கும் விதம் அட்டகாசமாக இருக்கும்.
கடைசியில், நடிகர் திலகம். இதில், அவருடைய ஒப்பனையும், ஆடை அலங்காரமும் மட்டுமே, அவரை நூறு சதவிகிதம் வெற்றியடைய வைத்து விடும். அந்த அளவுக்கு ஒரு கன கச்சிதமான பொருத்தம். இதற்கு மேல், அவருடைய உடல் மொழி வேறு. முகத்தில் ஒரு வித இறுக்கம், வாயில் எதையோ வைத்து மென்று கொண்டே தன்னுடைய திட்டத்தில் குறியாக இருக்கும் கவனம். Focussed attention with single minded devotion and concentration. இது ஏற்கனவே குறிப்பிட்டது தான். மேடையில் உள்ள இரண்டு தட்டுக்களில் வெளிப் பக்கம் இருக்கும் தட்டில் நடப்பார். இதில் விசேஷம் என்னவென்றால், அந்தத் தட்டு எந்தப் பக்கம் சுழலுகிறதோ, அதற்கு எதிர்ப்புறம் வேகமாகவும், லாகவமாகவும் நடப்பார். இத்தனைக்கும், அந்தத் தட்டின் அகலம் வேறு குறைவு. இந்த ஒரு நடைக்கே இந்தப் பாடல் இன்றளவும் நடிகர் திலகத்தின் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்தப் பாடலில், நடிகர் திலகத்தின் பாத்திரத்துக்கு தேவைப்படுகின்ற மேற்கூறிய உடல் மொழிகள் அல்லாமல் அசாத்திய வேகமும் (quick reflex and swiftness) தேவைப்படுகிறது. அதுவும் நடிகர் திலகத்திடம் நூறு சதவிகிதம் வெளிப்படும். இந்தப் பாடலும், நடிகர் திலகம் பாடாமல் வெறுமனே உடல் மொழியை வைத்துக் கொண்டே பார்க்கும் எல்லோருடைய கவனத்தையும் தன் மீதும் தக்க வைத்துக் கொண்ட பாடல்.
சென்ற வருடம் விஜய் டிவியில் இடம்பெற்ற ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடைசி ஆறு பாடகர்களில் ஒருவரான நித்யஸ்ரீ இந்தப் பாடலை - அதுவும் அந்த விம்மலை நுணுக்கமாகப் பாடி எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்றார். அன்றிலிருந்து இன்று வரை எங்கெல்லாம் இந்த இளம் பாடகி பாடுகிறாரோ, அவரை இந்தப் பாடலைத் தவறாமல் பாடும்படி மக்கள் கேட்கின்றனர். அதற்கு ஆவன செய்தது இந்தப் பாடலின் சிறப்பு தான்.
இந்தப் பாடலும், இன்றளவும் அனைத்து மக்களாலும், இன்றைய தலை முறையினராலும் விரும்பி ரசிக்கப் படுகின்றது. அதனால் தான், இந்தப் பாடலும், இந்தக் கட்டுரையில் இடம் பெறுகிறது.
-
Thanks to Mr Parthasarathy
"வாராய் என் தோழி வாராயோ"; படம்:- பாச மலர் (1961); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்:- எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர்; ; இசை:- மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ. பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, சுகுமாரி மற்றும் குழுவினர்.
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அந்த வைர வரிகளுக்காக சிலிர்க்கும்; எப்போது பார்த்தாலும், அதை எடுத்த விதத்துக்காகவும், அதில் நடித்த நடிக/நடிகையர்களின் நடிப்புக்காகவும், புல்லரிக்கும். இப்போதெல்லாம், கான்செப்ட் சாங், தீம் சாங் என்று என்னவெல்லாமோ சொல்லுகிறார்கள். இந்தப் பாடலைப் போல ஒரு கான்செப்ட் சாங்கை ஐம்பது வருடங்களுக்கு முன்பே யோசித்து அதைக் கச்சிதமாக எடுத்ததற்கு இந்தத் தமிழ் சமுதாயம் என்றென்றைக்கும் இந்தக் குழுவிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தப் பாடல் வந்த புதில் இருந்து, இன்று வரை, ஏன் என்றென்றும் திருமணப் பந்தல்களில், நிரந்தரமாகக் குடியேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மற்றொரு பாடல், (அதுவும் நடிகர் திலகம் தான்; வேறென்ன சொல்வது, எந்த நிகழ்ச்சிக்கும், நினைவு கூறுதலுக்கும், அது கோவில் திருவிழாவாகட்டும், திருமண விழாவாகட்டும், இந்திய சரித்திரத்தை நினைவு கூறுவதாகட்டும் - சுதந்திர எழுச்சி உட்பட - யாருக்கும், இவரது படங்கள்/காட்சிகள்/பாடல்களை விட்டால் வேறு கதியே இல்லை - அப்படி தமிழர்களின் வாழ்வில் ஊனும் உயிருமாய்க் கலந்து விட்ட யுக, மகாக் கலைஞன்.) பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி - ஆனால், இந்தப் பாடல் சோக ரசத்துடன் இருப்பதால், வாராய் என் தோழி வாராயோ அந்தப் பாடலை முந்துகிறது. இந்தப் பாடலை மிகச் சரியாக யோசித்து, அதை கவனத்துடன் செதுக்கி அந்தப் பாடலின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக நுழைத்து மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்கள் தான் இந்தப் பாடலின் முதல் நாயகன்.
அடுத்து, வரிகள். எப்பேர்ப்பட்ட அர்த்தம் தொனிக்கும் வரிகளையும், சூசகமாகக் கையாள்வதில் சூரன் கவியரசு என்பதை நிரூபித்த பாடல். இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் மயங்குகிறாள் ஒரு மாது பாடலிலும், இதே வித்தையை அற்புதமாக செய்தார். ஒரு மங்கல நிகழ்ச்சியில் இடம் பெறுகின்ற பாடல் - ஆனால், தோழி பாடுகின்றாற்போல் வருகின்ற பாடல் என்பதால், வெறுமனே, மங்களமான வார்த்தைகள் மட்டுமே வருவதாக எழுத முடியாது. இது சினிமா என்கின்ற பொழுதுபோக்கு ஊடகம் அதில் சொல்லப் படுபவை வெகு ஜனங்களுக்காக என்கின்ற உண்மையைப் புரிந்து கொண்டு எந்த இடத்திலும், டாகுமெண்டரி உணர்வு யாருக்கும் வராவண்ணம் வார்த்தைகளை எழுதி, அதாவது, தன்னுடைய உயிர்த்தோழியை இலேசான குறும்புடன் சூசகமாக சில வார்த்தைகளை வைத்துப் பாடுவதாகவும் எழுதி, பாடலின் கண்ணியத்தைக் கடைசி வரை காப்பாற்றிய - அதன் மூலம், மொழியின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் நிலை நாட்டிய எழுத்து வேந்தர், கவியரசு கண்ணதாசனை எப்படி பாராட்டுவது - இந்த யுகக் கவியை நாளும், பொழுதும் நினைத்து நினைத்து கர்வப்படுவதை விட வேறென்ன வேலை ஒவ்வொரு தமிழனுக்கும்?
அடுத்து பாடியவர். மறுபடியும் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த அற்புதப் பாடகியை உலகத்திற்குப் பெரிய அளவில் வெளிக்காட்டிய பாடல். இவரது முதல் மூன்று முத்தான பாடல்களில், ஒரு பாடலை இப்போது தான் எழுதினேன்; அடுத்த பாடல், இப்போது இடம் பெறுகிறது. ஆக, ஒவ்வொரு கலைஞனின் சிறந்த முதல் ஐந்து படைப்புகளை குறிப்பிடச் சொன்னால், அதில் குறைந்தது அறுபது சதவிகிதம், நடிகர் திலகம் நடித்த படங்களில் இருந்து தானே வருகிறது? இந்தப் பாடல் நெடுக வரும் அந்தக் குறும்பை, கொப்பளிக்கும் எனர்ஜியை, வேகத்தை, ஆரவாரத்தை, ஈஸ்வரி அவர்களை விட எந்தப் பாடகியும் இந்த அளவிற்குச் சிறப்பாகக் காட்டியிருக்க முடியாது.
இப்பொழுது இசை. ஒரு விழாப் பாடலுக்குத் (மங்களகரமான பாடலும் கூட) தேவைப்படுகின்ற வேகம், எனர்ஜி மற்றும் ஆர்பரிக்கும் சந்தோஷ உணர்வு அத்தனையும் இதில் காட்டியாக வேண்டும். இந்த உணர்வுகளை மெல்லிசை மன்னர் தந்த விதம் அருமை. குறிப்பாக இரண்டு விஷயங்கள் இந்தப் பாடலின் இசையமைப்பில் கூறியாக வேண்டும். ஒன்று, குழுவினரின் சிரிப்பொலி அந்தப் பாடலின் பின்னணி இசையோடு இயைந்து வரும் (மூன்றாவது சரணம் - இரவோடு இன்பம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ! என்னும்போது). அடுத்து, சமஸ்கிருத வேதங்கள் அடங்கிய - திருமணம் நடைபெறும்போது புரோகிதர்களால் ஓதப்படுகின்ற வரிகள் - பாடலோடு மீண்டும் இயைந்து வருகின்ற விதம். இந்த இரண்டு சங்கதிகளும் மிக முக்கியமாக - பாடலின் அடிப்படை விஷயமான அந்த வேகம் / டெம்போவைக் கொஞ்சமும் குறைக்காமல், மேலும் மெருகூட்டிச் செல்லும் அந்த விதம். நிறைய பேர் இந்த விஷயத்தைக் கவனித்திருக்கக் கூடும். இல்லையென்றால், ரசித்து இன்புறலாம்.
கடைசியில் நடிப்பு. சுகுமாரி எனக்குத் தெரிந்து இந்தப் படத்தில்தான் முதன் முறையாக நிறைய நேரம் வருவார் - இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் (பின்னாளில் இவர் இயக்குனர் பீம்சிங்கின் மனைவியானது வேறு விஷயம்.). மிக அருமையாகவும் அதே சமயம் அளவோடும் பாடி நடித்து - யார் இந்தப் புதுமுகம் என்னும் அளவுக்குப் பெயர் வாங்கினார். என்றுமே, இது போல் ஒரு பாடலுக்கு நடனம் மற்றும் பாடி நடிப்பவர்கள் பெரிய அளவுக்கு உடனே பெயர் வாங்குவதில்லை. (உதாரணம் ஏ.சகுந்தலா - அவருமே கூட இந்தப் பாடலில் குழுவினரோடு நடனம் ஆடியிருப்பார். இது போல் இன்னும் சில நடிகைகளும் உண்டு.). நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்கும் இந்தப் பாடலில் பெரிதாக வேலை இல்லை. இருப்பினும், இந்தப் பாடலில் அவ்வப்போது வரும் சில வரிகளுக்கேற்ப, அவருடைய நாணத்துடன் கலந்த முக பாவங்கள் இன்னமும் யாருடைய கண்களை விட்டும் அகல மறுக்கின்றன.
கடைசியில், நடிகர் திலகம். இந்தப் பாடலிலும், - அதாவது இது ஒரு குழுவினர் ஆக்கிரமிக்கும் பாடல். இந்தப் பாடலிலும், நடிகர் திலகம் அற்புதமாக சில பல ரீயாக்ஷன்களைக் காண்பித்து, பார்ப்பவர்களின் கவனத்தை தன் மீதும் தக்க வைத்துக் கொண்டார். இது எல்லோரும் அறிந்த ஒன்று. மேற்கூறிய வரிகள் வரும் போது, சாவித்திரி ஒரு வித நாணத்துடன் போகும்போது, அந்த இடத்தில் நிற்கும் நடிகர் திலகம் தானும் ஒரு வித பாவத்துடன் - கண்ணியம் தென்படும் ஒருவித பாவம். அதற்கு ஒரு இலக்கணத்தை அன்றே வகுத்துச் சென்றிருப்பார்! அதிலும், அப்போது வரும் இலேசான காற்றில் அவருடைய தலை முடி ஒரு விதமாக ஆடும். அவரது முடி கூட நடிக்கும்!! இந்தக் குறிப்பிட்ட போர்ஷனை பின்னாளில் வந்த ஒரு சினிமாவில் மொத்தமாகப் பயன்படுத்தி, இந்த ரீயாக்ஷனை நகைச்சுவை நடிகர் செந்திலை விட்டு செய்யச்சொல்லியிருப்பார்கள். நல்ல வேளை, அவர் பெரிதாக நையாண்டி செய்யாமல், நகைச்சுவையோடு மட்டுமே அணுகியிருப்பார் - இந்நாட்களில் நடிக்கும் நடிகர்களைப் போல் இல்லாமல்! அடுத்து, கடைசியில் மாங்கல்ய தாரணம் நடக்கும் போது, கையில் இருக்கும் அட்சதையை கண்களில் நீரைத் தேக்கி வைத்து மணமக்கள் மேல் போடும் இடம். தங்கையின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணத்தில் ஒரு அண்ணன் எப்படி உணர்வானோ, அதை நூறு சதவிகிதம் நடித்துக் காண்பித்து பார்ப்பவர் அத்தனை பேரின் கண்களிலும் - முக்கியமாக, ஒவ்வொரு தகப்பன், தாய் மற்றும் சகோதர சகோதரிகளின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்த அற்புதத் தருணமல்லவா அது! இது வெறும் ஒரு நொடியில் காட்ட வேண்டிய காட்சி தானே. இது போல், எத்தனையோ படங்களில் எத்தனையோ நடிகர்களுக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது - அது எப்படி, இவர் ஒருவர் மட்டும், அந்த ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்காமல், தன்னுடைய நூறு சதவிகித அற்பணிப்பைத் தந்தார்? ஆம், இந்த ஒரு காரணத்தினால் தான், அவர் மட்டுமே நடிகர் திலகமானார். உலகம் உள்ளளவும், இந்தப் பட்டத்துக்குச் சொந்தக்காரராகிறார்!
நமது நண்பர்கள் மற்றும் ஏனையோர் இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களையும், இந்தப் பாடலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போது, சிலருக்கு பாடல்களைத் தேர்வு செய்ததில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிலரது பார்வையில் வேறு சில பாடல்கள் இவைகளை விடச் சிறப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும், என்னுடைய பார்வையில் இந்தப் பாடல்கள் மற்றவைகளை முந்துகின்றன என்பதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்று தான். இவை, இன்றளவும், எல்லோராலும், இன்றைய இளம் தலை முறையினராலும் ரசிக பேதமின்றி ரசிக்கப் பட்டு சிலாகிக்கப்பட்டு கேட்பதற்கு மட்டுமல்லாமல், பார்பதற்கும் விரும்பப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுகின்றது. அதற்குக் காரணம் ஒரு சிறந்த பாடலுக்குத் தேவைப் படுகின்ற அத்தனை அம்சங்களும் நூறு சதவிகிதம் வெற்றிகரமாக அமைந்து, அந்த குழுப்பணி (டீம்வொர்க்) முழுமையாக நிறைவேறியது. அதனால் தான் இந்தப் பாடல்களை சிரஞ்சீவித் துவம் பெற்ற பாடல்கள் என்று தலைப்பு கொடுத்தேன்.
இந்தத் தொடரில் நான் அவ்வப்பொழுது எழுதி வந்த பாடல்களைப் பற்றிய என்னுடைய கட்டுரைகளுக்கு உடனுக்குடன் என்னைப் பாராட்டி அங்கீகரித்த, அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய கோடானு கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
-
Thanks to Mr Murali Srinivas
பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?
அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!
கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.
முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா
என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.
தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.
-
Thanks to Mr Raghavendar
பாடல் - செந்தூர நெற்றிப் பொட்டின் திலகம்
படம் - சித்ரா பௌர்ணமி
வரிகள் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்கள் - டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா
இந்த தலைமுடி ஸ்டைலிலேயே படம் முழுதும் நடிகர் திலகம் வந்திருந்தால் ... சித்ரா பௌர்ணமி இன்னொரு நூறு நாள் படமாகியிருக்குமே என்ற ஏக்கம் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்தப் பாடலின் ட்யூனாகட்டும், வரிகளாகட்டும், குரல்களாகட்டும் வாத்தியக் கருவிகளாகட்டும் ... அத்தனையும் சேர்ந்து மிக உயர்தரத்தில் உருவாகி விட்டன. அப்படிப் பட்ட மேன்மையான பாடலை திரை வடிவில் தரும் போது எவ்வளவு சிரமமும் சிரத்தையும் எடுக்க வேண்டும், திரையில் தோன்றும் கலைஞர்கள் அதற்கு எப்படி ஜீவன் கொடுக்க வேண்டும் ... என்பதற்கு இப்பாடலை உதாரணம் சொல்லலாம்.
அது என்னவோ தெரியவில்லை நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் போது அந்த நடிகையரின் தனித் திறமை மிளிர்வதை நம்மால் காண முடிகிறது. இப்பாடலில் ஜெயலலிதா அவர்களை விட்டு வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை. பாடலின் துவக்கத்தில் கோட் அணிந்து முடிந்த வுடன் திரும்பி அவரை நடிகர் திலகம் பார்ப்பார் அதில் துவங்கி பாடல் முடியும் வரை ஸ்டைல் ராஜ்ஜியம் தான் ... குறிப்பாக அந்த வெள்ளை உடை அணிந்து கீழே இறங்கி வந்து நிற்கும் இடம் ...
Style defined ... Simply Superb ....
அதுவும் ஒவ்வொரு உடையும் அவருக்கு அவ்வளவு அழகாகப் பொருந்துவதைப் பார்க்கும் போது ...
கொடுத்து வைத்தவர் நடிகர் திலகம் ... இப்படி ஒரு உடையலங்கார நிபுணர் அவருக்குக் கிடைத்ததற்கு ..
கொடுத்து வைத்தவர் அந்த உடையலங்கார நிபுணர் - இப்படி ஒரு பொன்னான வாய்ப்பினை வாழ்நாள் முழுதும் பெற்றதற்கு ..
கொடுத்து வைத்தவர் அந்த ஒளிப்பதிவாளர் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ... இந்தக் காட்சியை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றதற்கு ..
எல்லாவற்றிற்கும் மேலாக..
கொடுத்து வைத்தவர்கள் சிவாஜி ரசிகர்கள் .,...
விளக்கம் வேண்டுமோ...