அவரது திறமையைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்ததுதான் (மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பணிரென்டு தேர்வுக்கமிட்டி உறுப்பினர்கள் தவிர). அதுமட்டுமல்ல, அவரது படைப்புகள் ஜீவனோடு இருக்கும் வரை வருஙால சந்ததியினர் நிச்சயம் அவரது திறமைகளை அறிந்துவியக்க நிஜமான நிச்சயமான வாய்ப்புக்கள் உண்டு.
ஆனால் அவரது திரைப்படங்கள் அரங்குகளில் ஓடிய அன்றைக்கு, எப்படியும் தொடர்ந்து 100 காட்சிகள் நிறைந்துவிடும் என்று நம்பியிருந்த வேலையில் 94 வது காட்சி கொஞ்சம் இழுபறியாக இருக்கும் நேரத்தில் முகத்தில் சோகத்துடன் திரையரங்கு 'கேட்'டைப்பிடித்தபடி கிட்டத்தட்ட ஒரு தவம் செய்வது போல நின்றிருந்த ரசிகனுக்கு, திடீரென ஒரு கூட்டம் அரங்கத்துக்குள் படையெடுக்க, அதன்மூலம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து 'HOUSE FULL' என்ற போர்டு போடப்பட்டதைப் பார்த்து, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல சென்ற ரசிகனுக்கு.........
..........இன்றைக்கு கம்ப்யூட்டரும், கீ போர்டுமாக இருக்கின்ற ஒரு கூட்டம், வலைப்பூக்கள் எழுதுகிறேன் பேர்வழி என்ற எண்ணத்துடன், தப்பும் தவறுமாக கேள்விப்பட்ட சில அரைகுறை செய்திகளை வைத்துக்கொண்டு அவரது சாதனைகளை சிதைக்க முற்படும்போது, அன்றைக்கு தியேட்டர் 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு தவம் செய்த ரசிகன் மனதில் வலி ஏற்படுவது உண்மை.
அப்படிப்ப்ட்ட 'சிதைப்பு வேலைகளை' முறியடிக்க, இதுபோன்ற 'சாதனைத்தொடர்கள்' அவசியமே. இல்லையெனில் 'கணினி விளையாட்டினர்' கொஞ்ச நாளில்..... "ஆமாம் அவர் நன்றாக நடித்தார்தான். ஆனாலும் அவரது படங்கள் எதுவும் அவ்வளவாக ஓடியதாக தெரியவில்லை" என்று தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டி தங்கள் கட்டுரையை முடித்தால் என்னாவது...?.