டியர் பம்மலார்...
'என்னைப்போல ஒருவன்' படத்தின் வெற்றி விவர அறிக்கை (பதிவு) வெகுஜோர். அசத்திட்டீங்க. தேடினாலும் கிடைக்காத தகவல்கள், வசூல் விவரங்கள் அனைத்துக்கும் நன்றிகள் பல. நீங்களும் முரளியண்ணாவும் சொன்னது ரொம்ப சரியே. எனக்கு மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் என்னைப்போல் ஒருவன் நிச்சயம் உண்டு. அதனால்தான் இந்த திரியின் முதல் பாகத்தில் நான் எழுதிய முதல் விமர்சனக்கட்டுரையே இப்படத்துக்குத்தான்.
ராமண்ணா மிகுந்த சிரமத்துக்கிடையேதான் இப்படத்தை வெளிக்கொணர்ந்தார். இறுதியில் ரீ-ரிக்கார்டிங் செய்வதற்குக்கூட வசதியின்றி, மெல்லிசை மன்னரின் அனுமதியுடன் அவர் முன்னர் பல்வேறு படங்களுக்கு அமைத்திருந்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்டார். டைட்டில் மியூசிக் சொர்க்கம் படத்தினுடையது அப்படியே பயன்படுத்தப் பட்டிருந்தது. நடிகர்திலகத்தை அறிமுகப்படுத்தும் மியூசிக், ஊட்டிவரை உறவு படத்தில் நாகேஷ், கடையொன்றில் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணின் பார்சலில் இருந்து 'காணவில்லை' விளம்பரத்தைக் கிழிக்க முற்படும்போது வாசிக்கப்பட்ட இசை. இப்படி பல்வேறு படங்களில் இருந்து பொருத்தமாக இணைத்திருந்தார். (சொன்னால்தான் மற்றவர்களுக்கே தெரியும். மற்றபடி இப்படத்துக்காகவே அமைக்கப்பட்ட ரீரிக்கார்டிங் போலவே இருக்கும்). நடிகர்திலகத்தின் காட்சிகள் எல்லாம் வெகுநாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருந்தபோதிலும், தயாரிப்பாளரின் வேறு பல காரணங்களால் படம் தாமதப்பட்டது. நடிகர்திலகம் நடித்த ஒன்றிரண்டு சிறிய காட்சிகள் மட்டும் கடைசியில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டன. பள்ளியின் 'பெற்றோர் தின விழாவுக்கு' சேகரின் குழந்தைகள் சுந்தரமூர்த்தியை அழைக்கும் காட்சியும், மாடியிலிருந்து உருண்டுவிழும் பெண் குழந்தையை சுந்தரமூர்த்தி தூக்கும் காட்சியும் கடைசியில் எடுக்கப்பட்டன. (இந்தக்காட்சியில்கூட நடிகர்திலகத்தின் சட்டை, தோள்பட்டையில் கிழிந்திருக்கும். அதைக்கூட கவனிக்காமல் எடுத்திருப்பார் ராமண்ணா).
ஆனால் படத்தின் வெற்றி ராமண்ணா எதிர்பாராத ஒன்று. நிச்சயம் படத்தின் வெற்றியில் அவர் திக்குமுக்காடிப்போனார். 'என்னைப்போல் ஒருவன்' படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, தினத்தந்தி பத்திரிகையில் நடிகர்திலகம் - லட்சுமி ஜோடியாக நடிக்கும் 'ராஜ பரம்பரை' என்ற புதிய படத்திற்கான விளம்பரத்தை வெளியிட்டார். அப்படத்துக்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்கும்போது ராமண்ணாவின் உடல்நிலை நலிவுற்றதால் அப்படத்தைக் கைவிட்டார். அதன்பிறகு அவரது இறுதிக்காலம் வரை ஓய்விலேயே இருந்து வந்தார்.