ஒய்.ஜி. விழா - 5
விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)
விழாத் தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையுரை:
"இந்த 'வியட்நாம் வீடு' நாடகத்தில், சிவாஜி வாழ்ந்து காட்டிய பிரஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்தை, தம்பி ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களும் சிறப்பான முறையில் செய்திருக்கிறார். கண்டிப்புக்கு பேர் போன குடும்பத்தைச் சேர்ந்தவராகத் திகழ்வதால்தான், கண்டிப்பே உருவான இப்பாத்திரத்தை, தம்பி ஒய்.ஜி.மகேந்திரன் தத்ரூபமாக நடித்துக் காட்ட முடிந்தது.
'வியட்நாம் வீடு' நாடகத்தை, ஒய்.ஜி.மகேந்திரன் மேடையேற்றி நடத்துவதே ஒரு பகீரத முயற்சி, ஒரு சவால். இதை நடித்து தமிழ்நாட்டில் பேரும், புகழும் பெற்றவர் என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்த அந்தப் பாத்திரத்தில் நடிப்பதே பெரிய சவால். 'இதனைக் குரு தட்சணையாக நடத்துகிறேன்' என்று ஒய்.ஜி.மகேந்திரன் என்னிடத்திலே சொன்னார். அந்த குரு காணிக்கையை சிறப்பான முறையிலே அவர் செலுத்தியிருக்கிறார்.
இங்கே இந்த நாடகத்தைக் காண வரும் போது, சிவாஜி நடித்த பாத்திரத்தை, அந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்போடு தான் வந்து அமர்ந்தேன். ஆனால் திருப்தியோடு தான் நான் இங்கிருந்து திரும்புகிறேன். பாதி நாடகம் பார்த்தே வியந்திருக்கிறேன். இன்று காலையிலிருந்தே எனக்குள்ள கடுமையான கண்வலியினால் மீதி நாடகத்தை கண்டு களிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். கண்வலிக்கு மருந்தாக இந்நாடகம் அமையும் என்று தான் வந்தேன். மருந்தாக அமைந்திருக்கிறது. இந்த நாடகம் உள்ளபடியே 'வியட்நாம் வீடு போல அல்ல, வியட்நாம் வீடே தான்' என்று சொல்லி விடைபெறுகிறேன்."
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.