Originally Posted by
mr_karthik
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி.
இங்கும் அதே நிலைதான். நானும் லோயர் மிடில் கிளாஸ்லிருந்து வந்தவன்தான். அப்போதெல்லாம் தினமும் தினத்தந்தி, தினகரன் செய்தித்தாள்களை கார்ப்பரேஷன் லைப்ரரியில்தான் படிக்க முடியும். பேசும் படம், பொம்மை, பிலிமாலயா பத்திரிகைகளை உடனுக்குடன் சுடச்சுட படிக்க முடியாது. மாநகராட்சி நூலகங்களில் அவற்றை வாங்க மாட்டார்கள். யாராவது பணக்கார மாணவர்கள் கொண்டுவந்தால் ஓசியில் படிப்பதுதான். சொந்தமாக வாங்கவேண்டுமென்றால் இரண்டு மாதங்கள் கழித்து பழைய பேப்பர் கடைகளுக்கு வரும்போதுதான் வாங்கிப்படிக்க முடியும். ஒரிஜினலாக 90 பைசா விலையுள்ள 'பொம்மை' அங்கு 25 பைசாவுக்குக் கிடைக்கும்.
இதற்காக நான் தொடர்ந்து சென்னை த்ம்புச்செட்டித்தெரு, பவளக்காரத்தெரு சந்திப்பிலுள்ள பழைய பேப்பர் கடையில்தான் வாங்குவது வழக்கம். நான் தொடர்ந்து பேசும் படம், பொம்மை இதழ்களையே வாங்குவதைக்கண்ட கடைக்காரர் திரு ராமசாமி, இம்மாதிரி புத்தகங்கள் வரும்போது அவற்றை வெளியில் தொங்க விடாமல் எனக்காக தனியே எடுத்து வைத்து விடுவார்.
படம் பார்க்கச்செல்லும்போதும் அப்படித்தான். கிரௌன் தியேட்டரில் 1.25 டிக்கட் ஃபுல் ஆகிவிட்டால், அதற்கடுத்த 1.66 கட்டணத்தில் போக காசு பத்தாது. திரும்பி வந்து விட்டு, அடுத்த காட்சி அல்லது அடுத்த நாள் மீண்டும் 1.25 கியூவில் போய் நிற்பது வழக்கம். ஆனால் எப்படியேனும் நடிகர்திலகத்தின் படம் மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவது வழக்கம். நான் நன்றாகப்படித்து நல்ல மார்க்குகள் எடுத்து பாஸ் பண்ணியதற்கும் மறைமுகமாக நடிகர்திலகம் காரணம் எனலாம்.
அதாவது நான் நிறைய சினிமா பார்ப்பதை வீட்டில் பெற்றோர் கண்டிக்காமல், தடுக்காமல் இருக்க வேண்டுமானால் படிப்பில் நல்லமாதிரியாக இருக்க வேண்டும். மார்க் ஷீட்டில் நல்ல மார்க்குகளைப் பார்த்து விட்டால் மற்ற குறைகள் பெரிதாகத் தோன்றாது என்று கணக்குப்போட்டேன். அதுபோலவே நடந்தது. நன்றாகப்படித்து தொடர்ந்து முதல் ஐந்து ரேங்குகளுக்குள் வந்துகொண்டிருந்ததால், 'சினிமா பார்த்தாலும் பையன் படிப்பில் சோடை போகலை. அதான் நல்ல மார்க் எடுக்கிறான்ல அதுபோதும், மற்றபடி எப்படியும் போகட்டும்' என்று விட்டுவிட்டார்கள்.
பின்னர் கையில் ஓரளவு காசு புழங்கத் துவங்கியபிறகுதான், பஸ் ஏறி மவுண்ட் ரோடு வந்து ரசிகர்களின் தாய் வீடான 'சாந்தி ஜோதி'யில் சங்கமமாகத்துவங்கினேன். பின்னர் நடந்தவற்றை அவ்வப்போது இங்கே சொல்லியிருக்கிறேன். இனிமேலும் சொல்லிக்கொண்டிருப்பேன்.