Originally Posted by
raghavendra
டியர் முரளி,
மனிதனும் தெய்வமாகலாம் பாடல் காட்சியைப் பற்றிய தங்கள் பகிர்வு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. நன்றாகப் போயிருக்க வேண்டிய படம், இசையினால் ஏமாற்றி விட்டது என்பதே உண்மை. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை இசையமைப்பாளராக வெற்றிகரமாக பயன்படுத்த ஏ.பி.என். அவர்களால் மட்டும் தான் முடிந்தது, காரணம், கதைக்களம். காதல் காட்சியில் ஸ்வரப் பிரஸ்தாரம் செய்து கச்சேரி மேடை போல் ஆக்கி விட்டு திரையரங்குகளில், சிகரெட், பீடி, தேனீர் போன்றவை நல்ல வியாபாரம் ஆவதற்கு வழி வகை செய்த நல்ல எண்ணம் மட்டுமே அந்தப் படம் கண்ட சாதனை. ஒரு ஸ்டால் உரிமையாளரிடம் ஒரு ரசிகர் பேசிக் கொண்டது இன்றும் நன்கு நினைவில் உள்ளது. இந்த மாதிரி படம் 4 வந்தால் போதும் நமக்கு பிழைப்பு நல்லா இருக்கும். அதை அவர் சொல்லி முடிப்பதற்குள் ரசிகர்கள் வந்து விட நைசாக நழுவி விட்டார். இது நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு பக்கம் மனசு கஷ்டமாயிருந்தது என்பதும் உண்மை. காவலுக்கு வேலுண்டு என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் மட்டுமே அப்படத்தில் ஆறுதல். பாடல்கள் மட்டும் மிகப் பிரபலமாக அமையும் விதத்தில் வேறு இசையமைப்பாளரிடம் கொடுத்திருந்தால் அப்படமும் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும். அது மட்டுமின்றி, பால் பொங்கும் பருவம் பாடல் அதற்கு சில காலத்துக்கு முன் தான் வந்த ஒரு பிரபலமான பாடலை நினைவு படுத்தியதும் ஒரு காரணம்.
மேற்கூறிய வரிகளை அப்படியே ராஜ ராஜ சோழன் படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். அதுவும் குறிப்பாக அப்பேர்ப்பட்ட காவிய நாயகனின் வரலாற்றுப் புதினத்தில், எம்.ஆர்.விஜயா வின் குரலில் காபரே நடனம் போன்ற இசையும் ஆங்கில இசைக் கருவிகளும் பயன் படுத்தி இதே போல் கேன்டீன் வியாபாரத்தை லாபகரமாக்கிய பெருமை குன்னக்குடிக்கு உண்டு.
மொத்தத்தில் முழு சுமையினையும் தன் தலை மேல் தாங்கி படத்தை தூக்கி நிறுத்திய நடிகர் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.
பி.கு. - எந்த தொலைக் காட்சியில் இப் பாடல் ஒளிபரப்பப் பட்டது என்பதைக் கூற முடியுமா.
அன்புடன்