Quote:
கே.பாலசந்தரின் ''சொல்லத்தான் நினைக்கிறேன்''
கவிதாலயா நிறுவனம் சார்பில் புஷ்பா கந்தாசாமி தயாரித்திருக்கும் புதிய மெகா தொடர் கே.பாலசந்தரின் ''சொல்லத்தான் நினைக்கிறேன்''. இந்த மெகாத்தொடர் 23.03.09 முதல், தினமும் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.00 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதில் தந்தை, மகளாக ரவி ராகவேந்தர், காவ்யா நடித்திருக்கிறார்கள். புகழ் பெற்ற கே.பி.யின் ''சஹானா'' தொடரில் நடித்த காவ்யா இந்தத் தொடரின் மூலம் மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் யுவராணி, பாத்திமாபாபு, தேவதர்ஷினி, சுரேஷ்வர், ராஜ்மதன், ரவிகாந்த், விழுதுகள் சந்தானம், அரவிந்த், ராஜ்குமார், தீபா நரேந்திரா என பலர் நடிக்கின்றனர்.
வாழ்க்கை என்னற்ற புதிர்களும், ரகசியங்களும் கொண்டது. ஒவ்வொருவரின் அடி மனதிலும் உறைந்து கிடக்கும் மர்மங்கள் எத்தனை எத்தனையோ?. எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அப்படி சொல்ல நினைத்து முடியாமல் போகிய எண்ணற்ற கனவுகளை, ஆசைகளை சின்னத்திரையில் எழுதிப் பார்க்கிற கே.பாலசந்தரின் இன்னொரு முயற்சிதான் இந்த ''சொல்லத்தான் நினைக்கிறேன்''.
அப்பா மகள் உறவின் புதிய எல்லைகளை, பரிமாணங்களை தொட்டுச் செல்கிறது இந்த தொடர். மதன் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர், அவரது ஒரே மகள் சாருலதா என்கிற சாரு. அப்பா மதன் வாழ்க்கையில் ஒரு மர்மம், ஒரு ரகசியம். அது மகள் சாரு சம்பந்தப்பட்டது. அந்த ரகசியம் வெடித்துச் சிதறுகிறபோது அழகான மாளிகை அடுக்கிய சீட்டுக்கட்டாய் சரிகிறது. இப்படி சுவையான முடிச்சுகள், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த மெகா தொடரின் திரைக்கதையை கே.பாலசந்தர் எழுதி உள்ளார். கதை எழுதி இயக்குகிறார் பம்பாய் சாணக்யா. வசனம் - தவமணி வசீகரன், ஒளிப்பதிவு தமிழ்மாறன், இசை கணேஷ், பாடல் :டாக்டர் கிருதயா.
______________