Quote:
விளக்கு வச்ச நேரத்திலே..!
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `விளக்கு வச்ச நேரத்திலே தொடர் 175 எபிசோடை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மனநல சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப் படுகிறான், செல்லத்துரை. அவன் பெயரில் இருக்கும் திரண்ட சொத்துக்கு ஆசைப்படும் அவன் தாய்மாமாவோ அவனை கொல்ல ரவுடிகளை அனுப்புகிறார்.
செல்லத்துரை போலவே அச்சுஅசலாக இருக்கும் ஜானி கண்ணில் பட்ட பெண்களை தன் காதல் பார்வையில் வீழ்த்தி அவர்களை வெளிநாட்டுக்கு விற்கும் `பிம்ப்' வேலையை செய்து கொண்டிருந்தான். இந்த ஜானியின் கண்ணில் இப்போது படுகிறான், அவன் போலவே உருவ ஒற்றுமையுடன் இருக்கும் செல்லத்துரை. அவன் குடும்பபின்னணி பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளும் ஜானி, செல்லத்துரையின் இடத்துக்கு வர விரும்புகிறான். இதற்குள் தாய்மாமா அனுப்பிய ரவுடிகள் செல்லத்துரையை கடத்தி விட, அது ஜானிக்கு வசதியாகி விடுகிறது.
செல்லத்துரையின் வீட்டுக்கு வரும் ஜானி மீது யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் எழ வில்லை. இது ஜானிக்கு வசதியாகி விடுகிறது. சொத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும் தருணத்துக்காக காத்திருக்கிறான்.
இதற்கிடையே வந்திருப்பது செல்லத்துரை அல்ல என்பதாக ஒரு சந்தேகம் பிரதாப்புக்கு ஏற்படுகிறது. செல்லத்துரையின் மனைவி பவித்ராவின் நல்வாழ்வு ஒன்றையே மனதில் கொண்டு வாழ்பவன் பிரதாப். அவன் தன்னை சந்தேகிப்பது ஜானிக்கும் தெரிகிறது. அவன் பிரதாப்பிடம் இருந்து தப்பினானா? கடத்தப்பட்ட ஒரிஜினல் செல்லத்துரை என்னஆனான்? ஏற்கனவே ஜானியால் தற்கொலை செய்துகொண்ட சாவித்திரியின் மரணம் இப்போது ஜானியின் தலைக்கு இன்னொரு கத்தியாக வந்து கொண்டிருக்க, திருப்பங்களுடன் தொடர்கிறது தொடர் என்கிறார், இயக்குனர் சி.ரங்கநாதன்.
தொடரில் பவித்ராவாக சுஜிதா, பிரதாப்பாக சஞ்சீவ் நடிக்க, செல்லத்துரை, ஜானி என இரு வேடத்தில் கவுசிக் நடிக் கிறார். மற்றும் கலாரஞ்சனி, சிவன் சீனிவாசன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, இளவரசன், நித்யா, `தேனி'ராஜேஷ், `ஊர்வம்பு' லட்சுமி , பயில்வான் ரங்கநாதன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், மோகன் வைத்யா நடிக்கிறார்கள்.
கே.பாக்யராஜ் கதை, வசனம் எழுத, இயக்கம்: சி.ரங்கநாதன். எவர்ஸ்மைல் நிறுவனத்துக்காக தயாரிப்பு ஒருங்கிணைப்பு ஈ.ராம்தாஸ்.