esvee ji super
Printable View
esvee ji super
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அன்பே வா பட விமர்சனத்தின் இணைப்பை தந்த நண்பர் திரு bkhlabhi அவர்களுக்கும் , அன்பே வா - பதிவுகளை பாராட்டிய திரு ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி .
சமுதாயத்தில் உள்ள அத்தனை பிரிவுகளின் ஏகோபித்த அன்பையும் , பாராட்டையும் பெற்ற ஒரே நடிகர் மக்கள திலகம் எம்ஜிஆர் . எம்ஜிஆர் படங்கள் - மக்களுக்கு பாடங்கள் . மேல்தட்டு கீழ் தட்டு என்ற வித்தியாசம் கிடையாது .திரையில் எம்ஜிஆர் தோன்றியதும் கிடைக்க கூடிய வரவேற்பு - கைதட்டல்கள் - உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பு .
நாம் சொல்லவில்லை . வரலாறு பேசுகிறது .
வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.
இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.
எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.
இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.
காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.
திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.
தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.
இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.
இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.
எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.
“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.
சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.
- அரவிந்தன்,
http://www.tamilsguide.com/details.p...9&catid=146974
8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார். இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன். தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது. ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது. எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது. 1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர். சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார். 14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது. வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார். ‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:– எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு? நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு. எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா? நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன். ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன். வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.
(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)
http://www.tamilsguide.com/details.p...9&catid=147109
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!
ரிகஷா தொழிலார்களுக்கு மழைக்கோட்டு வழங்கும் விழாவில் அறிஞர் அண்ணா, 4-12-1961 , நம்நாடு இதழில் :
என்தம்பி எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்? இதை இவ்வளவு பெரிய விழாவாக நடத்தியதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும், ‘நாம் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்ற எண்ணம் உருவாகவேண்டும் என்பதற்குத்தான். ‘அவர் மழை அங்கி தருகிறார் நாம் ஏதாவது தருவோம்; அவர் பெரும் பொருள் ஈட்டுகிறார்-அவர் தருகிறார், நாம் ஈட்டுகிற அளவுக்கு ஏதாவது செய்வோம்’ என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான். எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால். ‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்." -
நமது மக்கள் திலகத்தின் இளமைத் திருவிழா
http://i64.tinypic.com/2co26v6.jpg
ஒரு படத்தில் மக்கள் திலகம் நடிக்கிறார் என்றாலே அது அந்த படத்துக்கு பிளஸ்தான். மக்கள் திலகத்தை தவிரவும் , நாகேஷ், சரோஜா தேவி, சிம்லா, எம்எஸ்வி, ஏசிடி என அன்பே வா படத்துக்கு பிளஸ்கள் ஏராளம். அன்பே வா திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே அமுதகானங்கள்.
நான் பார்த்ததிலே....
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...
உள்ளம் என்றொரு கோயிலிலே...
லவ் பேர்ட்ஸ்....
அச்சம் இல்லை.. நாணம் இல்லை..
நாடோடி... நாடோடி..
புதிய வானம்.. புதிய பூமி...
.... அதிலும் நாடோடி பாடலுக்கு தலைவரின் நடனம் really superb. சிம்லா விழாவில், குட்டி யானை போன்ற நெல்லூர் காந்தாராவை அலேக்காக ஒருவர் தூக்குவதே கஷ்டம். அவரை அப்படியே தூக்கி சில விநாடிகள் தனது வலிமையான தோள்களில் அந்த மாமிச மலையை மக்கள் திலகம் வைத்திருப்பது பிரமிப்பை ஏற்படுத்தும்.
மக்கள் திலகம் படங்களில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஹைலைட்டாக அமையும். இதிலும் ஹோட்டலில் காந்தாராவ் அடியாட்களுடன் கொண்டாட்டத்தில் இருக்க, சரோஜாதேவியை தலைவர் பின் தொடர்ந்து தொல்லை செய்கிறார் என்று நினைத்த காந்தாராவ் தனது ஆட்களுடன் சேர்களை தூக்கி முன்னே வர, மக்கள் திலகமும் நாற்காலியை தூக்க பெரிய சண்டையை எதிர்பார்க்கும்போது...... சரோஜாதேவி என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் மக்கள் திலகத்தை கட்டிப்பிடித்துக் கொள்ள... (என்னதான் கோபம் இருந்தாலும் உணர்வு பூர்வமான காதலை அந்த தழுவல் உணர்த்தி விடும்.தன் மீது கோபம் கொண்ட சரோஜாவின் இந்த திடீர் தழுவலை எதிர்பார்க்காத மக்கள் திலகத்தின் எக்ஸ்பிரஷன் சூப்பர்.) உண்மையை உணர்ந்த காந்தாராவ் ‘லவர்ஸ் ஃபைட்’ என்று கூறிவிட்டு சிரித்தபடி தனது ஆட்களுடன் வெளியேற சண்டை இல்லாத கிளைமாக்ஸ் என இதிலும் வித்தியாசம்.
ஹோட்டலில் ஆங்கிலப் பின்னணி இசையுடன் சரோஜா தேவியும் மக்கள் திலகமும் தங்கள் காதலை துறக்க முடிவு செய்து பேசும் உணர்ச்சி மிக்க காட்சி. படத்தில் இதுதான் கொஞ்சம் சீரியஸ் காட்சி. அதுவும் நம்மை கட்டிப்போட்டு ஒன்ற வைக்கும். அந்த காட்சியில் பிளாக் சூட்டில் அட்டகாசமாக இருக்கும் மக்கள் திலகத்தின் கோட்டில் அசோகன் ரோஜாப் பூவை செருகுவார். ஆனாலும் மக்கள் திலகத்தின் முகப்பொலிவுக்கு முன் ரோஜா எடுபடாது.
தாமரைப் பூவுக்கு ஆசைப்படுவது போல அதைப் பறிக்க சொல்லி மக்கள் திலகத்தை ஐஸ் குளத்தில் இறக்கி விட்டு வேடிக்கை பார்த்து ஏமாற்றுவார் சரோஜா தேவி. மேலே ஏறி வந்ததும் தும்முவது போல தலைவர் நடிப்பது இயற்கையாவே தும்மல் வந்து தும்முவது போல அவ்வளவு இயல்பாக இருக்கும்.
மறுநாள் சரோஜா தேவிவை கலாய்க்க குளிர் ஜூரம் வந்தது போல நடித்து அவர் கையாலேயே நெஞ்சில் தைலத்தை தேய்த்து விடச் செய்யும் மக்கள் திலகத்தின் அழகும் குறும்பும்... சரோவின் கனிவும் மழலைக் கொஞ்சலும்...
மொத்தத்தில் அன்பே வா இளைமைத் திருவிழா.
அன்பே வா மட்டும் இல்லை. மக்கள் திலகத்தின் படங்களின் பாடல்கள் அழியா வரம் பெற்றவை. தனக்கே உரிய இசை ஞானத்தால் பாடல்களை அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால்தான் அவை இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குறிப்பிட்ட பாடலை மட்டுமே தேர்ந்தெடுப்பதால் மற்ற பாடல்கள் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விடப்படும். பின்னர், அவை பயன்படுத்தப்படாமலே போய் விட்டன. சில பாடல்கள் வேறு படங்களில் இடம் பெற்றன.
அதுபற்றி சிறு குறிப்பு அடுத்த பதிவில்.