http://i65.tinypic.com/16020bp.jpg
உலகத் தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Samayam Tamil
Printable View
http://i65.tinypic.com/16020bp.jpg
உலகத் தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Samayam Tamil
ஆயிரம் ஓல்ட் மின்சாரமும் அண்ணாசாலையில் நடந்த பதவியேற்பும்... எம்.ஜி.ஆர் எனும் ஓட்டு வேட்டைக்காரன்!
தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்ற நாள் இன்று. தமிழக அரசியல் வரலாற்றில் ஜூன் 30-ம் தேதி மறக்கவியலாத தினம். 1977-ம் ஆண்டு இதே தினத்தில்தான் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார்.
சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி என்ற பாரம்பர்யத்தோடு இந்தியா முழுக்க மக்களிடையே பெரும் வரவேற்போடு தன் ஆளுகையைப் பரப்பியிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தவர் அண்ணாதுரை. காங்கிரஸ் கட்சி என்ற ஆலமரத்தை ஒரே ஒரு மாநிலத்தில் விரவியிருந்த திராவிடக்கட்சி ஒன்று வீழ்த்திக்கிடத்தியது இந்திய வரலாற்றில் பெரும் சாதனை. திராவிட சிந்தனை கொண்டவர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதை ஒரு பலம் கொண்ட ஓர் அமைப்பாக கட்டியமைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது அண்ணாவின் தனிப்பெரும் சாதனை. பெரியார் தேர்தல் அரசியலை விரும்பாதவர் என்பதால் பெரியாருடன் அண்ணாவின் சாதனையை ஒப்பிடமுடியாது. ஆனால், அண்ணா ஆட்சிக்கு வந்த அடுத்த பத்தாண்டுகளில் அண்ணாவின் அந்தச் சாதனையையே முறியடிக்கும் ஒரு விஷயம் அரங்கேறியது. அது ஒரு மக்கள் அபிமானம் மிக்க நடிகர் நாடாளும் வாய்ப்பைப் பெற்றது. அந்தச் சாதனை மனிதர் எம்.ஜி.ஆர்!
அண்ணாவின் உழைப்பு, ஓர் இயக்கமாக திராவிடச் சிந்தனையை அவர் கட்டியமைத்தது, நிர்வாக ரீதியில் அமைத்திருந்த கட்சியின் அஸ்திவாரம், அவரைப்போன்றே திராவிடச் சிந்தனையில் ஊறிப் போராட்டக் களத்தில் முன்நின்ற பலமிக்க அவரது தம்பிகள் இவற்றில் எந்த ஒன்றையும் வெற்றிகரமாகப் பெற்றிராத எம்.ஜி.ஆர் என்ற மருதுார் கோபாலமேனோன் ராமச்சந்திரன் அண்ணா பெற்ற வெற்றியை அடைந்தது எப்படி...3 வரிகளில் உள்ளது இதன் ரகசியம்...மக்களைச் சந்தி, மக்களோடு இரு, மக்கள் பிரச்னையை பேசு என அண்ணா சொன்ன மந்திரம்தான் அது...
தமிழர் உணர்வும் தமிழ்மொழிப்பற்றும் ஊறிய ஒரு மாநிலத்தில் ஒரு நடிகர் அதுவும் இந்த மாநிலத்தைச் சாராதவர் என அறியப்பட்ட ஒரு வெற்றிகரமாக 11 ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டு சென்றிருக்கிறார் என்பது ஆய்வுக்குரிய விஷயம். இந்த வித்தையை அவர் வென்றெடுக்க காரணமானவை மேற்சொன்ன 3 வரிகள்தான். கொள்கை ரீதியாக மற்ற கட்சிகள் மக்களின் பிரச்னைகளைப் பேசியபோது எம்.ஜி.ஆர், அவர்களின் அடிப்படை பிரச்னைகளையும் நடைமுறை சிக்கல்களையும் பேசினார். திராவிட உணர்வையே திரும்பத் திரும்ப அவரது பங்காளியான திமுக மக்கள் முன் வைத்து அவர்களின் உணர்ச்சியை உசுப்பியபோது வெயிலில் நடக்காதீர்கள் என செருப்பை தந்து அதைத் தணியவைத்தார். ஒரு பக்கம் திராவிடத்தைப் பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த கொள்கையையே அடமானம் வைத்துவிட்டு மலையாளி என எம்.ஜி.ஆரை திமுக வன்மத்தை வெளிப்படுத்தியபோது சத்துணவு அந்த விமர்சனத்தில் சத்தில்லாமல் செய்தது. ஒரு பெரும் சித்தாந்தங்களுக்கு மத்தியில் தனி மனிதராக எம்.ஜி.ஆர் இப்படித்தான் வென்றார்.
இலங்கையில் பிறந்து கேரளாவில் வளர்ந்து தந்தையின் திடீர் மரணத்தால் வறுமைக்கு ஆளாகி அதை வென்றெடுக்க தன் சகோதரர் மற்றும் தாயுடன் ஒரு நள்ளிரவில் கும்பகோணத்துக்கு வந்திறங்கியவர் எம்.ஜி.ராம்சந்தர்.
பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து பாலபார்ட் வேடங்கள் போட்டு, தன் திறமையால் ராஜபார்ட் ஆனார் சில வருடங்களில். காந்தி, நேரு மீது அளவற்ற காதலால் காங்கிரஸில் காலணா உறுப்பினராக இருந்தவர். காரைக்குடி வந்த காந்தியைக் கண்டபிறகு காந்தியின் பித்துக் கொண்டு மதுக்கடை மறியலில் ஈடுபட்டு யானைக்கவுனி காவல்நிலையத்தில் கைதாகியும் இருக்கிறார். நாடகத்திலிருந்து 'சதிலீலாவதி' படத்தில் காவல்காரர் வேடத்தில் முதல் சினிமா வாய்ப்பு. அடுத்தடுத்து சிறுசிறுவாய்ப்புகளில் பத்தாண்டுகள் கடந்தநிலையில் 1947-ம் ஆண்டு ஜூபிடர் நிறுவனம் தன் 'ராஜகுமாரி' படத்தில் கதாநாயகனாக முதல் வாய்ப்பு அளித்தது. 'மந்திரிகுமாரி' பட்டிதொட்டியெங்கும் எம்.ஜி.ஆரை கொண்டு சேர்த்தது. அடுத்தடுத்த படங்கள் மூலம் ஒரு நட்சத்திர நடிகரை அடையாளம் கண்டது தென்னிந்திய சினிமா.
40களின் இறுதியில் தனது 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிக்க கட்டுடலும் கணீர் வசனமும் பேசும் திறமையும் கொண்ட ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார் அண்ணா. கழுத்தில் துளசி மாலையும் கதர் உடையோடும் காணப்பட்ட ராம்சந்தரை அதற்கு தேர்வு செய்த அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி.நாராயணசாமி ராம்சந்தரை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். முதற்சந்திப்பிலேயே அண்ணா மீது இனம்புரியாத காதல் பிறந்தது ராம்சந்தருக்கு. அண்ணா அன்பளிப்பாக அளித்த பணத்தோட்டம் நாவல் அவரது அறிவின் வீச்சை பறைசாற்ற, அசந்தும் அதிசயித்தும் போன ராம்சந்தர், அண்ணாவின் படைப்புகளை வாசிக்கவும் அவரை சுவாசிக்கவும் ஆரம்பித்தார். கதருக்கு விடைகொடுத்தார். துளசிமாலையைத் துாக்கி எறிந்தார். ராம்சந்தர் ராமச்சந்திரன் ஆனார். சினிமாவின் அடுத்தடுத்த வெற்றிகள் அவரை இன்னும் நெருக்கமாக எம்.ஜி.ஆர் என அழைக்க வைத்தது. (ஆனால் ஏனோ பின்னாளில் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் சிவாஜி நடிக்க நேர்ந்தது.)
1951-ம் ஆண்டு திமுகவில் அதிகாரபூர்வமாக இணைந்தார் எம்.ஜி.ஆர். கட்சிக்காக தமிழகத்தில் சுற்றிவராத ஊர்களை விரல்விட்டுச் சொல்லிவிடலாம். எம்.ஜி.ஆர் கட்சி என்ற அந்தஸ்து திமுகவை அடித்தட்டுமக்களுக்கு அடையாளம் காட்டியது. கட்சியும் வளர்ந்தது. எம்.ஜி.ஆரும் வளர்ந்தார். எம்.ஜி.ஆரின் உழைப்பிற்கு எம்.எல்.சி பதவியைப் பரிசாகத் தந்தார் அண்ணா. கூடவே கழகத்தில் இரு அணிகளும் உருவாகின. கருணாநிதி - சம்பத் என்ற இருதலைவர்களுக்கிடையே ஏற்பட்ட மனவேறுபாடு கழகத்தில் பிளவை ஏற்படுத்தியது. தன் சினிமா பங்காளி கருணாநிதிக்கு ஆதரவாய் நின்றார் எம்.ஜி.ஆர். அண்ணாவுக்குப் பிறகு அவர் அதிசயித்த மனிதர் கருணாநிதி. கலகலத்த கழகம், சம்பத் வெளியேறியபின் கொஞ்சம் கலகலப்புக்கு வந்தது. அதுவும் நிரந்தரமில்லை.
எம்.ஜி.ஆரின் பிரபல்யம் கட்சியின் மற்ற தலைவர்களுக்குக் கொஞ்சம் முகச் சுழிப்பை ஏற்படுத்தியது. கழகத்தில் எம்.ஜி.ஆருக்கு எதிரான அணி ஒன்று சத்தமின்றி உருவாகியிருந்தது. “அண்ணாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறார் சம்பத்” என அண்ணாவின் இதயத்திலிருந்து சம்பத்தைக் கழற்றிவிட்டவர்கள், எம்.ஜி.ஆரை பலிகொடுக்க 1964-ம் ஆண்டு நடந்த காமராஜர் பிறந்தநாளை கையில் எடுத்தார்கள். “காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி” என அந்த விழாவில் உணர்ச்சிவயப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். பார்த்தாயா உடன்பிறப்பே, அண்ணா வழிகாட்டியாம் காமராஜர்தான் தலைவராம் என நீட்டி முழக்கி கருணாநிதியின் தயவில் ஓடிக்கொண்டிருந்த இதழ்களில் கட்டுரைகள் வெளியாகின. கட்சியின் 'வளர்ச்சி'யில் அடுத்தடுத்து தீவிரம் காட்டின அந்த இதழ்கள். அண்ணாவின் காலம் வரை நீறு பூத்த நெருப்பாக இருந்த கருணாநிதி- எம்.ஜி.ஆர் மோதல் அவரதுமறைவுக்குப்பின் அதிர்ச்சியளிக்கும்விதமாக கடைத்தெருவுக்கு வந்தது. இத்தனைக்கும் அண்ணாவின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை இட்டு நிரப்ப பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கருணாநிதியைத் தேர்வு செய்து அதை வெற்றிகரமாக்கியவர் எம்.ஜி.ஆர். ஒரு உறையில் இரு கத்திகள் உட்காரமுடியாது என்பது அறிவியல் மட்டுமல்ல அரசியலும் அதுவேதான்!
எம்.ஜி.ஆர் - கருணாநிதிக்கு இடையில் புகைச்சல் இருப்பதை பூடகமாகவோ வெளிப்படையாகவே இதை எழுதிவந்தன அன்றைய தினசரிகள். ஆனாலும், பொதுமேடையில் கண்ணியமாக இருதலைவர்களும் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற எம்.ஜி.ஆரை கட்டித்தழுவி வாழ்த்துச்சொன்ன கருணாநிதி எம்.ஜி.ஆர் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியான சமயம் பரம வைரியாகிப்போயிருந்தார்.
திருக்கழுக்குன்றத்தில் 1972 அக்டோபர் 8-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதன்முறை எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையிலான பனிப்போர் பட்டவர்த்தனமானது. அந்தக் கூட்டத்தில், “அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்துவிட்டனர். திமுக மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நடந்துபோய்க்கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். அமைச்சர்களின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துவிவரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர். இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன்'' எனக் கொதிப்பாகப் பேசினார். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைமை. “தவறு செய்தவர்கள்தான் மன்னிப்பு கேட்கவேண்டும். தவறு செய்யாத நான் ஏன் விளக்கம் அளிக்கவேண்டும்” என மத்தியஸ்தம் பேச வந்த முரசொலி மாறனிடம் உக்கிரம் காட்டினார் எம்.ஜி.ஆர். ஏதோ ஒரு முடிவை கருணாநிதி - எம்.ஜி.ஆர் இருவரும் எடுத்துவிட்டதாகச் சொல்லி பெரியார் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் ஒதுங்கிக்கொண்டனர்.
எம்.ஜி.ஆர் மீதான நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக திமுக செயற்குழுக் கூட்டம் கூடியது. பெண் உறுப்பினர் ஒருவர், திமுகவுக்கு எம்.ஜி.ஆர் பயன்பட்ட விதத்தை சுட்டிக்காட்டி, “எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்குவது, முடிவெடுப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கைவைப்பதற்குச் சமம்" எனக் கண்ணீர்விட்டபடி கூறினார்.
அதிர்ச்சி என்னவென்றால் கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேநேரத்தில் மாலைப்பத்திரிகை அலுவலகம் ஒன்றில், 'கட்சி நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததால் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தலைமைக்கழகத்தில் இருந்து வந்த செய்தியை அச்சுக்கோர்த்துக்கொண்டிருந்ததாக சொல்வார்கள். திமுக கொடியை சென்சார்
வெட்டிவிடுவார்கள் என்பதால் அந்த கொடியையே தன் அதிகாரபூர்வ தன் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் எம்பளமாக வைத்ததோடு தன் படங்களில் திமுகவையும் அதன் தலைவர் அண்ணாவையும் ஏதாவது ஒரு காட்சியிலாவது சென்சாரின் கழுகுக்கண்களை மீறி மக்களிடம் கொண்டுசேர்த்த எம்.ஜி.ஆர், கருவேப்பிலைபோல் துாக்கியெறியப்பட்டார். “ அண்ணாவிடம் இருந்துபெற்ற கனியை வண்டு துளைத்துவிட்டது. ஆகவே துார எறியவேண்டியதாகிவிட்டது" என தன் வாய்ஜாலத்தைக்காட்டிய கருணாநிதி, "மத்திய அரசு விரித்த வலையில் விழுந்துவிட்டார்” எனப் பிரிவுக்குக் காரணம் சொன்னார். “தன் பிரமாண்ட வளர்ச்சியை விரும்பாமல் கருணாநிதி என்னை தூக்கியெறிந்துவிட்டார்” என்றார் எம்.ஜி.ஆர்.
கட்சியில் கிங் மேக்கராக இருந்தபடி இறுதிவரை ஒரு நடிகனாக புகழ்வெளிச்சத்தில் காலம் கழிப்பதுதான் எம்.ஜி.ஆரின் வாழ்நாள் ஆசையாக இருந்தது. ஆனால், ஒரேநாளில் கட்சி தன்னை கைவிட்டதை அவரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கலங்கிப்போயிருந்தவரை கழகம் கைவிட்டாலும் ரசிகர்கள் கைவிடவில்லை. எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கிய நாளிலிருந்து தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவியது. திமுக தலைவர்களே கூட கறுப்பு சிகப்பு கொடியுடன் காரில் பயணிக்க அஞ்சினர். அந்தளவுக்கு நிலைமை மோசம். அரிதாரத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆசையை ஆட்சி அதிகாரத்தை நோக்கி மடைமாற்றினர் அவரது ரசிகர்கள். தனக்கு எழுந்த தன்னிச்சையான வரவேற்பு எம்.ஜி.ஆரை ஒரேநாள் இரவில் கட்சியைத்துவக்கும் சிந்தனையை ஏற்படுத்தியது.
1972-ம் வருடம் அக்டோபர் மாதம் 17-ம் தேதி அதிமுக உதயமானது. கட்சியின் கொடியில் அண்ணா. கட்சியின் கொள்கை அண்ணாயிஸம். இப்படி எங்கும் எதிலும் அண்ணாவை முன்னிறுத்தினார் எம்.ஜி.ஆர். கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளர் மாயத்தேவர் பெற்ற வாக்குகள், எம்.ஜி.ஆருக்கு கட்சியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது. சினிமாவில் எம்.ஜி.ஆர் ஏற்றுநடித்த வேடங்கள் ஏற்படுத்தியிருந்த பிம்பம் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்குப் பக்கபலமாகி நின்றது.
ஆளும் கட்சியான திமுகவினரால் அதிமுகவினர் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகினர். எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
“நான் இறக்கும்வரை அண்ணாவின் கழகத்தில்தான் இருப்பேன். நான் இறக்கும்போது என் உடலில் கழகத்தின் கொடிதான் போர்த்தப்படவேண்டும்” என்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பெருமிதத்துடன் பேட்டியளித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் 72 க்குப்பின் திமுகவை எதிர்ப்பதுதான் அவரது வாழ்க்கை என்றானது. இந்த 5 ஆண்டுகளில் புலாவரி சுகுமாரன் என்ற சேலத்து இளைஞர் உள்ளிட்ட பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
கட்சித்துவங்கிய 5 ஆண்டுகளில் ஆட்சியைப்பிடித்தது அதிமுக. 1977-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 144 இடங்களைப்பெற்று அதிமுக வென்றது. அருப்புக்கோட்டையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியின் அழைப்பை ஏற்று அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்றது. நாஞ்சில் மனோகரன். நாராயணசாமி, எட்மண்ட் , பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம்.வீரப்பன், அரங்கநாயகம், பெ.சவுந்தரபாண்டியன், காளிமுத்து, ராகவானந்தம்,பொன்னையன், பி.டி.சரசுவதி, ஜி.குழந்தைவேலு, கே.ராஜா முகமது போன்ற படித்த இளைஞர்கள், அனுபவமுள்ள தலைவர்களைத் தனது அமைச்சரவையில் இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.
பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளை எம்.ஜி.ஆர் வைத்துக்கொண்டார். ராஜாஜி மண்டபத்தில் இந்தப் பதவியேற்பு வைபவம் நடந்து முடிந்ததும் நேரே எம்.ஜி.ஆர் தன் அமைச்சரவை சகாக்களோடு சென்றது அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடைக்கு. ஆம் தன்னை, தன் வாழ்வை இத்தனை உயரத்துக்குக் கொண்டு சென்ற மக்கள் முன்னேதான் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார்.
தணிக்கை செய்யப்படாமல் ஓரிரு படங்களை மட்டும் என்னை எடுக்க அனுமதித்தால் நான் திராவிடத்தை வென்று காட்டுவேன் என்றார் அண்ணா. அண்ணாவின் ஆசையைத் தணிக்கை செய்யப்பட்ட படங்களைக் கொண்டே நிகழ்த்திக்காட்டியவர் அண்ணாவால் இதயக்கனி என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அடுத்த 11 ஆண்டுகள் அவரே தமிழகத்தின் அசைக்கமுடியாதவராக இருந்தார் என்பது உலகமறிந்த வரலாறு.
உலகத் தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vikatan