ஆரூர் தாஸ் அவர்களின் தினத்தந்தி கட்டுரை
நீங்காத நினைவுகள் (ஆரூர் தாஸ் அவர்களின் தினத்தந்தி தொடர் - நிறைவுக் கட்டுரை )
பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 27,2014, 11:59 am ist
நன்றி :திரு vcs
2001-ம் ஆண்டு ஜூலை இரண்டாவது வாரத்தில் ஒருநாள் நள்ளிரவுஇரைவுக் நான் ஒரு கனவு கண்டேன். சென்னை தியாகராயநகர் 'செவாலியே' சிவாஜிகணேசன் சாலையில் உள்ள அவருடைய 'அன்னை இல்லம்' மாளிகையின் உள்ளேயும், வெளியிலும் நண்பர்களும், ரசிகர்களும் மற்றும் பொதுமக்களும் ஏராளமாகக் குழுமி இருந்தனர். அவ்வப்போது அங்கு சென்று அண்ணன் சிவாஜியைப் பார்த்துப் பேசிவிட்டு வரும் வழக்கமுள்ள நான், இன்றைக்கு அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் குழம்பிய நிலையில் உள்ளே சென்றேன்.
கூட்டத்தில் நான் கண்ட அந்தக்காட்சி என்னை அதிர்ச்சி அடையச் செய்தது.
நான் பார்த்து இதுவரையில் மேல் மாடியில் இரண்டாவது படுக்கை அறைக்குள், பளபளவென்ற ஒரு அழகான அகலமான பித்தளையினால் ஆன கட்டிலில் படுத்துறங்கிவந்த நடிகர் திலகம், இன்று குளிர் பதனம் செய்யப்பட்ட ஒரு நீண்ட கண்ணாடிப் பேழைக்குள் கண் மூடி மீளாத்துயில் கொண்டிருந்தார். அந்தப் பேழையின் மேல் கமலாம்மா தன் முகத்தைப் பொருத்திக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தார். இதைக் கண்டதும் நான் தீயை மிதித்ததைப் போலத் துடித்து 'அண்ணே' என்று அலறினேன்.
இப்பொழுது நான் என் வீட்டுப் படுக்கை அறையில், படுக்கையிலிருந்து என்னை அறியாமல் எழுந்து உட்கார்ந்திருப்பதை உணர்ந்தேன். என் அலறல் சப்தத்தைக்கேட்டு அருகில் உறங்கிக் கொண்டிருந்த என் மனைவி திடுக்கிட்டு எழுந்து, 'என்னங்க. என்னாச்சு?' என்று கேட்டார்.
நான்:- அண்ணன் போயிட்டாரு.
மனைவி:- எந்த அண்ணன்?
நான்:- சிவாஜி.
மனைவி:- இல்லே. நீங்க கனவு கண்டிருக்கீங்க.
நான்:- ஆமா. கனவுதான். இப்படி ஒரு கனவு எனக்கு ஏன் வந்தது?
மனைவி:- கொஞ்ச நாளா நீங்க போய் அவரைப் பார்க்கலே. பார்க்கணும் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு அவர் ஞாபகத்துலேயே இருக்கீங்க. அதனாலதான் அவரைப்பத்தி கனவு கண்டிருக்கீங்க.
நான்:- இருந்தாலும் இப்படி ஒரு கெட்ட கனவு ஏன் வரணும்? இது ஏதோ ஒரு அறிகுறி மாதிரி எம்மனசுக்குப் படுது... ஒருவேளை...
மனைவி:- (குறுக்கிட்டு) அதெல்லாம் ஒண்ணும் இல்லே. பேசாம படுத்துத் தூங்குங்க. நாளைக்குக் காலையில போயி அவரைப் பார்த்திட்டு வாங்க. சரியாப் போயிடும்.
மறுநாள் காலை. அண்ணனின் 'அன்னை இல்லம்'. வழக்கம்போல அந்த 'புலிக்கூட'த்தைக் கடந்து உள்ளே இடது புறம் மாடிக்குச் செல்லும் மரப்படிகளில் ஏறினேன்.
ஆரம்ப நாட்களில் சிவாஜி வேட்டைப் பிரியராக இருந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் உள்ள அவருடைய அருமை நண்பரும், செல்வந்தருமான என் அன்பிற்கினிய அண்ணன் முத்துமாணிக்கத்தின் இல்லத்தில் கமலாம்மாவுடன் சென்று தங்குவார். பின்னர் இரவு நேரங்களில் அண்ணன் முத்துமாணிக்கம் மற்றும் உறவினர்களுடனும் சேர்ந்து ஊருக்கு அப்பால் உள்ள காட்டிற்கு துப்பாக்கியுடன் சென்று வேட்டையாடுவதை அவ்வப்போது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
1960-ல் 'பாசமலர்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இந்த முத்துமாணிக்கம் என் மீது கொண்ட அன்பினால் என்னை எழுதவைத்து, அதை என் அருமை நண்பர் ஸ்ரீதரை இயக்கச் செய்து, சிவாஜி நடித்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்று ஆவல் கொண்டார். இதற்காக சிவாஜியின் பிள்ளைகளான ராம்குமார், பிரபு இருவரின் பெயரைக்கொண்டு 'பிரபுராம் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நேரத்தில் நான் இயக்குநர் ஏ.பீம்சிங்கின் 'பாசமலர்', 'பார்த்தால் பசிதீரும்', 'படித்தால் மட்டும் போதுமா', அத்துடன் தேவர் பிலிம்சில் எம்.ஜி.ஆர். நடித்து நான் அவருக்கு எழுதிய முதல் படமான 'தாய் சொல்லைத் தட்டாதே' மற்றும் ஏவி.எம்.மில் ஏ.சி.திருலோகசந்தரின் 'வீரத்திருமகன்' ஆகிய படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதனால் போதிய நேரமின்மை காரணமாக ஸ்ரீதருடன் இணைய முடியாமல் போய்விட்டது.
அதன் பிறகு ஸ்ரீதரே எழுதி- இயக்கி, சிவாஜி- சரோஜாதேவி நடித்த அந்தப்படம்தான், பிரபுராம் பிக்சர்ஸின் 'விடிவெள்ளி'. அந்த ஒரு படத்திற்குப்பிறகு அண்ணன் முத்துமாணிக்கம் மேற்கொண்டு படத்தயாரிப்பில் ஆர்வம் கொள்ளவில்லை.
வேட்டையாடிய அந்த நாட்களில் சிவாஜிக்கு ஒரு வேங்கைப்புலி கிடைத்தது. அதை அப்படியே பதப்படுத்திப் பாடம் பண்ணி அசல் உயிர்ப்புலி போல ஆக்கி அழகுற இல்லத்தின் முன்கூடத்தில் நிறுத்தி இருந்தார். அதனால் அதை நான் 'டைகர் ஹால்' - 'புலிக்கூடம்' என்று சொல்வதுண்டு.
மாடி வராந்தாவைக் கடந்தேன். வழக்கம்போல அண்ணனும், அண்ணியும் ஹாலில் அமர்ந்திருந்தனர். நான் வருவதைக்கண்டு கமலாம்மா 'ஆரூரார் வர்றாரு மாமா' என்றார். அதைக்கேட்டு அண்ணன் தன் வலது கையை நெற்றி மீது வைத்து, தூரத்தில் வருபவர்களை வயோதிகர்கள் விழிகளை விரித்துப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தார். இதற்கு முன்பு அவர் அப்படிப் பார்த்தது கிடையாது. அதை வைத்து அவருடைய வயதின் முதிர்ச்சியை நான் உணர்ந்து கொண்டேன். வழக்கம்போல அவரது காலைத்தொட்டு வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தேன்.
ஒருகணம் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு கேட்டார்:-
சிவாஜி:- என்னப்பா? ஊர்லதான் இருக்கியா?
நான்:- ஆமாண்ணே. இங்கேதான் இருக்கேன்.
சிவாஜி:- பின்னே ஏன் முந்திமாதிரி என்னைப் பார்க்க அடிக்கடி வர்றதில்லே. அண்ணனை மறந்திட்டியா?
நான்:- ஐயோ! உங்களை நான் மறக்கமுடியுமா? இப்போ டப்பிங் படங்கள் நிறைய பண்றேன். அதனால நேரம் கிடைக்கலே. அதுதான் காரணம். வேற ஒண்ணுமில்லே.
உம்...... (சற்றுத்தயங்கியபடி) அண்ணே! நேத்து ராத்திரி கூட உங்களைக் கனவுல கண்டேன்...
சிவாஜி:- ஓ! அப்போ கனவுல என்னைக் கண்டாதான் நேருல பார்க்க வருவே போலருக்கு. பரவாயில்லே. உன் கனவுலயாவது என்னைப் பாக்குறியே... அதுவரைக்கும் சந்தோஷம். ஆமா...இப்போ உனக்கு என்ன வயசாகுது?
நான்:- அறுபத்தொன்பது முடிஞ்சி எழுபது நடந்துகிட்டிருக்கு.
சிவாஜி:- அப்படியா? உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலே. அஞ்சாறு வயது குறைச்சலா தெரியிது. என்னைப் பார்த்தா எப்படித் தெரியிது? நீதான் கரைக்டா சொல்லுவே.
நான்:- உங்க வயசு எனக்குத் தெரியும். அதை வச்சு சொல்றேன். இப்போ உங்களைப் பார்க்கும்போது அஞ்சு வயசு கூடுதலா தோணுது. அந்த அளவுக்கு ரொம்ப தளர்ந்து போயிருக்கீங்க.
சிவாஜி:- உண்மைதான். ஏன் அப்படி ஆயிட்டேன்?
நான்:- சின்ன வயசுலேருந்து நாடக வாழ்க்கை! சினிமாவுக்கு வந்ததுக்கப்புறம்... நிறைய படங்கள்! ராத்திரி பகலா ஷ¨ட்டிங்! கடுமையான உழைப்பு... படத்துக்குப் படம் வித்தியாசமான - பலவிதமான வேஷங்கள்ள உங்களை நீங்களே மறந்து உணர்ச்சி வசப்பட்டு நடிச்சு நடிச்சு உடம்பை ரொம்ப வருத்திக்கிட்டிருக்கீங்க. அதனாலதான் இப்போ தளர்ந்து போயிட்டிங்க...
சிவாஜி:- (கண்கலங்கி) உண்மைதான். நீ சொல்றதுதான் சரி. அனாவசியமா என் உடம்பைப்போட்டு தண்டிச்சிக்கிட்டேன். அவ்வளவு தேவை இல்லே... இல்லியா? என்ன சொல்றே?
நான்:- அண்ணே! ஒண்ணு சொல்றேன். உங்களை நீங்களே தண்டிச்சிக்கிட்டு அப்படிக் கடுமையா உழைச்சு நடிச்சதுனாலதான் 'நடிகர் திலகம்' சிவாஜி ஆனீங்க! இல்லேன்னா சாதாரண வி.சி.கணேசனாத்தான் இருந்திருப்பீங்க. அதுமட்டுமில்லே, ஆரம்ப நாட்கள்ள தி.மு.க.வுலேருந்து நீங்க விடுபட்டதுக்கப்புறம், உங்களுக்கு உண்டான எதிர்ப்பு நெருப்புலே உங்களைத் தவிர வேற யாராயிருந்தாலும் எரிஞ்சிப் பொசுங்கிப் போயிருப்பாங்க.
தனித்துவம் பெற்ற தலைசிறந்த உங்க நடிப்பு ஒண்ணுதான் உங்களுக்கு உறுதுணையா இருந்து காப்பாத்துச்சு. இல்லேன்னா அந்த வெள்ளத்துல நீங்க மூழ்கிக் காணாமலே போயிருப்பீங்க. எதிர்நீச்சல் போட்டுக் கரையேறி இருக்க முடியாமப் போயிருக்கும்!
அதை வச்சுத்தான் அண்ணா அன்னிக்கு சொன்னாரு:- 'சிவாஜிகணேசன் போன்ற அற்புதமான கலைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதே நமக்குப் பெருமை அல்லவா. நம் நாட்டிலே இப்படிப்பட்ட கலைஞர்கள் இருப்பது நம் நாட்டுக்குக் கிடைத்த புகழ் அல்லவா. அந்த வகையிலே நாம் பெருமையும், பூரிப்பும் அடையவேண்டும்.
சிவாஜிகணேசன் சாதாரண நாடக நடிகராக இருந்து இன்று தலைசிறந்த திரைப்பட நடிகரான காலம்வரை அவரை எனக்குத் தெரியும்.
வைரம் கிடைப்பது கடினம். ஆனால் எவ்வளவு நாள் ஆனாலும் வைரம் மின்னாமல் போகாது. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்காமலிருந்தால், அமெரிக்கா கிடைக்காதா என்ன? அதுபோலத்தான் சிவாஜிகணேசனும்! அவர் என்றுமே என் உள்ளத்தில் உள்ளார். அவரை என்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறேன். அவர் அரும்பாக இருக்கும்போதே, அது மலராகும் என அறிந்தவன் நான். எல்லோரையும்விட நான் அதிகமாக மகிழ்கிறேன்'.
இதை அண்ணா எப்போ சொன்னாரு? நீங்க கழகத்துல இருந்தப்போ இல்லே - அதைவிட்டு வெளியே வந்ததுக்கப்புறம் உங்க எதிர்ப்பாளர்களுக்கு மத்தியில் எடுத்துச் சொல்லி உங்களைப் பெருமைப்படுத்தினாரு. நினைவிருக்கா?
சிவாஜி:- (தலையசைத்தபடி) எனக்கு இருக்கோ இல்லியோ, நீ நல்லா நினைவு வச்சிருக்கே. இப்படியெல்லாம் நீ பேசுறதைக் கேக்கும்போது எனக்கு அஞ்சாறு வயசு குறைஞ்சிட்டது மாதிரி மனசுக்குள்ளே ஒரு தெம்பு பொறக்குது. ஆரூரான்! கமலாம்மாதான் என்னைப்பத்தி ரொம்ப கவலைப்படுறா. எனக்குச் சொன்னது மாதிரி உங்க அண்ணிக்கும் சொல்லு.
நான்:- (கமலாம்மாவிடம்) என்ன அண்ணி? என்ன அப்படி உங்க கவலை?
கமலாம்மா:- 'ஒண்ணுமில்லே. இப்போல்லாம் 'கமலா! ஜாக்கிறதையா இருப்பியா, ஜாக்கிறதையா இருப்பியா'ன்னு மாமா அடிக்கடி என்னைக் கேக்குறாரு. ஏன் அப்படி கேக்குறார்னு எனக்குப் புரியலே. முந்தியெல்லாம் இப்படிக் கேக்கமாட்டாரு. அது ஒண்ணுதான் எனக்குக் கவலையா இருக்கு. மத்தபடி எதுவும் இல்லே' என்று கூறியவாறு கலங்கியதன் கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.
இதைக்கேட்டு நான் ஏறிட்டு அண்ணனைப் பார்த்தேன். அவருடைய கண்களும் கலங்கியிருந்தன. கமலாம்மா அவ்வாறு கூறியதன் பொருளை நான் புரிந்து கொண்டேன் என்பதை அண்ணன் தெரிந்து கொண்டார் என்பதை அவருடைய கண்கள் எனக்குக் காட்டிக்கொடுத்தன!
அண்மைக்காலமாக அண்ணன் - அண்ணி இருவருடைய மனங்களுக்குள்ளும், ஒரு 'மவுன நாடகம்' நடைபெற்றுக் கொண்டிருப்பதை அன்றைக்கு என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரம் நிலவிய மவுனத்திற்குப்பிறகு...
கமலாம்மா:- (என்னிடம்) முந்தி மாதிரி அடிக்கடி இங்கே வந்து அவரோட பேசிக்கிட்டிருங்க. அவருக்கு ஆறுதலாயிருக்கும். உங்ககிட்டேதான் அவர் மனம்விட்டு எதையும் பேசுவாரு.
நான்:- ஆமாண்ணி. எனக்குத் தெரியும். இனிமே அடிக்கடி நான் இங்கே வர்றேன். ஒண்ணும் கவலைப்படாதீங்க. நீங்க இருக்கும்போது அவருக்கு என்ன குறை? வர்றேன்.
விழிகளில் தேங்கிய வெந்நீருடன் விடைபெற்றேன். அடிக்கடி வந்து அண்ணனுடன் பேசி, அவருக்கு ஆறுதல் அளிப்பதாகக் கூறினேனே இனி அதற்கு வாய்ப்பும் சாத்தியமும் இல்லாமல் போய்விடும் - ஏனென்றால், இதுதான் என் அன்பிற்கினிய அருமைப் 'பாசமலர்' ஆன அண்ணன் சிவாஜிகணேசனுடனான எனது 'இறுதிச்சந்திப்பு' என்பதையும் முந்தின நாள் இரவு நான் கண்ட அந்தக் கெட்ட கனவு பலிக்கப்போகும் துக்க நாள் பக்கத்தில் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் அன்றைக்கு நான் அறிந்தேனில்லே.
நான் முன்கூட்டியே முற்றும் அறியக்கூடிய 'திரிகாலஞானி'யா என்ன? இது நிகழ்ந்த மறுவாரம்...
21.7.2001 அன்று முன் இரவு வழக்கம்போல குளித்து முடித்துவிட்டு, வீட்டு வாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளில் தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது இரண்டாவது மகளான உஷாதேவி வீட்டிற்குள்ளிருந்து பரபரப்புடன் வெளியே ஓடிவந்து...
உஷா:- அப்பா! சிவாஜி அங்கிள் தவறிட்டாரு.
நான்:- என்னம்மா சொல்றே?
உஷா:- ஆமாம்பா. இப்போ டி.வி.லே நியூஸ் போய்கிட்டிருக்கு. அப்போலோ ஹாஸ்பிட்டல்லே... என்பதற்குள் மேற்கொண்டு கேட்க முடியாத நிலையில் திடுக்கிட்டு, கையிலிருந்த தண்ணீர் வாளியை நழுவ விட்டு தலைசுற்றி அப்படியே வெளித்திண்ணையில் உட்கார்ந்து சரிந்து விட்டேன். அதைப்பார்த்து, 'அப்பா' என்று பதறிப்போன என் மகள் உள்ளே ஓடிச்சென்று தண்ணீர் கொண்டுவந்து என் முகத்தில் தெளித்துவிட்டு தலையை உயர்த்தி வாயில் ஊற்றினாள். இதற்குள் என் மனைவி ஓடிவந்து உள்ளே அழைத்துச்சென்று என்னைப் படுக்க வைத்தார். மயக்கம் தெளிந்த பின்னர் தெரிந்தது, மருத்துவமனையிலிருந்து அன்னை இல்லத்திற்கு அண்ணன் இன்னும் கொண்டுவரப்படவில்லை என்பது. அந்தக் கொடிய இரவு எனக்கு நித்திரை இழந்த நெடியதோர் இரவாக அமைந்தது!
மறுநாள் அதிகாலை. அரக்கப்பரக்க அண்ணனின் கனவு மாளிகையான அன்னை இல்லத்திற்கு ஓடினேன். அங்கு - கடந்த வாரத்தில் ஒருநாள் நள்ளிரவில் நான் கண்ட அந்தப் பாழுங்கனவு பலித்து, நிஜக்காட்சியாக இருப்பதை நேரில் கண்டு நெஞ்சம் பதறினேன்!
'மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே! வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே!'
என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் இயற்றி, நான் வசனம் எழுதிய என்றும் பசுமையான 'பாசமலர்' படத்தில் தன் அன்புத் தங்கை உறங்குவதைப் பார்த்து நெஞ்சுருகப் பாடி நடித்து நாடுபோற்றிய அந்த நடிகர் திலகம், இப்பொழுது உண்மையாகவே கண்ணாடிப் பேழைக்குள் கண்கள் மூடி மீளாத் துயில் கொண்டிருந்தார்.
1.10.1928-ல் அதிசயமாகத் தோன்றிய வி.சி.கணேசன் என்ற அந்த அபூர்வ விண்மீன் 72 ஆண்டுகள் 9 மாதங்கள் 20 நாட்கள் உன்னதமாக ஒளிவீசித் திகழ்ந்த பின்னர், 21.7.2001 அன்று மறைந்தது.
கமலாம்மா கண்ணீரும் கம்பலையுமாகத் தலைவிரிக் கோலத்துடன், தன் அன்புக் கணவர் அயர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்தக் கண்ணாடிப் பேழையின் மீது தனது பாதி உடலைப் பதித்துக்கொண்டு 'மாமா - மாமா' என்று கதறிக் கதறிக் குலுங்கிக் குலுங்கித் துடித்துத் துடித்துத் துன்புற்று அழுது கொண்டிருந்தார். ஆனாலும் அண்ணன் சிவாஜி கண் திறந்து தனது பாச மனைவியைப் பார்க்கவே இல்லை. அன்று 'பாசமலர்' படத்தில் பொய்யாக இறந்து நடித்துக் காட்டியவர், இன்று மெய்யாகவே இறந்து இருந்தார்.
1958-1959-களில் அவர் அன்றாடம் நாள் தவறாமல் வந்து வந்து, பார்த்துப்பார்த்து, ஆசை ஆசையாகக் கட்டி முடித்துக் கண்டுகளித்த 'அன்னை இல்லம்', அதன் முன் திரண்டிருந்த மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் தெப்பமாக மிதந்து கொண்டிருந்தது.
17.10.1952 தீபாவளித் திருநாளன்று சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' வெளிவந்தது. அதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாக மே மாதம் முதல் நாள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் வி.சின்னையா மன்றாயரின் இரண்டாவது புதல்வராகப் பிறந்த கணேசமூர்த்தி என்கின்ற வி.சி.கணேசனுக்கு, இல்லத்தரசியாக மங்கலநாண் புனையப் பெற்றவர் மாதரசி கமலாம்மா. அவர் வள்ளுவருக்கு வாய்த்த வாசுகி அம்மையார்போல வாழ்ந்து, தன் இனிய கணவர் மறைந்து ஆறு ஆண்டுகள் மூன்று மாதங்கள் பதினோறு நாட்கள், அவர் இல்லாமல் தனிமையில் எப்படியோ தாக்குப் பிடித்து, அதற்கு மேல் தாங்க இயலாமல் 2.11.2007 அன்று தனது நேத்திரங்களை மூடிக்கொண்டு நீள்துயில் கொண்டார்.
அன்றைக்கு என் உள்ளத்தில் உண்டான துயரத்தை நவம்பர் 16-ந் தேதி 'ஜூனியர் விகடன்' இதழில் 'போயிட்டு வாங்கம்மா' என்ற தலைப்பில் இவ்வாறு எழுதியிருந்தேன்:-
பாசமுள்ள கமலா அம்மாளுக்கு, உங்க அன்புச் சகோதரன் ஆரூர்தாஸ் சொல்வது......
இதய அறுவை சிகிச்சை செய்துகிட்டதுனால ஏற்பட்ட பல வீனத்தோட இருந்த நான், நவம்பர் ரெண்டாந்தேதி வெள்ளிக் கிழமை மத்தியானம் சாப்பிட்டுட்டு தூங்கிக்கிட்டிருந்தேன். அப்போதான் அந்த டெலிபோன் செய்தி வந்தது. இடி இடிச்ச மாதிரி எதிர்பாராத ஒரு கொடிய செய்தி - நீங்க போயிட்டிங்கன்னு.
உடனே என் பிள்ளை துணையோட வந்து உங்களைப் பார்த்தேன். ஆறு வருஷங்களுக்கு முந்தி அண்ணன் எப்படி கண்ணாடிப் பேழைக்குள்ளே ஆழ்ந்து தூங்கினாரோ, அதே மாதிரி நீங்களும் கண்ணாடிப்பேழைக்குள்ளே கண்மூடி மீளாத் துயில் கொண்டிருந்தீங்க.
நெத்தியில் ஒரு ரூபா அகலத்துக்கு வட்டமான குங்குமப்பொட்டு வச்சிக்கிட்டு, கள்ளங்கபடம் அறியாத சின்ன குழந்தை மாதிரி அந்த நாள்ல சிரிச்சிக்கிட்டிருந்த உங்க முகம், இப்போ வாடி வதங்கிப் போயிருந்ததைப் பார்த்துப்பதறிக் கதறி அழுதேன். நாப்பத்தொன்பது வருஷங்களுக்கு முந்தி அண்ணனை நான் முதல் முதலா சந்திச்சது - 'பாசமலர்' படத்துக்கு நான் வசனம் எழுதினது - அண்ணன் என்னை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்து, 'இவன்தான் நம்ம 'பாசமலர்' படத்துக்கு வசனம் எழுதுற ஆரூர்தாஸ். நம்ம ஊர்க்காரன்'னு சொல்லி அறிமுகப்படுத்தி, அவரோட சேர்ந்து உங்க கையால என்னை சாப்பிட வச்சது - அதுலேருந்து அடிக்கடி உங்க வீட்டுக்கு நான் வந்த போதெல்லாம் கூடப்பிறந்த ஒரு சகோதரன் மாதிரி பாவித்து என்னை சாப்பிடவச்சு அன்போட நீங்க உபசாரம் பண்ணுனது... இப்படிக் கடந்தகால நினைவுகள்ளாம் ஒவ்வொண்ணா எங்கண் முன்னால வந்து என்னை வதைச்சிது.
மனசைத்திறந்து சொல்றேன். 'மருமகளா வீட்டுக்கு வந்த மகாலட்சுமி'ன்னு சொல்வாங்களே - சத்தியமா அது நீங்கதான். 1952-ல் உங்க பதினாலாவது வயசுல, இருபத்திநாலு வயது நிறையாத அண்ணன் உங்க கழுத்துல மாங்கல்யம் புனைஞ்சி, உங்க கையைப் பிடிச்சதுக்கு அப்புறந்தான், கமலாங்குற பேர்கொண்ட தாமரையான உங்க முகத்தைப்பார்த்து கணேசன்கிற அந்தக் கலைக்கதிரவன் ஒளிவீசி உச்சிக்கு வந்தாரு!
நீங்க அவர் வீட்டுக்கு வந்து விளக்கேத்தி வச்சதுக்கு அப்புறந்தான், 'பராசக்தி' வந்து அவர் வாழ்க்கையில விளக்கேத்தி வச்சா!
நீங்க புன்னகை புரியப்புரிய அவருக்குப் புகழ் பொங்குச்சு!
நீங்க சிரிக்கச்சிரிக்க அவருக்குச் செல்வம் எல்லாம் சேர்ந்துச்சு!
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' அப்படின்னு கண்ணதாசன் பாடினாரே, அந்த வரம் அண்ணனுக்கு கிடைக்கணுங்குறதுக்காகவே, நீங்க அவருடைய அக்கா மகளா தஞ்சாவூர் பாபநாசத்துக்குப் பக்கத்துல ஒரு குக்கிராமத்துல அறுபத்தெட்டு வருஷங்களுக்கு முந்தி பொறந்தீங்க.
'இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று' என்று கண்ணதாசன் பாடுன இந்தப்பாட்டும் உங்களுக்குப் பொருந்திடுச்சு.
இப்போ நினைச்சுப் பார்க்கிறேன்... என்னோட எழுபத்தஞ்சாவது பிறந்த நாள் விழாவை நல்லி குப்புசாமி செட்டியார் கொண்டாடி, அதுல நான் எழுதுன மூணு புத்தகங்கள் வெளியிடுறது சம்பந்தமா அழைப்பிதழ் எடுத்துக்கிட்டு உங்களைப் பார்க்கிறதுக்காக வீட்டுக்கு வந்தேன். புத்தகங்களை அண்ணனோட படத்துக்கு அடியில் வச்சிட்டு, அழைப்பிதழை உங்க கையில கொடுக்கணும்னு விரும்பி, அங்கேயிருந்த பணிப்பெண்கிட்டே சொன்னேன். 'அம்மா உள்ளே படுத்திருக்காங்க. அய்யா போனதுக்கப்புறம் அம்மா வெளி மனுஷங்க யாரையும் பார்க்கிறதில்லே. அதனால் நீங்க அவுங்களைப் பார்க்கமுடியாதுன்னு அந்தப்பெண் சொல்ல, அதுக்கு நான், 'ஆரூர்தாஸ் வந்திருக்கேன்னு சொல்லு - வருவாங்க' என்றேன். கொஞ்ச நேரம் தயங்கி அப்புறம் அந்தப்பெண் உள்ளே போச்சு.
கால்மணி நேரத்துக்கப்புறம் நீங்க உள்ளே இருந்து வந்தீங்க. உங்க தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்தில் உண்டான துக்கத்தை என்னால தாங்க முடியாம வாய்விட்டு அழுதேன். என்னைப் பார்த்ததும் நீங்களும் குமுறி அழ ஆரம்பிச்சிட்டிங்க. அந்த சத்தத்தைக் கேட்டு மாடியிலேருந்த தம்பி ராமு கீழே ஓடிவந்து உங்களைத் தாங்கிப் பிடிச்சிக்கிட்டு, 'உங்களைப் பார்த்ததும் அம்மா எமோஷனாயிட்டாங்க'ன்னு சொல்லி உள்ளே அனுப்பிட்டு, என்னை ஆறுதல் படுத்துனாரு. அதுதான் உங்களை நான் கடைசியா பார்த்தது.
'கமலா! ஜாக்கிரதையா இருப்பியா'ன்னு அண்ணன் அடிக்கடி ஒங்ககிட்டே கேக்குறதா அன்னிக்கு நீங்க எங்கிட்டே சொன்னதன் அர்த்தம் இப்போதான் எனக்குப் புரிஞ்சிது அண்ணி.
அண்ணனோட பிரிவைத் தாங்கிக்க முடியாம, நீங்க உடைஞ்சி நொறுங்கிப்போயிருந்தீங்க. நல்லவேளையா உங்களுக்கு முந்தியே அவரு போயிட்டாரு. ஒருவேளை அவருக்கு முந்தி நீங்க போயிருந்தீங்கன்னா, இந்த ஆறு வருஷத் தனிமையை ஒருநாள்கூட அவரால தாங்கிக்க முடியாமப்போயிருக்கும். அந்த அளவுக்கு ஒருத்தர்மேல ஒருத்தர் உயிரையே வச்சி வாழ்ந்து வந்துகிட்டிருந்தீங்க!
பொழுது விடிஞ்சதுலேருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் அண்ணன் 'கமலா - கமலா'ன்னு உங்களைக் கூப்பிடுறதை எண்ணிப்பார்த்தா குறைஞ்சது ஒரு ஐநூறு தடவையாவது இருக்கும். நீங்க இல்லாம தன்னால இயங்கவே முடியாதுங்குற ஒரு நிலைமையைத் தனக்குத்தானே அவரு உண்டாக்கிக்கிட்டாரு. 'ஷேவ்' பண்ணிக்குறதுக்கு 'ரேஸர்' எடுத்து அதுல பிளேடு வைக்கிறதுக்குக்கூட அண்ணன் உங்களைத்தான் கூப்பிடுவாரு.
ஒருநாள் இதைப்பார்த்து அவர்கிட்டே தமாஷா சொன்னேன்: 'அண்ணே! அப்படியே அம்மாவை ஷேவும் பண்ணிவிடச் சொல்லுங்க. ஒரு வேலை முடிஞ்சிடும்னேன்'. இதைக்கேட்டு நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிங்க.
அவர் உங்களைக் கோவிச்சிக்கிட்டதை ஒருநாள் கூட நான் பார்த்ததே இல்லை. உங்களைக் குறை சொல்லியும் கேட்டது இல்லை.
'மாமா மாமா'ன்னு எப்போ பார்த்தாலும் ஒரு குழந்தை மாதிரி அண்ணனையே சுத்திச்சுத்தி வந்துகிட்டிருப்பீங்க. ஏன்னா, வீட்டுல இருக்குற நேரங்கள்ள உங்களை விட்டா அவருக்கு வேற கம்பெனி கிடையாது. நம்ம தஞ்சாவூர் பக்குவத்துல உங்க கையால நீங்க பண்ணிக்குடுக்குற விறால் மீன் குழம்பு, எறா வறுவல், வறுத்த கருவாடு, அகல அகலமா நறுக்கின சேனைக்கிழங்கு வறுவல் - இதையெல்லாம் ரொம்ப பிரியமா சுவைச்சி சாப்பிடுவாரு. என்னையும் அவரோட சாப்பிடவச்சி சந்தோஷப்படுவாரு. சில நாள்ள காலை ஏழு மணி ஷ¨ட்டிங்குக்கு அண்ணன் ஸ்டூடியோவுக்குப் போகும்போது அங்கே கொண்டுபோய் சாப்பிடுறதுக்காக சுடச்சுட இட்லியும், முதல் நாள் ராத்திரி வச்ச மீன் குழம்பும் கொடுத்து அனுப்புவீங்க. மேக்கப் போட்டு முடிஞ்சதும் அதை அவரு ரொம்ப ருசிச்சு ரசிச்சு சாப்பிடுவாரு.
ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி மட்டும் அமைஞ்சிட்டா, அவ ஒரு அன்பான தாய்க்குச் சமம்! நீங்க அவருக்கு பண்புள்ள மனைவியாகவும், பாசமுள்ள தாயாகவும் இருந்து கண்ணை இமை காக்கிறதுபோல காத்துக் கவனிச்சிக்கிட்டிங்க. இந்த உலகத்தைப்பத்தி நல்லது கெட்டது எதுவுமே தெரியாம, விதம் விதமா வேஷம் போட்டு உயிரைக் கொடுத்து தத்ரூபமா நடிக்க மட்டுமே தெரிஞ்சி வச்சிருந்த சிவாஜிகணேசன்கிற அந்தச் சின்னக் குழந்தையைப் பெத்த அன்னை ராஜாமணி அம்மாவுக்கு அப்புறம், நீங்கதான் அவரை வளர்த்து உங்க கண்ணுக்குள்ளே வச்சிக் காப்பாத்திக்கிட்டு வந்தீங்கங்குற உண்மை, உங்களையும், உங்கக் குடும்பத்தைப் பத்தியும் நல்லா தெரிஞ்சவுங்களுக்கெல்லாம் தெரியும்.
பிள்ளைங்களுக்கும், பெண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணிவச்சு, பேரன் பேத்திங்க எடுத்து, பேத்தியோட கல்யாணம் வரைக்கும் பார்க்கவேண்டியதை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டு, அண்ணன் ஒருத்தர் மட்டும் இல்லாமல் போயிட்டாரேங்குற ஒரே ஒரு குறையோட வாழ்ந்து வந்த 'அன்னை இல்லம்' நாயகியான எங்கள் அன்புள்ள கமலா அம்மா! அண்ணனைப் பார்க்கிறதுக்காக இப்போ ஆகாயத்துக்குப் போயிட்டீங்க. போயிட்டு வாங்க.
உங்க பேத்திங்க, கொள்ளுப்பேத்திங்க யாரோட கருவுலேயாவது அண்ணனும் நீங்களும் உருவாகி, மறுபடியும் அன்னை இல்லத்துக்கு வாங்க.
போயிட்டு வாங்கம்மா! போயிட்டு வாங்க! (நிறைவு பெற்றது).