Originally Posted by
vasudevan31355
வருக ரவிச்சந்திரன் சார்.
"nt க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு."
என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளீர்கள் என்று புரியவில்லை.
ஆனால்....
மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.
தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?
தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை
அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.
நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.
இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.
உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .
ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.
ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.
ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.
ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.
ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.
ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்
இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....
'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!
இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!
அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!
கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.
உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!
உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!
கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.
"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"
(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)
ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான
நெய்வேலி வாசுதேவன்.