Quote:
விஸ்வரூபம் எடுக்கும் மாதவி
மனோகரனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்கிற கேள்வியில் பரபரப்பாக சென்று கொண்டிருந்த மாதவி தொடரில், அவனுக்கு அருணாவுடன் திருமணம் நடக்கிறது. இந்நிலையில் இறந்து போனதாக கருதப்பட்ட மாதவி வீடு திரும்பி விட்டாள். அவள் வந்ததும், சாந்தி முகூர்த்த அறையில் இருந்து மனோகரன் வெளியேறி விடுகிறான். அவன் எங்கு போனான் என தெரியாத அருணா அதிர்ந்து போகிறாள்.
இதற்கிடையே யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் மாதவி வீட்டிற்கு மனோகரன் வருகிறான். இதனால் மனம்நொந்து போகும் அருணாவின் தாய், தன் மகள் இனி மனோகரனுடன் வாழக் கூடாது என்ற முடிவில் அவள் தாலியை கழற்றப்போகிறாள். அப்போது தான் கடந்த காலத்தில் மாதவியும் மனோகரனும் காதலர்கள் என்ற உண்மை தெரியவருகிறது. இதனால் இன்னும் அதிர்ந்த அருணா, ஒரு திடமான முடிவெடுக்கிறாள்.
தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்கிற வெறியில் வாழவந்தான் மனோகரனின் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறான். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு வாழவந்தான் தான் காரணம் என மனோகரன் இப்போது அறிகிறான்.
அதே நேரம் மாதவி, யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும், தங்கபாண்டியனை திருமணம் செய்ததாக அவள் சொன்னது பொய் என்பதும் மனோகரனுக்குத் தெரியவருகிறது. இதனால் அவன் மாதவியை சந்தித்து தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான்.
மனோகரன் மாதவியை நோக்கி போனஅதே நேரத்தில் மாதவியும் அருணாவும் தங்கள் பக்கத்தில் இருந்து ஒரு முடிவை எடுக்கிறார்கள். வெறி கொண்ட வாழவந்தானோ வேறொரு திட்டத்தை போடுகிறான்.
இப்போது மாதவி, மனோகர், அருணா மூவரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சுற்றிச்சுழல்கிறது கதைக்களம். அப்போது மாதவி எடுக்கும் விஸ்வரூபம், இன்னொரு கோலங்கள் என்கிற நிலையை எட்டும்'' என்கிறார், இயக்குனர் வி.திருச்செல்வம்.
ஹோம் மீடியா எண்டர்டெயின்மென்ட் பி.லிட் சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார், விஜயகுமார்.
நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், சீனிவாசன், சாரா, பாவனா, தேவிப்பிரியா, நளினி, வனிதா, கே.நட்ராஜ், சுரேகா, `கோலங்கள்' துளசி, சோனியா, பாரதி கண்ணன், ரமேஷ், கிரி, கவிதா, ரவிசங்கர், ரம்யா, வைஜெயந்தி, புவனா.
ஒளிப்பதிவு: பி.தியாகராஜன். கதை, திரைக்கதை, இயக்கம்: வி.திருச்செல்வம்
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது மாதவி தொடர்.