-
நவராத்திரி நியூஸ் :
நவராத்திரியின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் எல்லாம் ஏபிஎன் தான். உண்மையில் அவர் ஒரு சகலகலா வல்லவர். கவியரசு கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைக்க, பின்னணிக் குரல்களாக ஒலித்தார்கள், பாடகர் திலகம் டி.எம். செளந்தரராஜன், இந்தியாவின் ஈடு இணையற்ற இசைக்குயில் பி.சுசீலா ம்ற்றும் எஸ்.சி.கிருஷ்ணன், ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எல்.ஆர். ஈஸ்வரி, எல்.ஆர்.அஞ்சலி. சத்தியவான் - சாவித்திரி நாடகப்பாடல் மட்டும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றியது.
நவரச பாத்திரங்களில் அநாயாசமாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து பிரமாதப்படுத்தியிருப்பார் நடிகையர் திலகம் சாவித்திரி. மற்றும் இவர்களுடன் வி.கே.ராமசாமி, கே. சாரங்கபாணி, நாகேஷ், ஈ.ஆர்.சகாதேவன், ருக்மணி, சி.கே. சரஸ்வதி, மனோரமா, முத்துலக்ஷ்மி, பேபி குட்டி பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நவராத்திரியில் நவரசத் திலகமாகிய நடிகர் திலகம் ஏற்று நடித்த (வாழ்ந்து காட்டிய) நவரச பாத்திரங்களாவன :
அற்புதம் - கோடீஸ்வரர்
பயம் - குடிகாரர்
கருணை - டாக்டர்
கோபம் - கொலைகாரர்
சாந்தம் - விவசாயி
அருவருப்பு - நோயாளி
சிங்காரம் - நாடக நடிகர்
வீரம் - போலீஸ் அதிகாரி
ஆனந்தம் - கல்லூரி மாணவர்
ஒன்பது பாத்திரங்களில் உலகையே உலுக்கியிருப்பார் நடிகர் திலகம். இதில் நாடக நடிகராக வரும் பாத்திரத்தில் மட்டும் அவருக்கு இரண்டு வேடங்கள் (கெட்டப்புகள்). ஒன்று, நாடகக் கலைஞர் பாத்திரத்திற்குரிய வேடம், மற்றொன்று, சத்தியவான் - சாவித்திரி நாடகத்தில் சத்தியவான் வேடம்.
ஆக மொத்தம், நமது நடிகர் திலகத்திற்கு நவராத்திரியில் ஒன்பது பாத்திரங்கள் ; ஆயினும் பத்து வேடங்கள்.
அன்றே தசாவதாரம் செய்தாகி விட்டது.
அன்புடன்,
பம்மலார்.
-
Dear Pammalar,
Just now my internet connection was restored after a few days of break due to some technical reasons which was why I could not greet you yesterday. Kindly accept my belated greetings.
As you said NT has made 11 avatars in NAVARATHIRI - 11th in you - you have entered with a bang in Navarathiri like NT did with Parasakthi, and in you we all see NT - you are NT's 11th avatar - And keeping in mind your age it is more apt.
Eager to see your postings every now and then - you can not quench our thirst for your flow of info.
Regards,
Raghavendran
-
தங்கை - Part I
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்
வெளியான நாள்: 19.05.1967
மதன் என்ற பள்ளி சிறுவன் தன் வயதையொத்த நண்பர்கள் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு மண்டபத்தின் முன் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வற்புறுத்தியும் படிப்பிலே கவனமாக இருக்கும் அவனின் புத்தக பையை பறித்துக் கொண்டு ஓடும் அந்த சூதாட்ட கும்பல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறது, போலீஸ் வரும் போது அனைவரும் தப்பித்து ஓடி விட மதன் மாட்டிக் கொள்கிறான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அவனின் விதவை தாயும் தங்கையும் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.
காலம் ஓடுகிறது. வாலிபனாக திரும்பி வரும் மதன் தன் தாயையும் தங்கையும் தேடுகிறான். தாய் இறந்த செய்தியும் தங்கை வடிவு ஒரு பிச்சைக்காரியைப் போல் சாப்பாட்டுக்கு அலையும் அவலத்தையும் தெரிந்து கொள்கிறான். தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைக்கிறான்.ஆனால் ஜெயிலுக்கு போய் வந்தவன் என்பதால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போகவே பிழைக்க வழி இல்லாமல் சூதாட தொடங்குகிறான். ஆனால் அதிலும் தன் தேவைக்கு பணம் கிடைக்கும் வரை மட்டுமே விளையாடுவது என்ற கொள்கையில்(!) உறுதியாக இருக்கிறான். இவனின் சூதாடும் திறமை அறிந்து ஒரு பெரிய சூதாட்ட கிளப்பின் ஏஜென்ட் ஒருவன் மதனை அங்கே அழைத்து செல்கிறான். அங்கே அந்த கிளப்-ன் தலைவனே [அறுபதுகளுக்கே உரிய முகம் மட்டும் இருளில் இருக்க குரல் மட்டும் கேட்கும் பாஸ்] எவ்வளவோ முயற்சித்தும் பணத்தாசைக்கு மயங்காமல் மதன் வர மறுக்கிறான்.
மதனின் தங்கைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த சேரி பிரதேசத்தில் சேவை மனப்பான்மையோடு ஒரு மருத்துவமனை நடத்தும் லீலா என்ற டாக்டர் அவளை பரிசோதித்து அவளுக்கு காச நோய் அறிகுறி இருப்பதாக சொல்கிறாள். அவளை அதற்கென இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாமல் மதன் அந்த சூதாட்ட கிளப்-ல் இணைகிறான். இதற்கு முன் லீலாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் மதனை போலீஸ் இன்ஸ்பெக்டரான தன் அத்தை பையன் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் லீலா. அவளின் தந்தையார் உலகநாதன் என்ற பெரும் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொள்ளும் மதனால் அவரை அப்போது சந்திக்க முடியாமல் போகிறது.
கிளப்-ல் சேரும் மதன் தன் திறமையினால் எல்லா சூதாட்டங்களிலும் வெற்றி பெறுகிறான். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டங்களை தடை செய்து குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு ஸ்ரீதர் கையில் கொடுக்கப்படுகிறது. பல விதங்களிலும் முயற்சி செய்யும் ஸ்ரீதருக்கு தோல்வியே கிடைக்கிறது.
கிளப்-ல் நடனமாடும் லலிதா மதனை ஒரு தலையாக காதலிக்கிறாள். அவள் மேல் மதனுக்கு அன்பிருந்தாலும் காதல் இல்லை.
மதனை காதலிக்கும் லீலாவை அவரது தந்தை கண்டிக்கிறார். ஸ்ரீதரை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் லீலா கேட்பதாக இல்லை. லீலாவின் தந்தை தொழிலதிபர் மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களுக்கு குறிப்பாக மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வள்ளலாகவும் விளங்குகிறார். அவரின் நிதி உதவியில் நடைபெறும் மருத்துவமனையில் தான் தங்கைக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அங்கே லீலாவுடன் வரும் அவர் மதனிடம் தன் பெண்ணை விட்டு விலகும்படி எச்சரிக்கிறார். அவரது குரல் மதனுக்கு பரிச்சயமுள்ளது போல் தோன்றுகிறது.
சிகிச்சை பெறும் தங்கை வடிவுக்கோ தன் அண்ணன் தன்னை விட்டு விட்டு எப்போதும் வெளியே போவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அது போல் லீலாவிற்கும் மதனின் திடீர் மாற்றமும் பணமும் சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.
இதற்கிடையே கிளப்பிற்கு மாறு வேடத்தில் வரும் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொண்டு மதன் திருப்பி அனுப்பி விடுகிறான். போலீஸ் ஸ்டேஷன்-ல் சென்று சந்திக்கும் மதனை, ஸ்ரீதர் சூதாட்ட கும்பலை பிடிக்க உதவி செய்யுமாறு வேண்ட, மதன் மறுத்து விடுகிறான். இதற்கிடையே கிளப்-ல் தன்னுடன் சூதாடிய ஒரு வங்கி அதிகாரி,மகளின் திருமணத்திற்கு அதிக பணம் வேண்டுமே என்பதற்காக அலுவலக பணத்தை வைத்து சூதாடியதையும் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கும் மதன் அன்று முதல் சூதாடுவதில்லை என்ற முடிவெடுக்கிறான். அது மட்டுமல்லாமல் மதன் பாஸ்-ன் அறைக்கு சென்று அவர் வேறு யாருமல்ல லீலாவின் தகப்பனார் உலகநாதன்தான் என்பதை தான் தெரிந்து கொண்டு விட்டதை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் மதனை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார் உலகநாதன். அவன் தங்கையையும் கடத்தி அவனையும் கொல்வது என்பது திட்டம். கிளப்-ல் நடனமாடும் லலிதாவை மிரட்டி மதனை போன்-ல் பேசி வரவழைக்கும்படி செய்கிறார்கள். கிளப்பிற்கு வரும் மதனை துப்பாக்கியால் சுட நடக்கும் முயற்சியில் லலிதா தன்னை பலியிட்டுக் கொள்கிறாள். கொலைப் பழியை மதன் மேல் போட, தப்பித்து செல்லும் மதனை போலீஸ் துரத்துகிறது. ஸ்ரீதர் மதனை துப்பாக்கியில் சுடுகிறான்.
வீட்டிற்கு வரும் ஸ்ரீதர் தன் தாய் மாமனான உலகநாதனிடம் மதனை சுட்டுக் கொன்று விட்டதாக சொல்லி பல உண்மைகளை வாக்கு மூலமாக வாங்க, மற்றொரு வாசல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் நுழையும் மதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உலகநாதன். தன்னைப் பிடிக்க போடப்பட்ட திட்டங்கள் இவை என்று அறிந்தவுடன் தன் முடிவை தானே தேடிக் கொள்ள, மருத்துவமனையிலிருந்து தங்கை வடிவு குணமாகி வெளி வர, மதனும் லீலாவும் இணைய அனைத்தும் நலம்.
அன்புடன்
-
தங்கை - Part II
தங்கை - இந்த படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் மிக சிறப்பான நடிப்பில் வெளியான படம் என்றோ மிக பெரிய வெற்றிப் படம் என்றோ அதிகம் விமர்சிக்கப்படாத படம் என்றோ சொல்ல முடியாது. ஆனாலும் இந்த படத்தை நாம் அலசலுக்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாறுதலை கொண்டு வந்த படம் என்ற முறையில் இதை எடுத்துக் கொள்வோம்.
அதுவரை [1967] கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் வரை நடிகர் திலகம் பலதரப்பட்ட வேடங்கள் செய்திருந்தாலும் action வேடங்கள் என்று சொல்லப்படும் சண்டைக்காட்சிகள் இடம் பெறும் படங்களை அவர் செய்யவில்லை. அது தேவை என்று அவர் நினைக்கவுமில்லை. எம்.ஜி.ஆர். படங்களில் அதுவே முக்கிய கவர்ச்சியாக இருந்த போதும் அது இங்கே இடம் பெறவில்லை. 1964- 65 காலக்கட்டத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் அறிமுகமான பிறகு அவர்களது படங்களிலும் சண்டைக் காட்சிகள் இடம் பெற துவங்கின. அது மட்டுமல்ல சின்ன சின்ன நடன அசைவுகளும் [குறிப்பாக ட்விஸ்ட் டான்ஸ்] பாடல் காட்சிகளில் இடம் பெற ஆரம்பித்தன. இள வயது நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மனதளவில் இந்த விஷயம் ஒரு சின்ன ஏக்கமாக வளர ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் தான் பாலாஜி நடிகரிலிருந்து தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஆனால் அவரது முதல் படமான அண்ணாவின் ஆசை தோல்வியை தழுவியது. உடனே அவர் சென்ற இடம் அன்னை இல்லம். நடிகர் திலகமும் உடனே ஒத்துக் கொண்டார். முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு திருலோகச்சந்தர் இயக்குனர் பொறுப்பை ஏற்றார். ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் தங்கை. கதையை கேட்டதும் நடிகர் திலகம் சிறிது தயங்கினார். வேறு கதை பார்க்கலாமா என்று கூட கேட்டிருக்கிறார். ஏ.சி.டி. ஒரு முறை சொன்னார் "சிவாஜி நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே நாட்டியம் ஆட பழகியவர். தூக்கு தூக்கி படத்தில், காவேரி படத்தில் எல்லாம் சிறப்பாகவே நடனம் ஆடியிருக்கிறார். அதன் பிறகு அவர் அதை முயற்சி செய்யவில்லை. அவ்வளவுதான். அது போல் சண்டைக் காட்சிகள் என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உங்களால் செய்ய முடியும் என்று சொன்னேன். அதன் பிறகுதான் ஒத்துக் கொண்டார்."
இப்படி சொல்லும் போது படத்தில் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் என்றோ நடனக் காட்சிகள் என்றோ நினைத்தால் ஏமாந்து போவோம். முதல் அரை மணி நேரத்தில் ஒரு சண்டைக் காட்சி. அதன் பிறகு கிளைமாக்ஸ்-ல் தான் சண்டை. அது போல ஒரு பாடல் காட்சியில் மட்டுமே ட்விஸ்ட் ஆடுவார். ஆனால் இந்த சின்ன மாற்றம் பிற்காலத்தில் அவர் action படங்களை தயக்கமில்லாமல் செய்ய உதவியது. பொதுமக்களும் தங்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அவர் பிற்காலத்தில் செய்த படங்களுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது என்றும் சொல்லலாம்.
அது மட்டுமல்ல பாலாஜி என்ற Top notch தயாரிப்பாளர் உருவாவதற்கும், நடிகர் திலகத்தை வைத்து மிக அதிகமான படங்களை தயாரித்தவர் என்ற பெருமையை அடைவதற்கும், சிவாஜி ரசிகர்களின் மனத்துடிப்பை மிக சரியாக உணர்ந்தவர் என்ற பெயர் எடுப்பதற்கும் பாலாஜிக்கு இந்த தங்கை பெரிதும் உதவி புரிந்தாள். அது போல் சிவாஜியை வைத்து மிக அதிகமான படங்கள் [20] வரை இயக்குவதற்கும், நடிகர் திலகத்தோடு ஒரு நல்ல புரிதல் உண்டாவதற்கும் ஏ.சி.டி. அவர்களுக்கு இந்த தங்கை பயன்பட்டாள்.
பெற்றால்தான் பிள்ளையா பட விஷயத்தில் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மீது கோபம் இருந்தும் கூட பாலாஜியும் ஏ.சி.டி.யும் ஆரூர்தாஸ் வேண்டும் என்று சொன்னபோது எந்த வித மறுப்பும் சொல்லாமல் நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டதின் விளைவு ஆரூர்தாஸ் என்ற திறமையான வசனகர்த்தா தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கும் தங்கை திரைப்படம் ஒரு காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
விமர்சனத்திற்கு செல்வோம்.
-
தங்கை - Part III
நடிகர் திலகம் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடங்களில் ஒன்று இந்த மதனகோபால் என்ற மதன். அவரது Light Hearted கேரக்டர்களில் ஒன்று இந்த படம். Style quotient என்று சொல்வார்களே அது தூக்கலாக வெளிப்பட்ட படம். தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக அவர் பல படங்களில் நடித்துள்ளார், ஆனாலும் இந்த படத்தில் எந்தளவிற்கு இருக்க வேண்டுமோ அதை மட்டுமே செய்திருப்பார். ஐந்து ரூபாய்க்கு மேல் விளையாட மாட்டேன் என்று எழுந்து போகும் இவரை ஒரு ரவுடி முகத்தில் குத்து விட கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஒரு சின்ன சிரிப்போடு வருவார்.[இந்த விஷயத்திலும் இன்றைய ஹீரோ-கள் புதுமை என்று பிற்காலத்தில் பண்ணியதை அன்றே செய்திருப்பார்]. பக்கத்தில் வந்து இரண்டு கைகளையும் ரவுடியின் முகத்திற்கு நேரே நீட்டி, கை தட்டி விட்டு ஒரு நாலு பஞ்ச் கொடுப்பார். ஓபனிங் ஷோ-வில் முதன் முதலாக அதை பார்த்த போது ரசிகர்கள் தியேட்டரில் செய்த ஆரவாரம், விசில் பற்றி பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அது போல் கிளப்பிற்கு முதன் முதலில் வரும் போது டான்ஸ் பார்த்து விட்டு, தன்னை மறந்து எழுந்து ஒரு சின்ன ஸ்டெப் போட்டு விட்டு எல்லோரும் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கப்பட்டு நெளிவது ரசிக்கும்படி செய்திருப்பார். காஞ்சனாவை சிகரெட்டால் சுடும் ராமதாசை எதிர்பாராத நேரத்தில் குத்துவது, ஆஸ்பத்திரி வாசலில் கூடியிருக்கும் கூட்டத்தை விரட்டுகிறேன் என்று கே.ஆர்.விஜயாவையும் டாக்டர் என்று தெரியாமல் மிரட்டுவது, அவருடன் காரில் போகும் போது தன் நிலை பற்றி காஷுவலாக பேசுவது, பிறந்த நாள் விழாவில் இன்ஸ்பெக்டர் சொந்தக்காரன் என்று விஜயா சொன்னவுடன் எனக்கும் அவங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று கமன்ட் அடிப்பது, பாட வேண்டும் என்று சொன்னவுடன் சின்ன ட்விஸ்ட் ஸ்டெப்ஸ் வைத்து ஆடும் அழகு, கிளப்-லும் போலீஸ் ஸ்டேஷன்-லும் பாலாஜியோடு பேசும் கிண்டல் கலந்த ஸ்டைல், பாலாஜி ஒரு கையால் மறு கையில் தட்டுவதை அவருக்கே செய்து காண்பிப்பது, காரில் வைத்து தன் மகளை காதலிக்க கூடாது என்று சொல்லும் மேஜரிடம் பதில் சொல்லாமல் சிரிப்பது, அவர்தான் தன் பாஸ் என்று தெரிந்துக் கொண்டேன் என்று அவரிடமே போய் சொல்வது, தங்கை தான் வாங்கி கொண்டு வந்த சாப்பாட்டை அவசரமாக பிடுங்கி சாப்பிடுவதை பார்த்து விட்டு வருத்தப்படுவது, தன்னால் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்று தெரிந்ததும் வந்து கையை பொசுக்கி கொள்வது, தன்னை சந்தேகப்படும் விஜயாவை அடித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் முகம் மாறுவது - அவருக்கென்ன எந்த ரோலாக இருந்தாலும் எனக்கு ஒன்று தான் என்பதை உணர்த்தியிருப்பார்.
மற்ற கதாபாத்திரங்களை பொறுத்த வரை, இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி நீட்டாக செய்திருப்பார். வெளியில் தொழிலதிபர் உள்ளே சூதாட்ட கிளப்-ன் பாஸ் என்ற வழக்கமான ரோல் மேஜருக்கு. அவரும் வழக்கம் போல். நாயகி விஜயா. டாக்டர் ரோல்.ஆனால் அவரை விட கிளப் டான்சராக வரும் காஞ்சனாவிற்கு நல்ல ஸ்கோப். அவரும் அதை குறையில்லாமல் [அந்த காலக்கட்டத்தில் நாயகியின் பாத்திரப்படைப்பில் இயல்பாகவே அமையும் அபத்தங்களை தவிர்த்து பார்த்தால்] செய்திருப்பார். நாகேஷ் தான் ஏஜன்ட். ஆனால் நகைச்சுவை பஞ்சம். தங்கை வடிவாக வரும் பேபி கௌசல்யா முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்கு பிறகு முழுக்க பெட் Ridden.
ஆரூர்தாஸின் வசனங்கள் முதல் பதினைந்து நிமிடங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இயல்பாக எழுதியிருப்பார். எந்த திரைப்படமும் அது வெளியாகும் காலக்கட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ பிரதிபலிப்பது உண்டு. இதிலும் காரில் செல்லும் போது மேஜர் சிவாஜியை கேள்வி கேட்க அதை தடுக்க நினைக்கும் விஜயா ரேடியோவை வைக்க அதில் மளிகை சாமான்கள் விலை சொல்லுவார்கள். [அப்படி கூட ஒரு நிகழ்ச்சி வானொலியில் இருந்ததா என்ன?] அதில் துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ஒரு ரூபாய் எழுபத்திரண்டு பைசா என்று வரும். [இன்றைக்கு கிலோ ருபாய் எண்பதெட்டு என்று நினைக்கும் போது -ம்ம்].
திருலோகச்சந்தரை பொறுத்த வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட கதை, நடிகர் திலகம் மாதிரி ஒரு ஹீரோ. எனவே அவர் வேலை ஈசியாக முடிந்தது.
இனி பாடல்களுக்கு வருவோம். கண்ணதாசன் - எம்.எஸ்.வி. கூட்டணி.
1. தத்தி தத்தி தள்ளாட- எல்.ஆர். ஈஸ்வரி - கிளப் டான்ஸ் - காஞ்சனாவின் அறிமுக பாடல். நாகேஷின் சில நல்ல ஸ்டெப்ஸ்-ஐ பார்க்கலாம்.
2. கேட்டவரெல்லாம் பாடலாம் - படத்தில் அதிக பாப்புலர் ஆன பாடல். இந்த பாடலின் ட்யுன் போடும்போது தான் நான்கு ட்யுன்களில் எதை செலக்ட் செய்வது என தெரியாமல் இறுதியில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஆபிசிற்கு வந்த போஸ்ட்மானை தேர்ந்தெடுக்க சொன்னதாக சொல்வார்கள். சாரதா இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார். நடிகர் திலகத்தின் ட்விஸ்ட் மற்றும் ஸ்டையிலான கைதட்டல் ஆகியவை இடம் பெறும். இதையே சிறிது நீட்டி ஊட்டி வரை உறவு படத்தில் ஹாப்பி இன்று முதல் ஹாப்பி பாட்டில் செய்வார். இந்த பாட்டின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஷாட்-களை பாஸ்ட் மெர்ஜிங் என்ற முறையில் சட்டென்று என்று மாறி மாறிக் காட்டுவார்கள். கவனித்து பார்த்தால் தெரியும். அது மட்டுமல்ல 1967-யிலேயே இதை முயற்சித்திருப்பது ஆச்சர்யம்.
3. தண்ணீரிலே தாமரை பூ - படத்தின் இன்னொரு அருமையான பாடல். நடிகர் திலகத்தின் குணசித்திர நடிப்பை காண வந்த ரசிகர்களுக்கு விருந்து. பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல். குறிப்பாக கடைசி சரணத்தில்
எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு
என்ற வரிகளின் போது ரசிகர்கள் கைதட்ட பெண்கள் கண்ணீரை துடைத்துக் கொள்வார்கள். படத்தில் மீண்டும் ஒரு முறை பின்னணி இசை இல்லாமலும் இந்த பாடல் ஒலிக்கும்.
4. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது - விஜயாவிற்கு ஒரே பாடல். கோபத்தில் இருக்கும் சிவாஜி மெது மெதுவாக இயல்பு நிலைக்கு வருவதை இதில் காணலாம்.
5. இனியது இனியது உலகம் - காரிலிருந்து இறக்கி விடப்படும் நடிகர் திலகம் ரோட்டில் பாடிக் கொண்டே வரும் காட்சி. இன்றைய OMR ரோடு என்று சொல்லுவார்கள். இதிலும் ஸ்டைல்தான் பிரதானம். பாடலின் முடிவில் அந்த வழியாக வரும் லாரியை கை காட்டி நிறுத்த முயற்சிக்க, காமிராவிற்கும் சிவாஜிக்கும் நடுவில் வரும் லாரி நிற்காமல் போக அடுத்த ஷாட்-ல் நடிகர் திலகம் தொங்கிக் கொண்டே போவது போல் வரும். தியேட்டரில் விசில் பறக்கும்.
6. நினைத்தேன் என்னை அழைத்தேன் உன்னை - கிளைமாக்ஸ் லீட் சீன், காஞ்சனா ஆடிப் படும் காட்சி. சரணத்தில் ஈஸ்வரி பிரமாதப்படுத்தியிருப்பார்.
இந்த படம் வெளி வருவதற்கு முன் வழக்கம் போல் கிண்டல் கேலி எல்லாம் இருந்தது. கணேசன் சண்டை காட்சியில் நடித்தால் யார் பார்ப்பது போன்ற கமன்ட்கள் அடிக்கப்பட்டன. இந்த படம் வெளியான போது இதற்கு போட்டியாக ஒரு படமும் வந்தது. எல்லா கிண்டல்களையும் புறந்தள்ளி மக்கள் தங்கையை வரவேற்றார்கள். சென்னையில் திரையிடப்பட்ட நான்கு அரங்குகளிலும் 50 நாட்களை கடந்தது படம். அவை
சித்ரா - 70 நாட்கள்
கிரவுன் - 70 நாட்கள்
உமா - 50 நாட்கள்
ஜெயராஜ் - 50 நாட்கள்.
மதுரையிலும் திருச்சியிலும் சேலத்திலும் 8 வாரங்களை கடந்த இந்த படம் கோவை - இருதயாவில் அதிகபட்சமாக 77 நாட்கள் ஓடியது. திருவருட்செல்வர் வெளியானதால் சென்னை- கிரவுன் போன்ற இடங்களில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தது.
கொசுறு தகவல்- போட்டியாக வெளியான படத்தைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த முதல் படம், தமிழக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்த ஜனவரி 12- ல் நடந்த சம்பவத்திற்கு பிறகு வெளியான முதல் படம், சொந்த சகோதரரே இயக்கிய படம். இவை அனைத்தும் இருந்தும் எந்த அரங்கிலும் 50 நாட்களை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை. எப்போதும் போல் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் மட்டும்தான் என்பதை நடிகர் திலகம் மீண்டும் நிரூபித்தார்.
மொத்தத்தில் நடிகர் திலகத்தின் entertainer படங்களின் ஆரம்பம். ரசிக்கும்படியாகவே இருந்தது.
அன்புடன்
PS: 1.எங்கேயும் [மலேஷியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் கூட] இப்போது கிடைக்காத இந்த தங்கை திரைப்படத்தின் சிடியை ஒரு பிரதி எடுத்து எனக்கு கொடுத்ததற்கும்
2. சென்னை கோவை நகரங்களில் இந்த படம் ஓடிய சரியான நாட்களை உறுதிப்படுத்தியதற்கும் நண்பர் சுவாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது பணிவான, பசுமையான நன்றிகள் !!!
கலை தெய்வத்தின் பக்தன், தொண்டன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
தரணி போற்றும் நடிகரின் தங்கை திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டுமா ! டீவி வேண்டாம், விசிடி வேண்டாம், டிவிடி வேண்டாம் !! முரளி சார் எழுதிய திரைப்படக் கண்ணோட்டத்தை படித்தாலே போதும் !!! தங்கையை திரையரங்கில் பார்த்த திருப்தி ஏற்படும்.
முரளி சார் அவர்கள் "தன் கை" யால் படைத்துள்ள "தங்கை" திரைப்படப் பார்வை - மூன்று பாகங்களும் - வற்றாத ஜீவநதிகளாம் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்று பொங்கிப் பிரவாகிக்கின்ற்து.
அன்புடன்,
பம்மலார்.
-
நவராத்திரி நியூஸ்:
16-30 செப்டம்பர் 2006 தேதியிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் மாதமிருமுறை இதழில் வந்த ஒரு கேள்வி - பதில் :
'நவராத்திரி' யை மிஞ்சுமா 'தசாவதாரம்' ? (செல்வன், பிரியம்மாள்புரம்)
மிஞ்சித் தான் புகழ் பெற வேண்டும் என்ற நிலையில் கமலும் இல்லை. நடிகர் திலகத்தை யாரேனும் மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சமும் சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு நாளும் வர வாய்ப்பில்லை.
நடிப்புலக லிங்கோத்பவரை மிஞ்சவும் முடியுமோ ?!
நவராத்திரி நியூஸ் கன்டினியூஸ் ...
அன்புடன்,
பம்மலார்.
-
Murali-sar, once again wonderful review and thoughts on Tanggai. I still have not seen the film.
Taneerile Tamarai Poo is beautiful song. Gosh, how I wish to see it on screen. So, does Iniyathu Iniyathu Ulagam. Thanks, Murali-sar. :D
-
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ் நடிகர் திலகத்தின் நவராத்திரியிலும் (1964) நடித்திருக்கிறார், கமலின் தசாவதாரத்திலும் (2008) நடித்திருக்கிறார்.
அமரர் நாகேஷ் அவர்கள் காலத்தை வென்ற ஓர் அதிசய, அற்புதக் கலைஞன்.
அன்புடன்,
பம்மலார்.