எத்தனை யுகங்களானாலும் திரையரங்கிற்கு தாய் தந்தை குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக வரவழைக்கும் ஆகர்ண சக்தி படைத்த ஒரே நடிகர், நடிகர் திலகம் என்பதை 2012ல் கர்ணன் மூலமும், 2015ல் சிவாஜி ரசிகராக நடித்த கமல் மூலமும் நிரூபணமாகியுள்ளது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதுப்படத்திற்கு மக்கள் தங்கள் குழந்தைகளோடு வரத் தொடங்கியுள்ளனர். பாபநாசம் படம் ஓடும் திரையரங்கா அல்லது ஏதேனும் குடும்ப விழாவா என மக்கள் வியப்படையும் வண்ணம் குடும்பத்தோடு வரத் தொடங்கியிருப்பது, நடிகர் திலகத்தின் வீச்சு எந்த அளவிற்கு மக்களிடம் ஊடுருவியுள்ளது, அவர் பாணி படங்கள் எத்தனை யுகங்களானாலும் மக்களால் வரவேற்கப் படும் என்பதையெல்லாம் ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளன.
பிரம்மாண்டத்தை விட, பொழுதுபோக்கு அம்சங்களை விட, மக்களின் உள் மனதில் ஊடுருவி அவர்களுடைய கஷ்டங்களையும் சுகங்களையும் தன்னோடு சேர்ந்து உணரவைப்பதில் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியும் அந்த நடிகனின் வெற்றியும் அடங்கியுள்ளது என்பதைத் தன் படங்களின் மூலம் நிரூபித்த நடிகர் திலகத்தின் இந்த பாணி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதை மக்கள் பாபநாசம் படம் மூலம் அழுத்தமாகக் கூறியுள்ளனர்.
கமல் இனி பயணிக்க வேண்டிய பாதை, கமல் இனி பயணிக்க வேண்டிய தூரம், கமல் இனி பயணிக்க வேண்டிய வேகம், அனைத்தையும் பாபநாசம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
என்னாளும் நடிகர் திலகத்தின் பாதை வெற்றிப்பாதை என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டிய ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் உளமார்ந்த நன்றி.
இவ்வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பிற்கு, குறிப்பாக அன்புச் சகோதரர் கமலின் நடிப்பிற்கும், ஜீது ஜோசப்பின் இயக்கத்திற்கும் மற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
தமிழ் சினிமா எந்த திசையில் பயணிக்கிறது என்பதே தெரியாமல் இருந்த நேரத்தில் அதை சரியான திசையில் திருப்பி விட்ட பெருமையை பாபநாசம் பெறுகிறது. இவ்வெற்றியின் பின்னால் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.