வாழ்க்கை
யாராவது டப்பா கார் வச்சுகிட்டு ரொம்ப அவஸ்தைப்படுகிறீர்களா?.
ரிப்பேர் ஆன காரை வச்சுகிட்டு அதை சரி செய்ய தகுந்த கார் மெக்கானிக் கிடைக்காம அலையறீங்களா?கவலைய விடுங்க. ராஜா கிட்ட போங்க.ராஜான்னா ராஜாதான்.அவர் கை வெச்சா நீங்க ரிப்பேர் பண்ண கொடுத்த கார் உங்களுக்கே புதுசா இருக்கும்.தொழில்ல நேர்த்தி. தொழில்ல கடின உழைப்பு.அவர்தான் ராஜசேகர். சுருக்கமா ராஜா. ராஜாவுக்கு செய்யற வேலையில நாணயத்தை தவிர உண்மையிலேயே வேறெதுவும் தெரியாது. அதுதான் ராஜா.அதனாலதான் ராஜா..
ராஜா யார்.?ராஜாவையும் அவரோடகுடும்பத்தையும் இப்ப பார்ப்போம்.ராஜா ஒரு கை தேர்ந்த கார் மெக்கானிக்குன்னு எல்லாரும் புரிஞ்சிருப்பீங்க.ராஜாவுக்கு அன்பான அழகான மனைவி.பேர் ராதா.காதல் மனைவி. ராஜாவுக்காக தன் பெரும்சொத்து உறவு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வந்தவங்க அவங்க.அந்த அன்பான கணவன் மனைவிக்கு ரெண்டு பிள்ளைங்க.ஒரு வளர்ப்பு பையன்.பெரியவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.வேலைக்கு அலைஞ்சுகிட்டு இருக்கான்.சின்னவன் காலேஜ் போய்கிட்டு இருக்கான்.வளர்ப்பு பையன் ராஜாவுக்கு ஒத்தாசையா இருக்கான்.இது தான் ராஜாவோட குடும்பம்.
மெக்கானிக் வேலையில சம்பாதிச்சு ஒரு குடும்பத்த காப்பாத்துறதுன்னா சும்மாவா?சின்ன சின்ன பண கஷ்டங்களாகவும் நிறைய நிறைய சந்தோசமாகவும் அவுக வாழ்க்கை நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.
ஒரு நாள் பெரிய பையன் வந்தான்.பேங்க் வேலை கிடைச்சுருச்சுன்னுசொன்னான்.ஆனா வேலையில சேர பணம் டெபாசிட் பண்ணணும் சொல்றான்.ராஜா கிட்ட பணம் இல்ல..ராஜாவோட அம்மாவோட நினைவா மனைவி போட்டிருந்த நகை அது ஒண்ணுதான் பாக்கி.அதுவும் வித்து பையனோட பேங்க் உத்தியோகத்துக்கு வழி பண்ணியாச்சு.
ராஜாவோட ஹவுஸ் ஓனர் ராஜா குடியிருக்கிற வீட்டை ராஜாவுக்கே கம்மி விலைக்கு வித்துடறதா சொல்றார்.ராஜா பணத்துக்காக அல்லும் பகலும் பாடு படுறார்..பழைய காரை எடுத்து சரி பண்ணி வித்துரலாம்னு அதுக்கு வேண்டி ராப்பகலா வேலை செய்யறாரு.அப்படி ஒரு நாள் ராவுல வேலை செய்யறப்ப
காரோட பானட்டுக்குள்ள இருக்கிற பேன்ல கை சிக்கி நரம்பு கட்டாகி கை விளங்காம போயிடுது.ஓடி ஓடி ஒழச்ச உடம்பு,இப்படி ஆயிடுச்சேன்னு கலங்கிப் போகிறார்.அந்த டயத்துல முதலாளி வந்து ராஜாவோட பி.எப்.பணம்.,ரிப்பேர் பார்த்த கார வித்த பணம்னு 40000 ரூபாய் தர ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி.அந்தப்பணத்த வாங்கி அப்படியே மூத்தவன்கிட்ட கொடுத்து குடியிருக்கிற வீட்டைவிலைக்கு வாங்கி ராதா பேர்ல ரிஜிஸ்டர் பண்ணச் சொல்லிடுறார்.அவனும் மண்டைய ஆட்டிகிட்டு சரின்னு போயிடுறான்.
ராஜாவும் ராதாவும் ராமேஸ்வரம் போயிட்டு வரலாம்னுமுடிவு செஞ்சு மூத்தவன் கிட்ட டிக்கெட் புக் பண்ணி தான்னு கேட்கறார்.அவனும் முதல்ல சரின்னுட்டுபின்னால அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு மனசு மாத்திக்கிறான்.சும்மா வீட்டுல வெட்டியா உக்காந்து இருக்கறவங்களுக்கு எதுக்கு வெட்டியா செலவு பண்ணனும்னு அவ தூண்டி விடுறா. மூத்தவனும் மூளைய வச்சிக்கிட்டு யோசிக்காம பொண்டாட்டி பேச்சைக் கேட்டுகிட்டு மறுநா,அப்பன்கிட்ட எதுக்குவெட்டிச் செலவுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிர்றான்.ராஜா அந்த சமயத்துல ஓரளவு தாங்கிக்கிட்டாலும் மனசுக்குள்ள சின்ன சுணக்கம் வந்து விழுந்துர்றது.
ஆனா அந்தப் பேச்சு... வாழ்க்கையில் ராஜாவுக்கு
பசங்களால கிடச்ச மொத அடி அது.
சின்னவன் அவன் பங்குக்கு கொஞ்சம் செய்யறான்.படிக்கற காலத்துலயே ஒரு பொண்ண லவ்வு பண்றான்.அந்த பொண்ணோட அப்பன் பேரு சீதாராமன்.பெரிய பணக்காரன்.சின்னவனோட குணமும் படிப்பும் சீதாராமனுக்கு புடிச்சுருச்சு.அதனால லவ்வுக்கு தடை பண்ணல.பொண்ணோட சந்தோசமும் அவருக்கு முக்கியம்கறதால.ராஜாவும் லவ்வை எதுக்கல. ஏன்னா ராஜா பண்ணிக்கிட்டதே காதல் கல்யாணம்தானே.பின்ன என்ன பிரச்சினை?
சீதாராமன் தன் பொண்ண சின்னவனுக்கு கட்டிக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்கிடலாம்னு எண்ணத்துல சின்னவன்கிட்ட பணக்கார ஆச காட்டி மயக்கிடறாரு.ராஜா சின்னவன் கல்யாணம் பண்ணிகிறதுலஎந்த வித மறுப்பும் சொல்லலை.ஆனா வீட்டோட மாப்பிள்ளையா போறதத்தான் எதிர்க்குறாரு.ஏன்னா சுத்த ஆம்பளக்கு அது அழகில்ல.தன்மானத்தை விட்டுக்கொடுத்து தானே அப்படி வாழ முடியும்.அத ரோசமுள்ள அப்பன் யாராவது ஏத்துக்குவாங்களாய்யா.ராஜா யாரு?.சீதாராமன் மாதிரி பலமடங்கு பணக்காரானான ராதாவோட அப்பனேயே எதுத்து ராதாவ கல்யாணம் பண்ணி கவுரமா வாழ்ந்து வர்றவராச்சே.
சின்னவனுக்கு சீதாராமன் செஞ்ச மூளைச்சலவையே மண்டைக்குள்ள உட்காந்துகிட்டு தன்மானம் வெளில வரமாட்டேங்குது.
அந்த ஓட்டு வீட்டுல உட்காந்துகிட்டு பொழப்ப ஓட்டணுமான்னுஅவன் கவலப்படறான்.கடசில நான் சீதாராமன்கிட்டயே போறேன்னு போயிடறான்.
ராஜாவுக்கு வாழ்க்கையில கிடச்சரெண்டாவது அடி.
சின்னமகன் போயிட்ட பின்னாடி அதயே நினச்சு ராதாவுக்குஉடம்புக்கு முடியாம போயிடுது. சின்னவன போயி கூட்டிகிட்டி வந்தா ராதாவுக்கு ஆறுதலா இருக்கும் நெனச்சு ராஜா , சீதாராமன் வீட்டுக்கு போறாரு.சீதாராமன்!என் புள்ளய எங்கிட்டேயே திருப்பிக் கொடுத்துருங்க.நீங்க ஆச காட்டி அவன் மனச கலச்சிட்டீங்க.எம் புள்ளய அனுப்புங்க, அப்படின்னுகேட்குறாரு.
சீதாராமன் அதுக்கு உங்க புள்ள வந்தா கூட்டகிட்டு போங்க.நான் அதுக்கு குறுக்க நிக்கல.,அப்பிடீங்கறாரு.
சின்னமகன் வந்து, அந்த நரகத்துல வந்து மறுபடி நான் கஷ்டப்பட விரும்புல, அப்பிடின்னு சொல்லி வர மாட்டேங்கறான்.
சீதாராமன் அப்ப சொல்றாரு :
சிலரோட லாபம்
சிலருக்கு நஷ்டம்
சிலரோட அழுகை
சிலருக்கு சிரிப்பு
சிலரோட தோல்வி
சிலரோட வெற்றி
இதுதான் வாழ்க்கை.
அப்படின்னு அவரோட பாணில வாழ்க்கை தத்துவத்தை சொல்றாரு.
தான் பெத்த மகனேபிறந்து வளந்த வீட்டை அப்பன் முன்னாடியே நரகம்னு சொன்னா எந்த அப்பனாலத்தான் அத தாங்கமுடியும்.
இது அந்த தகப்பனுக்கு இன்னொருஅடி.
சின்னவனுக்கும் சீதாராமன் பொண்ணுக்கும் கல்யாணம் கல்யாணம் முடியுது.
ராதாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம போகுது.வைத்திய செலவுக்கு வளர்ப்புமகன் கண்ணன் ,மூத்தவன் மனைவி வச்சுருக்கிற உண்டியலை உடச்சு பணம் எடுத்து ராதாவுக்கு வைத்திய செலவு செஞ்சிடுறான்.
மூத்தவன் சம்சாரத்திற்கு கோபம் வந்து கண்ணனை அடிக்கிறா.ராஜா அத கண்டிக்க, வாக்குவாதம் முத்தி(முற்றி) தப்பான வார்த்தைகளா அவ வாயில இருந்து விழுகுது.அதுல ஒண்ணு:
அப்படி என்ன உடம்புக்கு.அப்படியே கஷ்டமா இருந்தாலும் செத்தா போயிருவீங்க?அப்படீன்னு கேக்கறா.அவ கேட்டது பெரிய அதிர்ச்சின்னா அதக் கேட்டும் ஒண்ணுஞ் சொல்லாம கல்லா நின்னுட்டு இருக்கானேமூத்த பையன் அது அதுக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குது ராஜாவுக்கு.
ஏண்டா.பெத்த அம்மாவ இப்படிக் கேட்கறாளே உன் சம்சாரம்.அத தப்புன்னு கேட்கத் தோணலையா உனக்கு,இத வளரவிட்டா தினம் தினம் இந்த மாதிரி பிரச்சனைக தான் வரும்.அதனால உம் பொண்டாட்டியக் கூப்புடுக்கிட்டுஇந்த வீட்டை விட்டு வெளியல போ.ராஜா கட் அண்ட் ரைட்டா சொல்லிப்புடுறாரு.
அப்பத்தான் தெரியுது விஷயமே..அந்த வீடே அவன் பொண்டாட்டி பேர்ல இல்ல இருக்குன்னு..இது அவன் சம்சாரமேஅப்ப சொல்லி ,இது எங்க வீடு நாங்க எதுக்கு வெளியில
போகணும்னு பதிலுக்கு கேட்கறா.
இதுக்கு முன்னாடி விழுந்தது எல்லாம் அடின்னா இது இடியால்ல இருக்கு.திகச்சு போயிடுறாரு மனுஷன்.மத்த எவனாவது இந்த நிலமையில இருந்தான்னா வாய பொத்திகிட்டு பேசாம குடுக்கறத சாப்பிட்டுகிட்டு செத்த பொணம் மாதிரி இருந்துக்குவாங்க.
ஆனா,
ராஜசேகர் யாரு?.உழச்சு உழச்சு வயிரம் பாஞ்ச உடம்பும்,தன்மானம் நிறஞ்ச மனசும் கொண்டவராச்சே.
ராதா,கண்ணன் ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு அந்த வீட்ட விட்டு ராஜா வெளியில்
போய் விடுகிறார்.
?
இதுதான் வாழ்க்கை என்றால்
இல்லை இதற்கு முடிவென்றால்
அவர் காட்டிய பாசத்திற்கும்
ஆளாக்கிய அன்பிற்கும்
அவர்கள் கொண்ட அர்த்தம்தான் என்ன?
----------------------------------------------------------------இனி மேல்தான் இருக்கிறது...
தொடரும்...