Originally Posted by
KALAIVENTHAN
அல் அமீன்
நம்பிக்கைக்குரியவர்
கி.பி.570
அரபு தேசத்தில் மக்கா நகரில் அப்துல்லாஹ், ஆமினா தம்பதிக்கு முஹம்மது நபி (ஸல்) (அண்ணலாரின் திருப்பெயர் சொல்லப்படும்போதெல்லாம் ஸலவாத் என்னும் புகழ் மொழியை அவர்கள் மீது கூறுவது கடமை) பிறந்தார். குறைஷி கோத்திரத்தில், இவர் பிறந்த ஹாஷிம் குடும்பம் அரபுலகத்தில் பிரபலம்.
ஹிரா குகையில் தியானம் செய்தவருக்கு வானவர் மூலம் இறைவசனங்களான அல்குர்ஆன் இறங்குகிறது. 40வயதில் முஹம்மது நபியவர்கள் (ஸல்) நபித்துவம் அடைந்தார்கள். 300க்கும் மேற்பட்ட சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஓரிறைக் கொள்கையையும் வாழ்க்கை நெறிகளையும் போதித்தார்கள்.
உலகம் நல்லவர்களை உடனே ஏற்பதில்லையே. மூடநம்பிக்கையாளர்களால் விரட்டப்பட்டார். நன்மையை காக்க போரில் ஈடுபட்டு ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டினார். எதிர்த்தவர்களே ஏற்றுக் கொண்டனர். 23 ஆண்டுகளில் (அண்ணலார் (ஸல்) 63 வயது வரை வாழ்ந்தார். நபித்துவம் அடைந்த 40 வயதில் இருந்து இறுதி வரை வாழ்ந்த ஆண்டுகள்) இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.
இதில் ஒரு வியப்பு என்ன தெரியுமா? அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று நபிகளாரை (ஸல்) பின்பற்றுவோர் மட்டுமல்ல, அவரது எதிரிகளும் கூட ஒப்புக் கொண்டனர். நபிகளாரின் (ஸல்) ஏகத்துவப் பிரசாரத்தை நம்பாத, அவருக்கு எதிரான குறைஷிகள் கூட தங்கள் பொருட்களை அவரிடம் அடைக்கலமாக கொடுத்து வைத்திருந்தனர். அந்தக் குறைஷிகளே அண்ணலாரை (ஸல்) கொல்ல முயன்ற வேளையிலே கூட, மெக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் கூட, அவர்களுக்கு உரிய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க ஆவன செய்து விட்டுத்தான் வெளியேறினார். அதனால்தான் அவர் அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்.
நபிகளாரின் (ஸல்) போதனைகளில் முக்கியமானது மது அருந்தாமை மற்றும் ஈகைப் பண்பு. அதனால்தான் ரமலான் திருநாள் ஈகைப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது.
நபிகளாரின் (ஸல்) அடியொற்றியே புரட்சித் தலைவரின் வாழ்வும் அமைந்திருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய தலைவர், தனது உழைப்பால் உயர்ந்து சமுதாயத்தில் உயர்ந்தார். திரைப்படத்துறையில் அவரை வைத்து படம் எடுத்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அரசியல் துறையிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலத்தையே மூன்று முறை ஆட்சி செய்தார்.
மக்கள் மீது தலைவர் கொண்டிருந்த நம்பிக்கையும், தலைவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பரஸ்பரத்தன்மை கொண்டது. நாடோடி மன்னன் திரைப்படத்தில் தலைவர் கூறுவார், ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை’ என்பார்.
நபிகளார் (ஸல்) வலியுறுத்திய ஈகைப் பண்பும் விருந்தோம்பல் பண்பும் புரட்சித் தலைவரோடு உடன் பிறந்தது. தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, ஆட்சியில் இருந்தபோதும் கூட ஒரு ஆட்சியாளராக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் தலைவர்.
ஒருமுறை சென்னையில் நடந்த சிறுபான்மையினர் மாநாட்டில் புரட்சித் தலைவர் கலந்து கொண்டு பேசும்போது கூறினார்:
‘நான் ஒரு லுங்கி அணியாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன்’
..... இப்படிச் சொன்னவரின் பெயர், இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர். பரந்த நோக்கத்தோடு மத ஒற்றுமைக்கு வழிகாட்டியாகவும் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் சர்வ சமுதாய காவலராகவும் திகழ்ந்தவர் தலைவர்.
ஆனால், இன்று பாசிச மதவெறி தலைவிரித்தாடுகிறது. சமஸ்கிருதத்தை திணிக்கப் பார்க்கிறது. கிறிஸ்துமசுக்கு விடுமுறை உண்டா? இல்லையா? என்று சர்ச்சை. அம்பேத்கர் - பெரியார் என்று பெயர் இருந்ததாலேயே ஐஐடியில் வாசிப்பு வட்டத்துக்கு தடை.
தலைவர் நடித்த, இஸ்லாமிய கதையமைப்பைக் கொண்ட சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் எல்லாப் பாடல்களுமே மனதை மயக்கும். அதில் எஸ்.சி.கிருஷ்ணனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பாடிய டைட்டில் பாடல் மனதை உருக்கும். அதில் எனக்கு பிடித்த வரிகள்.
‘‘இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே, நபி நாயகமே, நலமே அருள் நபி நாயகமே’’
தலைவர் நமக்கு காட்டிய வழியில்,
மதவெறி மாய... மனித நேயம் மலர.... உறுதியேற்போம்.
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன் 10:86)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்