http://oi67.tinypic.com/1y8iky.jpg
Printable View
Lxmanana Laxmanan
இன்று மாலைக் காட்சிக்கு தங்கசுரங்கம் படத்தை நடிகர் திலகத்தின் அன்புப் பிள்ளைகளோடு பிள்ளையாக மதுரை சென்ட்ரல் திரையரங்கில் கண்டுகளித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5f&oe=5C01F757
சபாஷ் மீனா -60
பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958ம் ஆண்டு வெளியான சபாஷ் மீனா திரைப்படம் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் வைர விழா நிகழ்வை, NT Fans சென்ற ஜூலை 22 ஞாயிறன்று கொண்டாடினார்கள்.
அமைப்பின் பொருளாளர் முரளி ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசிய பின் படத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். சபாஷ் மீனா, பி.ஆர். பந்துலு சிவாஜி இணையில் வெளிவந்த நாலாவது படம் மற்றும் 1958-ல் வெளியான ஏழாவது சிவாஜி படம் என்ற தகவல்களோடு ஆரம்பித்தவர் அந்த 1958 காலண்டர் வருடத்தில் 100 நாட்கள் ஓடிய நான்காவது சிவாஜி படம் என்றும் சொல்லி தமிழ் சினிமாவில் முதன்
முறையாக ஒரு காலண்டர் வருடத்தில் ஒரு கதாநாயக நடிகர் நடித்த 4 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை அப்போதுதான் முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது என்றார். அந்த சாதனையை சிவாஜியே மீண்டும் 1964 காலண்டர் வருடத்தில் ஐந்து 100 நாள் படங்களை கொடுத்து முறியடித்ததையும் மீண்டும் அவரே 1972-ல் ஆறு 100 நாட்கள் படங்களை கொடுத்த சாதனையையும் (அந்த ஆறில், இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது) எடுத்துரைத்தார். கதைக்கேற்ப சந்திரபாபுவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததையும் சரோஜாதேவி இதில் பாபு ஜோடியாக நடித்ததையும் சுட்டிக் காட்டினார். இந்த படத்தின் கதை பின்னாட்களில் பல்வேறு படங்களுக்கு பயன்பட்டது என்பதையும் நினைவுபடுத்தினார்.
படத்திற்கு பாடல்கள் எழுதிய கு.மா.பாலசுப்ரமணியன் அவர்களின் குமாரர் திருநாவுக்கரசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசினார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் தன் தந்தையாரால் எழுதப்பட்டது என்பதை சுட்டிக் காட்டியவர் பாடல்கள் அன்றைக்கு பெற்ற பெரிய வரவேற்பை நினைவு கூர்ந்தார். குறிப்பாக சித்திரம் பேசுதடி, காணா இன்பம் கனிந்ததேனோ பாடல்கள் இன்றும் அனைவரின் மனத்திலும் இடம் பெற்றிருப்பது சந்தோஷமான ஒன்று என்றவர் முதல் பாடலான அலங்கார வல்லியே பாடலையும் சிலாகித்தார். 1950களில் சிவாஜியின் பிரபலமான பாடல்களை எழுதிய பெருமை தன தந்தைக்கு உண்டு என்று சொன்னவர் அதற்கு உதாரணமாக யாரடி நீ மோகினி போன்ற பாடல்களை குறிப்பிட்டார். அவருக்கு அமைப்பின் சார்பாக சபாஷ் மீனாவின் வைர விழா மெமென்டோ வழங்கப்பட்டது.
மற்றொரு சிறப்பு விருந்தினர் சபாஷ் மீனா படத்தின் ஒளிப்பதிவாளர் W R சுப்பாராவின் மகனான கிருஷ்ணகுமார் பேசும்போது காணா இன்பம் பாடல் காட்சி படமாக்கப்பட்டது எப்படி என்பதை விளக்கினார். செட் போட்டு செயற்கை மழை பெய்ய வைத்து அந்த காட்சி படமாக்கப்பட்டது என்றும் தண்ணீரை வீணாக்காமல் மறு சுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்றார். அந்த பாடல் காட்சி அன்று வரை வந்த தமிழ் சினிமாவின் மழைக் காட்சிகளுக்கு சிகரமாக இருந்தது என்பதை குறிப்பிட்ட கிருஷ்ணகுமார் அதன் பிறகும் அது போன்ற நேர்த்தி பிற்கால படங்களில் காண முடியவில்லை என்று அன்றைய திரையுலகில் பரவலான கருத்து நிலவியதை பகிர்ந்து கொண்டார். அதன் தாக்கம் எந்தளவிற்கு இருந்தது என்பதற்கு இரண்டு நிகழ்வுகளை சொன்னார். சபாஷ் மீனா வெளிவந்து ஏழு வருடங்களுக்கு பிறகு வெளியான தாழம்பூ படத்தில் வரும் மழை பாடல்காட்சியான தூவானம் இது தூவானம் பாடலுக்கு அந்த படத்தின் நாயகனான எம்ஜிஆர் தன் தந்தையை அழைத்து "தம்பி படத்தில் வந்த காணா இன்பம் காட்சி போல இதை எடுத்து கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டதையும் அதன் பிறகு 1969-ல் வெளியான நம் நாடு படத்தில் இடம் பெற்ற ஆடை முழுதும் நனைய நனைய பாடலுக்கும் எம்ஜிஆர் சபாஷ் மீனா பாடலை நினைவூட்டி அது போன்ற ரிசல்ட் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை தன் தந்தையார் பெருமையுடன் குறிப்பிடுவார் என்பதை நினைவு கூர்ந்தார். நவராத்திரி படத்தின் இறுதி காட்சியில் ஒரே பிரேமில் 7 சிவாஜிகள் தோன்றும் காட்சி தன் தந்தைக்கு மிக பெரிய பாராட்டுகளை பெற்று கொடுத்தது என்று சொன்ன கிருஷ்ணகுமார் ஆனால் அவர் தந்தை அதைப் பற்றி குறிப்பிடும்போது அதில் 7 மாஸ்க் ஷாட் எடுத்தது மட்டுமே தான் செய்தது என்றும் ஒவ்வொரு ரோலுக்கும் சிவாஜியின் உடல் மொழி, நடை உடை பாவனை, ஒரு மாஸ்க் ஷாட்டில் தான் செய்த action அதற்கு அடுத்த மாஸ்க் ஷாட்டில் கொடுக்க வேண்டிய reaction என்று சிவாஜியின் மாஜிக்தான் தனக்கு அந்தளவிற்கு பெயர் தேடிக் கொடுத்தது என்பதை எப்போதும் சொல்வார் என்பதை பகிர்ந்து கொண்டபோது அரங்கம் அதை ஆர்ப்பரித்து வரவேற்றது. அவருக்கும் வைரவிழா மெமென்டோ வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் ராஜேஷ் இந்த படம் வெளியாகும்போது தான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன் என்றார். படத்தின் பாடல்கள் மிக பெரிய ஈர்ப்பு சக்தியாக விளங்கியது என்றும் படத்தின் இசையமைப்பாளர் டி.ஜி லிங்கப்பா பெரிய இசை மேதை என்றும் புகழ்ந்தார். கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் கமாஸ் ராகத்தில் அமைந்த சித்திரம் பேசுதடி பாடலை குறிப்பிட்டார். சிவாஜி அண்ணனே லிங்கப்பாவிடம் சென்று நல்ல காதல் பாட்டு ஒன்று போடுங்கள் என்று சொல்ல பாகேஸ்வரி ராகத்தில் லிங்கப்பா போட காணா இன்பம் பாடல் ஒரு தேவாமிர்தம் என்றார் ராஜேஷ். இந்த படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் ஒன்று படத்தின் நீளம் கருதி படமாக்கப்படவில்லை என்பதை சொன்ன ராஜேஷ் அந்த பாடலை மிகவும் விரும்பிய சந்திரபாபு, லிங்கப்பாவிடம் அனுமதி பெற்று மரகதம் படத்தில் பயன்படுத்திக் கொண்டதையும் அந்தப் பாடல்தான் குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே என்பதையம் வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் இந்த படத்தின் கதை பல படங்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதையும் தாண்டி பாபுவின் நகைச்சுவை குறிப்பாக அவர் பேசிய சென்னை தமிழ் பின்னாட்களில் தேங்காய் சீனிவாசன். சுருளிராஜன் போன்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தது என்றார். இந்த படத்தை மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றார்.
நன்றி தெரிவித்து பேசிய அமைப்பின் செயலாளர் ராகவேந்திரன் படத்தின் இசையை அதில் டி.ஜி.லிங்கப்பாவின் பங்களிப்பை எடுத்து சொன்னவர் அலங்காரவல்லியே பாடலை குறிப்பிட்டு அந்த பாடலில் சந்திரபாபுவிற்கு சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி குரல் கொடுத்திருக்கும் புதுமையை சுட்டிக் காட்டினார். ஒளிப்பதிவாளர் சுப்பாராவின் பெருமைகளையும் எடுத்து சொன்னவர் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்ய அதன் பிறகு சபாஷ் மீனா படம் திரையிடப்பட்டது.
60 வருடங்களுக்கு முன்பு வெளியான படமாக இருப்பினும் அன்றைய நாட்களிலேயே இயல்பான பேச்சு தமிழில் அமைந்திருந்த வசனங்கள், ஆள்மாறாட்ட குழப்பங்கள், தரமான நகைச்சுவை காட்சிகள், இனிமையான பாடல்கள் என்று படம் விறுவிறுப்பாக போனதை அனைவரும் ரசித்து மகிழ ஒரு இனிமையான மாலை ரசனையாக கழிந்தது .
முதல் புகைப்படம் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் அவர்களின் குமாரர் திரு திருநாவுக்கரசு அவர்கள் சிறப்பு விருந்தினர் ராஜேஷ் அவர்களிடமிருந்து நினைவு பரிசு பெறும் காட்சி. இரண்டாவது, ஒளிப்பதிவாளர் W.R. சுப்பாராவ் அவர்களின் புதல்வர் திரு கிருஷ்ணகுமார் உரையாற்றுகிறார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...6c&oe=5C019A39
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...7c&oe=5BF8DA17