நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்த நினைவுகளைத் தட்டி எழுப்பும் இத்திரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
Printable View
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்த நினைவுகளைத் தட்டி எழுப்பும் இத்திரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
Thanga Surangam banner placed at the Gemini corner. Due to Traffic jam that was caused by the onlookers, the banner was shifted to Shanti Theatre.
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...90794034_o.jpg
Newspaper cutting courtesy my 40 years Shanti Theatre friend Mr. Anand
Courtesy: Mr Karthik old post
'ரமலான் ஈத்' பண்டிகையையொட்டி தாங்கள் பதித்திருந்த பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. குறிப்பாக 'பாவமன்னிப்பு' விளம்பரங்கள் இரண்டும் அட்டகாசம். (துவக்கி விட்டீர்கள், தொடர்ந்து அப்படத்தின் 50-வது நாள், 100-வது நாள், வெள்ளிவிழா விளம்பரங்கள் வரை, தங்களிடம் இருக்கும் பட்சத்தில், பதிவிட்டு அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்).
'கப்பலோட்டிய த்மிழன்' மறு வெளியீட்டு விளம்பரங்களும் அசத்தல் ஆவணங்கள். அப்படத்துக்கு 1976-ல் எமர்ஜென்ஸி காலத்தின்போதுதான் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தை முழு கட்டணத்திலேயே அரங்கு நிறைந்த காட்சியாக கண்டுகளித்த அனுபவம் எனக்கு.
1961 தீபாவளியன்று வெளியான இக்காவியம், அதன்பின்னர் என் நினைவுக்கெட்டிய காலம் வரை மறு வெளியீட்டுக்கு வராத நேரம். அந்த ஆண்டு வெளிவந்த மூன்று 'பா' வரிசைப் படங்களும் அடிக்கடி தியேட்டர்களில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போதிலும், ஏனோ கப்பலோட்டிய தமிழன் வரவில்லை. முதல் வெளியீட்டில் கிடைத்த ரிசல்ட்டைப்பார்த்து விநியோகஸ்தர்கள் பயந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் எகிறிப்போயிருந்தது.
இந்நிலையில் எனது பள்ளிமாணவப் பருவத்தின்போது 1972-ஜூன் மாதம் திடீரென்று தினத்தந்தியின் கடைசிப்பக்கத்தில் 'வெள்ளிக்கிழமை முதல் சித்ராவில்' என்று தலைப்பிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தின் கால்பக்க விளம்பரம் வந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகள் அகன்றன. எவ்வளவு நாள் காத்துக்கிடந்த வாய்ப்பு என்று மனம் குதூகலித்தது. விளம்பரத்தில், கட்டம் போட்ட கைதி உடை மற்றும் தொப்பியுடன் நடிகர்திலகம் கீழே கிடக்க, ஒரு பெரிய பூட்ஸ் அணிந்த கால் (கால் மட்டும்தான்) அவரை மிதிக்க உயர்ந்திருப்பது போல விளம்பரமிட்டிருந்ததைப் பார்த்து மனம் எகிறியது. நண்பர்கள் கூடிப்பேசினோம். எப்படியும் முதல்நாளே பார்த்துவிட வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் கையில் காசு இல்லை. அதனால் வெள்ளிக்கிழமை போக முடியவில்லை. நண்பர்கள் சிலர் 'எப்படியும் சுற்றியடித்து நம்ம ஏரியா (வடசென்னை) தியேட்டருக்கு வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றனர். ஆனால் எனக்கு பொறுமையில்லை. இங்கே வரும் என்பது என்ன நிச்சயம்?. ஒருவேளை வராமல் போய்விட்டால்?. வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?. (அப்போதெல்லாம் படம்பார்க்க தியேட்டரை விட்டால் வேறு வழி கிடையாது).
சனிக்கிழமை காலை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் விளம்பரத்தைக்காட்டி, படம் பார்க்க பணம் கேட்டேன். (ஒரு மகன் தந்தையிடம் தைரியமாக சினிமாவுக்கு பணம் கேட்கும் அளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே வந்த தரமான படங்களில் ஒன்றல்லவா இக்காவியம்). படத்தின் விளம்பரத்தைப்பார்த்ததும் அவரும் மறுபேச்சுப் பேசாமல் மூன்று ரூபாயை எடுத்துத்தந்தார். (அப்போது முதல் வகுப்பு டிக்கட் 2.60 ). மீண்டும் விளம்பரத்தைப்பார்த்து எந்த தியேட்டர் என்று உறுதி செய்து கொண்ட அவர், 'இந்தப்படத்துக்குத்தானே போறே?. போய்ட்டு வந்ததும் என்கிட்டே டிக்கட்டைக்காட்டணும்' என்று கண்டிஷன் போட்டார். (பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை).
பிராட்வே பஸ் ஸ்டாப்பில் ஏறி மவுண்ட்ரோடு தபால் நிலையத்தில் இறங்கினால் 25 பைசா டிக்கட். அதுவே பாரீஸ் வரை நட்ந்துபோய் அங்கு ஏறி, Hindu பத்திரிகை அலுவலகம் முன்பு இறங்கினால் டிக்கட் 15 பைசா. சிறிது தூரம் நடந்தாலும் பரவாயில்லையென நாங்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தோம். மாலைக்காட்சிக்கு நேரமாகிவிட்டதால், ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்றால், சித்ரா தியேட்டரின் வாசல்கேட்டில் மாட்டியிருந்த ‘Housefull’ போர்டு எங்களை வரவேற்றது. எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நான் டிக்கட் வாங்கியபின் இந்த போர்டை மாட்டியிருந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இல்லை.
வந்ததற்கு எந்தப்படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று வந்திருந்த நண்பர்கள் உடனடி முடிவெடுத்து, 'சென்னை கங்கை'யின் மறு கரையிலிருந்த கெயிட்டி தியேட்டருக்கு ('குறத்தி மகன்' என்று நினைக்கிறேன்) பார்க்கப்போய்விட்டனர். ஆனால் கப்பலோட்டிய தமிழனைத்தான் பார்க்கவேண்டும் என்று வந்திருந்த நான் மட்டும், கேட்டுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்று, காம்பவுண்டுக்கு மேலே இருந்த தட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட போஸ்ட்டர்களையே சிறிது நேரம் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்து விட்டு மீண்டும் 15 பைசா டிக்கட்டில் வீடு திரும்பினேன்.
பெரிய வால்வு ரேடியோவில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்த அப்பா சற்று ஆச்சரியமாக தலையைத்தூக்கி, 'ஏண்டா, போகலையா?' என்று கேட்டார். 'போனேன்பா, நாங்க போகமுன்னாடியே ஃபுல் ஆயிடுச்சு' என்றதும், 'சரி அப்போ நாளைக்குப்போ' என்றவர் சட்டென்று 'வேணாம், நாளைக்கு இன்னும் கூட்டமாயிருக்கும். திங்களன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் போ' என்றார். பணத்தை திருப்பி வாங்கிக்குவாரோ என்று பயந்த எனக்கு குதூகலமாயிருந்தது. எனக்கென்னவோ, தன் மகன் எப்படியாவது இந்தப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்தது போலத்தோன்றியது.
திங்கள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தாமதிக்காமல் நான் மட்டும் தனியாக பஸ்ஸில் போனேன். பின்னே, நண்பர்கள்தான் இருந்த காசுக்கு 'குறத்திமகன்' பார்த்துவிட்டனரே. பாலத்தைக்க்டக்கும்போதே தென்பட்ட கூட்டம் மீண்டும் பயத்தைக்கிளப்பியது. இருந்தாலும் கிட்டே போய்ப் பார்த்தபோது சற்று தைரியம் வந்தது. சற்று முன்னமேயே சென்றுவிட்டதால் 2 ரூபாய் டிக்கட்டே கிடைக்கும்போல இருந்தது. சித்ரா தியேட்டரில் 2 ரூபாய் டிக்கட் எத்தனை என்று போர்டில் பார்த்து, அதில் பாதியை பெண்களுக்கு கழித்துவிட்டு, கியூவில் நின்றவர்களை தோராயமாக எண்ணிப் பார்த்ததில், டிக்கட் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. கவுண்ட்டர் திறந்ததும், வழக்கம்போல பிஸ்த்தாக்கள் ஒரு பத்துபேர் வரிசையில் நடுவில் நுழைந்தனர். அச்சத்துடன் நெருங்கிப்போக, டிக்கட் கிடைத்து விட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே உள்ளே போகாமல், எனக்குப்பின் இன்னும் எத்தனை பேருக்கு டிக்கட் கிடைக்கிறதென்று பார்த்துக்கொண்டிருக்க, ஐந்தாறு பேர் வாங்கியதும் கவுண்ட்டர் அடைக்கப்பட்டது. நல்லவேளை 'வஸ்தாதுகள்' இன்னும் ஒரு ஐந்து பேர் நுழைந்திருந்தால் என் கதி அவ்வளவுதான். உள்ளே போய் சீட்டில் கர்சீப் போட்டுவிட்டு, வெளியே வந்து முதல் வகுப்பு பக்கம் போனால், அதுவும் ஃபுல். கடைசி கிளாஸ் டிக்கட் முடிந்ததும் திங்களன்றும் ‘Housefull’ போர்டு போட்டார்கள். சந்தோஷத்துக்குக் கேட்கணுமா?. நிறையப்பேர் இந்தப்படத்தை எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.
படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.
ஆனால் ஜெமினிகணேஷ் ஏற்றிருந்த மாடசாமி ரோலுக்கு தேவையில்லாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதிக சீன்களும், ஒன்றுக்கு இரண்டாக டூயட் கொடுத்ததும் அந்த வயதில்கூட எனக்குப்பிடிக்கவில்லை. படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் போலத்தோன்றியது.
ஒரு விஷயம் சொன்னால் உங்களில் பெரும்பாலோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து விட்டு, படம் துவங்கியதும் அதை மறந்து போனேன். ஆனால் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனிக்காக கப்பலை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அந்த வரலாற்று நிகழ்வில், கரையிலிருக்கும் திரண்ட கூட்டத்தோடு, பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் பாட, வ.உ.சி. கப்பலில் கையசைத்துக்கொண்டே வரும் "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.
அதன்பிறகு இதுவரை கப்பலோட்டிய தமிழன் படத்தை குறைந்தது 25 முறையாவது பார்த்திருப்பேன். ஆனால் அந்தப்பாடலை கலரில் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அதன்பிறகு பார்த்ததபோது படம் முழுக்க கருப்புவெள்ளையில்தான். 1972-ல் முதன்முறையாக நான் பார்த்தபோது திரையிடப்பட்ட அந்த பிரிண்ட், அநேகமாக 1961-ல் படம் ரிலீஸானபோது உருவாக்கப்பட்ட பிரிண்ட்டாக இருக்கலாம். அதன்பிறகு எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்கள் அனைத்தும் கருப்புவெள்ளையில்தான் எடுக்கப்பட்டது.
வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.
(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).
படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன.
Thanks to Mr Neyveli Vasudevan
அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.
நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.
கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.
வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.
எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.
அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்டு விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....
அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன், பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.
வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை... அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம்... படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை. பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.
Thanks to Mr Karthik
'ராஜபார்ட் ரங்கதுரை'
நாடகக்கலைஞனாக நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரையின் 39-வது உதய தின இனிய நினைவலைகள் (22.12.1973 - 22.12.2011)
தயாரிப்பில் இருக்கும்போதே பலவேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்ட படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய திரைக்காவியம்.
1971 இறுதியில் துவங்கிய நடிகர்திலகத்தின் வெற்றிநடை 72-ஐக்கடந்து 73-லும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியாகி இதுவும் வெற்றிக்கனியை ஈட்டியது. (தொடர் வெற்றிப்பட்டியலை ஏற்கெனவே முரளி சார் அவர்கள் முந்தைய பக்கத்தில் அட்டகாசமாக தொகுத்தளித்துள்ளார்). இப்படம் வெளியானபோது தீபாவளி வெளியீடான கௌரவம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக 58 நாட்களைக் கடந்துகொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம் 15 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. (ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் மட்டும், வெளியிடும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் தினசரி 4 காட்சிகளாக ஓடி, இப்படத்துக்காக பக்கத்தில் மயிலை கபாலி தியேட்டருக்கு மனிதரில் மாணிக்கம் மாற்றப்பட்டது).
ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவரும் முன்பே, இது காங்கிரஸ் இயக்கத்தினரை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்று மதிஒளி, திரைவானம் போன்ற பத்திரிகைகள் சரமாரியாக செய்திகளையும் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன. அப்போது சிவாஜி ரசிகன் என்றும் பெருந்தலைவரின் தொண்டன் என்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லோரும் இரண்டுமாக திகழ்ந்த காலகட்டம். போதாக்குறைக்கு ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், பெருந்தலைவரும் நடிகர்திலகமும் மேடையில் இருக்கும்போதே, மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை, அப்போது தயாரிப்பிலிருந்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப்பற்றி வெகு சிறப்பாகப்பேசி, ‘இது காங்கிரஸ்காரர்களின் லட்சியப்படம்’ என்று கூறி விட்டார்.
அப்போது சிவாஜி மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் தமிழகத்தில் பெரும் சக்தியாக விளங்கியதால் இப்படம் பெருந்தலைவரின் பாராட்டைப்பெற்றால் நன்றாக இருக்குமே என்று கருதிய தயாரிப்பாளர் குகநாதன், பெருந்தலைவருக்கும் காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுக்கும் ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்திருந்தார். (அந்த பிரத்தியேக காட்சியைப்பற்றியும் அதில் நடந்தவற்றைப் பற்றியும் ஏற்கெனவே முன்னர் சாரதா மிக விரிவாக எழுதியிருந்தார், அதை நாமெல்லோரும் படித்திருக்கிறோம். ஆகவே அதை மீண்டும் விளக்கத்தேவையில்லை).
ராஜபார்ட் ரங்கதுரை சென்னையில் பைலட், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, முரளிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி ஆகிய ஐந்து திரையரங்குகளில் வெளியானது. அத்தனையிலும் தினசரி மூன்று காட்சிகள்தான். வடசென்னை மண்ணடிவாசியான நான் (வழக்கம்போல) மிண்ட் ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் (வழக்கம்போல) முதல்நாள் மாலைக்காட்சிக்கு ரிசர்வ் செய்திருந்தேன். முதல்நாள் மாலைக்காட்சி டிக்கட் கிடைப்பது சாதாரணம் அல்ல, ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை ஏழுமணிக்கெல்லாம் போய், 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கேட் திறந்ததும் ஓடிப்போய் கியூவில் நின்றுகொண்டு, இன்னும் போலீஸ் வரவில்லையே என்று தவமிருக்க வேண்டும். போலீஸ் வந்துவிட்டால் நமக்குத்தெம்பு. அப்பாடா, இனி நம் இடம் பறிபோகாது என்று. அப்போது பள்ளி மாணவப்பருவமாதலால் இதெல்லாம் பெரிய கஷ்ட்டமாகத் தெரியவில்லை. இன்றைய இளம்பருவத்தினர் இந்த சாகசங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.
மதியசாப்பாட்டுக்குப்பின், பவளக்காரத்தெரு நண்பன் வீட்டு வாசலில் எல்லோரும் கூடி, அங்கிருந்து புறப்பட்டோம். நடைதான். பேசிக்கொண்டே கிருஷ்ணா தியேட்டர் போய்ச்சேர்ந்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. போகும் வழியில் கிரௌனில் கௌரவம் எப்படீன்னு எட்டிப்பார்த்தோம். சனிக்கிழமையாதலால் மேட்னி ஃபுல். (ராஜபார்ட்டுக்கு மேட்னி டிக்கட் கிடைக்காதவர்களும் இங்கு வந்திருக்கக்கூடும்).
ஸ்ரீகிருஷ்ணாவை நெருங்கும்போதே சாலையில் பெரும் கூட்டம் தெரிந்தது. தியேட்டர் முழுக்க காங்கிரஸ் கொடிகள், காங்கிரஸ் பேனர்கள். நடிகர்திலகத்தின் கட்-அவுட் கையிலும் நிஜமான கொடி பறந்துகொண்டிருந்தது. ஏதோ காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் தந்தது. பேனர் முழுக்க நடிகர்திலகத்துக்கு பிரம்மாண்டமான மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. வடசென்னை மன்றங்கள் அலங்காரங்களில் அசத்தியிருந்தனர். அந்தக்கண்கொள்ளாக் காட்சிகள் இன்றைக்கும் மனதில் நிறைந்திருக்கிறது. ஏற்கென்வே மெயின்கேட் திறந்து விடப்பட்டு, கவுண்ட்டர் கேட்களும் போலீஸ் பந்தோபஸ்துடன் திறந்து விடப்பட்டு, கூட்டம் நிரம்பி வழிந்தது. கரண்ட் டிக்கட் கவுண்ட்டரில் நின்றவர்கள் கண்களில் 'டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ' என்ற பதைபதைப்பு தெரிந்தது.
போலீஸ் மட்டுமல்லாது மன்றத்தினரும் வெள்ளை சீருடையில் காங்கிரஸ் பேட்ஜும், மன்ற பேட்ஜும் அணிந்து கூட்ட்த்தினரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சீனியர் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க, நாங்கள் அவர்கள் மத்தியில் நின்று, செய்திகளை கிரகித்துக்கொண்டிருந்தோம். காம்பவுண்டுக்குள் நிற்க இடமில்லாமல் நிறையப்பேர் 'கேட்'டுக்கு வெளியிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ரிசர்வ் பண்ணியவர்களோ, அல்லது தற்போது கியூவில் நின்று டிக்கட் வாங்க வந்தவர்களோ அல்ல. (ஏனென்றால் இப்போது கவுண்ட்டரில் நிற்பவர்களுக்கே பாதிப்பேர்க்கு டிக்கட் கிடைப்பது கஷ்ட்டம். இருந்தும் நம்பிக்கையோடு நிற்கின்றனர்). மற்றவர்கள் அலப்பறையைக்காண வந்தவர்கள்.
ஐந்தேமுக்காலுக்கு அனைத்து வாசல்களும் அகலத்திறந்து வைக்கப்பட, மேட்னி முடிந்து ஜனத்திரள் வெளியே வந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப்பரவசம். 'படம் அட்டகாசம்பா', 'அண்ணன் பின்னியெடுத்துட்டார்', 'போய்ப்பாருங்க, பர்ஸ்ட் கிளாஸா இருக்கு' என்று ஒவ்வொருவரின் கமெண்ட்டும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஒரு நாற்பதுபேர் அடங்கிய சிறு கூட்டம் 'அண்ணன் சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டவாறு தியேட்டரிலிருந்து சாலைக்குச்சென்றனர். எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அப்போது பாடம் பார்த்த ஒருவர், 'படம் ஆரம்பிச்சதும் ஏமாந்துறாதீங்க, நாங்கதான் ஏமாந்துட்டோம்' என்றதும் வெளியே நின்றவர் 'என்னய்யா சொல்றீங்க?' என்று கேட்க, 'ஆமாங்க படம் துவக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட்ல கொஞ்ச நேரம் ஓடும். ஏமாந்துடாதீங்க. டைட்டில்லேருந்துதான் கலர் ஆரம்பிக்கும்' என்று சொல்லி மாலைக்காட்சி பார்க்க நின்றவர்களை உஷார் படுத்தினார்.
அப்போது பட்டுப்புடவையும் காங்கிரஸ் பேட்ஜும் அணிந்த சுமார் பத்துப்பணிரெண்டு கல்லூரி மாணவிகள் பரபரப்பாக வந்து தியேட்டர் உள்ளே சென்றனர். யார் அவர்கள், ஏன் உள்ளே போனார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது. கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியதும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பெண் நின்று கொண்டு தட்டில் இனிப்பு வைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர். தியேட்டர் சிப்பந்தி டிக்கட் கிழிக்க, மாணவி அவருக்கு எதிரில் நின்று படம் பார்க்க வந்தவர்களை இன்முகத்தோடு 'வாங்க' என்றழைத்து இனிப்பு வழங்கிய காட்சி அருமையாக இருந்தது. அருகிலிருந்த ஒருவர், 'எல்லாம் நம்ம மன்ற ஏற்பாடு' என்றார்.
பார்த்து அதிசயித்துக்கொண்டே நாங்கள் ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு பாலகனிக்குச்செல்ல, அங்கு இரண்டு பெண்கள் நின்று வரவேற்று இனிப்பு வழங்கினர். தியேட்டர் உள்ளே ஒரே ஆரவார இரைச்சல். அரங்கு நிறைந்ததும் படம் துவங்கியது. ஒருவர் உஷார் படுத்தியது போல படம் முதலில் கருப்பு வெள்ளையில் துவங்கி, ரயில் பாடல் முழுக்க அப்படியே ஓடியது. டைட்டில் துவங்கியதும் கலருக்கு மாறியது. டி.எம்.எஸ்ஸின் ஆலாபனையிலேயே டைட்டில் முடிந்து 'இயக்கம் பி.மாதவன்' என்ற எழுத்து மறைந்ததும் “மேயாத மான்” என்று தலையைத்திருப்பினார் பாருங்க. அவ்வளவுதான் தியேட்டரே அதகளமாகிவிட்டது. கைதட்டல்கள் என்ன, விசில்கள் என்ன, ஆரவாங்கள் என்ன, தியேட்டர் முழுக்க காகிதங்கள் பறந்தன. அப்போ பிடிச்ச 'டெம்போ'தான். படம் முடிகிற வரைக்கும் நிற்கவில்லையே. அதுவும் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் இத்தகைய ஆரவாரம் ஏற்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
'மதன மாளிகையில்' பாடல் துவங்கியதும் இன்னொரு அதிசயம். மன்றத்தினர் ஆங்காங்கே நின்றுகொண்டு மல்லிகை வாடையை பம்ப் மூலம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க மல்லிகை வாடை கமகமத்தது. சூழ்நிலையே மனதை மயக்குவது போல இருந்தது.
படம் வருவதற்கு முன்பே 'அம்மம்மா தம்பியென்று' பாடல் பாப்புலராயிருந்தாலும் இவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. டேபிள் டென்னிஸ் பேட்டில் தாளம்போடத்துவங்கியதிலிருந்து பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் பறந்தது. பாடல் முடிந்து பையைக்கையில் எடுத்துக்கொண்டு, துண்டால் வாயைப்பொத்தியவாறு செல்லும்போது, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க கைதட்டலால் கூரை தகர்ந்தது.
அதுபோல 'மதன மாளிகை'யும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' பாடலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 'இன்குலாப்' பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிகர்களையும் பெருந்தலைவரின் தொண்டர்களையும் உணர்ச்சி வசப்படுத்த, அந்தப்பாடலிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல். ஏனென்றால் அந்தப்பாடல் அப்போதுதான் எல்லோரும் முதன்முதலில் கேட்டனர். படம் பார்க்கும் முன் ‘இன்குலாப்’ பாடலைப்பற்றி எதுவுமே ரசிகர்களுக்குத் தெரியாது. (படம் வந்த பின்னும், வானொலியில் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப் படுகிறது)
படம் முடிந்து வெளியே வரும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 'அண்ணனுக்கு இந்தப்படமும் வெற்றிதான்' என்று ரசிகர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுச்சென்றனர். மறுபுறம் காங்கிரஸ் இயக்கப்பெரியவர்கள் 'அவர் இறந்து போற மாதிரி முடிச்சது சரிதான். இல்லேன்னா தியாகத்தை எப்படிக் காட்ட முடியும்' என்று சர்டிபிகேட் வழங்கிப்பேசியவாறு சென்றனர்.
இதே மகிழ்ச்சியுடன் வீட்டில் போய்ப்படுத்தேன். வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. எப்படி வரும்..?.
Thanks to Mr Karthik
நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'
36-வது உதய தினம் (25.12.1976 - 25.12.2011)
1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.
1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்
உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).
அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.
1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.
ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).
தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.
இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.
வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).
பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).
கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.
அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.
டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.
Thanks to Mr Karthik
'அவன் ஒரு சரித்திரம்' - இனிய நினைவுகள்
36-வது ஆண்டு உதயம் (14.01.1977 - 14.01.2012)
1976 டிசம்பர் இறுதியில் ரோஜாவின் ராஜா வெளிவருவதற்கு முன்பாகவே, 1977 பொங்கல் வெளியீடாக 'அவன் ஒரு சரித்திரம்' வரப்போகிறது என்ற விவரம் மதிஒளி, திரைவானம், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்கள் மூலமாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து விட்ட விவரத்தை முன்பே சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற்போல அந்த இதழ்களும் அவன் ஒரு சரித்திரம் பற்றிய செய்திகளையும் பல்வேறு ஸ்டில்களையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தன. படத்தின் பெயரும் ஒரு அழகான பெயராக அமைந்ததில் ரசிகர்களுக்கு திருப்தி. பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, ‘பொங்கல் வெளியீடு பைலட், ஸ்ரீகிருஷ்ணா, அபிராமி,நூர்ஜகான் தியேட்டர்களில் அவன் ஒரு சரித்திரம்’ என்ற விளம்பரம் தினத்தந்தியில் வெளியானது. ரசிகர்களுக்கு ம்கா உற்சாகம். உற்சாகத்துக்குக் காரணம் அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டிருந்த புரசைவாக்கம் 'அபிராமி a/c' தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்புத்தான். ரிசர்வேஷன் ஆரம்பிக்கட்டும், அபிராமியில் புக் பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தோம்.
அபிராமி என்றால் இப்போதிருக்கும் அபிராமி மெகாமால் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அன்னை அபிராமி, சக்தி அபிராமி தியேட்டர்கள் கூட அப்போது கட்டப்படவில்லை. அந்த வளாகத்தில் இருந்தது அபிராமி என்ற பெரிய தியேட்டரும், பால அபிராமி என்ற மினி தியேட்டரும்தான். அதுவரையில் அபிராமியில் படம் பார்த்ததில்லை. பார்த்தவர்களெல்லாம் தியேட்டரைப்பற்றி ஆகா, ஓகோவென்று புகழ்ந்ததால், சரி முதன்முதலாக அண்ணனின் புதுப்படத்தை அங்கே பார்ப்போம். ஒற்றைக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கட்டுமென்று, ரிசர்வேஷனுக்காகக் காத்திருந்தால்......
ரிசர்வேஷன் அன்று தினத்தந்தியில் வந்த விளம்பரத்தில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அபிராமி என்ற பெயர் அகற்றப்பட்டு அசோக் தியேட்டர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஷாக். 'நேரு ஸ்டேடியத்துக்கு எதிரில் இருக்கும் அசோக் தியேட்ட்ரா?. அது பராசக்தி வெளியான பழைய தியேட்டர் அல்லவா?. அதில் சமீப காலமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் வெளியாவதில்லையே. பக்கத்திலுள்ள சௌகார்பேட்டையிலிருக்கும் மார்வாரிகளுக்காகவும், பெரியமேடு பகுதியிலிருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காகவும் அங்கு வாரம் ஒரு இந்திப்படம்தானே போடுகிறார்கள்?. அந்த தியேட்டரை ஏன் புக் பண்ணியிருக்கிறார்கள்?. ஏற்கெனவே அந்த ஏரியாவில் ராக்ஸியில் ரோஜாவின் ராஜா ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரியில் குடியரசு தினத்தன்று தீபம் வெளியாகவிருக்கிறது. அட்லீஸ்ட் மேகலா அல்லது உமாவில் வெளியிட்டிருக்கலாமே. என்னய்யா இப்படி கவுத்துட்டாங்க?' என்று எல்லோரும் உற்சாகம் குன்றிப்போனார்கள்.
சரி, அபிராமி கனவுதான் போச்சு, பைலட் தியேட்டரிலாவது புக் பண்ணுவோம் என்று ஓரிருவர் யோசனை சொன்னதை மற்றவர்கள் மறுத்தனர். 'விடுங்கப்பா, நம்ம ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸாகுது அப்புறம் என்ன கிருஷ்ணாவிலேயே புக் பண்ணுவோம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்குப்போனால் எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் கூடி நின்றது. பிராட்வே போல டல்லடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கூடி நின்றனர். அங்கேயும் ரசிகர்களிடையே அபிராமி தியேட்டர் மாற்றப்பட்ட பிரச்சினையே ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போன சில நிமிடங்களிலேயே கேட் திறக்கப்பட்டு வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே போலீஸ் வந்துவிட்டிருந்தது. வரிசையில் நின்று திரும்பிப்பார்த்தால் எங்களுக்குப்பின்னால் கியூ வளைந்து நெளிந்து அனுமார் வால் போல நீண்டிருந்தது. எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.
கியூவில் நிற்கும்போதே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'அண்ணனுக்கு இதில் க்லெக்டர் ரோல். நல்லா பண்ணியிருக்காராம். ஸ்டில்ஸெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கலக்கலாகவே இருக்கிறது' என்று ரசிகர்களுக்குள் கருத்துப்பறிமாற்றங்கள். இதற்கு முன் மற்றவர்கள் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த நாங்கள், இப்படம் வந்த காலகட்டத்தில் நாங்களே படங்களைப்பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.
ஸ்ரீகிருஷ்ணாவில் எப்போதுமே ரிசர்வேஷனுக்கு, சாதாரணமாக காட்சி நேரத்தில் குறைந்த கட்டணத்துக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்ட்டரையே பயன்படுத்துவார்கள். அங்குதான் நீண்ட கியூ நிற்க இடமிருக்கும் என்பதால். அன்றைக்கும் அப்படியே. காலை ஒன்பது மணிக்கு புக்கிங் துவங்கியது. பிளாக் டிக்கட்டை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வேஷன் செய்யும்போது ஒரு ஆளுக்கு ஐந்து டிக்கட்டுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோருமே கியூவில் நின்றோம். வரிசை மளமளவென்று முன்னேறியது. எங்களுக்கு பயம். முதல்நாள் டிக்கட் கிடைக்காதோ என்று. கவுண்ட்டர் பக்கத்திலேயே ரிசர்வேஷன் சார்ட் வைத்து, காட்சி நிறைய நிறைய ‘full' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கவுண்ட்டரை நெருங்கும்போது மேட்னி full என்று ஒட்டினார்கள். எங்களுக்கு அச்சம் எழுந்தது. நல்லவேளை நாங்கள் வாங்கும்போது மாலைக்காட்சிக்கு டிக்கட் நிறையும் தறுவாயில் இருந்தது. நாங்கள் வாங்கியபின் அடுத்த ஆள் வாங்கியிருப்பார். மாலைக்காட்சியும் full என்று ஒட்டினார்கள். எங்களுக்கோ பிடிபடாத சந்தோஷம். எதையோ சாதித்துவிட்டது போலிருந்தது.
டிக்கட்தான் வாங்கிவிட்டோமே என்று வீட்டுக்குப்போய்விட்டால் எப்படி?. கவுண்ட்டர் அருகில் நிறக் விடாமல் போலீஸ் விரட்டியதால் டிக்கட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் சற்று தூரத்தில் நின்று, மீண்டும் படத்தைப்பற்றி அதுவரை வந்திருக்கும் செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். இருந்தாலும் எங்கள் கண் முழுக்க 'சார்ட்'டில்தான் இருந்தது. வரிசை நகர நகர 'full' ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டே வந்தனர். நாங்கள் புறப்படும் முன்னரே ஸ்ரீகிருஷ்ணாவில் பதினான்கு காட்சிகள் நிறைந்தன. திருப்தியாக வீடு வந்தோம்.
அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).
பொங்கல் தினமும் வந்தது. மூன்று நாட்கள் கல்லூரி விடுமுறை. (இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிட்டோமாக்கும்). பொங்கல் கொண்டாட்டம் அதுபாட்டுக்கு ஆட்டோமாட்டிக்காக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ, 'ராஜா' படத்தில் கேரள ஆற்றுப்பாலத்தின் அருகில் உட்கார்ந்து நடிகர்திலகம் ஜெயலலிதாவிடம் சொல்வது போல, 'எப்படா மாலைவரும், மாலைவரும்'னு காத்துக்கிட்டிருந்தோம். மதிய உணவு முடிந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. மூணு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பொங்கல் தினமல்லவா?. பிராட்வேயில் 'ரோஜாவின் ராஜா' FULL. பக்கத்தில் பிரபாத்திலும் ஏதோ ஒரு படம் FULL. ஸ்ரீகிருஷ்ணாவை அடைந்தபோது மணி மூணரை இருக்கும். வெளியில் மேட்னி ‘HOUSE FULL’ போர்டு பளிச்சென்று தொங்கியது. (இடைவேளைவரை போர்டு தொங்கும். பின்னர் எடுத்து விடுவார்கள்). மெயின்கேட்டுக்கு வெளியே அந்த நேரத்திலும் அடுத்த காட்சிக்காக திரளான கூட்டம். எங்களுக்கு ஏதோ 76-இன் தேக்க நிலை மாறி, மீண்டும் 72, 73 திரும்பிவிட்டது போலிருந்தது. நல்ல அறிகுறியாகத்தெரிந்தது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியிலும் அதுவே பேச்சாக இருந்தது.
தியேட்டர் அலங்காரங்களைப் பார்த்தோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், ராஜபார்ட் ரங்கதுரைக்கு செய்யப்பட்டிருந்தது போல அதே காங்கிரஸ் கொடிகள், பேனர்கள். கட் அவுட்களுக்கு மூவண்ண நிறத்தில் மாலைகள் என கோலாகலமாக இருந்தது. ஆனால் 73 டிசம்பருக்கும் 77 ஜனவரிக்கும் அரசியலில் பெரிய மாற்றம். அப்போது (73ல்) பெருந்தலைவர் உயிருடன் இருந்தார். ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் என்ற துடிப்போடு செயல்பட்டு வந்தது. 1975 அக்டோபரில் தலைவர் மறைந்ததும், நிலைமை மாறிப்போனது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப்பிரிந்து, ஒரு அணி மகாதேவன்பிள்ளை தலைமையில் நடிகர்திலகம், மூப்பனார், மற்றும் சிவாஜி மன்றத்தினர் அனைவரும் இ.காங்கிரஸில் இணைந்தோம். இன்னொரு பிரிவினர் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் தலைமையில், அப்போது உதயமாகியிருந்த ஜனதா கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்தது. நாடெங்கும் இந்திராவின் 'இருபது அம்சத்திட்டம்' பற்றிய பிரச்சாரம் வலுப்பெற்று வந்தது. நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த எமர்ஜென்ஸி, வடநாட்டில் எதிர்ப்பையும், தென்னாட்டில் வரவேற்பையும் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது.
வடசென்னை ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரை அலங்கரித்திருந்தனர். ரசிகர்மன்றங்களின் பெரிய பெரிய பேனர்களும் சிறப்புத்தட்டிகளும், நாலாபுறமும் நடிகர்திலகத்தின் பல்வேறு வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட ராட்சத ஸ்டார்களுமாக தியேட்டரே களைகட்டியிருந்தது. மிண்ட் பகுதியைச்சேர்ந்த 'கர்ணன் கணேசன் கலைமன்றத்தினர்' மூன்று அடுக்கு பந்தல் அமைத்திருக்க, ராயபுரம் 'மாடிப்பூங்கா' ரசிகர்மன்றத்தினர் நடிகர்திலகத்தின் சாதனைகளை விளக்கி, பல பக்கங்கள் அடங்கிய சிறப்புமலர் வெளியிட்டிருந்தனர் (விலை 1 ரூபாய்). இவைபோக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதி ரசிகர்மன்றத்தினரும் தனித்தனி நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தனர்.
வழக்கமாக கிரௌனில்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணாவில் நடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மூத்த ரசிகர் ஒருவர் சொன்ன காரணம், 'ஒருகாலத்துல பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, புதிய பறவைன்னு கிருஷ்ணா நம்ம கோட்டையாகத்தான் இருந்தது. இடையில் நாம கிரௌன் பக்கம் போனதால் 'அவங்க' பிடிச்சிக்கிட்டாங்க. இப்போ மீண்டும் நாம பிடிக்கணும்னுதான் இந்த ஏற்பாடுகள்'’ அப்படீன்னார். யோசித்ததில் அவர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. (இடைப்பட்ட காலத்தில் One in Thousand, Resided Temple, Slavery Girl, Our Country, Rickshawala என்று ‘அவர்’தான் பிடித்து வைத்திருந்தார்).
நீண்ட இடைவெளிக்குப்பின் காஞ்சனா நடித்திருக்கிறார், அத்துடன் மஞ்சுளா எட்டாவது படமாக ஜோடியாக நடித்திருக்கிறார் (இடையில் ஒன்பதாவது படமாக சத்யம் படத்தில் ஜோடியில்லாமலும் நடித்தார்). இரண்டு கதாநாயகிகள் என்பதால் யார் ஜோடி, அல்லது இருவருமே ஜோடியா என்பது போன்ற கேள்விகள் அங்கே உலா வந்தன. படம் வருவதற்கு முன்பே நான்கு பாடல்கள் வெளியாகி பிரபலமாகியிருந்தன. அவற்றில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் பயங்கர HIT . அடுத்து 'என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்' மற்றும் 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடல்களும் பிரபலமடைந்திருந்தன. 'நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்' பாடல் அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
'அது என்னப்பா, அந்தப்பாடலை இப்படி துவக்கியிருக்கார்?' என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர், 'தெரியலையா, அவருக்காக வாலி 'நாளை நமதே' அப்படீன்னு பாட்டு எழுதியிருக்காரே அதுக்குப் போட்டியா இவருக்காக கண்ணதாசன் 'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்' அப்படீன்னு எழுதியிருக்கார்'னு சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அந்தப்பாடல் காட்சி படத்தில் எப்படியிருக்குமென்று பார்க்க எல்லோருக்கும் ஆவலாக இருந்தது.
ஏற்கெனவே இடைவேளை முடிந்து, படம் துவங்கியபின் மெயின் கேட் திறந்துவிடப்பட்டு, காம்பவுண்டுக்குள்தான் இவ்வளவு பேச்சுக்களும் நடந்து வந்தன. கரண்ட் புக்கிங் கவுண்ட்டர்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு போலீஸ் உதவியுடன் வரிசை நீண்டிருந்தது. ரொம்ப நாளைக்குப்பிறகு கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
மேட்னிஷோ முடிந்து மக்கள் வெளியே வரத்துவங்கினர். அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு கூட்டம் ஒதுங்கிக்கொண்டதுடன், வந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்டனர். பொதுமக்கள் அனைவருமே 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லியவண்ணம் வெளியே செல்ல, படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே நின்றவர்களோடு கலந்து நின்று படம் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள். ஒருவர் 'மஞ்சுளாதான் ஜோடி, காஞ்சனா ஜோடியில்லை' என்றார். இன்னொருவர், 'என்மனது ஒன்றுதான் பாட்டு இல்லேப்பா. அதுக்கு பதிலா அம்மானை என்ற பாட்டை சேர்த்திருக்காங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு' என்றார். இன்னும் சிலர், 'பெருந்தலைவருக்கு மாலை போட்டுவிட்டு தலைவர் ஊர்வலம் போற பாட்டு சூப்பர்பா' என்றார். தியேட்டருக்குள் பதினைந்து நிமிடங்களில் பாப்கார்ன் குப்பைகள் வாரப்பட்டு, மாலைக்காட்சிக்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை காங்கிரஸ் மகளிர் அணியினர் வாசலில் நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள்.
உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத்துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.
டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.
அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......
வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.
படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். அதற்குப்பின் ‘அவரது’ நான்கு படங்கள் வெளிவந்தன. அனைத்தும் மகாராணியிலேயே. 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது. பக்கத்தில் கிரௌன் திரையரங்கில் 'தீபம்' வெளியாகி பட்டையைக்கிளப்பியபோதும், அது இப்படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கவில்லை.
நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்.......
Thanks to Mr Karthik
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)
இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.
நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.
சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).
ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).
ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.
கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.
குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.
பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.
இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.