மதுரை நகரின் திரையரங்குகள் பற்றிய திரையரங்கு உரிமையாளர்களின் நினைவலைகளின் மூலம் அவர்களும் எந்த அளவிற்கு அவற்றுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. வினோத் சார் இது போன்ற மேலும் பல நினைவலைகளை மீட்டும் தகவல்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.
Printable View
மதுரை நகரின் திரையரங்குகள் பற்றிய திரையரங்கு உரிமையாளர்களின் நினைவலைகளின் மூலம் அவர்களும் எந்த அளவிற்கு அவற்றுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. வினோத் சார் இது போன்ற மேலும் பல நினைவலைகளை மீட்டும் தகவல்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.
பொதுவாக நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு டூரிங் டாக்கீஸ் எனப்படும் கீற்றுக் கொட்டகை திரையரங்குகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Touring Talkies or Nomadic Cinema என வெளிநாடுகளில் அறியப்படும் தற்காலிக திரையரங்குகள், குறைந்த காலங்களுக்கு அல்லது அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய விதிகளுடன் இயங்கும் வகையில் அனுமதி வழங்கபடும். இவற்றில் அலுவலகம் மற்றும் திரையீட்டுக் கருவிகளுக்கு என குறைந்த அளவிலான அறைகள் மட்டுமே கட்டப்படும். மற்ற படி பார்வையாளர்களுக்கு மணல் தரை மற்றும் இருக்கைகள் என இரு வகையில் அனுமதியளிக்கப்படும். மூங்கில் மற்றும் பனை அல்லது தென்னை கீற்றுக்களால் வேயப்பட்ட கூரைகள், அவற்றிற்கு சாரங்கள், மற்றும் வெண்திரைக்கான பகுதி இவையெல்லாம் தற்காலிகமான அடிப்படையில் அமைக்கப்படும்.
இவையல்லாமல் செமி-பெர்மனென்ட் எனப்படும் வகையிலான திரையரங்குகளும் உண்டு.
காலப்போக்கில் சினிமா அனுபவங்கள் திரையரங்குகளின் தன்மை இவையெல்லாம் நவீன மயமாகி விட்டன.
என்றாலும் அந்நாளைய ரசிகர்கள் அனுபவித்த அந்த இனிமையான உணர்வுகள் இந்நாளில் கிடைப்பதில்லை என்பது உண்மையே.
ராகவ் ஜி,
அருமையாக சொன்னீர்கள்
இன்று சத்தம் போட்டு சிரித்து கூட படம் பார்க்க முடியாது. அன்று அரட்டை அடித்து கொண்டும், சிரித்து மகிழ்ந்தும் கீத்து கொட்டகையில் பார்க்கும் அனுபவமே அழகு
நான் நிறைய கீற்று கொட்டகைகளில் படம் பார்த்ததில்லை இருந்தாலும் சில டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கும் அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி
courtesy - thinnai - net
கூடாரம் என்று விட்டல் ராவ் குறிப்பிடுவது ஆரம்ப கால டூரிங் டாக்கீஸ் என்று ஊருக்கு ஊர் பயணப்படும் தாற்காலிக சினிமா கொட்டகைகளைப் பற்றியதாகும். அந்தக் கூடாரங்களில் சர்க்கஸ் கம்பெனிகளும் வந்தன. அக்காலச் சூழலை விட்டல் ராவ் திரும்பக் கொணர்கிறார்,. ஒரே ப்ரொஜெக்டர் தான் இருக்குமாதலால் ஒவ்வொரு ரீலையும் மாற்றும் சில நிமிட இடைவெளியில் சோடா கலர், பாட்டு புத்தகங்கள் விற்பவர்களின் கூச்சல் எழும். திரையில் படம் சரியாக விழுகிறதா என்று பார்க்க ப்ரொஜெக்டர் அறையின் துவாரத்திலிருந்த் ஆபரேட்டர் பார்த்தால் உடனே “டே ஒழுங்கா ஓட்டுடா” என்றும் கூச்சல் எழுமாம். இது என் அனுபவத்தில் இல்லாத புது விஷயம். பின்னால் நாற்காலியில் அபூர்வமாக வந்து அமரும் உயர் வகுப்பு பெண்களை இடைவேளைகளில் தரையில் இருக்கும் சிலர் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருப்பார்களாம். இன்னும் சிலர் வெற்றிலை மென்று தரை மணலில் துப்பி மூடிவிடுவார்கள். என்று இப்படிப் பட்ட காட்சிகள்..
பசுபு லேடி கண்ணாம்பா என்னும் அக்கால நக்ஷத்திர நடிகை பற்றி எழுதும்போது கண்ணாம்பா தமிழறியாத காரணத்தால் கண்ணகியோ, ஹரிச்சந்திராவோ எதானாலும் அந்த நீண்ட வசனங்களையும் கூட தெலுங்கில் எழுதி மனப்பாடம் செய்து தான் தமிழில் பேசுவாராம். பேசுவாரா, இல்லை கனல் தெறிக்குமா, கதறுவாரா, ஒன்றாம் மாதம் , இரண்டாம் மாதம் என்று லோகிதாசனைப் பெற்ற வேதனையைப் பட்டியலிட்டு? அப்படியும் கூட நமக்கு அது தெரியாது தமிழாக ஒலித்தது பெரிய விஷயம் தான். இப்போது விட்டல் ராவ் சொல்லித் தான் இந்த விஷயம் எனக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அக்காலத்தில் தான் டப்பிங் வசதிகள் கிடையாதே. அப்படியும் அவர் அக்கால நக்ஷத்திர நடிகையாக உயர முடிந்திருக்கிறது. எம்.ஆர். ராதா முதலில் ஜகந்நாதய்யர் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் தான் சேர்ந்தாராம். இக்கம்பெனியின் 1924- வருட நாடகம் “கதரின் வெற்றி” மிகப்புகழ் பெற்றது என்றும் அந்த நாடகத்தை, ராஜாஜி, மகாத்மா காந்தி, கஸ்தூர்பாய், தேவதாஸ் காந்தி, போன்றோரின் பாராட்டைப் பெற்றதாகவும் எழுதுகிறார் விட்டல் ராவ். காந்தியும் ராஜாஜியும் நாடகம் பார்த்தார்கள், பாராட்டினார்கள் என்பது புதிய கேள்விப்பட்டிராத செய்தி. எம்.ஆர். ராதாவின் கோபத்துக்கும் முரட்டு சுபாவத்துக்கும் ஆளானவர்கள் எம்.ஜி.ஆருக்கும் முன்னர் சிலர் இருந்தனராம். கிட்டு என்ற சக நடிகர் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டார் என்றும், தனக்கு பதிலாக கே.பி.காமாட்சி என்பவரை சினிமாவில் ஒப்பந்தம் செய்ததற்கு என்.எஸ்.கேயை கொல்லப்போகிறேன் என்று கிளம்பியவரை என்.எஸ்.கே போய் சமாதானம் செய்யவேண்டி வந்தது என்றும் பல இம்மாதிரி சம்பவங்கள் விட்டல் ராவிடமிருந்து தெரிகின்றன. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரம்பித்தது 1934-ல். இது புரிகிறது. ஆனால் நமக்குத் தெரியாத, ஆச்சரியப்படவைக்கும் தகவல், முதல் மலையாளப் படமே சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிக்கப்பட்டது 1935-ல் என்ற தகவல் விட்டல் ராவிடமிருந்து வருகிறது. மாடர்ன் தியேட்டர்ஸை டி.ஆர் சுந்தரம் நிறுவியதன் காரணமாக, சேலமே சினிமா நக்ஷத்திரங்களும், நாடக நடிகர்களும் நிறைந்த, அவர்கள் போவதும் வருவதுமான காட்சிகளும், விருந்தினர் மாளிகைகளும், ஹோட்டல்களும், இப்படியான ஒரு சலசலப்பும் பரபரப்பும் நிறைந்த நகரமாக உரு மாறியிருந்த காலம். டி.ஆர். சுந்தரம், மிகுந்த கட்டுப்பாடு நிறைந்த, எந்த பெரிய நடிகரையும் அதிகாரம் செய்து வேலை வாங்குபவர் என்ற புகழோடு, வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து, வெள்ளைத்தோலும் நீலக்கண்களும் கொண்ட புத்திரர்களும் கொண்டவர் என்றால், சேலத்தில் எல்லோரும் அது பற்றித் தானே பேசுவார்கள்! அதிலும் டி.ஆர். சுந்தரத்துக்கு சினிமா, நாடகம் என்று வாழ்க்கையின் திசை திரும்பியதற்கு அவரது மனைவிதான் காரணம் என்றால். ஒரு காலகட்டத்தின் தமிழ் நாடக சினிமா வளர்ச்சியில் க்ளாடிஸ் என்னும் அந்த பெண்ணிற்கும் பங்கு உண்டு என்றால்….. ஆனால் 1963-ல் சுந்தரத்தின் மரணத்தோடு அந்தக் கதை முடிந்தது. க்ளாடிஸ் அதற்கு முன்னே பிரிந்து சென்று விட்டாள்.
விட்டல் ராவ் சொல்லும் சில துணுக்குக் காட்சிகள்: அக்கால படங்களிலிருந்து. இது மாடர்ன் தியேட்டருக்கு மாத்திரமான சிறப்பு அல்ல. ஏதோ ஒரு ஹைதர் காலத்துக் கதை. என் டி ராமராவும் பாலாஜியும் கத்திச் சண்டை போடுவார்கள். க்ளோஸ் அப் காட்சி வரும். ராமராவ் ராஜா உடையில் வாளும் மோதிரங்களும். அத்தோடு சமீபத்தில் வாங்கிய ரிஸ்ட் வாட்சும் ஒளி வீசும். இன்னொரு காட்சியில் வீரர்கள் தப்பிச் செல்ல வசதியாக சுவற்றில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்விச்சை அணைக்க இருள் சூழும்.
courtesy -net
முதலில் நினைவுக்கு வருவது சிறு வயதில் சினிமா பார்த்த அனுபவங்கள். இன்றைக்கு மல்ட்டி ப்ளெக்ஸ்களிலும், நவீன தியேட்டர்களிலும் ஏ.சி.யில் படம் பார்*க்க முடிகிறது. காலண்டரில் பார்க்கும் மகாவிஷ்ணு போல, மகாபலிபுரம் ஸ்தலசயனப் பெருமாள் போல படுத்த வாக்கில் படம் பார்த்திருக்கிறீர்களா? ; நான் பார்த்திருக்கிறேன்.
அந்நாளில் டூரிங் டாக்கீஸ் என்கிற ஒன்று இருந்தது. வெட்டவெளியில் கூரை போட்டு, கம்புகள் நட்டு எல்லை அமைத்திருப்பார்கள். சைடில் தடுப்பு எதுவும் கிடையாது. எனவே மாலை ஷோவும், இரவு ஷோவும் மட்டுமே நடைபெறும்.
இரண்டே வகுப்புகள்தான். முதல் வகுப்புக்கு மடக்கு சேர் போடுவார்கள். மற்றவர்கள் மண் தரையில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும். சிலர் மண்ணைக் குவித்து மேடாக்கி, ராவண சபையில் வாலில் அமர்ந்த அனுமன் போல உயரமாக அமர்வார்கள். சிலர் கிராமத்துப் பாட்டிகள் மாதிரி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் வயதில் நான் முன்பே சொன்னதுபோல மகாவிஷ்ணு போஸில் படுத்தபடி மக்கள் திலகத்தின் ‘நாடோடி மன்னனை’ பார்த்தேன். ஒரே ஒரு புரொஜக்டரில்தான் படம் ஓட்ட வேண்டும் என்கிற காரணத்தால் இரண்டு முறை ரீல் மாற்றுவார்கள். ஆகவே இடைவேளைக்கு முன் பத்து நிமிடங்கள், இடைவேளைக்குப் பின் பத்து நிமிடங்கள் ஆக, மூன்று இடைவேளைகள் எல்லாப் படத்துக்கும் உண்டு. இஷ்டம்போல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி இயற்கைக் காற்றில் படம் பார்*த்த அந்த சுகம், இப்போது ஏ.சி. *தியேட்டர்களில் எனக்குக் கிடைப்பதில்லை.
சினிமா அனுபவங்களைச் சொல்லும்போது தியேட்டரில் நான் பல்பு வாங்கிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. (மத்தவங்க பல்பு வாங்கினதைப் படிக்கிறதுன்னாலே தனி குஷிதானே... படியுங்க).
நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நாங்கள் காரைக்குடியில் இருந்தோம். சிறு வயதிலேயே அப்பாவை இழந்து அண்ணனின் ஆதரவில் படித்தவன் நான். அவருக்கு அடிக்கடி பணி மாறுதல் ஆகிற வேலை என்பதால் ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊருக்கு குடும்பத்துடன் இடம் பெயர வேண்டிய சூழல் இருந்தது. அதனால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். சில நண்பர்கள் காலப்போக்கில் தொடர்பு விட்டும் போனார்கள்.
என்ன சொல்ல வந்தேன்? சினிமாவுக்குப் போனது! என் அண்ணன், நான், அம்மா, சித்தி நால்வருமாக காரைக்குடி அருணாசலா தியேட்டரில் (இப்போது வேறு ஏதோ பெயர் என்று சொன்னார்கள்) வசந்தமாளிகை படம் பார்க்கப் போயிருருந்தோம். சிவாஜி சாரின் நடிப்பை நான் மிகவும் ரசித்த படங்களுள் அதுவும் ஒன்று.
courtesy - net
அந்த காலத்தில் டூரிங் டாக்கீஸ் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் . கழுத்தில் தங்க செயின் ,மோதிரம், உடை - ஜீன்ஸ் பேன்ட் ,டி ஷர்ட் தரை டிக்கெட்டில் மணலில் உட்கார்ந்து தான் பார்ப்பேன் . டூரிங் டாக்கீஸ் என்றாலே மணலில் திரை முன்னால் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பது தான் சுகம் . அப்படி ஒரு முன்னூறு தடவை கல்லூரி நாட்களில் , அதன் பின் கூட பல பழைய படங்கள் தத்தனேரி மாருதி , விளாங்குடி ரத்னா டூரிங் டாக்கீஸ் ரெகுலர் தரை டிக்கெட் கஸ்டமர் நான் .
அப்படி விளாங்குடி ரத்னா தியேட்டர் ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படம் பார்க்க போயிருந்தேன் . இந்த படம் ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான்.பழைய படங்களில் வருகிற துணை நடிகர்கள் சாதாரணமாக மக்களுக்கு தெரியாத நடிகர்களை கூடயார் எவர் என நன்கு நான் தெரிந்து வைத்திருப்பேன் . உதாரணமாக பூபதி நந்தாராம் அந்த அலிபாபா படத்தில் ஒரு துணை வில்லன் . இவர் பின்னால் 'லாரி டிரைவர்' என்ற ஆனந்தன் நடித்த படத்தில் கூட துணை வில்லன் . அப்போது நான் விளாங்குடி தியேட்டர் போயிருந்த போது 'இவர் உயிருடன் இல்லை . இவர் மகன் சுரேந்தர் என்பவர் 'சுதாகர் ' போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்' என்பது வரை எனக்கு தெரியும் .
தரையில் அமர்ந்து படம் பார்த்துகொண்டிருந்த போது அப்போது அறுபது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் அந்த படத்தின் காட்சிகள் பற்றி விளக்க ஆரம்பித்தார் . சாதாரணமா ' சும்மா பேசாம படத்தை பாரு பெருசு . நாங்க பார்த்த படம் தான் . எங்களுக்கே கதை சொல்றியா போய்யா ' என்று தான் மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள் . ஆனால் நான் அந்த பெரியவரை கனப்படுத்த விரும்பி விட்டேன் . தங்கவேலு வரும்போது பாமரன் போல ' இவன் நம்பியாரா ' என்பேன் . அவர் குஷியாகி விட்டார் . 'இல்லே . இவன் சிரிப்பு நடிகர் தங்கவேலு ' என்று எனக்கு அறிவுறுத்தினார் . வீரப்பாவை வரும்போது ' இந்த ஆள் யார் ' என்பேன் . அவர் புளகாங்கிதமாக ' இவனை தெரியாதா . வில்லன் வீரப்பா . நீ வஞ்சிகோட்டை வாலிபன் பார்த்ததில்லையா ? நாடோடி மன்னன் பார்த்ததில்லையா ?' மடையனை பார்ப்பது போல என்னை கேட்டார் .வீரப்பாவுக்கும் எம்ஜியாருக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும் செயற்கையாய் பதட்டத்துடன் ' எம்ஜியார் செத்துடுவாரா ?அயோக்கியன் எம்ஜியாரை கத்தியால குத்திடுவானா ' என அவரிடம் என் சந்தேகத்தை கேட்டுக்கொண்டே தான் இருந்தேன் . அவர் ' எம்ஜியார் எப்பவுமே சாக மாட்டார் . கடைசியா வில்லனை கொன்று விடுவார் . கவலைபடாதே . பேசாம படத்தை பார் ' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கதையை முன்னதாக சொல்லிகொண்டிருந்தார் . பானுமதியை 'யார் ஜெயலலிதாவா இது ?' -நான் அவரை வினவினேன் . அவர் ரொம்ப குஷியாகி எனக்கு பல பாலபாடங்கள் சொல்ல ஆரம்பித்தார் . சக்ரபாணி எம்ஜியாரின் கூட பிறந்த அண்ணன் என அவர் சொன்ன போது நான் 'அப்படியா கூட பிறந்த அண்ணனே படத்திலும் அண்ணனா வர்றானே !' என அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு கதை சொன்ன பெரியவருக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்து விட்டேன் . என் கூட வந்த நண்பர்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை . நான் ' காரியத்தை கெடுத்து விடாதீர்கள் . அவருக்கு இந்த சந்தோசம் தருவது என் கடமை ' என்று எச்சரிக்க வேண்டியிருந்தது .
கடைசி சண்டை போது ' எம்ஜியார் செத்துடுவாரா ' என்று மீண்டும் பதற ஆரம்பித்தேன் . ' சாக மாட்டார் . இப்ப வேடிக்கையை பாரு . வீரப்பா ஆள் காலி ' பெரியவர் தேறுதல் சொன்னார் .
படம் முடிந்தவுடன் விளக்கை போட்டவுடன் பெருமையாக என்னை பார்த்தார் . அவர் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தயாரித்து இயக்கியவர் போல பெருமிதமாக சொன்னார் " நான் இல்லையின்னா உனக்கு இன்னைக்கு இந்த படம் தலையும் புரிந்திருக்காது . வால் கூட தெரிஞ்சிருக்காது ."
வெளியே வரும்போது சொன்னார் " பழைய படம் நிறைய பார்த்தேன்னா புது படங்களே பார்க்க மாட்ட "
அதற்கு மறு நாள் சென்னை சென்றேன் . அமெரிக்கன் சென்டெரில் Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் இரண்டாம் நாள் பார்க்க கிடைத்தது . அந்த படத்தையும் என்னால் இன்று வரை மறக்க முடியாது . ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து The Sugarland Expressபடத்தை பார்த்தார் என்பதால்.
அவர் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு இருநூறு தடவையாவது பாடியிருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரிமரத்தடி ,வைகையாற்று மணல் , பூங்காக்கள்இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை ஒரு ஆயிரம் தடவை பாடியுள்ளேன் . இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது என நண்பர்களும் உறவினர்களும் இன்று கூட சொல்கிறார்கள் .
பி பி ஸ்ரீநிவாஸ்பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favourite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போதுபுன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார். படம் பார்க்கும்போது அவர் என்னிடம் அதிகம் பேசவில்லை.The Sugarland Express படத்தை பார்ப்பதில் இருவருமே ஒன்றி போய்விட்டோம் என்பது தான் உண்மை .
.......
டூரிங் டாக்கீஸ்: "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை' என்ற பக்திப் பாடல் எங்காவது ஒலிக்கக் கேட்டால் இன்றளவும் நம் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கீஸ்தான்.
சிறு நகரங்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத, அதிகக் கட்டணத்தில் படம் பார்க்க மனமில்லாத மக்களுக்கு டூரிங் டாக்கீஸ்தான் சிறந்த பொழுதுபோக்குக் கூடமாகும். தரை, பெஞ்சு, சேர் என மூவகைகள் மட்டுமே திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும். டூரிங் டாக்கீஸில் சேர் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது அந்த காலகட்டத்தில் கெüரவமாகக் கருதப்பட்டது.
மணற்பாங்கான தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே அலாதியானது. அப்போதெல்லாம் அறியாமை காரணமாக திரைக்கு அருகே அமர்ந்து படம் பார்ப்பதை சிலர் விரும்புவர். அதற்காக முன்னதாகவே டிக்கெட் வாங்கிச் சென்று திரைக்கு அருகில் மணலைத் திரட்டி மேடாக்கி அமர்ந்து படம் பார்ப்பதுண்டு.
நடந்தும், சைக்கிளிலும் வந்து படம் பார்த்துச் செல்லும் மக்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க வருவது அப்போது அந்தஸ்து மிக்கதாக எண்ணப்பட்டது. பட இடைவேளையின் போது மட்டுமின்றி எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும். எத்தனை உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் எல்லோரும் விரும்பி வாங்குவது "கல்கோனா' எனப்படும் உருண்டை மிட்டாய்தான்.
டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயை படம் தொடங்கும் போது வாங்கி வாயில் போட்டால் முடியும் வரையில் அதன் சுவை இருந்து கொண்டே இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்று இல்லாமற் போனதோ அன்றே இந்த கல்கோனாவும் காணாமற்போய்விட்டது. ஆனால் இன்று வரையில் டூரிங் டாக்கீஸ் என்றால் கல்கோனாவும் கல்கோனா என்றால் டூரிங் டாக்கீசும் நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
courtesy - net
திருமணத்திற்கு பின்னால் அம்மா விருத்தாசலத்திற்கு வந்துவிட்டாள். படம் பார்க்கும் பழக்கம் மட்டும் அவள் கூட வந்த சீதனமாய் தங்கிப்போனது. அது தழைத்து எங்களையும் பதம் பார்க்க ஆரம்பித்தது.அண்ணனும் நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.அவரின் தத்துவ பாடல் வரிகளும் விஷேசமான அங்க அசைவுகள், அவர் எதிராளியை மடக்கிப்பிடிக்கும் லாவகம் எல்லாம் எங்களைக் கட்டியிழுத்தன. எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே இரண்டாம் ஆட்டமாக ஸ்ரீராஜராஜேஸ்வரி டாக்கீசில் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தார்கள்.அத்தனை இரண்டாம் ஆட்டத்திற்கும் ஆஜராகிவிடுவோம். இருட்டிலும் கூட்டம் பகல் காட்சியை போல திமிரும்.ஜன நெரிசல் நெக்கித்தள்ளும். விருத்தாசத்திலுள்ள பழைய டாக்கீஸ்களில் இன்றைக்கும் உயிரோடுள்ள ஒரே டாக்கீஸ் அதுதான்.
ஊரில் சந்தோஷ் குமார் பேலஸ்தான் பெரிய தியேட்டர்.அதன் உரிமையாளரின் வீடு ராஜேஸ்வரி டாக்கீஸுக்குப் பின்னால் இருக்கிறது. ஜங்ஷன் ரோட்டில் தியேட்டர் வைத்திருக்கும் உரிமையாளரின் வீடு மணிமுத்தாற்றின் மறுகறையில் இருந்தது.வீடென்றால் மாளிகை.முகவாசல் ஒரு தெருவில்லும் புறவாசல் இன்னொரு தெருவுக்குமாய் நீண்டு நிற்கும். அவரின் பேலஸிலும் இந்தப் பந்தா பவிசுகள் தென்பட்டன. வடதமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெயர் இதற்குண்டு. எனக்கு தெரிந்து எங்களூரில் தியேட்டருக்கு முன்பாக பெரிய நீருற்று வைத்த ஒரே தியேட்டர் சந்தோஷ்குமார்தான். அதற்கு பின் பெரியார் நகரில் சுரேஷ் தியேட்டர் புதியதாக முளைத்தது.அன்றைக்கு இதன் பெயர் பெரியார் நகரில்லை.பின்னால் வழக்கத்திற்கு வந்த புதிய அடையாளம் இது.சுரேஷின் உரிமையாளர் வாண்டையார் வகையேறாவை சேர்ந்தவர்.நவீன அடையாளங்களோடு கட்டப்பட்ட தியேட்டராக சுரேஷ் அன்றைக்கு விளங்கியது.இந்தத் தியேட்டருக்கு முன்னால் அழகிய இரு பெண்கள் குடத்திலிருந்து நீருற்றுவதைபோலவும் லஷ்மி தாமரை இலையில் மேல் உட்கார்ந்திருப்பதைபோலவும் இருபுறங்களிலும் யானைகள் தன் துதிக்கையினால் நீர்த் தெளிப்பதைப் போலவும் அழகான முகப்பை வடிவமைத்திருந்தார்கள்.அன்றைய நாளில் கட்டப்பட்ட அழகியவடிவமைப்பு. அதேப் போல் திரையில் படம் போடுவதற்கு முன்னதாக வண்ணவிளக்குகள் தொங்கிகொண்டே மேலேறும் திரைச்சீலையை இந்த தியேட்டரில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்தார்கள்.அதைக் காணவே தனிக்கூட்டம் தியேட்டருக்குள் புகுந்தது.
சந்தோஷ்குமாரில் ஒரு ரூபாய் ஐம்பது காசுவில் நான் படம் பார்த்திருக்கிறேன்.அதிகப்படியாக டிக்கெட் 2.50 காசுகள் இருந்தது.பால்கனிக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே அளவுக்கான டிக்கெட்தான் சுரேஷிலும். சுரேஷ் தியேட்டர் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்ததினால் அன்றைக்கு அவ்வளவாக கூட்டம் போகவில்லை. தியேட்டருக்கு முன்னால் சிறைக்கூடம் இருந்தது.சில காவலர் குடியிருப்புகள் இருந்தன.மற்றபடி ஈ ஆடாது. இன்று காவல்நிலையம் இருக்கும் இடத்தில்தான் காவலர் குடியிருப்பு இருந்தது.குடியிருப்பையொட்டி பெரிய ஆலமரம் பற்றி படர்ந்து நின்றது.அதன் கீழ் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும். மற்றபடி ஒப்புக்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. பகலிலேயே இந்த நிலமை என்றால் ராத்திரியில் சொல்லணுமா? இப்பகுதியே மயான அமைதியில் மூழ்கும். எனக்குத் தெரிந்து சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சிகளாக பேய்ப்படங்களை திரையிடுவார்கள்.கும்மியிருட்டில் பேய்ப்படம் பார்த்து திரும்புவது அத்தனை எளிதல்ல; 13நம்பர் வீடு,மைடியர் லிசா, அதிசய மனிதன் பார்ட் ஒன்று, பார்ட் இரண்டு,வா அருகில் வா, உருவம் இவை எல்லாம் இங்கேதான் திரையிடப்பட்டன. அதிசயமனிதனை தனியாக உட்கார்ந்து பார்க்கும் தைரியசாலிக்கு பரிசெல்லாம்கூட அறிவித்த ஞாபகம். இந்தப் படங்களில் ஒன்றைக்கூட விடாமல் நாங்கள் பார்த்திருக்கிறோம்.அவ்வளவும் மையிருட்டில். வீடு திரும்பும்போது பயத்தைத் தணிக்க சினிமா பாட்டை பாடிக்கொண்டே வீட்டை வந்து அடைவோம்.
courtesy - net
http://i62.tinypic.com/2v0k8b6.jpg
சிறு வயதில் தியேட்டருக்குப் போவதென்றாலே திருவிழாவுக்குப் போவது போல் இருக்கும். ஏதோ போருக்குப் போவது போல பெண்களின் கூட்டம் படையெடுக்கும். போர்க் கருவிகள் மாதிரி கையில் வாட்டர் கேன்களும் நொறுக்குத் தீனிகளும் அடங்கிய பைகளுடன் விரைவது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.
அப்பா எங்களைத் தியேட்டருக்கு அனுமதிப்பது அபூர்வம். சில நேரங்களில் அந்த அபூர்வம் நிகழ்ந்து விடும். தெருவோடு ஒரு பெரிய கூட்டமாய் போவோம். சாலையில் போகும் போது அம்மாவின் ஓட்ட நடைக்கு ஈடு கொடுத்து நடந்து போவேன். தியேட்டருக்குள் நுழைந்ததும் அம்மா என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்வாள். ‘இடுப்பில் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்க மாட்டார்கள்’ என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.
http://i61.tinypic.com/2updcw2.jpg
அப்பெரிய அரங்கத்தில் மிகப் பெரிய ஜனத்திரளை பார்ப்பது அந்த வயதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த பயம். அங்கு தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட், சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். நாங்கள் எப்போதும் தரை டிக்கெட்தான். சரியான இடம் பார்த்து அம்மா உக்கார வைப்பாள். திரைக்கு அருகில் சென்று கதாநாயகன் வரும் நேரத்தில் கிழித்து வைத்திருந்த பேப்பரைத் தூவ அண்ணன் போய் விடுவான். கொண்டு வந்த தின்பண்டங்களை பங்கிடுவதில் எனக்கும் அக்காவுக்கும் சண்டைகள் அரங்கேறும்.
அம்மா பக்கத்து வீட்டு அத்தைகளை எல்லாம் அருகில் கூட்டி வைத்துக் கொள்வாள். தட்டு முறுக்கு விற்கும் சிறுவர்களின் சத்தமும், கூட்டத்தின் ஆர்ப்பரிப்பும், ஒலிபெருக்கியில் வரும் பாடலின் சத்தமும், வியர்வையின் நாற்றமும், மல்லிகைப்பூ வாசமும் அந்தத் தியேட்டரில் நிரம்பி வழியும்.
எந்தப் படம் ஆரம்பித்தாலும் பத்து நிமிடத்திற்கு மேல் நான் தூங்காமல் இருந்ததில்லை. “தூங்காமல் படம் பாரு…படம் பாரு…” என்று அம்மா எழுப்புவாள். ஆனால், சினிமாவுக்குப் போய் வந்தது பற்றி பள்ளிக்கூடத்தில் ஒரு வாரத்திற்கு கதை பேசுவேன்.
பக்கத்துவீட்டு அந்தோணியம்மா அத்தை வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் மாலை நேரக் காட்சிக்குப் போய் விடுவாள். ஜெயரத்தினம் அத்தை சிவாஜியின் பரம ரசிகை. சிவாஜி நடித்த படமென்றால் தினமும்கூட சினிமாவுக்குப் போவாள். ஆனால், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலமெல்லாம் போய், ரஜினி, கமல் என்று வந்த பின் சினிமாவுக்குப் போவதையே நிறுத்திக் கொண்டாள்.