Originally Posted by
mr_karthik
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )
எழிலரசி, விழியழகி "விஜயஸ்ரீ"
அறுபதுகளின் இறுதி மற்றும் எழுபதுகளின் துவக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பளிச்சென வந்து மனத்தைக் கொள்ளை கொண்டவர். அருமையான கதாநாயகியாக வலம் வந்திருக்க வேண்டிய அழகுப்பதுமை. ஆனால் கதாநாயகியாக நடிக்க அழகாக மட்டும் இருந்தால் போதாது, வீரமாக அல்லது வெட்டித்தனமாக நீள வசனம் பேச வேண்டும். தொட்டதுக்கெல்லாம் குமுறிக்குமுறி அழ வேண்டும் என்பன போன்ற அளவுகோல்களை அன்றைய திரையுலகம் வைத்திருந்ததால் ஐட்டம் டைப் நாயகியாகவே தன்னுடைய திரைப்பட வாழ்வை முடித்துக்கொண்டவர். விஜயஸ்ரீ நடிகர்திலகத்தின் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துப் பெருமை கொண்டார்.
"பாபு"வின் பாசமுள்ள காதலி
நடிகர்திலகத்தின் திரையுலக வாழ்க்கைப்பயணத்தில் முக்கிய மைல்கல் படங்களில் ஒன்றான "பாபு" படத்தில் நடிகர்திலகத்தின் ஜோடியாக காதலியாக நடித்து அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் அழுத்திய அழகு தேவதை. கதாநாயகனான ரிக்ஷாக்காரன் மீது மாளிகையில் வாழும் பணக்கார பெண்ணுக்கு காதல் ஏற்படுவதாகக் காட்டி யதார்த்தத்தைக் கொல்லாமல், ரொம்ப சிம்பிளாக சாப்பாட்டுக் கூடைக்காரி ஒருத்திக்கு அந்த கைரிக்ஷா ஸ்டாண்டிலேயே தன்னழகுக்கு ஏற்ற ஒரு ரிக்ஷாக்காரனுடன் காதல் ஏற்படுவதாக அமைத்துவிட்டார் கதாசிரியர். அதற்கேற்றார்போல யாரும் எதிர்பாராதவிதமாக விஜயஸ்ரீயை ஜோடியாகப்போட்டு ரசிகர்களை புளகாங்கிதத்தில் தள்ளி விட்டார் இயக்குனரும் சினிபாரத் நிறுவனத்தின் முதலளியுமான ஏ.சி.திருலோகசந்தர். ஆனால் படம் வருவதற்கு முன்பு எதிர்த்தரப்பில் நடிகர்திலகத்தின் ஜோடி பற்றி ஏகத்துக்கும் கிண்டல். படம் வந்து ஜோடிப்பொறுத்தத்தைப் பார்த்ததும் கிண்டலடித்த வாய்கள் அடைத்துப்போயின. பின்னே இவர்தான் யாரை ஜோடியாகப் போட்டாலுமோ அல்லது 'அண்ணே இந்தப்படத்தில் உங்களுக்கு ஜோடியே இல்லேண்ணே' என்று சொன்னாலுமோ கவலைப் படாதவராயிற்றே. அப்புறம் என்ன?.
பாபு படத்தில் விஜயஸ்ரீயின் அறிமுகமே மிகவும் அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். அவள் பல்வேறு வீடுகளிலிருந்து கேரியர்களில் சாப்பாடு கொண்டுபோய் அலுவலகங்களில் கொடுத்து, அவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்ததை அருகிலிருக்கும் கைரிக்ஷா ஸ்டாண்டில் இருக்கும் ரிக்ஷாக்காரர்களுக்கு மதிய உணவாக சப்ளை செய்பவள். சாப்பாட்டு நேரத்தில் அனைத்து ரிக்ஷாக்காரர்களும் கூடியாயிற்று, இன்னும் சாப்பாட்டு கூடைக்காரியை காணோமே என்று நினைத்திருக்கும்போது, ஒரு சாமியார் காஞ்சி வரதராஜனை நினைத்து 'வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா' என்று ஆரம்பிக்க பசியோடு இருக்கும் ரிக்ஷாக்காரர்கள் 'எங்கேப்பா' என்று திரும்பிப்பார்க்க சாலையின் குறுக்கே உள்ள நடைபாலத்தின்மீது சலங்கை சத்தத்துடன் அழகு தேவதை அறிமுகம். அகன்ற பெரிய விழிகள், எடுப்பான மூக்கு, சிரிப்பை வஞ்சமில்லாமல் சிந்திக்கொண்டிருக்கும் இதழ்கள், அதனுள்ளிருந்து எட்டிப்பார்க்கும் மல்லிகைச்சரங்கள், இவையனைத்தையும் அழகுறப்பதிக்கப்பட்டிருக்கும் களையான முகம், கழுத்துக்கு கீழே அனைத்தும் இருக்க வேண்டிய விதத்தில், சுருக்கமாக சொன்னால் படைத்தவன் ஓவர்டைம் செய்து வடித்த அழகுச்சிலை.
நடிகர்திலகம் தனது ரிக்ஷா தோழர்களோடு "வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா, கஞ்சி கலையம்தனை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா" என்று ஆடிப்பாட, அதற்கேற்றார்போல நடைபாலம் மீது ஒயிலாக விஜயஸ்ரீ நடப்பதே அழகு, அதுவும் தலையிலிருக்கும் சாப்பாட்டுக்கூடையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி பாவாடை தாவணியில் நடைபோடுவதைப் பார்த்தபோது, கிரௌன் தியேட்டர் முழுக்க மலர்மழை பொழிவதுபோல இருந்தது .தலைவர் பாடியாடுவதும், தேவதை அதற்கேற்ப நடைபோடுவதும் கட் ஷாட்களில் மாறி மாறி காண்பிக்கப்படும். அதற்குக்காரணம் அவை படமாக்கப்பட்ட இடங்கள் வெவ்வேறு. நடிகர்திலகம் மற்ற ரிக்ஷாக்காரர்களோடு பாடியாடும் காட்சி படமாக்கப்பட்ட இடம் ஏ.வி.எம்.ஸ்டுடியோ. விஜயஸ்ரீ நடைபாலத்தில் நடந்து வரும் காட்சி படமாக்கப்பட்ட இடம் சென்னை எஸ்பிளனேட் பகுதியிலுள்ள அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கும், கோட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள நடைபாலம். ஆனால் நடிகர்திலகம் ஆடும்போது அந்த பாலம் தங்கள் எதிரே இருப்பது போலவும், அதில் விஜயஸ்ரீ தன் கண்ணெதிரிலேயே நடந்து வந்துகொண்டு இருப்பது போலவும் மேலே பார்த்துக்கொண்டே பாடுவார். தன் கண்ணெதிரில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து நடிப்பதால்தான் அவர் நடிகர்திலகம்.
பாடலின் மூன்று சரணத்தையும் நடிகர்திலகம் பாடியாடி முடிக்கும்வரை நடைபாலத்திலேயே நடந்துகொண்டிருந்த விஜயஸ்ரீ (அதிலேயே அழகான சிரிப்பு, கண்சிமிட்டல், சின்ன முறைப்பு ரசிகர்களைக் கொல்லும் இடையசைவுகள் என்று அசத்துவார்) கடைசி பல்லவியின்போது பாலத்தின் படிகளில் இறங்கி வருவதை கீழே லோ-ஆங்கிளில் கேமராவை வைத்து இயக்குனர் படம் பிடித்திருக்க, ஒருகையால் தலையில் இருக்கும் கூடையைப் பிடித்துக்கொண்டு மறுகையால் பாவாடையை சற்றே தூக்கியபடி இறங்கி வர, ஒன்றிரண்டு வினாடிகள் மட்டும் அவரது இரண்டு கால்களும் கிட்டத்தட்ட மேற்கால்கள் வரை ('தொடைகள்வரை' என்ற வார்த்தையை பிரயோகிக்க திரியில் அனுமதி உண்டா?) தெரியும் அந்த நொடிகளில் நம் கண்களில் மின்னல் பாய்வது உண்மை. விரசமில்லாத, திணிக்கப்படாத, யதார்த்தமான கவர்ச்சி. இன்றைக்கும்கூட அப்படி ஒரு பெண் மேலிருந்து சேலையை அல்லது பாவாடையை சற்று உயர்த்திப்பிடித்தபடி இறங்கும்போது கீழேயிருந்து ஒருவன் மேல்நோக்கினால் யதார்த்தமாக கண்ணில் படக்கூடிய கவர்ச்சி. (இதில் விசேஷம் என்னவென்றால், இதே படத்தில் 'அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும்' என்ற பாடலின்போது முழு பாடலுக்கும் வெண்ணிறஆடை நிர்மலா நீச்சல் உடையிலேயே வந்தபோதிலும், இரண்டு வினாடிகள் விஜயஸ்ரீ தந்த கவர்ச்சித்தாக்கத்தை நிர்மலா தரவில்லை).
பாடலின் இறுதியில் ரிக்ஷா ஸ்டாண்டுக்குள் வந்ததும் ஒரு ரிக்ஷாக்காரர் கூடையை இறக்கி வைக்க விஜயஸ்ரீயும் நடிகர்திலகமும் போடும் டான்ஸ் ஸ்டெப் இருக்கே அதுதான் சூப்பர் டாப்கிலாஸ் ஒரிஜினல் ரிக்ஷாக்காரன் டான்ஸ். ரசிகர்களின் கைதட்டலில் தியேட்டரே அதிரும்.
பாட்டு முடிந்ததும் எல்லோருக்கும் கேரியர்களில் மீதமிருக்கும் உணவைக்கலந்து பரிமாற (அப்படிக் கலக்கப்பட்ட உணவில் இருக்கும் சுவை எந்த 5 ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காது ஓய்) எல்லோருக்கும் உணவை இலையில் சும்மா வழங்கிவிட்டு, நடிகர்திலகத்துக்கு கொடுக்கும்போது மட்டும் கொஞ்சம் உணவை வாயில் போட்டுப்பார்த்து, 'நல்லாயிருக்கு' என்பதுபோல முகமலர்ச்சியுடன் தலையாட்டிவிட்டு கொடுப்பது (நினைவிருக்கா? (மறக்குமா) கப்பலோட்டிய தமிழனில் மக்களுக்கு அன்னதானம் நடைபெறும்போது நடிகர்திலகம் சிறிது உணவை வாயில் போட்டு சுவைத்துப் பார்த்து திருப்தியுடன் தலையசைப்பாரே).
பாலாஜி வீட்டில் நடந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து காதலி விஜயஸ்ரீயிடம் சொல்லுமிடம் ஒரு அழகான கவிதை, பாலாஜி கொடுத்த தொளதொள உடைகளை அணிந்து அவற்றை விவரிக்க அவள் வியப்புடனும் அகலவிரிந்த விழிகளுடனும் கேட்டுக்கொண்டிருக்க, ஒருகட்டத்தில் நடிகர்திலகம் உணர்ச்சி மேலிட்டு "எனக்கு மட்டும் சக்தியிருந்தா என் இதயத்தை பிடுங்கி அவர் காலடியில் போட்டிருப்பேன்" என்று நெகிழ்வார். அந்த சமயம் ட்ராக்கில் ரயில்வர இருவரும் பதறி எழுந்து விலகி கட்டியனைத்துக்கொள்வர். "ராத்திரி எட்டுமணிக்கு மறுபடியும் வாரியா?" என்று கேட்கும் காதலியிடம் "எதுக்கு?. எட்டுமணி ரயில் வரும்போது கட்டிப்புடிச்சிக்கவா?" என்று இவர் கேட்க, இருவரும் கள்ளமில்லாமல் சிரிக்க.... ("கமல் சார் இந்த காட்சி எப்படி?". "அய்யோ கவிதை.... கவிதை....").
பாபு படத்தின் பிற்பகுதியில் நடிகர்திலகம் வயதான தோற்றத்தில் வர வேண்டும். அதுமட்டுமல்ல தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை என்று இல்லாமல் தனக்கு ஒருவேளை சோறு போட்டு வாஞ்சையுடன் சகோதரன் என்றழைத்த கண்ணியவானின் நொடித்த குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். அதற்கு அவன் காதலித்த பெண்ணை அவன் வாழ்க்கையிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு கதாசிரியர் மற்றும் இயக்குனர் தேர்ந்தெடுத்த வழி 'கீசக வாதம்' தெருக்கூத்து நாடகம்.
கைரிக்ஷா தொழிலாளர்கள் மட்டுமின்றி அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தும் வி.கே.ஆர்., வட்டித்தொழில் நடத்தும் வாசு என அனைவரும் பங்கேற்கிறார்கள். பீமனாக நடிகர்திலகம், கீசனாக நாகேஷ், சைரந்திரியாக சாப்பாட்டுக்கூடைகாரி' விஜயஸ்ரீ. இதனிடையே இவளை அடையத்துடிக்கும் பொறுக்கி நம்பிராஜன் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். கூத்தின் உச்சகட்ட காட்சியில் பீமனுக்கும் கீசகனுக்கும் மேடையில் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, வாத்தியங்கள் உச்சத்தில் முழங்கிக்கொண்டிருக்க, அதே சமயம் கூத்தில் தன்னுடைய பார்ட் முடிந்துவிட்டதால், உள்ளே உடைமாற்றிக்கொள்ளும் விஜயஸ்ரீயை காமுகன் நம்பிராஜன் சீரழிக்கிறான். ஒட்டுமொத்த ஏரியாவும் தெருக்கூத்தில் மூழ்கியிருக்க வாத்தியங்களின் சத்தத்தில் அவளுடைய அலறல், அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. பாவம் குழந்தை ஒற்றையாகப் போராடுகிறாள். பலனில்லை. அந்தப் போராட்டத்தில் காமுகனால் அவள் கற்பும், எமனால் அவள் உயிரும் அடுத்தடுத்து பறிக்கப்படுகின்றன.
கூத்து முடிந்து முதல் ஆளாக உடைமாற்றிக்கொள்ள உள்ளே வரும் பாபு (நடிகர்திலகம்) உச்சகட்ட அதிர்ச்சியுடன், அவள் கிடக்கும் கோலத்தைக்கண்டு சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, முகத்தைத் திருப்பிய நிலையிலேயே அவள்மீது ஒரு துணியை எடுத்துப் போர்த்துவதன் மூலம் அவள் கிடந்த கோலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.
படம் முழுக்க வருவார் என்று ஆவலோடு நாம் இருக்க, பளிச்சென்று மின்னலாகத் தோன்றி பாதியில் மறைந்து விட்டார், நடிகர்திலகத்தின் கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று ரசிகர்களின் இதய சிம்மாசனங்களில் அமர்ந்துவிட்டார் எழிலரசி. விஜயஸ்ரீ.
1971 தீபாவளியன்று இப்படம் வெளியானது. அந்த ஆண்டு நடிகர்திலகத்தின் 10 படங்கள் வெளியாயின. அந்த ஆண்டு மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தவர்கள் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, ஜெயலலிதா, வெண்ணிறஆடை நிர்மலா (அதிசயம் விஜயா இல்லை). இதோடு இன்னும் இரு கதாநாயகிகளான லட்சுமி தங்கையாகவும், வாணிஸ்ரீ தம்பி மனைவியாகவும் நடித்திருந்தனர். இது போதாதென்று ஜோடியில்லாமலும் ஒரு படம். இவற்றுக்கிடையே விஜயஸ்ரீயையும் தன்னுடன் கதாநாயகியாக நடிக்க வைத்து இப்பெரும் நடிகைகளின் பட்டியலில் இடம்பெற வைத்த எங்கள் தலைவன் நடிகர்திலகத்தின் பெருமையே பெருமை. (ஒரு பாட்டுக்கு மட்டும் தன்னுடன் ஆட வைப்பதை பலர் செய்யலாம். ஆனால் தனக்கு ஜோடியாக என்றால் பெரிய நடிகையிடமே ஓடுவார்கள்).
பல படங்களில் கவர்ச்சி நடனம் மட்டுமே ஆடிவந்த விஜயஸ்ரீ திருவனந்தபுரத்தில் மெரிலாண்ட் ஸ்டுடியோ வைத்திருந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆன 'மெரிலாண்ட்' சுப்பிரமணியம் தயாரித்த 'யானைவளர்த்த வானம்பாடி மகன்', 'மலை நாட்டு மங்கை' போன்ற டார்ஜான் படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவருடைய ஆஸ்தான கதாநாயகியும் விஜயஸ்ரீதான். (கேமரா கர்ணனுக்கு ராஜ்கோகிலா போல). யாரும் எதிர்பாராத விதமாக மிகச்சிறிய வயதில் 1974 வாக்கில் திடீர் மரணம் அடைந்து அதிர்ச்சியளித்தார் விஜயஸ்ரீ. எப்படி இறந்தார்? எதனால் இறந்தார்? என்பன போன்ற மர்மங்கள் வெகு நாட்கள் நீடித்தன. ஆனால் உண்மை கண்டறியப்படவேயில்லை.
அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......