நன்றி கார்த்திக் சார்.. நன்றி வினோத் சார் வீடியோவிற்காகவும்.. :)
வாணிஸ்ரீ ந்னா ரொம்ப நீளமா இருக்குங்களே கார்த்திக் சார்..;)
Printable View
நன்றி கார்த்திக் சார்.. நன்றி வினோத் சார் வீடியோவிற்காகவும்.. :)
வாணிஸ்ரீ ந்னா ரொம்ப நீளமா இருக்குங்களே கார்த்திக் சார்..;)
என் மீது கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாக என்னை பெரிதும் பாராட்டிய கார்த்திக், வாசு, கண்ணன் மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
கிருஷ்ணாஜி, சுப்ரபாதம் படத்தின் கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் பாடலுக்கு கோடி நன்றி. எனக்கு மிக மிக பிடித்த பாடல். 1979 ஏப்ரல்-ல் மதுரை தங்கம் திரையரங்கில் இந்த படத்தை பார்த்த அந்த நாள் மறக்க முடியாத ஒன்று.
அது போல பாலா சார், எப்போது கேட்டாலும் ஒரே நேரத்தில் மனதில் சொல்ல முடியாத சந்தோஷத்தையும் சொல்ல முடியாத சோகத்தையும் ஒரு போல கொண்டு வரும் மலைசாரலில் ஒரு இளம் பூங்குயில் பாடலுக்கு கோடி கோடி நன்றி. பல பல நினைவுகள்.
கண்ணா,
மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் பாடலை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. அன்றைய தூரதர்சனினில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளின் பெயர்களையே வைரமுத்து பயன்படுத்தியிருப்பார். ஆனால் பல்லவியின் கடைசி இரண்டு வரிகள் பின்னியிருப்பார்.
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்.
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்.
மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்
சில வருடங்களுக்கு முன்பு நமது ஹப்பில் நான் எழுதிய பதிவு. காலத்தை வென்ற கவிஞன் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளான இன்று அவர் நினைவாக இந்த மீள் பதிவு.
கண்ணதாசனும் காதலும்
கண்ணதாசனைப் போல் காதலை கொண்டாடியவர்கள் வெகு சிலரே. காதல், காதல் சார்ந்த ஏக்கம், ஏக்கத்தில் தொனிக்கும் விரகம்,தாபம் எல்லாவற்றையும் இலக்கிய நயத்தோடு சொன்னவர் கண்ணதாசன்.
காதல் என்ற உணர்வு மட்டும் ஒரு மனதுக்குள் வெகு விரைவில் நுழைந்து விடுகிறது. எப்படி?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
கண்ணதாசன் காதலை பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்கிறார்,
காதல் என்பது எதுவரை?
கல்யாண காலம் வரும் வரை.
இளமையிலே காதல் வரும்; எது வரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்.
காதலர்கள் எப்படி இருக்க வேண்டும்? கண்ணதாசனின் பதில்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
மௌனமே காதலாய் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்.
காதல் ஏற்படுத்தும் தவிப்பை அதிலும் குறிப்பாக பெண்ணிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை எப்படி சொல்கிறார்?
கட்டவிழ்ந்த கண்ணிரெண்டும் உங்களை தேடும்; பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்.
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்; கொண்ட
பள்ளியறை பெண் மனதில் போர்களமாகும்.
காதலர்களுக்கிடையே நிலவும் உறவு எப்படி இருக்கும்?
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனி சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் போது உணர்வுகள் எப்படி வெளிப்படும்?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி.
காதலை பற்றி சொல்லும் கவிஞர் அந்த காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதை சொல்கிறார்.
மாலை சூடும் மணநாள்; இள
மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
மணமகன் இன்ப ஊஞ்சலில்
மணமகள் மன்னன் மார்பினில்
அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
அதில் நாமும் இன்றொரு காவியம்
இதில் ஒருவர் தாளமாம்
ஒருவர் ராகமாம்
இருவர் ஊடலே பாடலாம்
காதல் கனிந்து திருமணத்தில் முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்.
மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்றும் வளராதோ
முதலிரவை பற்றி நாயகன் நாயகியிடையே ஒரு கேள்வி பதில்
முதலிரவு என்று ஒன்று ஏனடி வந்தது ராதா
அது உரிமையில் இருவர் அறிமுகமாவது ராஜா.
முதலிரவில் நாயகியின் வெட்கத்தை கவிஞர் சொல்லும் அழகே அழகு.
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவார்
படித்தவள்தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்.
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
அந்த உறவின் நிலையை எப்படி சொல்கிறார்?
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடத்தும் உறவிலே.
மறுநாள். அந்த இன்ப நினைவுகள் மனதில் வந்து மோத நாயகி இலக்கியம் பேசுகிறாள்.
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்; இரு
கன்னம் குழி விழ நகை செய்தான்.
என்னை நிலாவில் துயர் செய்தான்; அதில்
எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்தே மகிழ்ந்தே போராடி; தலை
சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி; பட்ட
காயத்தை சொன்னது கண்ணாடி.
இதே இலக்கியம் வேறொரு பாணியில் வேறொரு பெண்ணால் எப்படி சொல்லப்படுகிறது?
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாருமறியாப் பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே.
கூடிக் கலந்து மகிழ்ந்த உயிர்கள் பிறிதொரு உயிரை உருவாக்கும் போது அங்கே ஆண் சொல்கிறான்.
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.
பெண் என்ன சளைத்தவளா? அவள் உடனே பதிலளிக்கிறாள்
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.
மற்றொரு ஆண் இதையே வேறு விதமாக பாடுகிறான். எப்படி?
கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே
தொட்டில் கண்டாள் அங்கு என் பிள்ளையே.
இந்த உணர்வுகளையெல்லாம் ஒரு மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்தில் சொன்னால்?
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா.
எதை சொல்வது? எதை விடுவது?
கண்ணதாசனின் கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்புடன்.
நேற்று மட்டும் இந்தத்திரி 9 பக்கங்களை எட்டியுள்ளது
மனசெல்லாம் ஜில்லெண்டிருக்கு
ரொம்ப சந்தோஷம்
கோவர்த்தனம்
மெல்லிசை மன்னரின் உதவியாளர் என பல படங்களில் இவர் பெயர் இடம் பெற்றிருக்கும்...
அதற்கும் மேல் இசையமைப்பு கோவர்த்தனம் என்று இன்னும் சில படங்களில் இவர் பெயர் இடம் பெற்றிருக்கும்...
முதலாவது இரண்டாவதற்கு மிகவும் பெரிய உதவியாக இருந்தது என்பது இரண்டாவதில் இவருடைய பணி பறை சாற்றும்...
பட்டணத்தில் பூதம், வரப்ரசாதம், பூவும் பொட்டும், கைராசி படங்கள் இவருடைய பெயரை காலத்திற்கும் கூறிக் கொண்டிருக்கும்..
இவருடைய இசையமைப்பில் மெல்லிசை மன்னரின் சாயல் இடம் பெறுவது தவிர்க்க இயலாதது.
அப்படி ஒரு பாடல், பூவும் பொட்டும் திரைப்படத்திலிருந்து..
பூவும் பொட்டும் படம் என்றாலே நாதஸ்வர ஓசையிலே பாடலும் எண்ணம் போல கண்ணன் வந்தான் பாடலும் தான் சட்டென்று நினைவுக்கு வரும்..
சற்றே வித்தியாசமாக ஈஸ்வரியின் குரலில் உள்ள சிறப்பை அருமையாக வெளிப்படுத்திய பாடல் தான் பொன் வண்டு தீண்டாத மல்லிகை..
ரிதம்... மிகவும் அட்டகாசமாக... அதுவும் இப்பாடலில் இடம் பெறும் பாங்கோஸ் .... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
http://youtu.be/r2SOQ3lufsk
இன்றைய ஸ்பெஷல் (13)
1966-ல் ஆர். ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'பறக்கும் பாவை' வண்ணப்படத்தில் ஒரு அட்டகாசமான ஜாலியான பாடலைப் பார்க்கப் போகிறோம்.
http://i1.ytimg.com/vi/i_1mu9ToOmk/maxresdefault.jpg
'பறக்கும் பாவை' படத்தில் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, காஞ்சனா, நம்பியார், அசோகன், மனோகர், சந்திரபாபு, தங்கவேலு, ஒ.ஏ.கே தேவர், ஜி.சகுந்தலா என்று பெரும் நட்சத்திரக் கூட்டம்.
இசை 'மெல்லிசை மன்னன்' விஸ்வநாதன் என்று டைட்டிலில் போடுவார்கள். உதவி கோவர்த்தனும், ஹென்றி டேனியலும். வசனம் சக்தி கிருஷ்ணசாமி.
எம்.ஏ.ரஹ்மானின் கண்களை, மனதை குளிர்ச்சியாகும் அம்சமான ஒளிப்பதிவு
முழுக்க முழுக்க சர்க்கஸை பின்னணியாக வைத்து நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரமாக வழங்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா.
சர்க்கஸில் இணைந்து வேலைபார்க்கும் எம்.ஜி.ஆரின் காதலியான சரோஜாதேவியைக் கொலை செய்ய பல முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகன் எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை இந்த ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து மீட்கிறார். யார் சரோஜாதேவியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று பல பேர் மேல் நமக்கும், படத்தில் உள்ளவர்களுக்கும் சந்தேகம் வருகிறது. இறுதியில் கொலைகா(ரி)ரன் யார் என்று தெரியும் போது நமக்கு அதிர்ச்சி.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத வகையில் அமைந்திருந்தது.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் முத்து முத்தானவை. சர்க்கஸ் காட்சிகளும் (சர்க்கஸ் காட்சிகள் உதவிகளை 'நேஷனல் சர்க்கஸ்" கம்பெனி செய்து கொடுத்தது)
அழகாகப் படம் பிடிக்கப்பட்டு இருந்தன. தேவர் பிலிம்ஸ் போல இல்லாமல் மிருகங்களுக்கு உரிய சர்க்கஸ் குணங்கள் இயல்பாகக் கையாளப்பட்டிருந்தன. அரங்க அமைப்புகளும் பிரம்மாண்டமாக இருந்தன. பாடல் காட்சிகள் முற்றிலும் வித்தியாசமாகப் படமாக்கப் பட்டிருந்தன.
வழக்கமான ராமண்ணாவுக்கே உரித்தான பிரம்மாண்டங்கள், கமர்ஷியல் அயிட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. (முக்கியமாக 'முத்தமோ... மோகமோ' பாடல் காட்சி அருமையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் வித்தியாசமாகப் படமாக்கப்பட்டிருந்தது. இப்பாடலைப் பற்றி தனியாக பிறகு அலசலாம்.)
இப்படத்தின் டைட்டில் காட்சிகள் அப்போதே அசத்தலான கார்ட்டூன் கைவரிசைகளில் உள்ளத்தை உற்சாகம் கொள்ள வைக்கும்.
இந்தப் படத்தின் வண்ணமயமாக்கலையும் மறக்க முடியாது. மனத்தைக் கவரும் வண்ண ரம்மியம். (ஒரு புதிய பறவை, அன்பே வா போல)
வழக்கமான எம்ஜியார் அவர்களின் படங்களிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு படம். சரி! பாடலுக்கு வருவோம்.
இப்படத்தில் ஹோட்டல் ஒன்றில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க எம்ஜிஆர், சரோஜாதேவி,சந்திரபாபு மூவரும் புதுமையான உடையில் ஆடும் புதுமையான நடனம்.
இப்பாடலை இன்றைய ஸ்பெஷலாக நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் உண்டு.
அதில் முக்கியமான காரணம் வித்தியாசம். வித்தியாசம். வித்தியாசம்.
வித்தியாசம் 1
பொதுவாக மக்கள் திலகம் அவர்களின் நடனக் காட்சிகளில் இருக்கும் வழக்கமான மேனரிசம் முழுமையாக இப்பாடல் முழுவதும் அவரிடத்தில் இருக்கவே இருக்காது. நடன அசைவுகள் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களின் பாடலைப் பார்ப்பது போலவே தோன்றாது. வேறு யாரோ வித்தியாசமான நடிகரை பார்ப்பது போல் தோன்றும்.
அலட்டிகொள்ளாத லூஸான கைகால்கள் அசைவுகளில் மூவருமே நன்றாகச் செய்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களும் ஹீராலால், தங்கப்பன் மாஸ்டர் ஆட்டுவித்தபடி நன்றாகவே ஆடியிருப்பார். சந்திரபாபு, சரோஜாதேவி கேட்கவே வேண்டாம். அம்மணி பொம்மை போல கைகால்களை ஆட்டி படுஅலட்சியமாக ஆடி தூள் கிளப்புவார்.
வித்தியாசம் 2
இன்னொரு வித்தியாசம். பெரும்பாலும் தனக்கு வரும் பாடல்களை தன் சொந்தக் குரலிலேயே பாடும் சந்திரபாபுவுக்கு இப்பாடலில் தாஸேட்டன் (நன்றி முரளி சார்) அதாங்க... நம்ம ஜேசுதாஸ் சார் குரல் கொடுத்து பாடியிருப்பார். மிக மிருதுவான மயக்கும் மதுரக் குரல். ஆனால் பாபுவுக்கு பொருந்தவில்லை. (அது செம வாலாயிற்றே!)
வித்தியாசம் 3
மூவரும் மிக அழகாக பேலன்ஸ் செய்து ஆடுவார்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ் நாகரீகக் கோமாளிகள் போன்ற தோற்றம் கொண்டு. தலையில் கவிழ்த்து வைக்கப்பட்ட வித்தியாச விக். பாபு முன்னாலும் அவருக்குப் பின்னால் அபிநய நங்கையும், அவருக்குப் பின்னால் எம்ஜிஆர் அவர்களும் ஆடும் போது சந்திரபாபு நன்றாக உடலை வளைத்து பின்னல் இருப்பவர்களின் அசைவுகளை அழகாக அட்ஜஸ்ட் செய்து காட்டுவார். இரண்டாவது சரணத்தில் ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காமலும் ஆடும் ஸ்டெப்கள் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்.
வித்தியாசங்களை மீறிய இன்னொரு விஷயம்
ராட்சஸி. அடேயப்பா! குரலை உயர்த்தாமல், உச்சஸ்தாயிக்கு செல்லாமல், மெல்லினத்தை வல்லினமாக உச்சரிக்காமல் ஒரே ஸ்டைலில் சீராக தெளிந்த நீரோட்டம் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் இவர் பாடும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை போங்கள். அதுவும் 'நெஞ்சம் மயங்கும் இன்பம்' வார்த்தைகளை அவர் ஆரம்பிக்கும்போது நெ..ஞ்சம் என்று 'நெ' வை சற்றே இழுத்து உச்சரிப்பாரே! இன்பமோ இன்பம். யாரங்கே! எங்கள் ராட்சஸிக்கு திருஷ்ட்டி சுற்றி போடுங்கள்.
https://i1.ytimg.com/vi/AVafGJkn0lE/mqdefault.jpg
இப்போது கூட நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்வதுண்டு இது மக்கள் திலகம் நடித்த பாடல்தானா என்று. பாடலின் இடையிடையே வரும் சதன் கோஷ்டியினரின் கோரஸ் இனிமையோ இனிமை. 'சுகம் எதிலே' என்று வரும் போதெல்லாம் 'ஹ ஹ ஹா' என்று எங்கேயோ கேட்பது போல குரல்கள் ஒலிப்பது படு இனிமை. பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் கோரஸ் ஜாலியான மூடுக்கு நம்மைக் கொண்டு வரும். பாடலின் பின்னணியில் ஹோட்டல் அரங்கில் 'கோகோ-கோலா' குளிர்பான விளம்பரத்தைப் பார்க்கலாம்.
இந்தப் பாட்டுக்கு முழு கிரெடிட்டும் நடன இயக்குனர் ஹீராலாலையும், அவர் உதவியாளர் தங்கப்பன் மாஸ்டரையும் சாரும். அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
'மெல்லிசை மன்னர்' துள்ளிசை மன்னராக சும்மா புகுந்து விளையாடி விட்டார் இந்தப் பாட்டில். அதுவும் காதுகளுக்குள்ளே இன்பத்தேனைப் பாய்ச்சும் கிடார் இசையை அவர் தரும் சுகமே அலாதிதான்.
நடனம், இசை,பாடல், நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் எப்பேற்பட்ட பாடல் கிடைக்கும் என்பதற்கு இப்பாடல் ஒரு சாட்சி
இதில் வருத்தப்படவேண்டிய இன்னொரு கேள்வியும் எழுகிறது. அருமையான இந்தப் பாடல் முழுமையாக எல்லோராலும் ரசிக்கப் பட்டிருக்கிறதா என்ற கேள்விதான் அது. ஆனால் பதில்....
இன்னொன்று இது 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' என்ற ஒரு பொதுத் திரி. இதில் அனைத்து நடிகர்களின் படங்களின் பாடல்கள் அலசப்படுகின்றன. இதில் இவர் ஒஸ்தி அவர் கம்மி என்ற பேச்சுக்கே இடமில்லை. சிலர் நினைப்பது போல் ஒருவர் சார்புடைய திரியும் அல்ல இது.
அதற்கு உதாரணமாகவே இந்தப் பாடல் அலசல்.
எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த பாடல் காட்சி ஒன்றை முதல் முதலாக அலசியுள்ளேன். அவர் வித்தியாசமாக நடித்த பாடல் காட்சிகளை நாம் தொடர்ந்து அலசலாம்.
மக்கள் திலகம் கொஞ்சம் அதிகமாகவே வேலை வாங்கி விட்டார்.:)
http://www.youtube.com/watch?feature...&v=CQYfRS6U1nQ
தொடர்ந்து எல்லோருடைய ஆதரவை நாடும்
உங்களின் வாசுதேவன்.
நன்றி!
VASU SIR
இனிய நண்பர் வாசு சார்
மலைக்க வைத்தது உங்களின் உழைப்பு . என்ன ஒரு விரிவான அலசல் . 48 ஆண்டுகள் முன் வந்த மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை படத்தில் இடம் பெற்ற ''சுகம் எதிலே'' பாடலின் முழு தாக்கத்தைஉங்கள் பதிவு மூலம் படித்ததில் மிக்க ஆனந்தம் .தொடருங்கள் ....
.
http://i59.tinypic.com/if649s.jpg
25/06/2014 - காலை வணக்கம்
வாசு சார்
ஒரு குடும்பத்தின் கதையில் உள்ள இன்னொரு பாடலையும் நினவு கூர்ந்து விட்டீர்கள் .
உண்மையில் நேற்று இரவு இரண்டு நினைவுகள் ஊசலாடின .
ஒன்று நம் திரியில் மக்கள் திலகத்தின் பாடல்கள் அலசப்படவில்லை .
இரண்டாவது முத்துராமன் ஜோதி லக்ஷ்மி
ஜோடியின் ஸ்ரீநிவாஸ் குரலில் வரும்
"உன் அழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன செய்வேன் "
பாடலை நினைத்து கொண்டு தூங்கினேன் .
இங்கு வந்து பார்த்தல்
நீங்கள் பறக்கும் பாவையை மிக அழகாக மக்கள் திலகத்தின் ரசிகர்களை விட ஒரு படி மேலாக திறனாய்வு செய்து உள்ளீர்கள்
அதே போல் வேந்தர் சார் அவர்களும் பூவும் போட்டும் திரைபடத்தில் உள்ள நல்லதொரு அரிய் பாடலை பற்றி கூறி உள்ளார்
"நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் நடை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனின் ரகசியமே
இறைவனின் ரகசியமே
கண்ணதாசனின் என்ன ஒரு அழகு வரிகள்
காலை வணக்கம் கிருஷ்ணா சார்!
உங்களை காணாமல் இப்போதெல்லாம் பொழுது விடிவதில்லை.