Originally Posted by Murali Srinivas
அண்மையில் திரைப்பட உலகை சேர்ந்த ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு கதையும் அதன் திரைக்கதை வடிவமும் பற்றி அறிய நேர்ந்தது.
ஒரு கிராமம். அங்கே அன்றைய தமிழக சூழ்நிலைப்படி வாழ்கை முறை அமைந்திருக்கிறது. ஒரு நாள் ஒரு வயதான தாயும் அவளது மகனும் (சிறுவன்) அந்த கிராமத்தில் நுழைகிறார்கள். நோய்வாய்ப்பட்டிருக்கும் அந்த தாய் ஒரு அக்ரஹார தெருவில் விழுந்து இறந்து விடுகிறாள். கிராமத்தினர் அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். சமூக கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த ஊரில் இந்த அனாதைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லோரும் கூடி அந்த பையனையே தான் தாயின் பிணத்தை தூக்க வைத்து அடக்கம் செய்ய வைக்கிறார்கள். யாருமில்லாத அந்த சிறுவன் அந்த ஊரிலேயே தங்குகிறான். அவனது வேலையே ஊரில் எந்த வீட்டில் இறப்பு நேர்ந்தாலும் சரி, அந்த பிணத்தை தூக்குவது அவன்தான் என்றாகி போகிறது. ஊரில் அவன் பெயரே பொணம்தூக்கி. நிறைய பேருக்கு அவன் பெயரே தெரியாது. அப்படியே வளர்ந்து பெரியவனகிறான்.
அந்த ஊரில் ஒரு பெண் மட்டும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு கல்லூரிக்கு படிக்க செல்கிறாள். படிப்பை முடித்து பட்டதாரியாக திரும்புகிறாள். அவளுக்கு தந்தை மற்றும் ஒரு தம்பி மட்டுமே. தந்தை திடீரென்று இறந்து விட அவள் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை. கிராமத்தில் இரண்டு பெரிய மனிதர்கள் ஊரில் உள்ள நிலங்களை வளைத்து போட முயற்சிக்கின்றனர். அவர்களின் நிலத்திற்கு நடுவில் அந்த பெண்ணின் தந்தையார் பெயரில் இருக்கும் நிலமும் இருக்கிறது. அதை அபகரிக்கும் சதி வேலையை அவள் எதிர்க்கிறாள்.
ஊரில் எல்லோருக்கும் உதவுவது போல் இந்த பெண்ணிற்கும் பொணம் தூக்கி உதவி செய்கிறான். ஒரு கட்டத்தில் இந்த இருவரையும் இணைத்து பெரிய மனிதர்கள் அவதூறு பரப்ப, அது பெரிய சர்ச்சையாகிறது. அந்நேரம் அந்த பெண் ஒரு துணிவான முடிவெடுக்கிறாள். அந்த பொணம் தூக்கியை திருமணம் செய்து கொள்ள அவள் எடுக்கும் அந்த முடிவை அவன் முதலில் ஏற்க மறுக்கிறான். பின் அவளது வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்கொள்கிறான்.
முதலிரவன்று திடீரென்று சங்கு ஊதப்பட, ஆமாம் ஒரு இறப்பு நடந்திருக்கிறது. உடனே நாயகன் தான் கடமையை செய்ய அதாவது பொணம் தூக்க கிளம்பி போக வேண்டிய சூழ்நிலை. இதனிடையே அக்கா ஒரு பொணம் தூக்கியை திருமணம் செய்து கொண்டதில் விருப்பமில்லாத தம்பியை இரண்டு பெரிய மனிதர்களும் தங்கள் பக்கம் இழுத்து அவன் மூலமாக சொத்து தகராறு ஏற்படுத்தி நிலத்தை கைப்பற்ற சதி செய்கிறார்கள். எப்படி இந்த சிக்கலெல்லாம் தீர்க்கப்படுகிறது என்பது (இதை தவிரவும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன) மீதி கதை.
இதை கேட்டவுடன், குறிப்பாக இந்த கதாபாத்திரங்களாக திரையில் தோன்றுவதாக இருந்தவர்கள் யார் யார் என்று அறிந்த போது, யார் இயக்கம் என்று தெரிந்த போது ஆஹா! இது நடக்காமல் போய் விட்டதே என்று மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
ஆம் நண்பர்களே! இந்த பொணம் தூக்கியாக நடித்தவர் நமது நடிகர் திலகம். நாயகி நடிகையர் திலகம். புத்தா பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து இயக்கியவர் பீம்சிங். பட்டதாரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த படம் 4000 அடிகள் வரை வளர்ந்தது. பெரிய மனிதர்களாக வேடம் ஏற்றவர்கள் எம்.ஆர்.ராதா மற்றும் டி.எஸ்.பாலையா. நாயகியின் தம்பியாக நடித்தவர் கமல். இசை மெல்லிசை மன்னர்கள். ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது.
காம்பினேஷன் கால்ஷீட் காரணமாக இடையில் படப்பிடிப்பு தடைப்பட்ட இந்த படம் அதே காரணத்தினாலேயே கைவிடப்பட்டது. படம் வெளி வந்திருந்தால் இப்படியும் ஒரு பாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருக்கிறார் என இருந்திருக்கும்.
இந்த தகவலை பற்றி யோசிக்கும் போது வேறு ஒன்று மனதில் வந்தது. பதி பக்தி முதல் பாதுகாப்பு வரை பீம்சிங் - நடிகர் திலகம் கூட்டணியில், சாவித்திரி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் - நடிகையர் திலகம் ஜோடியாக நடித்ததே இல்லை. இந்த படம் வெளி வந்திருந்தால் அந்த குறையும் நீங்கியிருக்கும். இப்படி ஒரு புதுமையான கதாபாத்திரம் வெளி வராமல் போனது தமிழ் சினிமாவிற்கு இழப்பு.
அன்புடன்
PS: நன்றி லெனின் அவர்களே!