Originally Posted by saradhaa_sn
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படம் பற்றிய கலந்தாய்வு நேற்றிரவு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உலகநாயகன், கலைஞானி, பத்மஸ்ரீ, டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சேரன், லிங்குசாமி, அமீர் உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் கலந்துகொண்டனர். ப்ரியதர்ஷினி தொகுத்தளித்தார்.
மற்றவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப்பற்றியும் தற்போதைய தமிழ்த்திரைப்படங்களில் வரவேண்டிய முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் குறித்தும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க, நிறைகுடம் கமல் மட்டும் அவ்வப்போது நடிகர்திலகத்தைப்பற்றி நினைவுகூர்ந்து, அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி, தற்போதைய பிரச்சினைகளைப் பற்றி அலசும் ஒரு திரைப்படக் கலந்தாய்வில், நடிகர்திலகத்தை நினைவுகூர்வது என்பதும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப்பற்றி உய்ர்வாகக்குறிப்பிடுவதை தன் கொள்கைகளில் ஒன்றாக வைத்திருக்கும் கமல் அவர்களின் குருபக்தி நம்மை சிலிர்க்க வைக்கிறது.
இத்தனைக்கும், கமல் அவர்களிடம் நடிகர்திலகத்தின் தாக்கம் குறைவு. அவரிடம் எடுத்துக்கொள்ள வேண்டியதை எடுத்துக்கொண்டு, அதை தன் பாணியில் வெளிக்கொணர்வது என்பது கமலின் இயல்பு. ஆனால், நடிகர்திலகத்தை அப்பட்டமாக காப்பியடித்து நடித்து பேரும் புகழும் அடைந்தவர்கள் பலரே, அவரைப்பற்றி பேசுவது பாவம் என்பது போல் இருக்க, சமயம் வாய்க்கும்போதெல்லாம் நடிகர்திலகத்தைப் பற்றி உயர்த்திப்பேசி பெருமைப்படுத்தும் கமல் அவர்களின் பண்பு போற்றுதலுக்குரியது.
நடிகர்திலகத்தைப்பற்றி வழக்கம்போல வெளியிடும் ஆதங்கத்தையும் வெளியிட்டார். அவருடைய இறுதிக்காலத்தில் அவரது திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் வழங்கப்படவில்லை என்பதைச் சொல்லும்போது "ஒரு சிங்கத்துக்கு வெறும் தயிசாதம் கொடுத்தே கொன்னுட்டோம்".
இன்னொரு விஷயம், நேற்றைய கலந்துரையாடலில் கமல் மட்டுமே நடிகர்திலகத்தைப் பற்றிப்பேசினார். மற்றவர்கள் அவரைப்பற்றி வாய்திறக்கவே இல்லை. அவர் பேசியதைக்கூட தொடரவில்லை.
தமிழ்த்திரைப்படத்தை உலகத்தரத்துக்கு உயர்த்துவதையே தன் உயிர்மூச்சாகக்கொண்டு வாழும், அதற்காக ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் டாக்டர் கமல் அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் இதய்ப்பூர்வமான வாழ்த்துக்கள்.