நான் சுவாசிக்கும் சிவாஜி (16) - ஒய்.ஜி. மகேந்திரன்
இமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, 'மாயாலு' என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, 'சோல்டி ஓபராய்' என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு தங்கிய, இரண்டாவது நாளே, சிவாஜி, 'நீங்கள் எல்லாம் ஜாலியாக ஒன்றாக தங்கியிருக்கீங்க. நான் மட்டும் அங்கு தனியாக கஷ்டப்படணுமா...' என்று கேட்டார். முக்தா தவித்தார். 'சிவாஜி தங்குகிற மாதிரி பெரிய அறை எங்கள் ஓட்டலில் இல்லை...' என்று கூறிய ஓட்டல் முதலாளியே, அதற்கு ஒரு தீர்வும் கண்டுபிடித்தார். இரு அறைகளுக்கு நடுவே இருந்த சுவரை உடைத்து, அறையை பெரிதாக்கினார்.
இரண்டாவது நாளே சிவாஜியும், கமலாம்மாவும் எங்கள் ஓட்டலிலேயே தங்கினர். ஓட்டல் அறையிலேயே கமலாம்மா, சிவாஜிக்கு உணவு சமைத்தார். சில நாட்கள் எங்களுக்கும் அவரின் தயவால், சுவையான வீட்டு சாப்பாடு கிடைத்தது.
காட்மண்டு நகரம், சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் பெற்றது. சிவாஜிக்கு தெரியாமல், நாங்கள் பயந்து பயந்து, அங்கு செல்வோம்.
ஒரு நாள், சூதாட்ட விடுதியொன்றில் ஷூட்டிங் நடந்தது. தேங்காய் சீனிவாசன் பெண் வேடத்திலும், மனோரமா ஆண் வேடத்திலும், நானும் நடித்த காமெடி சீனை பார்க்க வந்திருந்த சிவாஜி, அங்கு இருந்த இயந்திரத்தில், ஒரு நாணயத்தை போட்டு, கைப்பிடியை இழுத்தார். நாணயங்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பக்கத்திலிருந்த நடிகர் ஒருவரிடம், அதை அப்படியே கொடுத்துவிட்டு, வெளியே சென்று விட்டார்.
இதைப் பார்த்த தேங்காய் சீனிவாசன், 'நாமும் தான் இழுத்தோம்... வேர்வை தான் கொட்டிச்சு. அவர் இழுத்தால், உடனே, 'சடக்கு சடக்கு'ன்னு பணம் கொட்டுதேப்பா. அந்த சமயம் பார்த்து, அவர் பக்கத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே...' என்று, அவரது பாணியில் அங்கலாய்த்ததை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும்.
தமிழ் நடிகைகளில், நடிப்பு திறமைக்கும், சுத்தமான தமிழ் உச்சரிப்புக்கும், புகழ் பெற்றவர் நடிகை எம்.என்.ராஜம். தினமலர் - வாரமலர் இதழில், நான் எழுதும், 'நான் சுவாசிக்கும் சிவாஜி' தொடர் கட்டுரையை படித்து, சிவாஜியுடனான அவரது அனுபவத்தை, என்னோடு பகிர்ந்து கொண்டார். சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது.
சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம்.
அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது.
அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர்.
அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும்.
அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.
நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.
சிறந்த நகைச்சுவை நடிகையும், தற்போது தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் காரியதரிசியாக பணியாற்றி வரும் குமாரி சச்சு, என் நீண்ட கால சிநேகிதி. சிறுமியாக இருக்கும் போதே சிவாஜியுடன் நடிக்கும் பாக்கியம் பெற்றவர். எதிர்பாராதது படத்தில், ஒரு ஜிப்ஸி பெண்ணாக, நடித்திருந்தார் சச்சு. சிவாஜியுடன் சேர்ந்து நடித்த போது நடந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி என்னிடம் கூறினார் சச்சு. அது: சிவாஜியுடன் நீண்ட வசனத்தை பேசி, நடிக்க வேண்டிய ஒரு காட்சியில், ஒன்றரை பக்க வசனத்தை, நான் பேசி நடித்ததும், சிவாஜி பாராட்டி, 'ரொம்ப நல்லா வசனம் பேசறே... ஆனால், அதிலே குழந்தைத்தனம் அதிகமாக தெரியணும். ஆனால், நீ ரொம்ப மெச்சூர்டாக பேசியிருக்கே. குழந்தை போல எப்படி பேசணும்ன்னு, நான் பேசி காட்டுகிறேன் பாரு...' என்று கூறி, முழு வசனத்தையும் பேசி காண்பித்தார். நடிப்பில் நான் பெற்ற முதல் பாடம் இது!
இதற்கு நேர்மாறாக, இன்னொரு அனுபவம் எனக்கு நடந்திருக்கிறது. சிவந்த மண் ஷூட்டிங்கில், அன்று, ஒரு முக்கிய சீன். எனக்கு ஏதோ டென்ஷன். மீண்டும் மீண்டும் டயலாக்கை உளறினேன். நாலு ஐந்து, 'டேக்' ஆகி விட்டது. எப்போதுமே கோபப்படாத சிவாஜி, அன்று, என்னை திட்டி விட்டார். உடனே, சுதாரித்து, சரியாக பேசினேன். ஆரம்பத்தில், சிவாஜியின் மோதிரக் கையால் குட்டு வாங்கிய நான், இன்று திட்டு வாங்கி விட்டேனே என்று, எனக்கு வருத்தம். 'நமக்கு சொந்த பிரச்னைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், நடிக்க வரும் போது, அவற்றையெல்லாம் வீட்டிலேயே விட்டு விட்டு வர வேண்டும்...' என்று அறிவுறுத்தினார் சிவாஜி, என்றார் சச்சு.
என்னைப் பொறுத்த வரை, இது, நடிகை சச்சுவிற்கு மட்டும் கூறிய அறிவுரை இல்லை. எல்லா நடிகர்களுக்குமே, இதை ஒரு பாடமாகத்தான், பார்க்கிறேன்.
சிவாஜியின் இரண்டாவது படம், பூங்கோதை. சிவாஜிக்கு அப்பாவாக நாகேஸ்வர ராவ் நடித்தார். நடிகை அஞ்சலி தேவி தான் தயாரிப்பாளர்.
சிவாஜியும், நாகேஸ்வர ராவும் நெருங்கிய நண்பர் கள். துக்காராம் - நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்கு படத்தில், சிவாஜி, சத்ரபதி சிவாஜியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கும் தயாரிப்பாளர் நடிகை அஞ்சலி தேவி தான்! நாகேஸ்வர ராவ் நடித்து, சூப்பர் ஹிட்டான, பிரேம் நகர் படம் தான், தமிழில், ரீ-மேக் ஆகி, சூப்பர் ஹிட்டான வசந்த மாளிகை.
— தொடரும்.
எஸ்.ரஜத்