Quote:
சிங்கப்பூரில் கஸ்தூரி
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கஸ்தூரி தொடர், 1300-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈஸ்வரிராவ் நாயகியாக நடிக்கும் இந்த தொடர், பரபரப்பான திருப்பங்களால் கதைப்போக்கை சுவாரசியமாகவே வைத்திருக்கிறது.
ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட இரண்டு மனைவிகள் கதை இது. இதில் ஆச்சரியம், இருவரும் ஒற்றுமையாக இருப்பது தான். இதுவே அவர்களின் கணவனுக்கு அன்புத்தொல்லையாகி விடுகிறது. ஒருத்தி கணவன் காலையில் எழுந்ததும் அவனுக்கு நீராகாரம் கொடுக்க, அடுத்தவளோ காபி குடிக்க கட்டாயப்படுத்துகிறாள். மதியம் பசி நேரத்தில் ஒருத்தி பிஸ்சாவை நீட்டினால் இன்னொருத்தி மணக்கமணக்க கருவாட்டுக் குழம்பு வைத்து சாப்பிட கட்டாயப்படுத்துகிறாள். இதனால் இருவர் விருப்பத்தையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், புறந்தள்ளவும் முடியாமல் அவர்களின் கணவன் படும்பாடு பெரும்பாடு தான்.
கதை இப்போது சிங்கப்பூர் களத்தில் இருக்கிறது. இதற்காக படப்பிடிப்புக் குழுவினர் சிங்கப்பூருக்குப் போனார்கள். சிங்கப்பூர் கதைப்பின்னணியில் குணாளன் அறிமுகமாகிறார். இவர் `சிங்கக்குட்டி' படத்தில் வில்லனாக அறிமுகமானவர். சிங்கப்பூரில் ஆடிட்டராக இருக்கும் காதர், தொடரில் இன்னொரு முக்கிய கேரக்டரில் வருகிறார்.
தொடரில் கஸ்துரியின் உறவினர்கள் தொடர்பான காட்சிகள் முதல் ஐநூறு எபிசோடுகளில் இடம் பெற்றன. இப்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் இந்த உறவினர்கள் மறு படியும் வருகிறார்கள். கஸ்தூரியின் உறவுப்பின்னணியை அப்போது பார்த்தவர்களுக்கு இது ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும் மற்றவர் களுக்கு கதையில் புதிய அனுபவமாக இருக்கும்.
தவிரவும் கஸ்தூரி முன்மாதிரி இல்லை. இப் போது ரொம்பவே மாறி விட்டாள். ஆபீசுக்குப் போய் வருகிறாள். அதே உதவும் குணம் இப்போதும் நீடிக்கிறது. தொடரில் இப்போது அதிரடி திருப்பமாக வீட்டை விட்டுப்போன இரண்டாவது மனைவி வந்து விடுகிறாள். அவள் வந்தவேளை எதிர்பாராமல் கஸ்தூரியின் குழந்தை இறந்து விடுகிறது. இனியாவது இந்த ஒற்றுமைத் திலகங்களுக்குள் பிரச்சினை வருமா? பரபரப்பாக தொடர்கிறது, தொடர்.
தொடரில் ஜெயகிருஷ்ணா, ஈஸ்வரிராவ், எஸ்.கவிதா, வடிவுக்கரசி, சமந்தா, லதா முக்கிய கேரக்டர்களில் நடிக் கிறார்கள்.