The history of dravidan movement
அன்புடையீர் வணக்கம் !
சகோதரர்களும், நண்பர்களும் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க,
தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, நமது இதய தெய்வம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், இன்றைய தலைமுறையினரும், வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.
இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.
கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.
எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்.
திரி அன்பர்கள் அனைவரும், இதில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட சினிமா செய்திகள் பதிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். இதில், முழுக்க முழுக்க அரசியல் செய்திகள் பதிவிடப்படும் என்பதனயும் தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்க அன்புடன் வேண்டும்,
சௌ. செல்வகுமார்