-
10th September 2013, 10:37 AM
#131
Junior Member
Newbie Hubber
A well done trailer.Congrats to Subbu and Vasu and wishing for a great success. kindly exhibit in the main thread.
-
10th September 2013 10:37 AM
# ADS
Circuit advertisement
-
15th September 2013, 12:49 PM
#132
Junior Member
Newbie Hubber
ஆலய மணி- 1962
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.
ஆலய மணியின் கதையை பார்ப்போம்.
பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.
இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.
இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.
மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.
பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.
ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.
இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.
கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.
Last edited by Gopal.s; 15th September 2013 at 12:52 PM.
-
19th September 2013, 07:24 AM
#133
Junior Member
Newbie Hubber
ஞான ஒளி-1972
நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.
ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.
Typical Behaviours of an orphan-
1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.
மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .
அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.
தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.
poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.
obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?
துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
-
21st September 2013, 02:14 PM
#134
Junior Member
Newbie Hubber
கூடிய விரைவில்......
ரோஷமான் - அந்த நாள் - ஒப்பீடு. ஒரு சிறு முன் முயற்சி.
-
30th September 2013, 10:13 AM
#135
Junior Member
Newbie Hubber
என்னை மிக மிக கவர்ந்த P _R என்ற அதிசய இளைஞனின் அற்புத பதிவு. எனக்கு இந்தியாவின் ஒரே உலக அதிசயம் எழுதும் inspiration கொடுத்த சிறந்த பதிவு.(மார்ச் 2008 பாகம்-4 இல் வெளியானது)
தேவர் மகன்- 1992
மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.
இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.
இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.
இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.
நடிப்பு என்பது என்ன ?
ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:
'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).
இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.
ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது
இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.
இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.
இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )
இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.
காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.
அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)
கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.
எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.
தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.
நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.
தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.
சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.
படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.
பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.
"சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.
வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :
"ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"
"என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
"நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"
இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.
'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.
படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.
புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.
பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.
ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.
தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:
"நீ எப்பிடி செய்வே ?"
"....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."
"ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.
தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.
"...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.
ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.
தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !
----To be continued.
Last edited by Gopal.s; 30th September 2013 at 10:21 AM.
-
30th September 2013, 10:24 AM
#136
Junior Member
Newbie Hubber
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )
இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.
பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.
அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.
அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)
அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.
"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.
"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.
பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....
"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.
சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.
இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"
முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).
"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,
"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.
பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.
பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.
உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.
பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.
வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.
கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.
உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.
பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.
கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?
இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.
சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.
"...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.
படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).
கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.
அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.
உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"
"டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.
அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.
"உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.
என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.
இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.
பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.
---To be continued.
Last edited by Gopal.s; 30th September 2013 at 10:29 AM.
-
30th September 2013, 10:32 AM
#137
Junior Member
Newbie Hubber
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.
ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.
கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
மகன் சாப்பிடவில்லை.
பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.
ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.
ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.
பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.
முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.
இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.
சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.
நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.
நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.
"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"
இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.
"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"
"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.
"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.
"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.
பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.
"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.
ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.
ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"
இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).
தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே
பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.
தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".
கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.
ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.
பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....
என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.
கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.
"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.
வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.
ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.
இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.
ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.
அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.
(முற்றும்)
Last edited by Gopal.s; 30th September 2013 at 10:40 AM.
-
9th October 2013, 07:31 AM
#138
Junior Member
Newbie Hubber
SIVAJI GANESAN SCHOOL OF ACTING
Sivaji Ganesan - the name itself vibrates your soul.
Bookmarks