அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


கடந்த பதிவின் இறுதி பகுதி

பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்த நாளன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக் வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.

நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.

வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.

[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].

சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.

எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது

உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.

நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.

ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்

இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.

(தொடரும்)

அன்புடன்