கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

8 சாதகமில்லா ஜாதகம்

”தேங்கும் அழகினைத் தீட்டியே மேலுமே
பாங்காக மாற்றும் பணிவு ” என்ற தனிப்பாடலும்
பணிவு உடையன், இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல, மற்றுப் பிற. என்ற திருக்குறளும் சொல்வது என்ன..எவ்வளவு தான் சொத்து வீரம், இருந்தாலும் சீரிய உடற்பயிற்சி எல்லாம் செய்ததில் உடல் பொலிவு பெற்றாலும் கூட ஒருவன் அடக்கம் கொளாதிருப்பின் அவனது அழகு மாறிவிடும்..பணிவு என்பது ஒரு மகத்தான விஷயம்..தன்னை விட வயதில், அறிவில் பெரியவர்களிடம் மதித்துப் பணிவது,, அனைவரிடமும் இன்சொலே பேசுவது என்பது அந்தக் காலத்தில் பொக்கிஷமாய் எங்கணும் நிறைந்திருந்தது எனலாம்!..

பலகளங்கள் கண்டவரும் முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனுமான ராஜாதித்யர் வெகுசாதாரணமாய் உடை அணிந்து தன் அரண்மனையில் வேலை பார்க்கும் சாதாரணக் காவலனுடன் (ஒருவேளை அவன் சொன்னதும் பொய்யோ) சிறியதொரு கோவிலில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் தன் தந்தையைத் தேடி வருவதே ஆச்சர்யமான விஷயம்.இதில் தன் வீட்டிலேயே பகை மன்னனின் ஆச்சார்யரைக் கண்டதும் பொங்கி எழாமல் இருந்தது இன்னொரு ஆச்சர்யம்..

அதை எல்லாம் விட ராஜாதித்யரும் வீரனும் இரண்டடி முன்னால் சென்று அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கவே, எழிலும் செய்வதறியாமல் தானும் வணங்கினாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த மாதவர் கிறீச்சென ஊஞ்சல் ஒலியெழுப்ப எழுந்தார்.. மன்னனின் மகனிடம் இப்படி ஒன்றை எதிர்பார்க்காததனால் சற்றே நெகிழ்ந்த மனத்துடன் அவர் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து வீரன், எழிலுக்கும் ஆசிகள் வழங்கி தரையில் அமர்ந்து அவர்களையும் அமரச் சொல்லவே அனைவரும் அமர்ந்தனர்..“ஆசார்யார் எல்லாருக்கும் ஆசி வழங்கினீர்..எனக்கில்லையே” என ராஜாதித்யர் பேச்சை ஆரம்பித்தவர் வியந்தார்..மாதவரின் கண்களில் சற்றே கவலை குடிகொண்டிருந்தது..

“ நான் வசிக்கும் நாட்டிற்கும், உன்னுடைய நாட்டிற்கும் நடக்கும் விவகாரஙக்ளில் என் பங்கு ஏதுமிலை ஆதித்தா..இங்கு வந்ததின் காரணம் பள்ளிகொண்ட சயனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமனைக் காண எனக்கு வெகு நாட்களாக ஆசை..தவிர இங்கு வந்தபோது இங்கு வந்திருக்கும் மற்றவர்கள் என்னுடன் வரவில்லை..தவிர இந்த ஓலைச் சுவடிகளைப்பார்த்தேன்..அதிலொன்று உன்னுடைய ஜாதகம்” என நிறுத்த ராஜாதித்தர் கேள்விக் குறியாய்ப் பார்க்க, “உன்னுடைய ஜாதகம் வெற்றி உனக்கும, கிருஷ்ணனுக்கும் உண்டு என்கிறது” எனச் சொல்லிக் கொஞ்சம் சோகப் புன்முறுவல் செய்தார்..

(தொடரும்)