Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 43

Thread: கடல் மைனா

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    சின்னக் கண்ணன்..

    8 சாதகமில்லா ஜாதகம்

    ”தேங்கும் அழகினைத் தீட்டியே மேலுமே
    பாங்காக மாற்றும் பணிவு ” என்ற தனிப்பாடலும்
    பணிவு உடையன், இன் சொலன் ஆதல் ஒருவற்கு
    அணி; அல்ல, மற்றுப் பிற. என்ற திருக்குறளும் சொல்வது என்ன..எவ்வளவு தான் சொத்து வீரம், இருந்தாலும் சீரிய உடற்பயிற்சி எல்லாம் செய்ததில் உடல் பொலிவு பெற்றாலும் கூட ஒருவன் அடக்கம் கொளாதிருப்பின் அவனது அழகு மாறிவிடும்..பணிவு என்பது ஒரு மகத்தான விஷயம்..தன்னை விட வயதில், அறிவில் பெரியவர்களிடம் மதித்துப் பணிவது,, அனைவரிடமும் இன்சொலே பேசுவது என்பது அந்தக் காலத்தில் பொக்கிஷமாய் எங்கணும் நிறைந்திருந்தது எனலாம்!..

    பலகளங்கள் கண்டவரும் முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனுமான ராஜாதித்யர் வெகுசாதாரணமாய் உடை அணிந்து தன் அரண்மனையில் வேலை பார்க்கும் சாதாரணக் காவலனுடன் (ஒருவேளை அவன் சொன்னதும் பொய்யோ) சிறியதொரு கோவிலில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் தன் தந்தையைத் தேடி வருவதே ஆச்சர்யமான விஷயம்.இதில் தன் வீட்டிலேயே பகை மன்னனின் ஆச்சார்யரைக் கண்டதும் பொங்கி எழாமல் இருந்தது இன்னொரு ஆச்சர்யம்..

    அதை எல்லாம் விட ராஜாதித்யரும் வீரனும் இரண்டடி முன்னால் சென்று அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கவே, எழிலும் செய்வதறியாமல் தானும் வணங்கினாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த மாதவர் கிறீச்சென ஊஞ்சல் ஒலியெழுப்ப எழுந்தார்.. மன்னனின் மகனிடம் இப்படி ஒன்றை எதிர்பார்க்காததனால் சற்றே நெகிழ்ந்த மனத்துடன் அவர் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து வீரன், எழிலுக்கும் ஆசிகள் வழங்கி தரையில் அமர்ந்து அவர்களையும் அமரச் சொல்லவே அனைவரும் அமர்ந்தனர்..“ஆசார்யார் எல்லாருக்கும் ஆசி வழங்கினீர்..எனக்கில்லையே” என ராஜாதித்யர் பேச்சை ஆரம்பித்தவர் வியந்தார்..மாதவரின் கண்களில் சற்றே கவலை குடிகொண்டிருந்தது..

    “ நான் வசிக்கும் நாட்டிற்கும், உன்னுடைய நாட்டிற்கும் நடக்கும் விவகாரஙக்ளில் என் பங்கு ஏதுமிலை ஆதித்தா..இங்கு வந்ததின் காரணம் பள்ளிகொண்ட சயனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமனைக் காண எனக்கு வெகு நாட்களாக ஆசை..தவிர இங்கு வந்தபோது இங்கு வந்திருக்கும் மற்றவர்கள் என்னுடன் வரவில்லை..தவிர இந்த ஓலைச் சுவடிகளைப்பார்த்தேன்..அதிலொன்று உன்னுடைய ஜாதகம்” என நிறுத்த ராஜாதித்தர் கேள்விக் குறியாய்ப் பார்க்க, “உன்னுடைய ஜாதகம் வெற்றி உனக்கும, கிருஷ்ணனுக்கும் உண்டு என்கிறது” எனச் சொல்லிக் கொஞ்சம் சோகப் புன்முறுவல் செய்தார்..

    (தொடரும்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,887
    Post Thanks / Like
    ம்ம்ம்....அப்புறம்?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. Likes chinnakkannan liked this post
  5. #13
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..
    சின்னக் கண்ணன்..

    முன்கதைச் சுருக்கம்!

    அவள் அழகான எழில்..அல்லது எழிலான அழகி..அவன் காவல வீரன்..வீரக்காவலன் எனலாம்..மூன்றாவதாய்ப்பேசுதற்கு ஒரு இளவரச சித்தப்பா. காலம் பராந்தக சோழன் காலம்; இருப்பது புன்னை பூதங்குடி; பார்ப்பது எதிரியின் குரு நாதரை..குரு நாதர் எதிரிக்கும் வெற்றி, சித்தப்பாவிற்கும் வெற்றி எனச் சொல்லிக் குழப்புகிறார்..

    புரியவில்லை எனில் தயை கூர்ந்து முப்பத்திரண்டு பாராக்கள் படித்து விடவும்!! அடுத்த போஸ்டில் ஒன்பதாம் அத்தியாயம்!.

  6. #14
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    சின்னக் கண்ணன்..

    9 பால், பழம், பனையோலை..

    மெளனம் என்பது எப்போது விளைகிறது.?. காதலன் தன் காதலியை முதன் முதலாகத் தீண்டும் போது அவளுடல் சிலிர்த்து வெட்கத்தில் நா ஒட்டிக்கொள்ள பேசவொண்ணாத நிலை ஏற்படுகிறது..பின்னால் அவள் பேச முற்பட்டால் விளையும் விளைவுகள் அனேகம்!. பெற்று வளர்த்து பொக்கிஷமாய் வளர்ந்த பெண் மணமாகிப் போகையில் தகப்பன் கொள்வது ஒருவித மெளனம்.. வாழ்க்கையில் நிகழும் சோகத் தருணங்களிலும் மெளனம் முதன்மைப் பங்கை வகுக்கிறது. எனினும் தன் வீட்டிற்கு ஆசார்யரும் ராஜாதித்தரும் வந்திருந்தும் அவர்களை சரிவர உபசரிக்காமல் தான் மேலும் மெளனமாய் இருப்பது தவறு என்பதை உணர்ந்த வீர நாராயணர் தனது மெளனத்தைக் கலைத்தார்..

    “ஆசார்யரே, ஆதித்தரே..அடுத்தடுத்து தங்கள் வரவால் கொஞ்சம் மனம் குழம்பி செய்ய வேண்டியவற்றை மறந்து விட்டேன்.. என்னை ஷமிக்க (மன்னிக்க) வேண்டும்..வானில் முழு நிலவு ஏறிவிட்டது.. எனில் இராப் போஜனத்திற்கு அடியேன் சிறியதாய் உணவளிக்க விரும்புகிறேன்..செய்யட்டுமா” எனக் கேட்க ஆசார்யர் மெல்லத் தலையசைத்ததும் எழிலிடம் “ எழில், போய் வேண்டிய ஏற்பாடுகள் செய்யம்மா” என்றதும் எழிலும் சற்றே தன் அழகிடை ஒசித்து ஒசித்து தனது கரு நாகப் பாம்பையொட்டிய ஒற்றைப் பின்னலை முன்னால் இட்டுக் கொண்டு வெகு நளினமாய் உள்ளே சென்றாள்..

    பின்னர் ஆசார்யர் சொன்னது புரியாமல் திகைத்திருந்த ராஜாதித்தர் அதை வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தார்..”மாதவரே, சற்று நாழிகைக்கு முன்னால் இந்த முத்து மோதிரம் இந்த வீரனை அடைந்தது..அதன் பின்னால் இருக்கும் ராஷ்டிர கூட மொழியில் (கன்னடம்) எழுதப் பட்டிருக்கும் எழுத்துக்களை வைத்து அங்கிருந்து சிலர் இங்கு வந்திருப்பார்கள் என நினைத்தேன்..அதுவும் இந்த மோதிரம்…”

    சொல்லிக் கொண்டு வந்தவர் நிறுத்தினார். காரணம். எழிலும் அவள் அன்னையும் ஒரு பணிமகளும் சில வெள்ளித் தட்டுகளில் பொன்னிற மாம்பழங்களையும், கருகருவென்ற திராட்சைப் பழங்களையும், இன்னபிற கனிகளையும் வைத்து, பின் ஒரு தாமிரப் பாத்திரத்தில் சுடச்சுடக் கொதித்திருந்த பசும்பாலையும் கொண்ர்ந்து பரத்தினர். சூடாக இருந்த பசும்பாலின் மேல் சிறிதே மஞ்சள் பொடி இட்டிருந்ததால் அதுவும் பார்க்கப் பொன்னிறமாய்ப் பளபளத்தது.. தனது ஒற்றைப் பின்னலை வட்டமாய்ச் சுருட்டிக் குட்டிக் கருமேகமாய்த் தலையில் வைத்திருந்த எழில், மடமடவென விருந்தினர் வந்தால் கொடுப்பதற்காக உள்ளே வைத்திருந்த வெள்ளிக் கிண்ணங்களில் பாலை இட்டு, ஒவ்வொரு பழத் தட்டையும் ஒரு குவளைக் கிண்ணத்தில் பாலும் தனித்தனியாக அனைவரிடமும் வைத்தாள்.. வீரனுக்கருகில் பழத்தட்டை வைத்த போது எதேச்சையாகவோ வேண்டுமென்றோ அவள் கண்கள் அவனது கண்ணை ஊட, பழத்தட்டைப் பார்த்த வீரன் கண்ணில் ஒரு மாங்கனியின் கீழ் சொருகியிருந்த சிறு ஓலை தட்டுப் பட்டது..

    (தொடரும்)

  7. #15
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    சின்னக் கண்ணன்..

    10 ரேவா தேவியும் ரேணுகா தேவியும்.

    பசி என்பது என்ன..உடலுழைத்துக் களைப்படைகிறது.. அப்போது உடலுக்குத்தேவை என்ன? சக்தி. அப்படி உடலுக்குப்
    “ பிணைக்கின்ற சக்தியை பக்குவமாய்ச் சொல்லும்
    அணையா நெருப்புதான் ஆம்”. என்பர் பெரியவர்கள்.. அதுவும் சூரியன் நடுவில் ஏறிவிட்ட உச்சிப் பொழுதில் தான் தஞ்சையிலிருந்து புறப்பட்டதாலும் எங்கும் தங்காமல் நேரே வீர நாராயணர் வீட்டிற்கு வந்து விட்ட போதிலும் நிகழ்ந்த சம்பவங்களால் மறைந்திருந்த ராஜாதித்யரின் பசியானது பழங்களைக் கண்டதும் மேலெழுந்தது எனலாம்..அரை நாழிகைப் பொழுதில் பழங்களும் பாலும் எப்படி மறைந்தது என்பதை அறியவில்லை அவர்..மாதவரும் கூட ருசித்து அருந்தினார். பின் கொல்லைப் புறத்தில் கைகழுவி மறுபடியும் உள்ளமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

    “மாதவரே..எனக்கு ஒரு தகவல் கிட்டியிருந்தது..அதைச் சரிபார்க்கவே இந்த இடத்திற்கு நான் வந்தேன்..” என்றதற்கு மாதவர் எதுவும் பதில் பேசாதிருக்கத் தொடர்ந்தார்..”உங்கள் இளைய இளவரசி ரேணுகா தேவியும் மெய்க்காவல் தளபதி பூதகனும் குடந்தைப் பக்கம் வந்ததாகக் கேள்விப் பட்டோம்..இங்கு இருக்கும் வீர நாராயணருக்கு எதுவும் தெரியுமா எனக் கேட்பதற்கு வந்தோம்.வந்த இடத்தில் உமது தரிசனம் கிடைத்தது..தவிர எங்களது ஒற்றன் ஒருவன் இந்த முத்து மோதிரத்தை எங்களுக்கே அனுப்பியிருக்கிறான்..இது இளவரசியின் மோதிரம் என நினைக்கிறேன்..” என்றார்.

    மாதவர் சிரித்து, “ ராஜாதித்யரே.. உமக்கு அறியாத விஷயமில்லை.. ராஷ்டிர கூட மன்னன்.. நானிருக்கும்நாட்டு மன்னன். கிருஷ்ணனுக்கு நாட்டை விஸ்தரிக்க வேண்டும் என ஆசை தான்..ஆனால் அதற்காக தனது சகோதரியையும் மெய்க்காவலனையும் அனுப்பியிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது..ஆனால் அவ்வண்ணம் செய்பவரல்ல எம் மன்னர். தவிர கிருஷ்ணருக்கு முதல் தங்கையான ரேவா தேவிக்கு ரேணுகாவென்றால் மிகப் ப்ரியம்..அவராவது தனியாக வருவதாவது.. “ என்றார்..

    ராஜாதித்தர் மெல்லப் புன்முறுவல் புரிந்தார்..”ஆசைப் படுவதற்கு அளவு என்பது உண்டு மாதவரே.. கிருஷ்ணரின் ஆசை கொஞ்சம் பேராசை..சோழ நாடு அதற்கு இடம்கொடாது..” எனச் சொல்கையில் சுற்றுமுற்றும் பார்த்த போது அங்கே வீரனையும் எழிலையும் காணாது திகைத்தார்..”வீரன் கைகழுவச் சென்ற போது எழிலும் தொடர்ந்ததைப் பார்த்தேன்..பார்த்து வரவா” என வீர நாராயணர் கேட்க ராஜாதித்யர் தடுத்தார்..”வரும் போது வரட்டும்..மாதவரிடம் கொஞ்சம் பேச்சிருக்கிறது” எனத் தொடர்ந்தார்..அதே சமயத்தில் கொல்லைப் புறத்தில் வீரன் ஒரு பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதை அவர் அறியவில்லை..

    (தொடரும்)

  8. #16
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,887
    Post Thanks / Like
    சஸ்பென்ஸ் கொல்கிறதே!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #17
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    சின்னக் கண்ணன்..

    11 அசைந்த சிற்பம்.

    ஒரு பொருள், ஒரு காட்சி, ஒரு உருவம் என்பது மனதில் பதிவதென்பது எப்போது?.. அந்தப் பொருள் மிக அழகிய ஒன்றாக இருக்கவேண்டும். அந்தக் காட்சி மறக்க இயலாத இயற்கைக் காட்சியாக-உதாரணத்திற்கு சில சமயங்களில் வெளிர் நீலம் படர்ந்த வானத்தில் வெண்மேகங்கள் பலவிதமாய்ச் சூழ்ந்து சிலப் பல உருவங்களைத் தோற்றுவிக்கும்..யானை போல ஒரு மேகம் வாயைத் திறந்தாற்போலிருக்க அதன் காலடியில் முதலையைப் போல ஒரு மேகம் கவ்வுவது போல-இன்னபிற விதமாகவும்- இருப்பின் மறக்க நாளாகும்.. ஒரு உருவம் என்றால்- ஆணாயிருப்பின்கட்டுக்கோப்பான உடல்,தெளிவான கண்கள்,தீர்க்கமான அறிவு- பெண்ணாயிருப்பின் மேற்கண்ட மூன்றுடன் கூட பிரமிக்க வைக்கும் அழகு இருந்தால் அந்தத் தோற்றம் சுங்கச் சாவடியில் வரி செலுத்தியதும் பண்டங்களுள்ள பெட்டிகளில் வைக்கப்படும் அரக்கு முத்திரைபோல மனதில் சப்பக் எனப் பதிந்துவிடும் எனலாம்.!

    அதுவும் ராஷ்டிரகூடச் செல்வி ரேணுகா தேவியை எட்டு வருடம் முன்னர் பார்த்த போதே அவள் முகத்தில் தெரிந்த பொலிவு,தெளிவான பேச்சு, அழகிய முகம் எல்லாம் ராஜாதித்யரின் மனத்தில் பதிந்தே தான் இருந்தன.இந்த வருடங்களில் அவள் உடல்நில பலவித மாற்றங்கள் கொண்டிருக்கும் என்பது தெரிந்தாலும்அவள் வந்திருக்கிறாள் எனற சேதி வந்ததும் பார்க்க வேண்டும் என ஆவல் உந்தியதாலும் என்ன காரணம் என அறிவதற்காகவும் வந்து மாதவரிடம் கேட்டால் மாதவர் சொன்ன பதில் அவருக்கு ஏமாற்றத்தையே விளைத்தது. வீரனைத் தேடிச் செல்ல நினைத்த வீர நாராயணரையும் தடுத்து நிறுத்தி மாதவரிடம் மறுபடி கேட்டார்..மாதவர் மெல்லிய முறுவலுடன்“ ராஜாதித்யா எனக்குத்தெரிந்தால் சொல்ல மாட்டேனா..சரி.நான் கேட்பதற்குப் பதில் கூறு..அரிஞ்சயன் காஞ்சி அரண்மனையிலா இருக்கிறான்..” எனக் கேட்டார்.

    வியப்பின் வசப்பட்டார் ராஜாதித்யர். தானும் தந்தையும் போன மாதம் தான் ஆலோசனை அறையில் முடிவெடுத்து அரிஞ்சயனை காஞ்சி அரண்மனைக்கு அனுப்பியிருக்க இவருக்கு எப்படித் தெரிந்தது”என. பதிலுக்கு “ஆமாம்” என்று மட்டும் சொல்ல “இல்லை..காஞ்சியின் வரதனையும் தரிசிக்கலாம் என நினைத்திருக்கிறேன்..ம்ம் அது பற்றி உன்னிடம் காலையில் சொல்கிறேன்” என்ற மாதவர் வீர நாராயணரிடம் “ நாராயணா..எனக்கு தலைக்கு ஒரு பலகையும் ஒரு விரிப்பும் கொடுக்கிறாயா.. நான்உறங்க நினைக்கிறேன்” எனக் கூற, அவர் அவ்வண்ணமே எடுத்துக் கொடுத்தார்.. ராஜாதித்யரும் மாதவரிடம் விடை பெற்று வீர நாராயணருடன் வாசலுக்கு வந்து “ நாராயணரே.. நான் சிறிது தூரம் நடந்து விட்டு வருகிறேன்” எனச் சொல்லித் தெருவில் இறங்கி நடந்தார்..

    தெருவில் அனைத்து வீடுகளும் தூக்கத்தில் மூடியிருக்க, அங்கங்கே சில வீடுகளின் வாசல்களில் இரவுக்காக வைக்கப் பட்ட ஒற்றைத் தீப்பந்தங்கள் சோகையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. முழு நிலவு வருவதற்கு இரு நாள்கள் தானென்பதால் வானத்தில் இருந்த நிலவு நன்றாகவே தன் தண்ணொளியைக் கீழே வீசிக் கொண்டிருந்தது..முதல் ஜாமம் முடிந்து இரண்டரை நாழிகை* கடந்திருந்ததால் உறக்கம் வர மறுத்த சில இனம் தெரியா பூச்சிகளும் சலசலவென மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தன..தெருவைக் கடந்து கோவில் செல்லும் பாதையில் நடந்த ராஜாதித்யர் கோவிலின் பிரகாரத்தின் இடதுபுறமிருந்த நந்தவனத்தில் நுழைந்த போது ஒரு புன்னை மரத்தின் அருகே ஒரு சின்னத் தீப்பந்தம் சிறு ஒளியைச் சிந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அந்த இடத்திற்குச் செல்ல அங்கே அவர் கண்டது ஒரு அழகிய சிற்பத்தின் நிழல்.. அடுத்த நொடியில் அந்தச் சிற்பம் சற்றே அசைந்தது..!..

    ) (தொடரும்) (* இரவு பத்து மணி)

  11. #18
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    சின்னக் கண்ணன்..

    12 புஷ்ப எச்சரிக்கை..!.

    சில பேருக்குப் பெயர் வெள்ளையப்பன் என்றிருக்கும்..ஆள் பார்க்கக் கொஞ்சம் கற்சிற்ப நிறத்தில் இருப்பான்.. சில பெண்களுக்கு முத்தழகி எனப் பெயரிருக்கும்.. பற்களின் காரணமாக இருக்குமோ என எண்ணிப் பார்த்தால் பல்வரிசை சற்றே தவறியிருக்கும்! ராஜாதித்யர் தோற்றத்திலும் இளவரசர் தான்..ஆனால் பிராயம் தான் நாற்பதை நெருங்கியிருந்தது. அதனால் அவரது கம்பீரம்,வீரம்,அழகு எதுவும் குறையவில்லை.. இருந்தாலும் மன்னவர் பராந்தகர் நல்ல உடல் நிலையில் இருப்பதால் அவருக்கு ராஜ யோகம் என்பது குறைவு தான்..அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப் பட்டதேயில்லை.. என்ன, இந்தக் காலத்தைப் போல் அந்தக் காலத்திலும் இப்படிப் பட்ட சூழல் இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யம் தான்!

    கோவில் பிரகாரத்திற்கு முன்னமேயே இருந்த அந்த நந்தவனமானது அடர்ந்த புன்னை மரங்கள் பல கொண்டு அமைந்திருந்தது.. கூடவே சில வரிசைகளாய் வைக்கப் பட்டிருந்த புஷ்பச் செடிகள் அந்த நிலவொளியில் சற்றே நிறம் மங்கித் தெரிந்து சிரித்துக் கொண்டிருந்தன.. புன்னை மரங்கள் கூட புஷ்பிக்கும் காலமென்பதால் மேலே வெண்ணிறமும் உள்ளே மஞ்சள் வண்ணமும் கொண்ட தனது பூக்களை மேலிருந்து தரையிலும் அழகாய்த் தூவியிருந்தன..

    மேலிருந்து ராஜாதித்தர் நுழைவதைப் பார்த்துக் கொண்டிருந்த நிலவுப் பெண்ணும் அந்த நந்தவனத்தில் வீசிய தென்றல் காற்றினால் சற்றே சிரிப்பது போலிருந்தது.. திடீரென ஒரு கிராமத்தில் தான் வந்து தங்கும்படியான நிகழ்வு ஏற்படும் என்பதைச் சிந்தித்திராத ராஜாதித்தர் அதைப் பற்றி யோசித்தபடியே நந்தவனப் பாதையில் கொஞ்சம் வேகமாக நடந்தார்..சற்றே பெரிய நந்தவனமாகையால், நிலவொளி காரணமாக இருள் சற்றே மட்டுப் பட்டிருந்தது..இருந்தாலும் சில பல இடங்களில் இருளின் ஆக்கிரமிப்பு கொஞ்சம் அதிகமாய் இருந்தது..அப்படிப் பட்ட இருள் சூழ்ந்த இடங்களில் ஒன்றாய் கொஞ்சம் தூரத்தில் இருந்த ஒரு புன்னை மரத்தின் கீழ் தான் அந்தப் பந்தம் கொளுத்தப் பட்டதைப்பார்த்தார் அவர்..கூடவே நிழல் சிற்பத்தையும் அதன் அசைவையும்..

    அந்தப் புன்னை மரத்தை நோக்கி வேகமாக நடக்கையில் தரையில் சிதறியிருந்த புன்னை மரத்தின் புஷ்பங்கள் ஏதோ தகவல் சொல்வது போலும் அவரை ஆர்வமாய்ப் பார்த்தன.. காற்று கூட சற்றே சலசலத்து அவரது தோளிலிருந்த சிறியமெல்லிய துண்டினைத் தட்டி விட்டு அவரைச் சற்றே எச்சரித்தது..ஒருகையை வேகமாகக் காற்றில் வீசி மறு கையால் தாடியைச் சற்றே கோதியபடி அந்த இடத்தை அடையவும் பந்தம் அணையவும் சரியாக இருந்தது..!

    (தொடரும்)

  12. #19
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,887
    Post Thanks / Like
    திக் திக் திக் சஸ்பென்ஸ்! வர்ணனைகளும் உபமான உபமேயங்களும் அருமை!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  13. Thanks chinnakkannan thanked for this post
  14. #20
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    *
    சின்னக் கண்ணன்..

    *
    13 இருளும் ஒளியும்..!.

    *

    மனதில் சோகம் நிரம்பியிருப்பின் சோக இருள் சூழ்கிறது என்கிறோம்..அதுவே உறக்கம் வருகிறது எனில் விளக்கைத் தூண்டி அணைத்து விட்டு, கண்களை இறுக்க மூட்டி இருளை வரவழைத்துக் கொள்கிறோம். அதுவரை பார்வையில் இருந்த வெளிச்சக் காதலி வெறுப்புடன் விலகிச் செல்ல உறக்கக் காதலி வந்து நம்மை ஆட்கொள்கிறாள்!. ஆனால் புன்னை மரத்தடியை நோக்கி நடந்திருந்த ராஜாதித்தரின் கண்கள் திறந்திருந்தாலும் முன்னால் ஒரே இருளோவென்று இருந்தது.- அதுவும் அதுவரை சிறு வெளிச்சம் இருந்து மறைந்ததால்.. அவரது இடதுகை கொஞ்சம் எச்சரிக்கையாக இடையிலிருந்த குறுவாளுறையைத் தடவிக் கொண்டது..வேகவேகமாக அந்தப் புன்னை மரத்தின் பின்னே சென்றால் வியப்பு ஆட்கொண்டது அவரை..இருள் முழுவதுமாக அந்த மரத்தருகே போகும் வரை சூழ்ந்திருந்ததாலும் பின்னால் கொஞ்சம் கிளைகளினூடே பாய்ந்த நிலவொளியில் சற்றே மரத்தில் சாய்ந்து கண்களில் சிரிப்பு மின்ன அவரைப் பார்த்தவாறு மெல்லிய புன்னகையோடு நின்றிருந்தது ஒரு பெண்ணுருவம்..

    *

    ராஷ்டிர கூடப் பெண்களின் அந்தக் கால வழக்கப் படி தலையில் சேலையை முக்காடு போல் போர்த்தியிருந்தாள் அவள்.. அவளது புன்னை மரப் புஷ்பத்தின் வெண்மையை ஒத்த நாசியில் சொகுசாக உறவாடிய ஒற்றைவட்டப் புல்லாக்கு அவள் முகத்தின் அழகைக் கூட்டியது.. நெற்றியில் அணிந்திருந்த ஒரு வைரப் பொட்டு கீழே அவள் கண்கள் பளிச்சிடும் அழகைக் கண்டு பொறாமையில் ஒரு மாற்றுக் குறைவாய்த் தான் ஜொலித்தது.. செக்கச் சிவந்த மாதுளைக் கனிகளின் முத்துக்களைப் போன்ற உதடுகள் நீரோட்டம் கொண்டு மிகுந்து அந்த நிலவொளியிலும் மினுமினுத்தன.. சின்னதாகப் புன்னகை புரிந்ததில் அவளது சதைப்பற்று மிகுந்த மாம்பழம் போன்ற கன்னங்களில் ஒற்றைக் கன்னத்தில் விழுந்த குழியானது இந்த அழகி எவனுக்குக் குழி பறிக்கப் போகிறாளோ என்பதை எண்ணியதாலோ என்னவோ நெற்றியிலிருந்து விழுந்த ஒற்றைக் கரு முடியானது அவள் கன்னத்தில் முட்டி மோதி மறைக்கப் பார்த்துக் கொண்டிருந்தது. கீழே கழுத்து, மற்றும் அழகிய ஆடை மறைத்த உடலினை நிலாவெளிச்சம் அவ்வளவாகக் காட்டாததினால் ராஜாதித்யரால் பார்க்க இயலவில்லை!

    *

    ஆனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதுவேக வேகமாய் நீரோட்டம் அலையடித்துச் செல்வது போல் அவரது உற்சாகம் பெருக்கெடுத்தது..அவரது வாயிலிருந்து ராஷ்டிர கூட மொழியில் அந்த நாட்டுப் பாடலொன்றும் வந்தது. அது தமிழில் என்னவென்றால்:

    கூராய்ப் பாயும் கண்ணவெச்சு கூறுபோட்டே என்நெஞ்ச
    வேறு நாட்டில் இருந்தாலும் வேறாய்ப் போகா தெம்மனசு
    ஊரக் கொஞ்சம் ஒதுக்கிவச்சு உன்னோ டநான் சேருதற்கு
    வாரும் நல்ல காலமின்னு வாய்ப்ப நினச்சுக் காத்திருக்கேன்!”

    கொஞ்சம் கரகரத்த குரலில் பாடிய வண்ணமே அவளை நெருங்கினார் அவர்..

    *

    ராஷ்டிர கூடச் செல்வி ரேணுகா நல்முத்துக்களை மெலிதான தங்கத்தட்டில் இடும் போது எழும்பும் ஒலி போல மெல்ல நகைத்தாள்..”அதாவது வீரப் பெருமகனார், எட்டு வருடம் முன்பு இந்தப் பேதையைப் பார்த்து விட்டுச் சென்றவர் அவளைப்பற்றியே நினைந்திருக்கிறார் என்பதை நான் நம்ப வேண்டுமா என்ன.. இப்படி மாறிவிட்டீர்களே நீங்கள்.. கருத்து,இளைத்து, அதென்ன நரை முடி.. ம்ம் வேஷமாகத் தான் இருக்கும்.. நான் எழுதிய ஓலைகள் உங்களை அடைந்ததா எனத் தெரியவில்லை..பலவிதப்போர்களில் மிக மும்முரமாய் இருந்திருப்பீர்கள்.. என் நினைவு இருப்பதை நான் நம்பத்தான் வேண்டும்” உணர்ச்சி பூர்வமாய் அவள் சொல்கையிலேயே அவள் கண்ணோரம் நீர் துளிர்த்தது. “ஆனால் நான் அப்படி அல்ல” என்றபடி இடையிலிருந்து ஒரு ஓலை நறுக்கை எடுத்துக் காட்ட மங்கிய ஒளியில் அதில் தெரிந்தது சிகப்புக் கோடுகளால் வரையப்பட்ட ராஜாதித்தரின் ஓவியம்.. அதை அடுத்து ரேணுகா செய்த செய்கையினால் வானத்திலிருந்து சாதாரணமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலவுப்பெண் மிகுந்த வெட்கமடைந்து டபக்கென தன் முகத்தை அருகில் ஊர்ந்த மேகத்திடம் வேகமாய்ச் சென்று மறைத்துக் கொண்டாள்!

    *

    (தொடரும்)

Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •