Results 1 to 10 of 20

Thread: கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன்

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன்

    பொம்மை மாத இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் புத்தகமாக பதிப்பிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை 05.10.2014 ஞாயிறு தொடங்கி தினமலர் வார மலரில் தொடராக இடம் பெறுகிறது. தினமலர் வாரமலர் கிடைக்கப் பெறாத நம் ரசிக நண்பர்களின் வசதிக்காக இங்கே மீள்பதிவு மற்றும் இணைப்பு தரப்படுகிறது.

    தினமலர் வாரமலர் கிடைக்கப் பெறும் வசதியுள்ள நண்பர்கள் வாங்கிப் படிக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.

    கதாநாயகனின் கதை - 1

    தினமலர் வாரமலர் 05.10.2014




    வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.

    விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்?
    கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில் எனக்கென்று தனியாக, ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு.
    ஊருக்குள் எங்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. அது, 'துஷ்டர்கள்!' ஆக, சின்ன வயதிலேயே எனக்கும், பட்டத்திற்கும் ஒரு தனிப்பிடிப்பு உண்டு.
    வீதியிலே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று ஏதேனும் ஒரு அழுகுரல் கேட்கும். 'யாரடிச்சா... பாவம் பையன் அழறானே...'என்று கேட்டால், 'கணேசன் அடிச்சிட்டான்...' என்று, பல குரல்கள் ஒலிக்கும். அந்த அளவுக்கு, அப்போது என் கை ஓங்கி, தவறு... நீண்டிருந்தது.
    அடி வாங்கிய சிறுவனின் தாயோ, அக்காவோ என் தாயாரிடம், என் வீரத்தை பற்றி புகார் சொல்வர்.
    என் தாயார் நான் வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கையில் வெங்காயத்துடன் ஆவலாக காத்திருப்பார்.
    வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, 'வாடா மகனே... ஏன்டா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே...' என்று அன்புடன் அழைத்து, கையில் மறைத்து வைத்திருந்த வெங்காயத்தை, என் தந்தையின் துணையுடன், கண்களில் பிழிந்து விடுவார்.
    துடிப்பேன்... கதறுவேன்... கண்ணீர் வடிப்பேன்.
    'இனிமே இப்படிச் செய்ய மாட்டியே... வீண் வம்புக்கு போக மாட்டியே...'என்று, முதுகிலும் அன்பளிப்பு வழங்குவார்.
    இவ்வளவு வாங்கியும், நான் திருந்தினேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
    மறுநாளே என் துஷ்டத்தனம் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்து விடும்.
    இதனாலேயே என் பெற்றோர் எங்காவது வெளியே செல்வதென்றால், என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டே செல்வர். சில சமயம், வெளிக்கதவை பூட்ட மறந்து, தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு போய் விடுவர். அதைத் தெரிந்து, நானும் கதவை சாமர்த்தியமாக ஆட்டி அசைத்து, தாழ்ப்பாளை விடுவித்து, மதில் சுவரை தாண்டி குதித்து வெளியேறி விடுவேன்.
    'கணேசன் வந்துட்டான் டோய்...' என்று என் சகாக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவர்; அதைக் கேட்கும் போது, பெருமையாக இருக்கும்.
    என் பெற்றோர் வீடு திரும்பியதும், நான் வீட்டில் இல்லாததைக் கண்டுபிடித்து விடுவர். இரவு வீட்டிற்கு வரும் போது, வழக்கம் போல வெங்காயம் காத்திருக்கும்.
    அந்த அளவுக்கு படு துஷ்டை நான்.
    ஒரு சமயம் என் அண்ணன் தங்கவேலுக்கும், எனக்கும் ஏதோ தகராறு வந்து விட்டது.
    'வாடா வா... இன்னிக்கு ராத்திரி உன்ன அடிச்சுக் கொன்னுடறேன் பாரு...' என்று ஒரு தடியை துாக்கி வைத்துக் கொண்டேன்.
    பயந்து போய் அம்மாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என் அண்ணன்.
    'பாவிப்பய, உதவாக்கரை... செஞ்சாலும் செஞ்சுப்புடுவான்...' என்று, அன்றிரவு முழுவதும் துாங்காமல், என் அண்ணன் பக்கத்திலேயே படுத்திருந்தார் அம்மா.
    ஆனால், நானோ தடியை பக்கத்தில் வைத்துக் கொண்டே நிம்மதியாக துாங்கி விட்டேன்.
    அப்போது, ஊர்க்காவல் என்று ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருடர்கள் வராமல் தடுக்க, நான்கு வீட்டுக்கு ஒருவராக சிலர் சேர்ந்து, இரவு நேரத்தில் தெருவில் ரோந்து வருவது வழக்கம்.
    திருடனை சமாளிக்க வேண்டுமென்றால், முரட்டுத்தனம் உள்ளவர்கள் தானே வேண்டும்? என்னிடம் அப்போது அது தாராளமாக இருந்ததால், இந்த ரோந்து காவல் குழுவில் நானும், என் வீட்டின் சார்பில் கலந்து கொண்டேன்.
    எங்களுக்கு சின்ன வயதாக இருக்கலாம்; ஆனால் முரட்டுத்தனமும், பிடிவாதமும் எக்கச்சக்கமாக இருந்தன.
    ஏதாவது பாட்டு பாடியோ, கோஷமிட்டபடியோ வீதியை சுற்றி வருவோம்.
    சில சமயங்களில் விளையாடவும் செய்வோம்.
    'பச்சை இலை கொண்டு வருவது' என்று ஒரு விளையாட்டு; 'கண்ணாமூச்சி' விளையாட்டைப் போன்றது.
    'இன்ன இடத்தில், இன்ன மரத்தில் இருந்து, பத்து இலை பறித்து வா...' என்று ஒருவனிடம் சொல்வர். அவன் போவான்; அவன் கூடவே மற்றவர்களும் போவர். அவன் மரத்தில் ஏறி இலை பறிக்கும் நேரத்தில், மற்றவர்கள் ஓடிப் போய் ஒளிந்து கொள்வர். சொன்னபடி இலையை பறித்து திரும்பும் அவன், யாரை முதலில் பார்த்து பிடித்து விடுகிறானோ, அவன் தோற்றவனாகி விடுவான். தோற்றவன் இலை பறிக்க வேண்டும்.
    இந்த விளையாட்டின் போது, சில சமயம் வேண்டுமென்றே, 'சுடுகாட்டு பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து இலை பறித்து வா...' என்று சொல்வர். ஒருசமயம் நானே இம்மாதிரி போய் பறித்து வந்திருக்கிறேன்.
    இம்மாதிரியான விளையாட்டுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் முடியும்!
    ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த போது, ராஜு என்ற நண்பன், ஏதோ ஆத்திரத்தில் பேனாக் கத்தியால், என் முதுகில் குத்தி விட்டான். அந்தத் தழும்பு, இப்போதும் என் முதுகில் இருக்கிறது.
    என் தாயார் என்னை கண்டிக்கும் போது, சில நேரம் எனக்கு கோபம் வந்து விடும்.
    'வீட்டை விட்டு போய் விடுகிறேன்...' என்று சொல்லி, ஆத்திரத்துடன் வெளியே கிளம்பி விடுவேன்.
    எங்கே போவேன் என்று நினைக்கிறீர்கள்... மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன் அல்லது வேறு எங்காவது மரத்தடிக்கு போய் விடுவேன்.
    மாலை வரும்; என் வீராப்பை விட்டு, 'ஜம்'மென்று வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்.
    என் தாயார் என்னைப் பார்த்ததும், பார்க்காதது போல நடிப்பார்.
    எந்தப் பெற்றோருக்கும், தன் மகன் நன்றாக படித்து பெரிய உத்தியோகத்தில், சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை.
    என் பெற்றோருக்கும், அந்த ஆவல் இருந்தது.
    திருச்சியில், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர். அப்போதெல்லாம், நான் அருமையாகப் பாடுவேன். 'ஞான சங்கீதப்பன் மணி மண்டபம்...' என்று, நான் பாட ஆரம்பித்து விட்டால், அதைக்கேட்டு ரசிக்க, என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். பள்ளியில் படிக்கும் போதும், எனக்கு பாட்டில்தான் நிறைய மதிப்பெண் கிடைக்கும். அதில் தான், முதலில் வருவேன்; மற்றவற்றில் சுமாரான மதிப்பெண்கள் தான் கிடைக்கும். கணக்கிலோ பெரிய பூஜ்யம்!
    'காட் சேவ் தி கிங்' (கடவுள் அரசரைக் காக்கட்டும்) என்ற ஆங்கில பாட்டுத்தான், அப்போது பள்ளியில் கடவுள் வணக்கப்பாட்டு. என் குரலில் இனிமையைக் கண்ட ஆசிரியைகள், என்னையும் கடவுள் வணக்கம் பாடும் மாணவர்கள் கோஷ்டியில் சேர்த்து விட்டனர்.
    என் வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்த துாரமோ அல்லது நீண்ட துாரமோ அது எனக்கு தெரியாது. ஆனால், படிப்புக்கும், எனக்கும் வெகு துாரம் என்பது உடனே தெரிந்துவிட்டது.
    அந்த பதினைந்து மாத பள்ளி வாழ்க்கைக்கு பின், என்ன நடந்தது...

    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை - 26.
    இத்தொடர் இடம் பெற்றுள்ள தினமலர் வாரமலர் இணைய தளப்பக்கத்திற்கான இணைப்பு -

    http://www.dinamalar.com/supplementa...d=22182&ncat=2
    Last edited by RAGHAVENDRA; 4th November 2014 at 10:14 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •