**
சிந்து வருவதற்கு – ஷண்முகா
..சிந்தை வரவில்லையே
விந்தைக் கற்பனைகள் – மனதில்
..வித்தை கூட்டுதய்யா

சொந்தக் காரியவள் – அழகை
…சொக்கி வார்ப்பதற்கு
பந்தக் காலிட்டுக் – கற்பனை
வாயிலில் தேக்கிவைத்தேன்

என்ன எழுதுவது – ஷண்முகா
…எனக்கே சொல்லிவிடு
வண்ண மயிலழகை – நானும்
வார்த்தையில் மெல்லுதற்கு

கன்னக் குழியிங்கே – கண்கள்
சிமிட்டிக் காட்டுதய்யா
எண்ணக் குரலினையே – ஓசை
இயல்பாய்க் கூட்டுதய்யா..

பண்ணாய் இசைத்திடவே – பல
பாடல் வகையுண்டே
வண்ணக் கவியழகாய் – சிந்து
திண்ணமாய் நிற்குதய்யா

கண்கள் திறந்துவிடில் – கற்பனை
கொட்டும் அருவியென
உண்மை சொல்லிவிடு – ஷண்முகா
உணர்ந்தே பாடல்நெய்வேன்..