Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Producer/Actor Chithra Lakshman' Page


    2013 அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகத்தின் 85வது பிறந்த நாள் விழா. அவரோடுதான் எனக்கு எத்தனையெத்தனை
    அனுபவங்கள் ”நடிகர் திலகம் சிவாஜி என்ற மகா கலைஞனோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய அரிய வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாக வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும். இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில் கூட எண்ணியதில்லை. அதை இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.

    பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “மண் வாசனை”தான் தயாரிப்பாளராக எனது முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர்திலகம்தான் என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன். ”வாழ்க்கை” படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய வேண்டிய ஒரு அரிய சம்பவம். எனக்குத் தெரிந்து சிவாஜி அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் அது வரை நடந்திராத ஒரு நிகழ்ச்சியாக அது இருக்கும் என்று நினைக்கிறேன்.
    ”வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,” படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறது” என்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்” என்றேன் நான்.

    சிறிது நேரம் படத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு என் திருமணம் பற்றியும் பேசிவிட்டு (நான் ஒரு நடிகையைத் திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் எல்லாம் கிசு கிசுக்கள் பலமாக எழுதப்பட்ட நேரம் அது) நான் கிளம்புகின்ற நேரத்தில் “படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்” என்றார் சிவாஜி.


    அப்போது எனக்கு பெரிய அனுபவம் இல்லை என்பது தவிர அவ்வளவாக விவரம் இல்லாத வயசு என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் “சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. டைரக்டர் சி.வி.ராஜேந்திரனிடம் கூட சொல்லிப்பார்த்தேன். இல்லையில்லை இதுவே நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்லிவிட்டார். அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்வேனா?
    ”வாழ்க்கை” சிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.
    242 திரைப்படங்களில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங்களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கிய கலைச்சக்க்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொல்கிறேன்.


    எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!

    “எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டு “ஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.

    இயக்குநர் சி.வி.ராஜேந்திரனுக்கு போன் செய்து “ சித்ரா விவரமில்லாம ஏதோ ஒரு சீன்ல நான் திரும்பவும் நடிச்சி தரணும்னு கேட்கிறான். அதெல்லாம் சரியா வருமாப்பா? நீ கொஞ்சம் சித்ரா கிட்ட போன் பண்ணி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு” என்று சொல்லவில்லை.

    நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ சரிப்பா நீ படப் பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..

    அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.

    இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.
    சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு” திரைப்படத் தயாரிப்பின் போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியும் என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத ஒரு இனிய நிகழ்ச்சி.

    ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “ சார். நாளை காலையில் ‘டப்பிங்’ கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்” என்று கேட்டேன்.

    சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா? உன் இஷ்டத்துக்கு டப்பிங்
    தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே? என்றார்.

    சிவாஜி அவர்கள் அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்றே எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கு நான் செய்த தவறு புரிந்தது. அவ்வளவு பெரிய கலைஞனிடம் முறையாக தேதி வாங்கிவிட்டு அதற்குப் பிறகு ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்?
    என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம்,” SORRY SIR ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்” என்றபடி சோபாவை விட்டு நான் எழுந்தேன்.

    தன் கைகளால் என் தோளைத்தொட்டு என்னை அமர்த்தினார் சிவாஜி. “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம்.நான் நாளைக்கு காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.

    “எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார் செய்யறேன்” என்றேன்.
    “நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு டப்பிங் பேச வர்றேன்” என்றார்.
    கரும்பு தின்னக் கூலியா? உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார். அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் இரண்டு நாளும் சாப்பிட்டோம்.

    ”வாழ்க்கை” திரைப்படத் தயாரிப்பின் போது இன்னொரு சம்பவம்.
    படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 13ஆம் தேதியன்று சிவாஜி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

    “பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளைக்கு காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு ஃபிளைட்ல டிக்கட் எல்லாம் கூட போட்டாச்சி” என்றார் சிவாஜி.
    தியேட்டர் திறப்பு விழா முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரக்கோட்டைக்கு வந்த எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கே.பாக்கியராஜ் செல்ல அவருக்கு பின்னால் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி பாக்கியராஜைக் காட்டி “ நல்லா பார்த்துக்கய்யா அடுத்த சி.எம். இவர்தான்” என்று ஒரு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இது ஒரு கூடுதல் தகவல்)

    தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜி அவர்களோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார். அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான் வீர்பாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு

    ஒருவாரம் சென்ற பிறகுதான் சென்னை திரும்பினேன். அதற்குப்பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்சிவாஜி.

    எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில் நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி.
    “தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப்போகிறார்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி. அவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்கின்ற வாய்ப்பு சிவாஜி அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது. அந்த பாராட்டு விழாக் குழுவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு நானும் இடம் பெற்றிருந்தேன்.

    அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா எடுத்துச் சென்று தில்லியில் வந்து இறங்கப் போகும் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.

    கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் கோபிசெட்டிப்பாளையத்தில் “மண்ணுக்குள் வைரம்” படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டி பாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நான் கொபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினேன். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதி எடுத்து பத்திரப் படுத்துக் கொண்டேன். இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு”நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன்.

    சிவாஜி அவர்கள் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை. ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழாவின் போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
    ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா அழைப்பிதழின்.முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும்,நடுப்பக்கத்தில் சத்தியராஜ் அவர்கள் படத்தையும்.கடைசீ பக்கத்தில் சிவாஜி அவர்கள் படத்தையும் அச்சிட்டிருந்தோம். அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன். அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் திரும்பக் கொடுத்தார் சிவாஜி. அதில் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர். என் மனதைக் காயப் படுத்தாமல் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.

    சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •