Page 113 of 401 FirstFirst ... 1363103111112113114115123163213 ... LastLast
Results 1,121 to 1,130 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1121
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-1. இரு மலர்கள்.
    -----------------------------
    தொடர்கிறது...
    ----------------

    எதிரெதிரே பார்த்துக் கொள்ளும்
    இரண்டு நட்புயிர்களுக்கு
    இடையே நிகழும் அந்த
    நிகழ்வை வேண்டுமானால்
    சந்திப்பு எனச் சொல்லலாம்.

    இரண்டு வாகனங்கள் நேருக்கு
    நேர் மோதுவதை சந்திப்பு என்று சொல்ல முடியாது.

    அது, விபத்து.

    சாந்தியும், உமாவும் அப்படித்தான சந்தித்தார்கள்.
    இரண்டு வாகனங்கள் போல.
    இரண்டு வாகனங்களும்
    சுமந்து வந்தது சுந்தர் எனும்
    காதல் பொருளை.

    அது ஒரு ஆச்சரியமான விபத்து. அந்த விபத்தினால்
    வாகனங்களுக்கு ஏற்பட்ட
    சேதங்களை விட, உள்ளே
    பாதுகாப்பாயிருந்த பொருளுக்குச் சேதம் அதிகம்.

    கணக்குப் பாடத்தில் பலவீனமாயிருக்கும் கீதாவுக்கு
    ட்யூஷன் எடுக்க வேண்டுமென
    உமாவை, சாந்தி கேட்டுக்
    கொள்கிறாள்.

    அப்படி ஒரு பழக்கத்தைத் தான்
    வைத்துக் கொள்வதில்லை என
    மறுக்கும் உமாவை, வற்புறுத்தி
    சம்மதிக்க வைக்கிறாள் சாந்தி.
    தான் ட்யூஷன் சொல்லித் தரப்
    போவது சுந்தரின் வீட்டுக்குத்
    தான் என்பது தெரியாமலே
    சம்மதிக்கிறாள்... உமா.

    இப்படித்தான் விதி ஆடும்
    சதுரங்கத்தில் மனிதக் காய்களை இடம் விட்டு இடம்
    நகர்த்திச் சிரிக்கும்.

    சிரித்தது.
    ------------------

    கீதாவும் சிரித்தாள்.

    தனக்கு ட்யூஷன் எடுக்க
    வீட்டுக்கு வந்த உமா டீச்சர், தான் சொல்லிக் கொடுத்த பாடத்தை அதிகாலையில் சாந்தியை எழுப்பி விடச் சொல்லி படிக்குமாறு சொன்னதைக் கேட்டு.

    "அதை அம்மாகிட்ட சொன்னா
    நடக்காது டீச்சர். காலைல
    அம்மாவை எழுப்புறதே அப்பாதான்."

    தட்டு நிறைய இனிப்பு கொண்டு வரும் சாந்தி, அன்று
    கிருஷ்ண ஜெயந்தி என்கிறாள்.
    கண்ணனைப் போன்றொரு
    குழந்தையை சாந்தி பெற்றெடுக்க வாழ்த்துகிறாள்
    உமா. அவள் தரும் இனிப்பை
    உண்ணும் உமாவுக்கு ஒரு
    நல்ல "அவர்" கிடைக்க
    வாழ்த்துகிறாள் சாந்தி.

    வாசலில் கார் சத்தம்.

    சுந்தர் வருகிறான். சாந்தியைக்
    காதலுடன் கொஞ்சுகிறான்.
    கீதாவின் டீச்சர் ட்யூஷன்
    எடுக்க வந்திருப்பதை சாந்தி
    சொல்ல, நாகரீகமாய் விலகிச்
    செல்கிறான்.

    மீண்டும் "ப்பச்சக்" என்று
    நடிகர் திலகத்தின் நடிப்பு
    முத்திரை...

    அந்த நிமிஷம் வரை ஆர்ப்பாட்டமாய் மனைவியைக்
    கொஞ்சிக் கொண்டிருப்பவர்,
    அந்நியப் பெண்ணொருத்தி
    தன் வீட்டினுள் இருக்கிறாள்
    என்பது தெரிய வந்த
    விநாடியில், ஆர்ப்பாட்டம்
    தவிர்த்து, சத்தம் குறைத்து,
    நாசூக்கு சேர்த்து, கண்ணியம்
    கூட்டி...

    சுந்தராக அந்த இடத்தை விட்டு
    நகர்ந்தோடியவர், நடிகர் திலகமாக நமக்குள் வந்து
    விடுகிறார்.
    ----------------

    கீதாவைப் பள்ளியில் விடுவதற்காக சுந்தர் அவளைக்
    காரில் அழைத்துக் கொண்டு
    வருகிறான்.

    சாலையின் ஓரமாய் உமா
    நடந்து வந்து கொண்டிருக்கிறாள்.

    அவளைக் கடந்து வந்து விட்ட
    காரை நிறுத்தச் சொல்கிறாள்
    கீதா. சுந்தர் காரை நிறுத்தியதும் இறங்கி ஓடும் கீதா, அழைத்து வருவது...காரை நோக்கி
    உமாவை.சுந்தரை நோக்கி
    நிம்மதியின்மையை.

    மீண்டும் நடிகர் திலகத்தின்
    நேரம்.

    கீதா அழைத்து வருவது தன்
    உமாவை என்பதை காரின் கண்ணாடி வழியே பார்த்த
    நொடியில் பிரகாசமாய் முகம்
    மலர்ந்து, மலர்ந்த நொடியே
    இரும்பாய் இறுகி...

    ஒரு அழகான காதல் நினைவையும், காதலித்தவள்
    தன்னை ஏமாற்றியதால் வரும்
    வெறுப்பையும் ஒரு நொடி
    வித்தியாசத்தில் முகத்தில்
    வெளிப்படுத்த வேறொருத்தர்
    பிறந்து வர வேண்டும்.

    அது முடியாத காரியமென்பதால், அவரேதான்
    பிறந்து வர வேண்டும்.
    ----------------

    அந்த முகபாவம் நமக்குத்
    தீபாவளியென்றால்... "இதுதான்
    எங்க அப்பா" என்று குழந்தை,
    பத்மினிக்கு அறிமுகப்படுத்தும்
    போது பத்மினிக்கு முதுகு காட்டி நிற்பவர், மெல்லத்
    திரும்பி கனல் மின்னும் கண்களால் பத்மினியைப்
    பார்க்கும் அந்தப் பார்வை...
    தீபாவளி போனஸ்.
    ----------------

    தான் பார்த்த ஆங்கிலப் படத்தில் இரண்டு பெண்கள்
    ஒரே மாதிரி இருந்ததாக சுந்தர்
    சொல்வது, அவள் உமாதான்
    என அவன் இன்னும் நம்பத்
    தவிப்பதைக் காட்டுகிறது.

    தானுமந்த ஆங்கிலப் படத்தைப்
    பார்த்ததாகவும், அந்த இரண்டு
    உருவங்களும் ஒரே பெண்தான்
    என்று சொல்வது, "தான் உமாதான்" என அறிவிக்க
    விரும்புவதைக் காட்டுகிறது.
    ---------------

    உமா தன்னுள் கரைகிறாள்.

    அவள் கையில் சுந்தர் பரிசளித்த இதய வடிவிலான
    கண்ணாடிப் பெட்டி. திறந்து
    பார்க்க... அவளது கண்ணீர்
    முகம். இதய வெளியில்
    எதிரொலிக்கும் சுந்தரின்
    காதல் குரல்.

    "நீயாப் போட்டு உடைச்சாலொழிய என் இதயம்கிற பெட்டியில உன்
    உருவம்தான் இருக்கும்."

    வாசலில் கார் சத்தம்.

    உமா பதறி எழுகிறாள்.

    சாந்தியும், கீதாவும் வருகிறார்கள்.

    உடல் நிலை சரியில்லாதிருக்கும் உமாவைக் கரிசனமாய்
    விசாரிக்கிறாள்... சாந்தி.

    தலைவலிதான் என்கிறாள்
    உமா.

    வீட்டில் தன் கணவனுக்கும்
    நேற்றிரவு தலைவலி என்கிறாள்.

    காதலனுக்கும் தலைவலி என்று அறிந்ததும் பத்மினி
    காட்டும் முகபாவம் ...

    கொஞ்ச நேரத்திற்கு முன்பு
    கே.ஆர்.விஜயா கட்சிக்குப்
    போனவர்களைத் திரும்பவும்
    பத்மினி கட்சிக்கே கொண்டு
    வருகிறது.

    மணமான ஆண்கள் குழந்தையாகவே மாறி விடுகிறார்கள் எனவும், தன்
    கணவருக்கும் தனக்குமான சுகமான இல்லற வாழ்வின்
    இனிமையையும் சாந்தி சொல்லச் சொல்ல...

    கடமையின் பொருட்டுக்
    காதலை இழந்த உமாவின்
    ஏக்கப் பெருமூச்சுகள் புயலாய்
    மாறி நம் இதயங்களில்
    மையம் கொள்கிறது.

    துறுதுறுவென அலைகிற கீதாவை அந்தக் கண்ணாடிப்
    பெட்டி கவர்ந்திழுக்கிறது.

    அவள் ஆசையாய் அதை
    உமாவிடம் கேட்கிறாள்.
    அவள் புன்னகையோடு அதை
    கீதாவிடமே தருகிறாள்.

    உமாவுக்குப் பிரியமான அதை
    வேண்டாமென மறுக்கும்
    சாந்தியிடம் உமா சிரித்துச்
    சொல்கிறாள்...

    " இனிமே அதை நீங்கதான்
    பிரியமா வச்சுக்கணும்."
    ------------------

    உமா, சுந்தரவதனத்தின் முன்
    அழுத முகமாய் அமர்ந்திருக்கிறாள்.

    சுந்தரவதனம் கையில் அவள்
    எழுதித் தந்த ராஜினாமா கடிதம்.
    அந்தக் கடிதத்தில் உள்ளவை
    வெறும் எழுத்துக்களல்ல.
    அழகான குழந்தையும், பண்பான மனைவியுமாய் ஒரு
    இனிய வாழ்க்கை வாழ்ந்து
    கொண்டிருக்கிற தன் பழைய
    காதலனை தன் வரவு கொஞ்சமும் பாதித்து விடக்
    கூடாது எனும் பெருந்தன்மை
    மிகுந்த நல்லெண்ணம்,
    அந்தக் கடிதத்தில் உமா எழுதிய
    எழுத்துக்களாய் ஓடியிருக்கிறது.

    சுந்தரவதனம் உமாவை உரிமையோடு கடிந்து கொள்கிறார். தனது பழைய
    மாணவி உமா என்பதால்
    அவளுக்காகப் பிரயாசைப்பட்டு
    இந்த ஆசிரியை வேலையை
    வாங்கித் தந்திருப்பதை எடுத்துச் சொல்லி, காலம் கனிந்து உமாவிற்கு நல்வழி
    கிட்டுமென்றும் நம்பிக்கை கூறுகிறார். தொடர்ந்து சுந்தர்
    பற்றியும் உமாவிடம் பெருமை
    பொங்கப் பேசுகிறார்.

    எந்தக் கூட்டத்திலும் தன்னைக்
    கண்டவுடன் எழுந்து நின்று,
    தான் அமர்ந்த பின்பே சுந்தர்
    அமர்வான் என உருகிப் போகிறார்...சுந்தரவதனம்.

    சுந்தரவதனமாக அமரர்.நாகேஷ். வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே
    எண்ணற்ற திரைப்படங்களில்
    சக்கையாகப் பிழிந்தெடுக்கப்பட்ட அந்தத்
    திறமைக் கரும்பின் அத்தனை
    பாகமும் இனித்தது... நடிகர்
    திலகத்தின் படங்களில்தான்.

    சுந்தரவதனம், உமாவின் ராஜினாமாக் கடிதத்தைத்
    திரும்பக் கொடுக்கிறார். அதை
    வாங்குவதற்கு நீளும் உமாவின் கைகளில் கொடுக்கிறார்... கடிதத்தை
    நாலாய், எட்டாய்க் கிழித்து.
    ---------------

    சுந்தர் வீட்டில் உமாவிடம்
    பாடம் படிக்கும் கீதா கேட்கும்
    "ஒரு சிலருக்கு மட்டும் ஏன்
    கடவுள் கஷ்டத்தைக் கொடுக்கணும்?" கேள்வி
    உமாவைப் பிழிந்தெடுக்கிறது.

    கேள்வி, இசையின் துணையோடு பாடலாய்
    உமாவோடு நடக்கிறது.

    பாடலின் ஒரு விரலை சாந்தி
    பற்றிக் கொள்ள பாடல் இப்போது சாந்தியின்
    கையைப் பிடித்துக் கொண்டும்
    நடக்கிறது.

    இருவரின் கையைப் பிடித்துக்
    கொண்டும் பாடல் நடுவில்
    நடக்கிறது.

    சுந்தர் பார்க்கிறான்.

    புகைக்கிறான்.

    அமைதியைப் பகைக்கிறான்.
    ----------------

    பாடமும்,பாடலும் முடித்து
    உமா புறப்படும் நேரத்தில்
    சுந்தரைச் சந்திக்க நேர்கிறது.

    அந்த இக்கட்டான சூழலிருந்து
    தன்னை விடுவித்துக் கொண்டு
    உமா புறப்பட்டுப் போன பிறகு,
    சுந்தரிடம் உமாவைப் பற்றி புகழ்ந்து பேசுகிறாள்.. சாந்தி.

    உமாவின் அழகு குறித்து
    சாந்தி சொல்லும் போது ஒரு
    "...ம்ம்ம்..",

    உமாவின் அடக்கம் குறித்து
    சொல்லும் போது ஒரு
    "...ம்ம்ம்...",

    என்ன கலைஞனய்யா இந்த
    நடிகர் திலகம்..? இருபது
    பக்கம் வசனம் எழுதினாலும்
    பேசி மயக்குகிறார். ஒரே ஒரு
    "...ம்ம்ம்.." போட்டாலும் அதே
    மயக்கத்தை நமக்குத் தந்து
    விடுகிறார்.

    சுந்தர், உமா புராணம் பாடும்
    சாந்தியிடம் வெறுப்பாகச்
    சொல்கிறான்.

    " கூண்டுக்கு வெளியே நின்னு
    பாக்கும் போது சிங்கம் கூட
    அழகாத்தான் இருக்கும்.
    பாம்பாட்டி வித்தை காட்டும்
    போது பாம்பு கூட அழகாத்தான்
    இருக்கும்."

    எத்தனை உன்னதமான நடிப்பு?
    சில அருமையான தமிழ் வார்த்தைகள். ஏமாற்றம் தந்த
    வெறுப்பு, மனைவி இப்படி
    தீயவளை நம்பும் அப்பாவியாய்
    இருக்கிறாளே என்கிற வருத்தம்... இவற்றையெல்லாம் அந்த
    வார்த்தைகளின் மீது ரசாயனமாய்ப் பூசி புதிய பரிமாணங்களில் வார்த்தைகளை உணர வைக்கிறார், நடிகர் திலகம்.

    "ஓஹோ... அய்யாவுக்கு இன்னிக்கு மூடு சரியில்லை
    போலிருக்கு" என்று சொல்லி
    விட்டு தன் கைகளைக் கோர்த்து மாலையாக்கி, அந்த
    கைமாலையை நடிகர் திலகத்தின் கழுத்தில் போட்டு
    இழுத்துச் செல்லும்
    கே.ஆர்.விஜயா, தன் கட்சிக்கு
    மீண்டும் ஆட்களை இழுக்கிறார்.
    -------------------

    அடுத்து வரும் காட்சியைப்
    பார்க்க நேர்ந்தது என் பிறவிப்
    பயனென்றே சொல்வேன்.
    என் போல் எத்தனை கோடிப்
    பேருக்கு அப்படியோ?

    கொஞ்ச காலத்திற்கு முன்பு
    முகநூலில் "நெஞ்சத் திரையில்
    நடிகர் திலகம்" எனும் தலைப்பில் இந்த நெஞ்சு
    நிறைந்த காட்சி குறித்து நான்
    எழுதியதை இங்கே அப்படியே
    பகிர விரும்புகிறேன்...
    -------------------------------
    இரு மலர்கள்.

    இந்த திரைக்காவியத்தைக்
    குறித்து சிந்தித்தாலே..
    மனம்,இந்தக் காட்சியை
    நோக்கி ஆவலாய் நகர்கிறது.

    இதயம் முழுதும் இனிப்புத்
    தடவிய பழைய நாள்
    காதலியை,

    காலம் வீசச் செய்த புயலில்,
    தன் காதல் காணாமல் போகப்
    போவதை உணர்ந்திராத
    காதலியை,

    "காத்திருங்கள்..விரைவில்
    வருவேன்" என்று உறுதி
    சொல்லிப் பிரிந்த காதலியை,

    காத்திருந்த காதலனின்
    கண்களுக்குள் அமிலம்
    ஊற்றுகிற காரியமாய்..
    "மறந்து விடுங்கள் என்னை"
    என்று மடல் எழுதிய
    காதலியை,

    தனது அன்பான பெண்
    குழந்தையின் ஆசிரியையாய்
    ஆண்டுகள் பல கழித்துச்
    சந்திக்கும் போது, அடக்கி
    வைத்த தன் கோபத் தீயால்
    அவள் உள்ளஞ் சுடும் காட்சி.

    அவள் கடிதத்துக்காகக்
    காத்திருந்து ஏமாந்த கதையை
    ஏக்கத்துடன் சொல்லும்
    போதே,
    ஏமாற்றம் தந்த வன்மத்தில்
    முகம் மாறி, உணர்வு
    கொந்தளித்து, "ஆமா..உன்னைப்
    பாக்க வந்தானே..அந்த
    பணக்கார வாலிபன்..என்ன
    ஆனான்?"-என்று சிரித்து,
    அழுது..
    சிரித்தழுது..
    அழுது சிரித்து..

    என்னவென்று சொல்ல..?

    இழக்கக் கூடாத நாயகனை
    இழந்துவிட்டு,
    செய்வதறியாது,
    பேசுவதற்கு
    வார்த்தையில்லாமல், கை
    பிசைந்து நிற்கிறோம்..

    அந்தக் காட்சியில்
    பத்மினியம்மா போல! —
    -------------------------------

    அப்பாவுக்கும், டீச்சருக்கும்
    இடையிலான அந்த உணர்ச்சிக்
    கொந்தளிப்பை கீதா பார்த்து
    விடுகிறாள். ( வெறுப்பான
    அந்த உதடு கடிப்பு, நல்ல கற்பனை. அதை கோபத்தின்
    வெளிப்பாடென்றும் சொல்லலாம். தந்தையிடம்
    இருந்து வந்த பழக்கமென்றும்
    சொல்லலாம். பத்மினி எழுதிய
    கடிதத்தைப் படிக்கும் போது
    நடிகர் திலகம் உதடு கடிப்பார்.)

    அந்த சம்பவம், கீதாவின்
    பிஞ்சு மனத் திரையில் அவள்
    தீட்டி வைத்த உமா டீச்சரின்
    அழகோவியத்தில் கோபக்
    கோடுகளைக் கிறுக்கச் செய்கிறது.

    பொய் சொல்வது தப்பென்று
    சொல்லிச் சொல்லி வளர்த்த
    கீதாவையே, தானும்,உமாவும்
    சந்தித்துப் பேசிய செய்தியை
    சாந்தியிடம் சொல்லக் கூடாது
    என்று கேட்டுக் கொள்ளும்
    நிலைமைக்கு சுந்தர் ஆளானான்.

    உண்மையை மறைக்கத் தவிக்கும் மகள் ஒருபுறம்.
    மகளின் தீடீர் இறுக்கம் ஏன்
    என்று கேட்டுத் துளைக்கும்
    மனைவி ஒருபுறம். இடையில்
    சிக்கிய சுந்தர், நிம்மதி இழந்து
    பாழானான்.
    -----------------

    கீதாவுக்கு உமா டீச்சர் மீதுள்ள
    எரிச்சலும், கோபமும் கொஞ்சமும் குறையவில்லை.
    அவள் உமாவின் அனுமதி
    இல்லாமலேயே வகுப்பில்
    நுழைந்தது, உமா சொல்லித்
    தந்த "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என்பதன்
    பொருளைச் சொல்ல மறுப்பது..
    இதெல்லாம் அதைத்தான்
    நிரூபிக்கின்றன.

    உமா அதிர்கிறாள்.
    அழுகிறாள்.
    காதலுக்குத் தண்டனையாய் காலம் பிரம்பாலடிக்கிறது அவளை. முதலில் அண்ணன், அண்ணியின் மரணம் எனும்
    பிரம்பு. அப்புறம் கடமை எனும்
    பிரம்பு. பிறகு சுந்தரின் சொல்லடிப் பிரம்பு. இப்போது
    கீதா எனும் பிரம்பு.

    டீச்சருக்கே பிரம்படி.

    அம்மாவேதான் அடிக்கிறாள்
    என்றாலும் அம்மா கால்களையே கட்டிக் கொண்டு
    அழும் குழந்தை போல, அவளுக்கு அடி விழக் காரணமான இடம் நோக்கியே
    அவள் ஓடுகிறாள்.

    அங்கேதான் அவளும், சுந்தரும்
    காதல் அமுதுண்டார்கள்.
    கல்லுக்குள் கடவுள் கண்டார்கள். அந்தக் கடவுளின்
    முன் நின்று உமா கரைந்தழுகிறாள். "மன்னிக்க
    வேண்டுகிறேன். உந்தன்
    ஆசையைத் தூண்டி விட்டேன்"
    என்று மனசிலிருக்கும் சுந்தரிடம் மன்னிப்புக் கோருகிறாள்.

    அந்த ஏக்கக் குரலுக்கு எதிரொலி இல்லாது போகுமா?

    "நான் கொடுத்துத்
    துடிதுடித்த மனதை
    என்னிடமே தருக.

    நீ கொடுத்த நினைவனைத்தும்
    திரும்ப உன்னிடமே பெறுக."

    தவிப்பு தாளாத இதயத்தின்
    தழுதழுத்த குரல்.

    "ஆசை வைத்த பாவம்.
    யாரை விட்டுப் போகும்?"

    -இந்த வரி பாடுகையில், கை
    நீட்டி பத்மினியைச் சுட்டிக் காட்டி சாபமிடுவது போல்
    செய்யும் பாவனையில்...
    அந்தக் காட்சி பெற வேண்டிய
    முழுமைத்தன்மையைப் பெற்று
    விடுகிறது.

    அங்கே இரண்டு இதயங்கள்
    உணர்வுகளின் குரல் கொண்டு
    பேசித் தீர்க்கின்றன.

    அவளைத் தனது இதயத்திலிருந்து வேரோடு
    பிடுங்கி எறிய தன்னால்
    முடியவில்லை என்று சுந்தர் கண்ணீரோடு ஒப்புக் கொள்கிறான்.

    "ஏன் எனக்குத் துரோகம் செஞ்சே? இப்ப ஏன் திரும்ப
    வந்திருக்கே?"

    உமாவுக்கான பிரம்படிகள்
    ஓய்ந்தபாடில்லை.

    நடந்து முடிந்த அவற்றுக்கான
    காரணங்களை இப்போது
    தெரிந்து கொண்டு ஒன்றும்
    ஆகப் போவதில்லை என்றும்,
    சாந்தியுடன் சுந்தர் வாழும்
    ஆனந்த வாழ்க்கை தொடர
    வேண்டுமென்றும் உமா
    கூறிக் கொண்டிருக்கையில்,
    அங்கே வருகிறான்.. பாலு.
    (அமரர். அசோகன்.)

    உமா வேலை பார்க்கும் பள்ளியின் நிறுவனர். சுந்தரின்
    மீது தொழில் ரீதியாகப் பொறாமை கொண்டவன்.

    உயர்ந்த மனிதனையும்
    தன்னைப் போல் சராசரி மனிதனாக எண்ணும் மோசமான மனிதர்கள் பேசும்
    பேச்சில் விஷமம் இருக்கும்.
    சந்திப்பை, கள்ளக்காதலாகப்
    பார்க்கும் புரியாத்தனமிருக்கும்.

    பாலுவின் பேச்சில் அது இருந்தது.சுந்தர் எரிச்சலுற்றான். பாலுவுக்கு
    அடி விழுந்தது.
    -----------------

    உறக்கம் பிடிக்காத சுந்தர், நள்ளிரவில் எழுந்து நடக்கிறான்.

    விழித்துக் கொள்ளும் சாந்தி,
    அவனைப் பின் தொடர்கிறாள்.
    அவனது நிம்மதியின்மையைப்
    புரிந்து கொண்ட சாந்தி, காரணத்தை விசாரிக்கிறாள்.
    ஒரு பெண்ணின் பொருட்டே
    அவன் இவ்வாறு தவிக்கிறான்
    என்கிற தனது மிகச் சரியான
    ஊகத்தை அவனிடமே போட்டு
    உடைக்கிறாள். வார்த்தையின்றித் தவிக்கும்
    சுந்தருக்கு சமாதானம் கூறி அழைத்துச் செல்கிறாள் சாந்தி.
    ----------------

    உமாவுக்கு மற்றுமொரு
    பிரம்படி காத்திருக்கிறது.

    அவள் பார்த்த ஆசிரியை
    பணியை விட்டு அவள் டிஸ்மிஸ் செய்யப்படுகிறாள்.

    சுந்தரால் அவமானப்பட்ட
    பாலுவின் வேலை இது என்று
    உமாவுக்குப் புரிகிறது. தனது
    பெண்மை களங்கப்படுவது
    குறித்து அவள் வருந்துகிறாள்.
    சுந்தரவதனத்தாலும் எதுவும்
    செய்யவியலாத சூழலில்
    அவள் கண்ணீரோடு அங்கிருந்து வெளியேறுகிறாள்.

    சாலையில் நடப்பவளை, விதி
    மீண்டும் சுந்தரின் காரில்
    வந்து அழைக்கிறது. காரில்
    வரும் சாந்தி, உமாவை மிக வற்புறுத்தித் தன் வீட்டுக்கு
    அழைத்து வருகிறாள்.

    கோபம் மாறாத குழந்தை கீதா,
    உமாவை ஒருமையில் பேச..
    சாந்தி அவளை அடிக்கிறாள்.
    கீதா வெளியேறி விடுகிறாள்.

    அங்கே சாந்திக்கும், சுந்தருக்குமான இனிய இல்லறத்தில் இப்போது வீசத்
    துவங்கியிருக்கும் புயல்
    பேசப்படுகிறது.

    சுந்தர் காதலித்த பெண் நல்லவளே என்று தான் நம்புவதாக சாந்தி சொன்னதும்
    உமா நெகிழ்ந்து போகிறாள்.

    உமா, சுந்தருக்கு எழுதிய கடிதத்தை தான் இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும், அந்தக்
    கடிதத்தைப் படித்து விட்டு
    அந்தப் பெண்ணைப் பற்றிய தன்
    கருத்தை உமா சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்
    கொண்டு, சாந்தி அந்தக்
    கடிதத்தை எடுக்கச் செல்கிறாள்.

    உமா துடித்துப் போகிறாள்.

    அவள் மனசைக் கல்லாக்கிக்
    கொண்டு சுந்தருக்கெழுதிய
    கடிதம், அவளிடமே தரப்படப்
    போகிறது. கடிதத்தைப் படித்து
    விட்டு உமா நல்லவளா..
    கெட்டவளா என உமாவே
    சொல்ல வேண்டும்.

    உமா துடிக்கிறாள். இந்தக்
    கொடுமை தாங்குகிற சக்தியைக் கொடு என்று இறை
    வேண்டி நிற்கிறாள்.

    அந்நேரம் புயலாய் வீட்டினுள்
    நுழையும் சுந்தர், அழுதபடி
    முகம் திருப்பி நிற்கும் உமாவை சாந்தி என்று தவறாகப் புரிந்து கொள்கிறான்.

    கீதா அழுதவாறு வெளியில்
    நிற்பதைப் பார்த்த சுந்தர்,
    உண்மையைச் சொல்லி விடுகிறான். தான் காதலித்த
    உமாவை தான் திரும்பப்
    பார்த்து விட்டதையும், அவளை
    மறந்து விட்டதாக அவன்
    சொன்னதனைத்தும் பொய்
    என்பதையும், உமாவின் வீட்டிற்குச் சென்று அவளோடு
    பேசிய விஷயமே கீதாவின்
    இறுக்கத்திற்குக் காரணம்
    என்பதையும் 'கடகட' வென்று
    சொல்லி வந்தவன், தான்
    பேசிக் கொண்டிருப்பது உமாவிடம் என்பதைக் கண்ணாடி வழியே பார்த்து
    அறிகிறான். அதிர்கிறான்.

    மேலும் தன்னிடம் பேச வரும்
    சுந்தரைத் தடுக்கிறாள்..உமா.
    தாங்கள் முன்பு சந்தித்த அந்த
    இடத்தில் மறுநாள் சந்தித்துப்
    பேசலாம் என்றும், இங்கே
    வீட்டில் வைத்து எதுவும் பேச
    வேண்டாம் எனவும் மறுத்து
    விரைகிறாள்.

    சுந்தருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஏழு வருடங்களுக்கு முன் உமா
    அவனுக்கு எழுதிய கடிதம்
    அங்கிருக்கும் மேசை மீது
    வைக்கப்பட்டிருக்கிறது. அதைக்
    கொண்டு வந்த சாந்தி அவர்களின் உரையாடலைக்
    கேட்டுத் தெரிந்து கொண்டதன்
    மௌன அடையாளமாய்.
    -----------------

    மணப்பெண் போல் அலங்காரம்
    செய்து கொண்டாள் சாந்தி.
    அவளிடம் ஏதோ வித்தியாசம்
    கண்ட குழந்தை கீதா அவள்
    தன்னை விட்டுப் பிரியாதிருக்க
    வேண்டி அழ... சமாதானம்
    செய்து உறங்கப் பண்ணுகிறாள்.

    வீடு திரும்பும் சுந்தர், அவளது
    அலங்காரத் திருக்கோலத்தை
    வியக்கிறான்.

    அன்று அவனது திருமண நாள்
    என அறிந்து மேலும் வியக்கிறான். அவனுக்கும்
    ஏதோ படுகிறது.

    பிரியமான மனைவி அழகாக
    உடுத்தி சிங்காரித்துக் கொண்டு
    வந்தால், கணவனுக்கு சந்தோஷம்தானே வர வேண்டும்?

    சுந்தருக்கு ஏனோ நெஞ்சைப்
    பிசைகிறது. இனம் புரியாத
    வேதனை அவனைச் சித்ரவதை
    செய்கிறது.

    சாந்தி என்கிற அன்புச் சொந்தத்தைத் தான் இழந்து
    விடப் போகிறோமோ என்கிற
    பயம் அவனுக்குள் தோன்ற
    ஆரம்பித்து விட்டது. சாந்தி
    பேசும் பேச்சில் எப்போதும்
    இல்லாத தினுசாய் இன்னொரு
    அர்த்தம் தொனிக்கிறது.

    அவளை அருகில் அழைக்கிறான். அணைக்கிறான்.
    "சாந்தி.. சாந்தி" என்று அரற்றுகிறான். அடுத்த வார்த்தையை சூன்யத்தில்
    தேடுகிறான்.

    தன்னோடு அணைத்துக் கொண்ட தன் சாந்தியை உற்று
    உற்றுப் பார்க்கிறான்.

    நான் முன்னமே சொன்ன
    அந்த தர்மசங்கடம் ...
    பாத்திரமாய் மாறிய நடிகர்
    திலகத்திலா? நடிகர் திலகம்
    ஏற்ற பாத்திரத்திலா... எதில்
    அசந்து கிடக்கிறோம் என்கிற
    தர்மசங்கடம் மீண்டும் இந்தக்
    காட்சி முழுக்க நம்மை வியாபிக்கிறது.

    சொல்வதற்கு ஆயிரம் இருக்க..
    "சாந்தி"க்கு அடுத்த வார்த்தை
    கிடைக்காமல் "சாந்தி.. சாந்தி"
    என்று அரற்றுபவர், ஒரு
    இடத்தில் "சாந்தி" என்று
    வேறு மாதிரி உச்சரிப்பார்.
    பார்த்தால்.." உன் குணத்துக்கு
    ஏத்த மாதிரி பொருத்தமா
    பேர் வச்சிருக்காங்க" என்று
    முடிப்பார்.

    அப்போதுதான் புரிகிறது.

    ஒரே ஒரு "சாந்தி"தான்.
    அழைப்பதற்கு ஒரு உச்சரிப்பு.
    வியப்பதற்கு ஒரு உச்சரிப்பு.
    அவர் பேசிக் கேட்கும் தமிழ்
    எத்தனை இனிமை? ஆர்வத்
    தேனில் ஊறிய திறமைப்
    பலாச்சுளை- அய்யனின் தமிழ்.

    கட்டிலில் கே.ஆர்.விஜயாவை
    அமர்த்திக் கொண்டு, தன்னிரக்கம் பொங்கிவர,
    "நீ என் மேல வச்சிருக்கிற அளவு அன்பை, என்னால
    உன் மேலே வைக்க முடியல
    சாந்தி"-என்று சொல்லி அழும்
    காட்சியில் நடிகர் திலகம்
    "நச்"சென்று வைக்கிறார்
    மற்றுமொரு முத்திரை.

    அன்றைய இரவில் அதையே
    நினைத்து நாமிழக்கிறோம்
    நித்திரை.
    -----------------

    சுந்தரவதனத்தின் மகள்
    அவரிடம் ஒரு கடிதம் கொண்டு
    வந்து கொடுக்கிறாள்.

    "அப்பா.. இதை உமா டீச்சர்
    உங்ககிட்டே குடுக்கச் சொன்னாங்க."

    சுந்தரவதனம் பிரித்துப் படிக்கிறார்.

    "இவ்வளவு பெரிய பொறுப்பை
    என்கிட்ட ஒப்படைச்சிட்டியேம்மா..!?"
    என வாய் விட்டுப் புலம்புகிறார்.
    ----------------

    வந்து விட்டோம்.

    சுந்தரும்,உமாவும் அவர்களின்
    காதல் கனிந்த அதே இடத்துக்கு
    வந்து விட்டதைப் போல,
    நமது இன்பத்தைத் துவக்கி வைத்த "இரு மலர்கள்" திரைக்
    காவியத்தின் இறுதிப் பகுதிக்கு
    வந்து விட்டோம்.

    கல், கடவுளான அந்தப் பரந்த
    வெளியில் உமா கைகட்டி
    நின்று கொண்டிருக்கிறாள்.
    உடைந்து நொறுங்குவது போன்ற பழைய தளர்வில்லை
    அவளிடம்.

    அவள் திடமாயிருக்கிறாள்.

    வரப் போகும் சுந்தருக்கான
    பதில் அவளுக்குள் கம்பீரமாய்
    இருக்கிறது. அவள் ஒரு முடிவோடு இருக்கிறாள். அந்த
    முடிவில் தெளிவோடு இருக்கிறாள்.

    மெல்ல மேடேறி சுந்தர் அங்கே
    வருகிறான். அவனுக்கு முதுகு
    காட்டி நிற்கும் உமாவை அவன்
    அதிராமல் அழைக்கிறான்.

    "உமா."

    "வாங்க.உங்களுக்காகத்தான்
    காத்துக்கிட்டிருக்கேன். நான்
    கேட்கப் போற கேள்விக்கெல்லாம் உண்மையான பதிலைச்
    சொல்லணும். சொல்லுவீங்களா?"

    "உண்மையே பேசணுங்கிற
    தெளிவோடதான் வந்திருக்கேன்".

    'உண்மை பேச வேண்டுமென்கிற தெளிவை'
    சும்மா வசனம் பேசுவதில்
    ஒரு நடிகன் காட்டவே முடியாது. தன்னை மறந்து
    அந்தப் பாத்திரமாகவே மாறி
    முகத்தில் காட்டுகிற பாவனைகளாலும், வார்த்தைகளை உணர்ந்து
    பிரயோகிக்கிற தன்மையாலும்
    தான் காட்ட முடியும்.

    அது நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

    சுந்தர் கூப்பிடுகிற இடத்துக்கு
    தான் இப்போதே வரத் தயார்
    என்றும், அதே போல் சுந்தரும்
    தன் மனைவி, குழந்தையை விட்டு தன்னுடன் வரத் தயாரா
    என்று உமா உறுதிபடக்
    கேட்கிறாள்.

    இதென்ன பைத்தியக்காரத்தனம்
    என்கிற விதமாய் முகம் திருப்பும் நடிகர் திலகத்தின்
    கோட்டைப் பிடித்திழுக்கும்
    பத்மினியை ஆண் பிள்ளைக்கே
    உரித்தான ரோஷத்தோடு
    பார்க்கும் பார்வையில் நடிப்பென்றால் நான்தான்
    எனும் ரகசிய மொழியிருக்கிறது.

    "உன் லெட்டரைப் படிச்சுட்டு
    மயங்கி விழுந்து சாகாம
    உயிரோடு இருக்கேன்னு
    தெரிஞ்சதுக்குப் பிறகு, நான்
    உயிரோட இருக்கிறதுக்கு ஒரே
    ஒரு காரணம்தான் இருந்தது.
    என்னிக்காவது ஒரு நாள்
    உன்னை நான் நேரிலே பார்த்தேன்னா என் கையாலயே
    உன்னைக் கொன்னுடலாம்னுதான்."

    -எவ்வளவு அம்சமான கோபம்?
    'நானொன்றும் உன் சதைக்கலைகிறவனில்லை.
    மனசாட்சி காட்டும் நியாய
    தர்மங்களுக்குக் கட்டுப்பட்டவன்' என்கிற விதமாய் அந்த சுந்தர் கதாபாத்திரத்திற்கு அவர்
    சூட்டுகிற விசேஷ கீரிடம்
    அற்புதமானது.

    "நீ எனக்குக் கிட்டாத பொருள்.
    கிட்டாத பொருள் மேலதான்
    மனுஷனுக்கு ஒரு வெறி ஏற்படும்.அந்த வெறிதான்
    இத்தனை நாளா என்னை
    ஆட்டிப் படைச்சுக்கிட்டிருந்ததுன்னு
    நான் நல்லா உணர்ந்துட்டேன்."

    சுந்தராக நடிகர் திலகம் இதைச்
    சொல்லும் போது நடிப்பு தன்னை கௌரவமாக உணர்ந்திருக்கும்.

    அடுத்து வருகிற வசனத்தை
    நடிகர் திலகம் பேசுவதைப்
    பாடமாக்கி, அடுத்தடுத்த தலைமுறைக் கலைஞர்களுக்கு வகுப்பெடுக்க
    வேண்டும்.

    தான் எதை விட்டு விட்டும்
    உமாவோடு வந்து விடலாம்.
    தன் மனைவியை, தன் குழந்தையைப் பிரிய தன்னால்
    முடியாது என்பதைச் சொல்லுமிடம்.

    "நான் தனியில்லை. என் மனைவி தனியில்லை. என் மகள் தனியில்லை."-என்பது
    வசனம்.

    இதை அப்படியே சாதாரணமாகச் சொன்னால்
    கூட அர்த்தம் புரியாமல் போய்
    விடாது.

    இருந்தாலும், நடிகர் திலகம்
    சொல்வதைக் கவனியுங்கள்.
    மூன்று வாக்கியங்களுக்கும்
    ஊடே ஒரு "கமா"இருக்காது.
    "ஃபுல் ஸ்டாப்" இருக்காது.
    என்ன ஒரு ஞானம்? தன்னையும்,தன் மனைவி,
    குழந்தையையும்.. பேசும்
    வார்த்தைகளால் கூட பிரிக்க
    விரும்பாதவனாய் அந்த
    சுந்தர் பாத்திரத்திற்கு நடிகர் திலகம் கொடுத்திருக்கும்
    ஒரு உருவகம், தனித்துவம்
    வாய்ந்தது.அவரால் மட்டுமே
    முடிந்த விஷயம் அது.

    சுந்தரும்,உமாவும் பேசிக் கொண்டிருக்கும் இடம் நோக்கி
    கீதா ஒடி வருகிறாள்.

    அவள் கையில் ஒரு கடிதத்
    துண்டு. "அப்பா.. அம்மா இதைக் குடுத்தாங்க."

    சுந்தர் பிரித்துப் படிக்கிறான்..
    "என் இதயத்தில் வாழும்
    அன்பு தெய்வத்துக்கு என்
    இறுதி வணக்கம்."

    இங்கேயும் அற்புதம் செய்திருக்கிறார்..நடிகர் திலகம்.

    சத்தியமாக அந்தக் கடிதத்தில்
    இந்த ஒரு வரி மட்டும் எழுதியிருக்கப் போவதில்லை.
    அந்த ஒரு வரி படித்ததும்
    அப்படியே வீசி விட்டு ஓடும்
    நடிப்பு மிகச் சிறப்பானது.
    அன்பு மிக்க மனைவி "இறுதி
    வணக்கம்" என்று துவங்கி
    எழுதியிருக்கும் கடிதத்தை
    ஒரு பண்பு மிக்க கணவன்
    வரி, வரியாய் ...சாவகாசமாய்
    உட்கார்ந்து படிக்க முடியாது.
    ஒரு வெறித்தனமான நடிப்பாசை கொண்ட நடிகர்
    திலகத்தாலேயே இப்படியெல்லாம் நடிக்க முடியும்.
    ------------------

    சாந்தி தன் வாழ்வை முடித்துக்
    கொள்ள விரைகிறாள்.

    தன் நெஞ்சக் கோயிலில் வைத்துப் பூஜிக்கும் சுந்தரின்
    மன நிம்மதிக்காகவும், உமாவுடன் அவன் வாழப்
    போகும் நல்வாழ்வுக்காகவும்
    அவள் தன்னையே தியாகம்
    செய்யத் துணிந்து விட்டாள்.

    சுந்தர் பதறுகிறான்.

    "அம்மா..அம்மா" என்று
    கதறுகிறாள் கீதா.

    "வேண்டாம்..வேண்டாம்" என
    அலறுகிறாள் உமா.

    சாந்தி தன் முடிவிலிருந்து
    பின் வாங்குவதாயில்லை.

    சுந்தர், சாந்தியை நோக்கி
    ஓடுகிறான். உயரம் பார்த்தால்
    வரும் வழக்கமான கிறுகிறுப்பு
    அவனைக் கவ்விக் கொள்கிறது.
    தள்ளாடிச் சரிகிறான். எந்தக்
    குரலுக்கும் பணியாத அவள்
    முடிவை, தன் கணவனின்
    "சாந்தி" என்கிற மரண ஓலம்
    மாற்றுகிறது.

    சாந்தியைப் பிரிய முடியாத
    சுந்தரும் அவளோடு சாகத்
    துணிய...

    குழந்தை அழுது வீறிட..

    உமா மன்றாட...

    இந்த மூன்று உயிர்களுக்கிடையே நிகழும்
    உணர்ச்சிப் போராட்டத்தை
    மூன்று பிஞ்சுக் குரல்கள்
    கலைக்கின்றன.

    உமாவின் அண்ணனுடைய
    மூன்று குழந்தைகள்.

    உமா மனம் திறக்கிறாள்.

    சாந்திக்கு.. ஏன் சுந்தருக்கே தெரியாத அவளது கண்ணீர்க்
    கதை அவர்களின் மனங்களில்
    எழுதப்படுகிறது.

    அவளது தியாகத்தின் மணம்
    அந்த வெட்டவெளியை
    நிறைக்கிறது.

    தம்மைத் தாமே அறுத்துக்
    கொண்டு ரணப்பட்டுத் தவித்த
    சுந்தருக்கும், சாந்திக்கும்
    உமா புரிதல் சிகிச்சை
    செய்து நொடியில் குணமாக்கினாள்.

    சுந்தர், சாந்தியின் நல்வாழ்வில்
    தான் இனி குறுக்கிடப் போவதில்லை எனவும், தனக்கு
    காசியிலுள்ள அநாதைக் குழந்தைகளுக்கான பள்ளியிலிருந்து அழைப்பு
    வந்திருப்பதாகவும், அங்கே
    தன் அண்ணன் குழந்தைகளுடன் செல்லப்
    போவதாகவும் தெரிவிக்கிறாள்.

    தான் சுந்தரிடம் மனைவி,குழந்தையைப் பிரிந்து வருமாறு கேட்டதற்கு, அவன்
    சரியென்று சொல்லியிருப்பின்
    தன் வாழ்வை முடித்துக்
    கொள்ளவும் தயாராயிருந்தாள்
    என்பதையும் சொன்னாள்.

    அதை சுந்தரவதனமும் ஆமோதிக்கிறார். தனக்கு உமா
    எழுதிய கடிதத்தில், சுந்தருடனான போராட்டத்தில்
    தோற்று தனக்கு எதுவும்
    ஆகி விட்டால், தன் அண்ணனின் குழந்தைகளையும்
    பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததைச் சொல்கிறார்.

    தன் பொருட்டு நிகழ்ந்து விட்ட
    கொடுமைகளைத் தானே சரி
    செய்து விட்ட ஒரு தியாகவதியின் இலட்சியப்
    பயணம் அந்த இடத்திலிருந்து
    துவங்குகிறது.

    திரையரங்கத்தின் இருட்டு மாறி
    அத்தனை விளக்குகளும்
    ஒளிர்ந்து, திரை மீது விழும்
    ஒளி முற்றிலுமாய் அணையும்
    வரைக்கும் தன்னையே
    பார்க்க வைப்பவராயிற்றே..
    நடிகர் திலகம்?

    சும்மாயிருப்பாரா?

    "எல்லோருக்கும் வணக்கம்"
    என்று பத்மினியம்மா கண்ணீர்
    முகமாய்க் கைகூப்பினவுடன்,
    ஒரு மாபெரும் பிரிவைத்
    தாங்க வேண்டிய கட்டாயத்தில்
    தானிருப்பதை உணர்த்தும்
    விதமாய் எச்சில் விழுங்குகிறாரே.. அது...

    "நான் போயிட்டு வரேன் சார்.."
    என்று முதலில் நாகேஷிடம்
    சொல்லி விட்டு, பத்மினி திரும்பி தன் முகம் பார்க்க..
    கலங்கிப் போனாலும், தன்னைத் தேற்றிக் கொண்டு
    "உமா..போய் வா!" என்று
    உருக்கமும், மெலிதான
    கம்பீரமுமாய் உத்தரவு கொடுப்பாரே..? அது...

    தன் அண்ணன் குழந்தைகளுடன் இலக்கு
    நிச்சயித்த புனிதப் பயணம்
    புறப்பட்டுப் போகும் உமாவை
    ஏக்கத்துடன் பார்க்கும் சுந்தராக
    நிற்கையில்.. ஒரு விநாடி
    தன் வலக்கையை இறுக்கி தளர்த்துவாரே...? அது...

    மிக...மிக...மிக ..இலேசாய்
    உதடு கடிப்பாரே...? அது...

    "உனக்கு நானிருக்கிறேன்"
    என்று மனைவிக்கு நம்பிக்கை
    சொல்கிற வெளிப்பாடாய்..
    புன்னகை அரசியின் தோள்களில் தன் இடக்கையை
    தவழ விடுவாரே.. ? அது...

    தவழ விட்ட தன் கையால்,
    புன்னகை அரசியின் கையில்
    ஒரு நம்பிக்கை அழுத்தம்
    தருவாரே...? அது...

    -இவையெல்லாம்...

    "இரு மலர்கள்" படத்திற்கு
    'வணக்கம்' போடுவது அவசியந்தானா என்று கேட்க
    வைப்பவை.
    -----------------

    இந்த இறுதிக்காட்சியில்
    நாகேஷ், பத்மினிக்காக
    சொல்வதாக அய்யா ஆரூர்தாஸ் ஒரு வசனம்
    வைத்திருக்கிறார்.

    "பலர், குழந்தைகளைப்
    பெத்ததுக்குப் பிறகுதான்
    தாயாகுறாங்க. சிலரை
    ஆண்டவன் படைக்கும் போதே
    தாயா படைச்சிடுறான்.

    தாயே நீ வாழ்க."

    - என்கிற வசனம்.

    எங்கள் நடிகர் திலகமும்
    எங்களுக்குத் தாய்தான்.

    எங்கள் பசியறிந்த தாய்.

    எங்கள் உணவின் அளவறிந்த
    தாய்.

    எங்களுக்கு வேண்டியது,
    வேண்டாதது அறிந்த தாய்.

    எங்களுக்காக கண் விழித்துப்
    பாடுபட்ட தாய்.

    உன்னால்தான் எங்கள்
    ஏக்கங்கள் பறந்தது.

    உன்னால்தான்
    எங்களுக்கான சொர்க்கங்கள்
    திறந்தது.

    தாயே... நீ வாழ்க.!
    ----------------------

    -இரு மலர்கள்-
    நான் எழுதியது
    (முற்றும்.)
    ----------

    ...பார்ப்பதும், வியப்பதும்...
    எல்லோருக்கும்
    (தொடரும்)
    -----------

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1122
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாதுகாப்பு - 45வது ஆண்டு நிறைவு

    இன்று தான் வெளியான மாதிரி தோன்றுகிறது.. 45 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கலாமோ என நமக்குள் ஏக்கத்தை உருவாக்கிய பாதுகாப்பு திரைப்படத்தின் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. முதன் முதலில் சீர்காழியின் குரலில் ஆத்துக்குப் பக்கம் பாடலைக் கேட்ட உடனேயே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிய திரைப்படம், ஒரு நாள் நினைத்த காரியம் பாடலை வானொலியில் ஒலிபரப்பத் துவங்கியதும் குதூகலிக்கத் தொடங்கியது இன்றும் அதே உணர்வுடன் பசுமையாக உள்ளது. அந்த எதிர்பார்ப்புகள் படத்தில் நல்லபடியாக நிறைவேறவும் செய்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக திரைப்படம் என்கிற அளவில் மக்களிடம் வரவேற்புப் பெறாததன் காரணமாக அருமையான பாடல்கள், நடிகர் திலகத்தின் அமர்க்களமான ஸ்டைல், கண்ணைக் கவரும் வண்ண ஒளிப்பதிவு என பல அம்சங்கள் நிறைந்திருந்தும் தொய்வான திரைக்கதையமைப்பின் காரணமாக படம் ஸ்லோ என்ற ரிப்போர்ட் படத்தின் வணிக வெற்றியைப் பாதித்து விட்டது. ஆனால் என்ன. எப்போது பார்த்தாலும் நெஞ்சம் நிறையும் தலைவர் இருக்கும் போது நமக்கென்ன குறை..

    இதோ நான்கு ஆண்டுகளுக்கு முன் வாசு சாரின் அட்டகாசமான நினைவலைகள்.. படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் அனுபவங்களின் தொகுப்பு...

    பதிவிட்ட நாள் .. 27.11.2011


    'பாதுகாப்பு' 42-ஆவது குதூகல ஆண்டுத் துவக்கம்.'

    'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970



    இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.

    எங்கள் ஊரான கடலூரில்தான் 'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு நடைபெற்றது என்பதுதான் அந்த விசேஷம். இப்போது சொல்லுங்கள்.. இந்தப்படம் எனக்கு, ஏன் கடலூரையும், அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நெருக்கமான படம்தானே!

    கடலூர் ஓல்ட் டவுன் அதாவது CUDDALORE O.T என்று குறிப்பிடுவார்கள். (கடலூர் துறைமுகம் என்றும் கூறுவார்கள்) கடல், ஆறுகள் சூழ்ந்த பகுதிகள் அதிகம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் இடம். மீன்பிடித் தொழிலை நம்பித்தான் இன்றளவும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. உப்பனாறு, கடிலம்,பெண்ணையாறு போன்ற ஆறுகள் இங்கு கடலுடன் சங்கமிக்கும் காட்சிகளைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த ஆற்றுப் பகுதிகளில்தான் பாதுகாப்பு ஷூட்டிங் நடைபெற்றது.

    கடலூர் துறைமுக உப்பனாற்றுப் பகுதி.



    'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான சீன்கள் படகில் நடப்பது போல் வருவதினால் படப்பிடிப்பு கடலூர் துறைமுகம் பகுதிகளில் நடத்தப் பட்டது. அப்போது அங்கு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

    1970-ன் ஆரம்பத்தில் ஷூட்டிங் நடந்ததாக நினைவு. என் தாயார் தினமும் ஷூட்டிங் பார்க்க என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். என் தாயார் நடிகர் திலகத்தின் தீவிர பக்தை. எனவே சந்தோஷத்திற்குக் கேட்கணுமா?...

    அப்போதெல்லாம் ஷூட்டிங் பார்ப்பது என்றால் சொர்க்கத்தையே நேரில் காண்பது போல...கடல் அலைகளை விட மக்கள் தலைகள் அதிகம். அதுவும் 'நடிப்புலகச் சக்கரவர்த்தி' ஷூட்டிங் என்றால்?... சொல்லணுமா..நடிகர் திலகத்தை காணும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும்.

    தெய்வத்தை தரிசிப்பது போல நடிகர்திலகத்தைப் பார்த்து மயங்கியது கூட்டம். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக படப்பிடிப்பில் கலந்து கொண்டது என் பிஞ்சு நெஞ்சில் ஆழமான ஆணிவேராக வேரூன்றிப் பதிந்துவிட்டது. அவர்மேல் பாசமான வெறி வர என்னுள் முதல் தளம் அமைத்துக் கொடுத்தது 'பாதுகாப்பு' பட ஷூட்டிங் தான்.

    நடிகர் திலகம் படகோட்டுபவராக ( படகை விட சற்றுப் பெரிதான தோணி) நடித்ததால் பெரும்பாலும் படகுகளில் ஷூட்டிங் இருக்கும். உப்பனாற்றில்தான் நிறைய ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் சமயங்களைத் தவிர பிற சமயங்களில் கைலியையே கட்டிக் கொண்டு கொஞ்சமும் பந்தா இல்லாமல் படகில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் நடிகர் திலகம். தனியாக அவருக்கென்று ஒரு படகு. ஒரு படகோட்டி...(வண்ண ஓடக்காரன் அல்ல. கார்த்திக் சாருக்கு நன்றி!)...சாதாரண ஒரு படகோட்டி. (கொடுத்து வைத்த படகோட்டி.) படகில் சரியான வசதிகள் கூடக் கிடையாது. தன்னுடைய ஷூட்டிங் நடைபெறாத சமயங்களில் நடிகர் திலகம் படகிலேயே கண்ணயர்ந்து உறங்கி ஓய்வெடுக்க, படகு ஆற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். ரசிகர்களின் அன்புத் தொல்லையை சமாளிக்க இப்படி ஒரு வழியை படகோட்டிதான் கூறினாராம். இருகரை மருகிலும் ஜனத்திரள் நடிகர் திலகத்தின் முகத்தை அருகில் பார்த்துவிடத் துடிக்கும். நடிகர் திலகமும் அவ்வப்போது படகோட்டியிடம் கரை ஓரமாக படகை ஓட்டச் சொல்லி கரை ஓரமாகவே படகில் நின்று (படகு மெதுவாக ஓடியபடியே இருக்கும்) அன்பு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கையை அன்புடன் அவருடய ஸ்டைலில் அசைத்து சைகை செய்தபடியே வலம் வருவார்.

    ...

    SIZE=3]CU 221 எண் தோணியை செலுத்துகிறார் நடிகர் திலகம். [/SIZE]



    தோணியின் பாய்மரத்தை ஏற்றுகின்றார் நடிகர் திலகம்.(உடன் மேஜர் மற்றும் நம்பியார்)



    உடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நம்பியார் அவர்கள்,மேஜர் சுந்தரராஜன் அவர்கள், இயக்குனர் பீம்சிங் அவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்கள். மேஜர் அவர்களின் கையில் எப்போதும் நீள் சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருக்கும்.

    மீனவர்கள் அன்புடன் தரும் மீன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டார் நடிகர் திலகம். இறால் என்றால்அவருக்கு மிகவும் உயிர் என்பதால் மீனவர் தலைவர் திரு குப்புராஜ் அவர்கள் இறாலை பதமாக வறுத்து ஒரு டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்துவிடுவாராம். நடிகர் திலகம் அதை ருசித்து சுவைத்து சாபிடுவாராம். (பின்னாட்களில் 'பாதுகாப்பு' எண்ண அலைகளில் மூழ்கும் போது திரு.குப்புராஜ் அவர்கள் பாதுகாப்பு பற்றிய பழைய நினைவுகள் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்).

    'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்ற அற்புதமான பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூண்டியாங்குப்பம் என்ற இயற்கை சூழல் நிறைந்த ஊரில் நடந்தது. ஒரு கைலி, மற்றும் ஒரு வெள்ளை பனியனுடன் நடிகர் திலகம் ஷாட்டுக்கு ரெடி. தன்னுடைய தோணியில் இருந்தவாறே அருகில் ஒரு சிறு படகில் புது திருமணத் தம்பதிகள் வரும்போது அவர்களைப் பார்த்து ஜெயலலிதாவை நினைத்து கனவு காணுவதாக சீன். அந்த புதுமணத் தம்பதிகளாக தன்னையும் ஜெயலலிதா அவர்களையும் கற்பனை செய்து அதே படகில் வருவதாக அந்தக் கனவுக் காட்சி. (அந்தக் குறிப்பிட்ட சீனைக் கூட நிழற்படமாகப் பதிவிட்டுள்ளேன்). இந்தக் காட்சியை ஆற்றின் அக்கரையில் எடுக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

    புதுமணத் தம்பதிகளாக நடித்த எக்ஸ்ட்ரா நடிகர்கள்.



    கனவுக் காட்சியில் நடிகர்திலகமும், ஜெயலலிதாவும்.



    இக்கரையில் படகில் நடிகர் திலகமும்,ஜெயலிதாவும் ஏறி அமர படகு அக்கரைக்கு செல்ல ஆரம்பித்தது. இக்கரையில் இருந்த மக்கள் ஷூட்டிங் இங்குதான் நடக்கும் என்று மனக்கோட்டை கட்டியிருக்க, திடீரென்று படகு அக்கரை செல்ல, ஏமாற்றமடைந்த இளைஞர் பலர் (நீச்சல் தெரிந்தவர் நீச்சல் தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..) 'சொடேல் சொடேல்' என ஆற்றில் குதித்து அக்கரைக்கு நீந்த ஆரம்பிக்க ஒரே ஆனந்தக் களேபரம் தான்.

    என்னுடைய தந்தை ஊர்க்காவல் படையில் இருந்ததனால் எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஊர்க்காவலர் படை யூனிபார்ம் அப்படியே போலீஸ் உடை போலவே இருக்கும் . போலீசுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களுக்கும் உண்டு. அந்த வசதியால் என் தந்தையுடன் வெகு ஈஸியாக நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகின் அருகில் சென்று நின்று கொள்ள முடிந்தது. நான் சிறுவனானதால் சடாலென எதிர்பாராத விதமாக என்னையும் நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகில் தூக்கி ஏற்றிவிட்டு, தானும் அப்படகில் ஏறிக்கொண்டார் என் தந்தை. (போலீஸ் பந்தோபஸ்து என்ற சாக்கில்.) படகில் படப்பிடிப்புக் குழுவினர் சிலரும், ஜெயலலிதா அவர்களும், சில காவல்துறையினர் மட்டும் இருக்க நடிகர் திலகத்தின் அருகில் நான். முதன் முதலாக நடிகர் திலகத்தை மிக அருகில் பார்க்கிறேன். ஒரு நாற்காலியில் கைலியோடு படு காஷுவலாக அமர்ந்திருந்தார் நடிகர் திலகம். அவ்வளவாக அறியாத சிறு வயது எனக்கு. பின்னாளில் என் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறார் என்பது அறியாமல் அவரை விழுங்கி விடுவது போலப் பேந்தப் பேந்தப் பார்க்கிறேன் நான். நடிகர் திலகமும் என்னை உற்று நோக்கி ஒரு சிறு புன்னகை புரிகிறார்.(என்ன ஒரு கொடுப்பினை). என் தந்தை வாழ்நாட்களில் எனக்குச் செய்த பேருதவி இதுதான் என்று சொல்லுவேன்.( பின்னர் பல நாட்களில் வாரம் ஒருமுறை என 'அன்னை இல்லம்' சென்று அவரை தரிசித்து 'ஷொட்டும்' வாங்கியிருக்கிறேன். திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.(அவரிடம் திட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!) நினைத்தாலே கண்ணீர்ப் பிரவாகமெடுக்கிறது.

    ஷூட்டிங் நடைபெற்ற பூண்டியாங்குப்பம் ஆற்றுப் பகுதி



    அக்கரையில் சில காட்சிகள் எடுத்து முடிக்க அன்று மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. ஒரு மணிக்கெல்லாம் ஜெயலலிதா அவர்களின் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்தவுடன் அவர் தனியாக ஒரு படகில் இக்கரை வந்து சேர்ந்து மதியம் லஞ்ச்சுக்காக காரில் பாண்டிச்சேரி புறப்பட்டுப் போய் விட்டார். நடிகர் திலகம் நடித்த காட்சிகள் முடிந்து அவர் தனியாக ஒரு படகில் இக்கரை திரும்புகையில் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. அக்கரையில் இருந்து இக்கரை வந்து சேர ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகும். காற்று அச்சமயம் பலமாக வீச, நடிகர் திலகம் வந்த சிறு படகின் பாய்மரம் கிழிந்து விட்டது. படகோட்டி சாதுரியமாக படகை ஓட்டி வந்தார். கிழிந்து போன அந்த பாய்மரம் செப்பனிட தேவையான செலவுக்கான தொகையை நடிகர் திலகமே படகோட்டியிடம் கொடுத்து உதவியது பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

    படகில் நின்று ஷூட்டிங் பார்க்க வந்த மக்களைப் பார்த்தவாறே நடிகர் திலகம் தன் வயிற்றைத் தடவி 'பசி' என்று சைகையால் அப்பாவித்தனமாகக் காண்பிக்க ,ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த கலர் சோடாவுடன் ஆற்றுக்குள் குதித்து நீந்திச் சென்று நடிகர் திலகத்திடம் கொடுக்க அவரும் அதை தேவாமிர்தம் போல வாங்கிக் குடிக்க, அந்த ரசிகரின் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைக் காண வேண்டுமே! ..... செம ஜாலியாய் இருந்தது.

    நடிகர் திலகம் தனது ஆத்ம நண்பரான காங்கிரஸ் முன்னாள் கடலூர் எம்.பி. திரு.முத்துக் குமரன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஷூட்டிங் நடந்த பூண்டியாங்குப்பம் என்ற கிராமம் சற்றேறக்குறைய கடலூரிலிருந்து இருபது கிலோமீட்டர்களுக்கு மேல் இருக்கும். ஷூட்டிங் முடித்து மாலையில் திரும்பும் போது ரோடின் ஓரத்தில் ஒரு ஆயா மசால் வடை சுட்டுக் கொண்டு வியாபாரம் செய்தார்களாம். காரில் வரும்போது அந்த மசால் வடை வாசத்தில் மயங்கி காரை நிறுத்தச் சொல்லி காரில் அமர்ந்தபடியே மசால் வடையை வாங்கி வரச் சொல்லுவாராம் நடிகர் திலகம். வங்கியில் பணி புரிந்து ஒய்வு பெற்ற நடிகர் திலகத்தின் அன்புக்குப் பாத்திரமான கடலூர் 'பேங்க் மோகன்' என்ற இனிய நண்பர்தான் வடையை வாங்கி வந்து கொடுப்பாராம். நடிகர் திலகமும் காரிலேயே தினமும் வடையை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டே வருவாராம். ('பேங்க்' மோகன் அடிக்கடி இன்று பார்த்தாலும் கூட "நான் நடிகர் திலகத்திற்கு மசால் வடை வாங்கிக் கொடுத்தவனாக்கும்"...என்று பெருமையுடன் ஜம்பம் அடித்துக் கொண்டு நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்).

    ஷூட்டிங்கின் கடைசி நாளன்று நடிகர்திலகமே காரை விட்டு இறங்கி நேராகவே அந்த ஆயாவிடம் சென்று மசால் வடை கட்டி கொடுக்கச் சொன்னாராம். அந்த ஆயாவும் சரியாகக் கண் தெரியாததால் தன்னிடம் வடை வாங்குவது உலகப் புகழ் பெற்ற நடிகர் என்று தெரியாமல் வடையைக் கட்டிக் கொடுத்தார்களாம். பின் நடிகர் திலகம் அந்தப் பாட்டியிடம் "பாட்டி! என்ன யாருன்னு உனக்குத் தெரியலையா?" என்று கேட்க, பாட்டி "சரியாகத் தெரியலயேயப்பா" என்று கூற, அதற்கு நம் நடிகர் திலகம் நம் கார்த்திக் அவர்கள் கூறுவது போல குறும்பாக,"பாட்டி என்ன நல்லாப் பாரு! என்ன நல்லாப் பாரு!" என்று திருவிளையாடல் பாணியிலேயே சொல்ல பாட்டி சற்று யோசித்துவிட்டு உடனே புரிந்து கொண்டு, "தம்பி! நீ சிவாசிகணேசன் தானே! என்று கூறி நடிகர் திலகத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்களாம். பின் மசால் வடைருசியைப் பற்றி அந்தப் பாட்டியிடம் பாராட்டிவிட்டு மீதம் இருந்த அத்தனை மசால்வடைகளையும் பார்சல் செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டு அந்தப் பாட்டிக்கு ஒரு கணிசமான தொகையைத் தந்து மனமகிழ்ந்தாராம் நடிகர் திலகம்.

    அதனால் தான் 'பாதுகாப்பு' படம் எங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாயிற்று. இன்னும் சொல்லப் போனால் கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும் அப்படத்தின் ஷூட்டிங்கால் தலைவரின் கோட்டையாயின என்று கூடச் சொல்லலாம். குறிப்பாக ஷூட்டிங் பார்க்க வந்த கிராமங்களின் மக்கள் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசி மகிழ்ந்தனர்.

    குறிப்பாக ராமாபுரம் என்ற ஒரு கிராமமே தலைவர் புகழ் பாடும் கிராமமாயிற்று. அந்த கிராமத்தில் தான் என் தந்தையார் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்தார்). ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடிகர் திலகம் தான் வேட்டை ஆடி பாடம் செய்த புலியுடன் நின்று ஸ்லிம்மாக காட்சி தரும் அந்த அற்புத புகைப்படம் கண்டிப்பாக மாட்டப் பட்டிருக்கும் இன்றளவிலும் கூட.

    இன்று 'பாதுகாப்பு' வெளியாகி 41 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இப்போதுதான் அப்படத்தின் ஷூட்டிங் பார்த்தது போல அவ்வளவு பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. நடிகர் திலகத்தின் தீவிர பக்தனாக என்னைப் பெருமையுடன் உலா வர வைத்த பாதுகாப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. 'பாதுகாப்பு' என்னைப் பொறுத்தவரயில் மிகச் சிறந்தபடம் என்றுதான் கூறுவேன். மிகவும் வித்தியாசமான முறையில் சிறந்த கதைக் கருவோடு எடுக்கப் பட்ட அற்புதமான இந்தப் படம் வழக்கம் போல வெகுஜன ரசனைக் குறைவால் சராசரிக்கும் கீழே தள்ளப் பட்டது வேதனைக்குரியது. மேலும் எங்கள் ஊரில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெறாமல் போனாலும், ஒரு சராசரி அளவிற்குக் கூட வெற்றி அடையவில்லையே என்ற வருத்தமும் ஆதங்கமும் எப்போதும் எங்கள் ஊர் மக்களின் அடிமனதில் இருந்து வலித்துக் கொண்டே தான் இருக்கும்.

    அன்புடன்,
    வாசுதேவன்.

    வாசு சாருக்கு நன்றி - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post774770
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1123
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    பார்க்கப் பார்க்கத் திகட்டாத நடிகர் திலகம். மெல்லிசை மன்னரின் இசையில் கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனினும் இனிய மதுர கானம்....காதல் ரசம் ததும்பும் கவியரசரின் வைர வரிகள்... செவியில் தேனமுதாய் ஒலிக்கும் பாடகர் திலகத்தின் குரல்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1124
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இரு மலர்களை 'சுந்தர'மாய் மலரவைத்த ஆதவரே!
    இறைவன் அருள் என்றும் உமக்கு உண்டு
    மனதுக்கு 'சாந்தி' தந்தது உங்கள் பதிவு.
    'கீத'மாய் தொடர் தந்து 'உமா'பதி மகன் புகழ் பாடிய தாங்கள்
    'தியாக' திருமகன் 'மார்த்தாண்ட ராஜசேகர சேதுபதி' பற்றி
    ஒன்று விடாமல் மறுக்காமல் எழுதுவீர்கள் என எதிரிப்பார்க்கிறேன்.

    நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Georgeqlj, Russellmai liked this post
  7. #1125
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!

    'பாதுகாப்பு' நினைவலைகளை மீள்பதிவு செய்ததற்கு நன்றி! அருமையான 'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' பாடலுக்கும் நன்றி! இரண்டொரு தினங்களுக்கு முன் கூட நாமிருவரும் 'பாதுகாப்பு' பற்றி நீண்ட நேரம் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தோம். 'கந்தன்' அதில் புரியும் விந்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. 'கடலூர்' கந்தன் ஆயிற்றே! இப்படத்தில் கலைச்செல்வியின் பங்கு மகத்தானது. ஆனால் பெயர் என்னவோ 'எங்கிருந்தோ வந்தாளு'க்குத்தான் போயிற்று.

    நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பாடும் அற்புதமான நம் எல்லோரையும் அசத்தும் ஒரு பாடல் பற்றி மதுர கானங்களில் 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் முன்பு எழுதியிருந்தேன். அதையும் இங்கே மீள்பதிவாக நம் நண்பர்கள் எல்லோருக்குமாகவும் 'பாதுகாப்பு 45வது ஆண்டு நிறைவு' சந்தோஷ தினத்தை முன்னிட்டு பதிகிறேன். தங்களின் நினைவூட்டலுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1126
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (83)(1st October 2014)

    வித்தியாசமான இந்த பாடலை நடிகர் திலகம் பிறந்தநாளுக்கு நம் மது அண்ணாவுக்கு டெடிகேட் செய்கிறேன்.

    நடிகர் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த 'பாதுகாப்பு' படத்திலிருந்து ஒரு மிக அரிய ஸ்பெஷல் பாடல். சன் பீம்ஸார் தயாரித்த இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங்.

    பாலையா, மேஜர், சந்திரபாபு, நம்பியார், நாகேஷ், கருணாநிதி, செந்தாமரை, சௌகார் ஜானகி, ராஜகாந்தம் என்று நிறைய நடிகர்கள்.

    கதை எஸ்.எல்.புரம் சதானந்தம். வசனம் பாசுமணி. பாடல்கள் கண்ணதாசன். நடனம் பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு ஜி.விட்டல்ராவ். இசை 'மெல்லிசை மன்னர்'.

    கப்பலில் ஒரு பாடல். நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் இப்பாடல் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. கொஞ்சம் கடினமான வரிகள். கடினமான டியூனும் கூட. ஆனால் அருமை.



    முற்றிலும் புதுமையான ஆங்கில பாணி நடனம். நடிகர் திலகம் அற்புதமான மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருப்பார். டார்க் பிரவுன் பேண்ட்டும், ரவுண்டு நெக் புளூ பனியனுமாக ஒவ்வொரு அசைவும் கேட்க வேண்டுமா! அமர்க்களப் படுத்தியிருப்பார். ஜெயா மேடம் சொல்லவே வேண்டாம். ஆங்கிலப் பாடல் பாணி என்பதால் நடிகர் திலகத்திற்கு குரல் தந்திருப்பவர் சாய்பாபா அவர்கள். ஜெயாவுக்கு குரல் ராட்சஸி.

    மிக மிக வித்தியாசமான பாடல். ஈஸ்வரி ராஜாங்கம் நடத்துவார். இதர நடன கலைஞர்களும் அருமையாகச் செய்திருப்பார்கள்.

    இந்தப் பாடலை ரொம்பநாள் மனதில் வைத்திருந்தேன். நடிகர் திலகத்தின் ரசிகர்களே முற்றிலும் மறந்து போய் இருக்கக் கூடிய பாடல் இது. அதனால் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதன் முதலாக you tube ல் தரவேற்றியுள்ளேன்.

    ரொம்ப ரசித்து மகிழக் கூடிய அபூர்வ பாடல். கேட்டு, நடிகர் திலகத்தைப் பார்த்து மகிழுங்கள். நன்றி!



    இனி பாடலின் வரிகள்.

    அஹ்.. நான் கொஞ்சம் ஓவர்
    என் துன்பங்கள் ஓவர்
    நான் மதுச்சுவை அறிந்த பெண்ணல்ல
    அ ...நான் சுகத்தையும் மறந்த பெண்ணல்ல
    சொர்க்கம் போ
    சொர்க்கம் போ

    ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
    ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
    ல லலலலல்லா
    ல லலலலல்லா

    சொர்க்கம் போ
    சொர்க்கம் போ

    (அருமையான கோரஸ்)

    இடை இசையாய் ஒலிக்கும் அந்த பேங்கோஸ், ஷெனாய், புல்லாங்குழல் , டிரம்பெட் ஒவ்வொன்றும் தனித்தனி ஜாலங்கள் புரியும்.

    என் இதழில் முன்பே மதுவுண்டு
    தேன் அதுவும் சேர்ந்தால் சுகமுண்டு
    என் இதழில் முன்பே மதுவுண்டு
    தேன் அதுவும் சேர்ந்தால் சுகமுண்டு
    கண்கள் மயக்க
    என் கன்னங்கள் கிண்ணங்கள் எண்ணங்கள்
    எல்லாமும் காதல் துடிக்க
    இடையோடு வா
    நடை போடும் தாளம்
    சிந்த சிந்த பிஞ்சு உள்ளம் கொஞ்சக் கொஞ்ச
    என்ன இன்பம்

    (கோரஸ்)

    ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
    ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா

    come along baby
    want to dance with me



    (நடிகர் திலகத்தை இந்த இடத்தில் பாருங்கள். ஸ்டைல் கொடி கட்டிப் பறக்கும்)

    நான் நதியில் இங்கே விளையாட
    நீ அழகைக் கண்டு வலை போட
    நான் நதியில் இங்கே விளையாட
    நீ அழகைக் கண்டு வலை போட
    பித்தும் பிறக்க
    ஒரு பொன்வண்டு கள்ளுண்ட பூச்செண்டு மேல் வந்து
    மோதிக் கிடக்க
    வெள்ளம் நடக்க
    ஹோஹோஹோ ...வெட்கம் பறக்க
    இன்னும் இன்னும் என்னும் வண்ணம்
    பின்னப் பின்ன என்ன இன்பம்

    (கோரஸ்)

    ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
    ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
    ல லலலலல்லா
    ல லலலலல்லா
    ல லலலலல்லா
    லலலல லலலலல்லா

    சொர்க்கம் போ
    சொர்க்கம் போ

    Last edited by vasudevan31355; 27th November 2015 at 06:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1127
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதவன் ரவி
    இருமலர்கள் பதிவு பட ஆய்வுகளில் ஒரு வித்தியாசமாய் அமைந்த பதிவு.காதலும் குடும்பமும் கலந்த
    ஒரு திரைப்படத்தை சஸ்பென்ஸாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றீர்கள்.அந்தப்பதிவு இன்னும் தொடர்ந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் வருகின்றது.
    அடுத்த பட ஆய்வுக்கு முன் கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  10. Likes Russellmai liked this post
  11. #1128
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    27.11.2015 தேதியிட்ட இன்றைய தினகரன் நாளிதழுடன் இணைப்பாக வெளிவரும் புத்தகத்திலிருந்து...





    தகவலுக்கு நன்றி - நண்பர் டாக்டர் ரமேஷ் பாபு, கோவை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #1129
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நினைத்துப் பார்க்கிறேன்



    1960களில் ஒரு பக்கம் மெல்லிசை மன்னர்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க, தன்னிகரில்லா இசைச் சக்கரவர்த்தியாக விளங்கிய திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், இன்னொரு பக்கம் தன் ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திக்கொண்டேயிருந்தார். பல படங்களின் பெயர்கள் இன்றும் மக்கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதற்குக் காரணமே, கே.வி.எம். அவர்களின் பாடல்களால் தான். அப்படி ஒரு படம் தான் 1965ல் வெளிவந்த காக்கும் கரங்கள். சிவகுமார் அறிமுகமான படம் என்பதை ஓர் அடையாளமாக்க் கொண்டாலும், பாடல்களே இப்படத்தை இன்று வரை மக்களிடம் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. இசையரசியின் குரலில் இப்படத்தில் ஒலித்த பாடல்களனைத்துமே நெஞ்சை விட்டு அகலாதவை. அதே போல பாடகர் திலகம் இசையரசி பாடிய அல்லித்தண்டு காலெடுத்து மற்றும் ஞாயிறு என்பது கண்ணாக - இந்த இரு டூயட் பாடல்கள் இப்படத் மிகப் பெரும் அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தன, சேர்க்கின்றன, சேர்க்கும்.

    முதன்முறை கேட்டதிலிருந்து பல நாட்களுக்கு ஞாயிறு என்பது கண்ணாக பாடல் நடிகர் திலகம் நடித்தது என்றே எனக்குள் ஓர் எண்ணம் இருந்தது. பொதுவாக பொதுக்கூட்டம், கல்யாணங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் மைக் செட்காரரிடம் நட்பாகப் பழகி அந்த இசைத்தட்டை வாங்கிப் பார்ப்பதில் தனி பரவசம் ஏற்படும், அந்தப் பழக்கத்தில் தான் இந்தப்பாட்டின் இசைத்தட்டை ஒரு நிகழ்ச்சியில் வாங்கிப் பார்த்தபோது அது எஸ்.எஸ்.ஆர். என அந்த மைக் செட் காரர் சொன்னார். அவ்வளவு தான் புஸ்ஸென்று ஆகி விட்டது.

    50 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை. மீண்டும் நடிகர் திலகம் பிறந்து வந்தால் நிச்சயமாக இந்தப் பாடலுக்கு நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுப்பேன்.



    பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்கிற்கு...
    நம் மனதில் தோன்றும் கதாநாயகி ...
    வேறு யார்.. நம்ம...



    அண்ணி தேவிகா தான்.

    அதே கண்ணாடி அதே உடையுடன் நடிகர் திலகம்... விஜயகுமாரியின் காஸ்ட்யூமில் தேவிகா..

    ஆனால்...

    தலைவர் எப்படி செய்திருப்பார்...

    தேவிகா அந்தப் பாறை மேல் அமர்ந்திருப்பார்.. தலைவர் மெல்ல அருகில் வருவார். அப்படியே அமர்ந்திருக்கும் தேவிகாவை முதுகு வழியாக வளைத்து மெல்ல எழுப்புவார்.
    மெல்ல முகவாய்க்கட்டையில் கைவைத்து முகத்தை சற்றே மேலே தூக்கியவாறு கண்களைப் பார்ப்பார். இப்போது காமிரா ஒரு விநாடி க்ளோஸப்பில் வரும்.
    பல்லவி துவங்கும் போது இரு கைகளையும் தேவிகாவின் இரு தோள்களில் போட்டு பாடத்துவங்குவார். நீரோடும் வைகையிலே சௌகார் ஜானகியை நினைவுறுத்திக் கொள்ளுங்கள்..
    ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக எனப் பாடும் போது தேவிகா முகத்தில் நாணம் தோன்ற மெல்ல நழுவி நடக்கத் தொடங்குவார். இந்த இடத்தைப் பொறுத்த வரையில் விஜயகுமாரியின் உடல் மொழி சிறப்பு. தலைவர் கூடவே மெல்ல இரு ஸ்டெப் வைத்து, சேர்ந்தே நடந்த்து அழகாக என பல்லவியை முடிப்பார்...

    இதன் பிறகு அனுபல்லவி முடிய எஸ்.எஸ்.ஆருக்கு பதில் நடிகர் திலகத்தை நினைவுறுத்திக் கொள்ளலாம்.

    நேற்றைய பொழுது கண்ணோடு எனச் சொல்லும் போது, தலைவரின் கண்கள் சற்றே மேல் நோக்கிப் பார்த்து கீழிறங்கும்.. ஆஹா.. இது இந்தப் பாட்டில் மிஸ்ஸாகிறதே...

    நிழலாய் நடப்பேன் பின்னோடு வரியின் போது தலைவர் கூடவே நடத்தி வருவார். ஒரு ஸ்டெப் மற்றுமே முன்னால் செல்வார். தேவிகாவோ அவரை ஒட்டினாற்போல் பின் தொடர்வார்.

    இதன் பின் வரும் பிஜிஎம் மில் தலைவரின் தனி நடை வரும். ஆனால் அது வேகமாக இருக்காது. மெஜஸ்டிக்காக மெதுவாக நடப்பார். தொடர்ந்து சரணம், ஊருக்குத் துணையாய் நானிருக்க.. வரியின் போது தான் மருத்துவர் என்பதை சித்தரிக்கும் விதமாக உடல் மொழி தருவார். எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் என்ற வரியின் போது ஒரு புன்னகை புரிவார்.. இதழ்கள் முறுவலிக்க, சுட்டுவிரல் தேவிகாவின் இதயத்தை தொட்டுக் காட்டும். உள்ளத்தின் கைகளில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்... இந்த வரிக்கு தேவிகாவும் தலவரும் டைட் க்ளோஸப்பில் ஒருவரை யொருவர் பார்த்தபடி ஃப்ரேம் கம்போஸிங் இருக்கும். திரை முழுதும் இந்தக் காட்சி பார்க்க ரம்மியமாக இருக்கும்..

    இப்போது எஸ்.எஸ்.ஆர். இரு கைகளையும் நீட்டும் அதே உடல் மொழியைத் தலைவரும் உபயோகிக்கலாம். முகத்தை ஒரு பக்கம் சாய்த்தவாறு தேவிகவைப் பார்த்து சிரித்தவாறே தன் இரு கரங்களாலும் அவளை வளைத்து மார்போடு அணைத்துக் கொண்டு பாடுவார்.

    இப்போது தலைவராயிருந்தால் பிஜிஎம்மில் இருவரும் சற்று தூரம் நடந்து வருவார்கள். முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் என்ற வரிக்கு கையை நன்கு மேலே உயர்த்தி அப்படியே அந்தக் கையை தேவிகாவின் மேல் கொண்டு வந்து வைத்து உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன் எனப் பாடுவார். ஆனால் சிரிக்க மாட்டார். கண்களில் ஒரு விதமான ஏக்கம் வரும். பெண்ணொரு பிறவி எடுக்க வந்தேன், பேசியபடியே கொடுக்க வந்தேன் என்ற அடுத்த வரியை தேவிகா பாடுவதாக இருந்தால், சற்றே நெருக்கமாக மீண்டும் காமிரா ஜூம் செய்து கொண்டே போய் பேசிய படியே கொடுக்க வந்தேன் என்ற வரியில் கொடுக்க வந்தேன் என்ற வரியின் போது முகம் நாணி கைகள் மூடிக்கொண்டு விடும்.
    இப்போது பல்லவி தொடரும் போது தலைவராக இருந்தால் முகத்தில் ஓர் இனம் புரியாத உணர்வைக் கொண்டு வந்து தேவிகாவைப் பார்க்க, அவரும் தலைவரை அதே போன்ற உணர்வுடன் பார்க்க, காதல் உணர்வு அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கும் அப்படியே தொற்றிக்கொண்டு மூழ்கி விடுவார்கள்.
    அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தவாறே மெய்மறந்து கண்களை மூடி சாய்ந்து அமர, காமிரா ஜூம் அவுட் ஆகி அப்படியே டிசால்வ் ஆகி விடும்.

    .....

    ஹ்ம்.. இவ்வளவு அருமையான பாடல் தலைவருக்கு வாய்த்திருந்தால் நான் இப்படித்தான் எடுத்திருப்பேன்..

    இந்தப் பாடலில் தலைவர் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என அடிக்கடி

    நினைத்துப் பார்க்கிறேன்

    என்றாலும் ஒரு ஆறுதலுக்காக இதோ தலைவர் தேவிகா சூப்பர் ஸ்டில்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #1130
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Not only this the song of Nadaswara Osaiyile from Poovum Pottum every one will think of NT.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •