Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "இருப்பா..! அத்தை தண்ணி குடிச்சிட்டு ஓடி வந்துடறேன்.."

    - ஓடி வருவதாகச் சொல்லிப் போன அத்தை சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் குடித்தாளா.. தெரியாது. சாயங்காலம் வரை வரவேயில்லை.

    என்னைப் பள்ளியில் சேர்த்து விட்ட தினத்தன்று
    நானடைந்த ஏமாற்றமும், அந்த ஏமாற்றம் தந்த கண்ணீரும் மிகச் சில தினங்களிலேயே மாறி விட்டன.

    பள்ளியும், பள்ளிக்குப் போவதென்பதும் மிகவும் பிடித்துப் போனது.

    அந்த தினங்களில் துவங்கிய பாடங்கள், அரைக்கால் சட்டை முழுக்கால் சட்டையாக மாறும்
    வரைக்கும் தொடர்ந்து விரட்டி முடிந்தன.

    "முடிந்தன" என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மெலிதாய் சிவப்பு பரவிய "சிபியா கலர்"
    என்று குறிக்கப்பட்ட ஒரு பழுப்பு வண்ண பிரிண்டில், மதுரை சென்ட்ரலில் ஞாயிறன்று
    "ஆண்டவன் கட்டளை" பார்த்த போது என்னை
    மாணவனாக மீண்டும் உணர்ந்தேன். நாடு மெச்சும் நடிகர்திலகமெனும் நல்லாசிரியர், என்னைப் போன்ற கோடிக்கணக்கான மாணவர்களுக்குக் கலையால் போதிக்கும் பாடங்கள் முடியவில்லை என்பதையும் உணர்ந்தேன்.
    *****

    நடு வகிடெடுத்து தலை வாரிக் கொண்டு, கையில்
    பிடித்திருக்கும் குடையைப் போலவே ஒழுக்கத்தையும் "கிச்" எனப் பிடித்துக் கொண்டு,
    அய்யன் "கடமையே வெற்றிக்கு வழி" என மெலிதாகவும் அதே சமயம் உறுதிபடவும் சொல்லும் போது...

    ஜூலியட் சீஸருக்குரிய " வந்தான்.. பார்த்தான்..
    வென்றான்" வார்த்தைகளை ஆன்டனியோடு தவறாகப் பொருத்தி வியாசம் எழுதியிருக்கும் மாணவியை நிறுத்தி நிதானமாய், அழகாய்க் கண்டிக்கும் போது...

    கூத்தும், கும்மாளமுமாய் வகுப்பறையில் வீணாகும் மாணவனைச் சலித்து, அவர்களின் எதிர்காலம் பாழாகும் என்று அறிவுறுத்தும் போது...

    பூக்கள் சூழ்ந்த பேரழகாய் காதலி சின்ன நீர்நிலையில் இருக்க, தானும் அதனுள் விழுந்து
    காதல் பேசும் போது...

    "தாயின் பாதங்களில் சொர்க்கம் இருக்கிறது" என்கிற நபிகள் நாயகத்தின் பொன்மொழி நிஜத்தை கனிவோடு சொல்லும் போது...

    அய்யனுடமிருந்து கற்றுக் கொள்கிறோம் " தமிழ்ப் பாடம்".
    *****

    "கடமையே வெற்றிக்கு வழி" என்று தான் கொண்டிருக்கிற தமிழ் நம்பிக்கைக்குப் பக்க பலமாக, "The Path of Duty is the way to Glory " என்று அழகு உச்சரிப்பைத் துணைக்கழைத்துக்
    கொள்கிற போது...

    சக மாணவியரின் அழகுக்கு மதிப்பெண்கள் போட்டுக் கிண்டலடிக்கும் மாணவர்களைத் திருத்த, புத்தக ஓவியங்களுக்கு அவர்கள் போலவே மதிப்பெண் போடும் போது...

    வறுமை நிலையிலும் கல்வி கற்க ஆவலாயிருக்கும் ஒரு இளைஞனின் அறிவு தாகத்தை "Splendid" என வியக்கும் போது...

    "காதலைப் புகழ்றது தப்பா சார்?" என்று கேட்கும் மாணவிக்கு, உச்சரிக்கும் விதத்திலேயே "நிச்சயமாக" என்பதைக் குறிக்கிறதாய் "Definitely"
    என்று கூறும் போது...

    ஆடிக் கொண்டே வந்து தன் மேல் மோதுகிற மாணவியை பேச்சாக இல்லை.. இரைச்சலாகவே
    கண்டிக்கிற போது...

    ஒரு நிறைவோடு வகுப்பைப் பூர்த்தி செய்கையில்
    "That's all for the day" சொல்லும் போது...

    "என்னைத் திட்டலாம் சார். காதலத் திட்டியிருக்கக்
    கூடாது" என்று கடிந்து கொள்ளும் மாணவனை
    எரிச்சலுடன், சலிப்புடன் "..You.." என்று பாதியாய்த்
    திட்டும் போது...

    அய்யனிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் "ஆங்கிலப் பாடம்".
    *****

    எழுத்துப் போடும் போது துவங்கி, கடமையிலிருந்து காதலுக்கு மாறுகிற நிமிஷம்
    வரைக்கும் முதுகின் பின் கைகோர்த்துக் கொண்டு, கோர்த்த கைகளில் ஒன்றை " கிடுகிடு"வென ஆட்டிக் கொண்டு அய்யன் ஒரு நடை நடப்பார்.

    காதலில் விழுந்த பின் வகிடெடுத்த சிகை மாறும்.
    அந்தப் பழைய நடை மாறும். ஒயிலாய், அழகாய்
    ஒரு நடை சேரும்.

    கடமையா..? காதலா..? என்கிற குழப்ப மிகையில்
    வீட்டுக்குள் நுழைகையில் ஒரு புறம் தோள் தொங்க தளர்வாய் வேறொரு நடை நடப்பார்.

    "ஆறு மனமே ஆறு" பாடலில் பற்றறுத்த யோகியாய், கற்றறிந்த ஞானியாய் பல்வேறு நடை நடப்பார்.

    நினைவுகள் மீண்ட பழைய காதலியிடமிருந்து
    கண்ணியமாய் விலகி கம்பீரமாய் ஒரு வேக நடை
    பின்னர் நடப்பார்.

    எந்த நடையை எப்போது நடந்தால் ரசிகன் ஆனந்தக் கூத்தாடுவான் என்கிற கணக்குத் தெரிந்த அய்யனிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்.. "கணக்குப் பாடம்."
    *****

    சற்றே கவனம் பிசகி, வழக்கமான பாதை விடுத்து
    வேறொரு பாதையில் போய் விட்டாலே பதை பதைத்துப் போகிறோமே..?

    கடமைப் பாதை விட்டு விலகி, காதல் பாதை தேர்ந்து, அசிங்கமுற்று, அவமானப்பட்டு, அன்னையைக் காவு கொடுத்து, அலைந்து, அல்லலுற்று, ஆண்டவனைத் தேடி, எந்நிலையிலும் ஒழுக்கம் விலகாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து, காதலையும், காதலியையும் மீட்டு, மீண்டும் கண்ணியத்துக்குரிய பழைய பாதைக்குத்
    திரும்பும் நாயகன் எத்தனை அனுபவித்திருப்பான்?

    சின்னச் சின்ன உடல் மொழிகள் மாற்றம், கூடும்,குறையும் அதிர்வுகளோடு கூடிய குரல், தொழில் பக்தியில் ஊறித் திளைத்த அபார திறமை...இவற்றைத் துணைக்கு வைத்துக் கொண்டு கடினமான நடிப்புப் பாதையில் ராஜநடை போட்டு அய்யன் வெற்றிக் கோட்டையை
    எட்டித் தொடும் அழகே அழகு.

    தனது மிகக் கண்ணியமான பிரம்மச்சரியம் தனது
    அழகான மாணவியின் பொருட்டு சோதனைக்கு
    உள்ளாக்கப்படும் போதெல்லாம் தவிக்கிற தவிப்பு...

    தனக்கு வெகு அருகில் மணக்கும் மல்லிகை மணம், தனது கோட்டுப் பையிலிருந்துதான்
    வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க அழகான
    முகர்தலோடு அந்த இடம் நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாய் முகம் தாழ்த்தும் பாவனைகள்...

    நேற்று வரை ஆசானாயிருந்து பார்த்த மாணவியை, இன்று காதலியாய்ப் பார்க்க நேர்ந்த
    தர்மசங்கடத்தில் வார்த்தைகளுக்குத் தவிக்கும்
    அழகு...

    தன் மனக் குழப்பத்தைப் போக்கிடலாகாதாவென
    விவேகானந்தரிடத்தும், வள்ளலாரிடத்தும் படம், படமாய் ஓடிப் புலம்பும் புலம்பல்...

    "ஆசையை ஒழி" என்ற அந்த மகான்கள் தத்துவம்
    மனசோடு எதிரொலிக்க.. அந்த அழகு முகம் காட்டும் புரிதல் மிக்க விடுதலை உணர்வுகள்...

    மீண்டும் மனத் திரையில் அழகுப் பெண்ணின் உருவம் ஓட.. அதே நிம்மதி முகம் சுமக்கும் குழப்ப பாவனைகள்...

    எந்தப் பிடிப்புமற்று விரக்தியில் குற்றவாளிக் கூண்டில் நிற்கையில் சோகம் கவ்விய முகத்தின்
    உச்சியில் மிளிரும் கண்களில் மனிதர்களைச்
    சந்திக்கக் கூசும் கூசல்...

    சிறைக்கு வந்து தன்னை வார்த்தைகளால் தண்டிக்கும் அன்னையிடம் மறுத்துச் சொல்ல ஒரு
    வார்த்தையின்றிக் காட்டும் முக வேதனைகள்...

    தன் அக்காள் மகளையும், தன் பிரியமான மாணவனையும் ஒன்றிணைத்த நிறைவு...

    நேசித்தவளே பித்து நிலையில் 'நீ பைத்தியமா?"
    என்று கேட்டதும் வெடித்தெழுப்பும் சிரிப்பழுகை...

    இவையெல்லாம் வெறும் நடிப்பம்சங்களல்ல..
    சிந்தனையின் தெளிவோடு கலையை ஆராய்ந்து
    பொருத்தும் அய்யனின் அறிவியல்.

    அந்த வகையில் அய்யனிடம் கற்கிறோம்... "அறிவியல் பாடம்".
    *****

    ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு
    திரைப்படத்தில் நடித்துக் கொடுத்து ரசிக்க வைத்ததோடு தன் கடமை முடிந்து விட்டதென்று
    கருதாமல்.. இன்னும் ஒரு நூறு தலைமுறைகள்
    போற்றிக் கொண்டாடத் தக்க பெருமைக்குரிய கலையெல்லாம் தனதென்று தலை நிமிர்ந்து
    நிற்கிறானே.. நடிகர் திலகமெனும் ஒப்பற்ற
    கலைஞன்..? அவன் இந்த "புவி" கூர்ந்து கற்க
    வேண்டிய " வரலாற்றுப் பாடம்".
    *****

    பாடங்கள் முடியவில்லை..!

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •