Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "அடி ஆத்தி..!
    நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவா..?
    ஆரு கேப்பாக..?"

    இன்று 49 வயதைப் பூர்த்தி செய்து 50க்குள் நுழைகிற நமது பேரன்பைப் பெற்ற பெருங்காவியமான " தில்லானா மோகனாம்பாள்"
    குறித்து அய்யா முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதிய பிறகு நானும் எழுத முனைந்த போது,
    ஆச்சி அவர்கள் நீட்டி முழக்கும் இந்த வசனமே
    என் நினைவில் வந்து கேலி செய்தது.

    இருந்தாலும் ஆசை யாரை விட்டது?
    *****

    எனதபிமான தில்லானாவுக்கு கிட்டத்தட்ட என் வயது. சொல்லப் போனால் என்னைக் காட்டிலும் வயசு கம்மி.

    தில்லானாவைப் பார்க்கும் போதெல்லாம், ஏன்..
    நினைத்தாலே எனக்கு மிகவும் பொறாமையாகவும், கோபமாகவும் இருக்கும்.

    பிறகென்ன?

    ஒரு பொட்டு நரையில்லாமல், ஐம்பது தொடப் போகிற அயர்ச்சியில்லாமல், பிறந்த தினம் தொட்டே யாவரும் தலையில் தூக்கி
    வைத்துக் கொண்டாடும் அந்த உன்னத நிலை விட்டு ஒரு அங்குலம் கூட கீழிறங்காது, எல்லாக்
    காலங்களிலும் எல்லோருக்கும் பிடித்தமானமானவனாயிருக்க மனிதப் பிறப்புக்
    கொண்டு பூமிக்கு வந்த என்னால் முடியவில்லை.

    மகாகலைஞன் ஒருவரை நாயகனாகக் கொண்டு
    உலகிற்கு வந்த ஒரு கலைப் படைப்பு அத்தனையும் கொண்டிருந்தால்.. சாதாரண மனிதன் எனக்கு பொறாமையும், கோபமும் வராதா?
    *****

    தில்லானா ஒரு மகா வியப்பு.

    புத்தகக் கதைகள் திரைப்பட வடிவம் பெற்று, கணிசமாய் வென்ற வரலாறுகளும் உண்டு.

    ஆனால், தில்லானா போன்று திரையைப் புத்தகமாக்கி எக்காலத்திலும் இனிமைப் பக்கங்கள் படபடக்க விரியும் புதினம் வேறொன்று இல்லவே இல்லை.

    அமரர் திரு. எம். ஜி. ஆர் அவர்கள் தமிழனின் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகிலுள்ளோர் உணர்ந்து கொள்ள தில்லானாவை சிபாரிசு செய்ததை இன்றளவும்
    சொல்லிச் சொல்லி வியக்கின்றோம்.

    தில்லானாவுக்குப் பிறகு அப்படிச் சொல்லிக்
    கொள்வதற்கு வேறு நடிகர்களின் படங்கள் இன்றளவும் வரவில்லை என்பது தில்லானாவுக்கான தனிப் பெரும் பெருமை. சிறப்பு.
    *****

    அமரர் அய்யா கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்
    சிருஷ்டித்த சிக்கல் சண்முக சுந்தரம் என்கிறவன்
    ஒரு தெய்வீக இசைக் கலைஞன். வித்யா கர்வத்தையும், முன் கோபத்தையும் நாதஸ்வரத்தைப் போல தன் கூடவே வைத்திருக்கிறவன்.

    தன்மானம் சீண்டப்படுகிற நிமிஷங்களில் ஒரு வெடிகுண்டாய் வெடிக்கிறவன். அது, தன்னையே
    தாக்கும் போது துடிக்கிறவன்.

    அழகான பெண்ணைக் காதலிக்கிற சராசரிகள்
    "அறை" தேடுகிற அவல பூமியில், சுடுசொல் வீசிய
    காதலிக்கு "அறை" கொடுக்கிற வித்தியாசன்.

    அவனது பலம் என்பது இசையாக...

    அவனது பலவீனங்கள் என்பது அவனை நம் வெறுப்புகளோடு இறுக்கிப் பொருத்தும் பசையாக...

    அவன்... முரடும், மென்மையும் கலந்து பிசைந்த ஆச்சரியக் கலவை.

    அந்தக் கதாபாத்திரத்தின் இத்தகைய குணாதிசயங்கள் ஒரு நாவலுக்குப் பொருந்துபவை.

    அவற்றை அப்படியே திரைப்பட வடிவத்திற்கு மாற்றும் போது, அன்றைய தேதியில் (இன்றைக்கும், என்றைக்கும் என்பது வேறு விஷயம்) உலகம் மெச்சும் மிகப் பிரபலமான கதாநாயகனான நம் நடிகர் திலகம், அவற்றைக்
    கொஞ்சமும் சிதைக்காமல், குறைக்காமல், மாற்றாமல், திரிக்காமல்... அப்படியே ஏற்றுக் கொண்டு கலை செய்ததால்தான் தில்லானா
    நிமிர்ந்து நிற்கிறது.
    *****

    அவசரத்திலும், ஆத்திரத்திலும் தன்னை இழந்து
    நெருப்பாய்த் தஹிக்கிற குணமுள்ளவர், தனக்கு வித்தை சொல்லித் தந்த ஆசானுக்கருகே நின்று, இடுப்புக்குத் துண்டு கொடுக்கிற பவ்யம்... நடிகர்
    திலகமன்றி வேறு யார் செய்தாலும் அழகு பெறாது.

    போட்டிக்கழைக்கும் காதலியைக் கண்டிக்க வார்த்தையின்றி, மறுபடி மறுபடி படுதா விலக்கி
    வந்து கோபங்காட்டும் நடிப்பு.. ஈரேழு பதினாலு
    லோகத்திலும் யாருக்கும் வராது.

    நலந்தானாவுக்கூடே பெரியவர் பாலையா நெகிழ்வாய் மடி தடவ.. கண்கள் கசிய நாதஸ்வரம் வாசிக்கிறவர் நிஜமான இசைக் கலைஞரில்லை..
    நடிகரென்ற நிஜம் மறப்போமே? அந்தக் கலை மயக்கம், நடிகர் திலகம் படமன்றி வேறு படம் தராது.
    *****

    காலம் வென்று சிரிக்கும் கதையாய், பாடலாய், இசையாய், வசனமாய், பளீரென்ற படப் பதிவாய்,
    மற்ற நடிப்பு ஜாம்பவான்களின் அற்புதப் பங்களிப்பாய், இயக்குநரின் நேர்த்தியாய்...
    தில்லானாவுக்குள் எண்ணற்ற அற்புதங்கள்
    நிறைந்து கிடக்கின்றன.

    ஆனாலும்...

    பட்டென்று தலை தூக்கிய கோபத்தால் பாதியிலேயே கச்சேரியை முடித்து விட்டு, சிவப்பு நிறப் பட்டு அங்கவஸ்திரத்தைத் தோளின் மூலைக்குச் சுண்டி விட்டு மேடை விட்டிறங்கும்
    ஒரு வித்வானாகவே நம் இதயம் பதிந்த நடிகர் திலகம் தாண்டி தில்லானாவைச் சிந்திக்க முடியவில்லை... என்னால்.

    அதனால்தான் முன்பொருமுறை எழுதினேன்...
    " நடிகர் திலகம் நாதஸ்வரம் போல. அவரின்றி
    இந்தப் படமே இல்லை."
    *****


    ( முரளி சார்... ஜில் ஜில் ரமாமணி போல நானும்
    வாசித்து முடித்து விட்டேன்... உங்களுக்கு
    நாதஸ்வரமே மறந்து விட்டதா... இல்லைதானே?)

  2. Thanks sivaa thanked for this post
    Likes Harrietlgy, sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •