ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்



சென்னை, மார். 12: பிரபல நகைச்சுவை நடிகர் "ஓமக்குச்சி நரசிம்மன்' சென்னையில் புதன்கிழமை காலமானர். அவருக்கு வயது 73.

ஓமக்குகுச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற 3 மகள்களும், காமேஸ்வரன் என்ற மகனும், 3 பேத்திகளும், ஒரு பேரனும் உள்ளனர்.

சிறிது காலமாக தொண்டை புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சில நாட்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து திருவல்லிகேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் புதன்கிழமை இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நரசிம்மன்: திருச்சியை பூர்விகமாக கொண்ட நரசிம்மன் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 13-வது வயதில் "அவ்வையார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்பு கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்து எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்து வந்தார்.

பின்பு நடிப்பின் மீது இருந்த தீராத காதலினால் நடிகர் சுருளிராஜன் உதவியுடன் 1969ல் "திருக்கல்யாணம்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

அதை தொடர்ந்து சென்னையில் செயல்பட்டு வந்த "நாடக மந்திர்' நாடக சபாவில் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். அப்போது அரங்கேற்றப்பட்ட "நாரதரும் நான்கு கடவுள்களும்' என்ற நாடகத்தில் அவரது "ஓமக்குச்சி' எனும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு ரசிகர்களால் "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்கப்பட்டார். பின்பு அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நடித்த படம் "தலைநகரம்'.

ஓமக்குச்சி நரசிம்மனின் 2-வது மகள் நிர்மலா அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் சனிக்கிழமை காலை சென்னை வந்த பிறகு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
நன்றி -- தினமணி

heartfelt condolence