Results 1 to 4 of 4

Thread: மோகனி&

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Manama, Bahrain
    Posts
    17
    Post Thanks / Like

    மோகனி&

    கடைசி பேட்டி
    1
    ராஜேஷ். வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். இவனும் ஒரு ஸ்பெலன்டர் தான்.

    உலக ஞானம். அனைத்து நாட்டு அரசியலும் விரல் நுனியில். இந்திய நடப்பை கரைத்து குடித்தவன். யார் மந்திரி யார் சட்டமன்ற உறுப்பினர் அவர் ஜாதகம் என்ன என்று அனைத்தும் அறிவான்.

    வேலை. மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியில் நிருபர். தனியே ஒரு மேசை நாற்காலி. விலை உயர்ந்த கணிப்பொறி இரண்டு. நான்கு தொலைபேசிகள். இரண்டு செல் பேசி வேறு. குளிர் சாதனம் பொருத்தப்பட்ட அறை. பணியிடத்தில் மரியாதை. காலையில் அவன் நுழையும் போது காலை வணக்கம் சொல்லவாவது அவனிடம் பேச வேண்டும் என்று காத்திருக்க சக பெண் ஊழியர்கள். ஆனாலும் மார்னிங் மார்னிங் என்று சொல்லிக்கொண்டே யாரையும் பாராமல் தன் அறைக்குள் செல்லம் ஆணவப் பாங்கு.

    ஆனாலும் வேலையில் சளைத்தவன் அல்ல.

    மெல்லிய விளக்கு அவன் அறையில். கத்திரி கோபாலனின் ஸாக்சாபோன் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் ‘ராமு ஒரு டீ‘ என்று -சொல்லிவிட்டு சுழலும் நாற்காலியில் மெத் என உட்கார்ந்தான்.

    மேசையின் மேல் பல மஞ்சள் போஸ்ட்-இட்டுகள். பல குறிப்புகள். வலது பக்கம் இரண்டு தொலைகாட்சிப் பெட்டிகள். ஒன்று அவன் வேலை செய்யும் சூப்பர் டிவி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒலி இல்லை. இன்னொன்றில் போட்டி டிவியான ரெயின் டிவி ஒலி ஒளியுடன்.

    மேசையின் மேல் இருந்த ஒரு போஸ்ட்-இட்டு மஞ்சள் காகிதத்தை எடுத்து சின்னதாக 4 என்று பென்சிலால் எழுதினான்.

    ராஜேஷைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய பல விஷயங்கள் உண்டு. பள்ளிப்பருவத்திலிருந்து கையில் எண்களை எழுதும் பழக்கம் உண்டு.

    கிரிகெட்டில் வேக பந்து வீச்சாளன். பந்து வந்ததும் விரலால் கையில் ஒரு எண் எழுதுவான். அந்த எண் தான் அவனுடைய ஓடும் தூரம். 8 என்று எழுதினால் 8 அடி தூரத்திலிருந்து ஓடி வந்து பந்து வீசுவான். சில முறை 18 என்று எழுதிவிட்டு 18 அடி தூரத்திலிருந்து ஓடி வந்து மூச்சிறைக்க பந்து வீசியதுண்டு. எந்த நேரத்தில் எந்து எண் எழுதுவான் அதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரியாது. அவனுக்கும் தெரியாது. நண்பர்கள் அவனை கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் அவன் இல்லாமல் ஆட்டம் இல்லை. ஒரு ஆட்டத்தில் குறைந்தது நான்கு விக்கெட் நிச்சயம்.

    பரீட்சைக்கு படிக்க உட்கார்ந்தாலும் இதே கதை தான். புத்தகத்தை ஒரு முறை புரட்டிப் பார்ப்பான். 15 அத்தியாங்கள் இருந்தாலும் 5 என்று எழுதினால் 5 பாடங்களே படித்து செல்வான். ஆனாலும் வாழ்க்கையில் இதுவரை தோற்றதில்லை. இது நல்ல பழக்கமா இல்லை கெட்ட பழக்கமா என்று அவனுக்கு தெரியாது. ஆனாலும் அவனை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்ப்படவில்லை.

    தொலைபேசி ஓலித்தது. அவனுடைய பாஸ் இந்த சூப்பர் டிவியின் பிரம்மா அழைத்தார். அவரை சீஃப் என்று கூப்பிடும் வழக்கம் இவனுக்கு. ‘இப்பவே வரேன் சீஃப்’ என்று கூறிவிட்டு எழுந்து நாற்காலியை சுழலவிட்டு சென்றான். நாற்காலி நான்கு முறை சுழன்று ஓய்வதற்கு முன் அந்த பெரிய அலுவலகத்தின் மறுபகுதியில் உள்ள டைரெக்டரின் அறைக்குள் நுழைந்தான்.

    “ராஜேஷ்உங்களை ஒரு முக்கியமான விஷயத்திற்காக கூப்பிட்டேன்”

    “சொல்லுங்க சீஃப்”. ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற முகபாவனை வைத்துக் கொண்டான். இவனைவிட சிறந்த நடிகன் உண்டோ?

    “டெஹல்கா விவகாரம் கேள்விப்பட்டு இருக்கீங்களா?”

    “நிச்சயமா சீஃப் . ஒரு வலைதள பத்திரிகை. மத்திய அரசாங்கத்தில் பெரிய தலைகளிடம் ராணுவ ஆயுதங்களை விற்பதாக பொய்யான பேரம் பேசி ஏனைநழ பிடித்து அவர்கள் லஞ்சம் வாங்கியதை காட்டி கலக்கியவங்க தானே?”

    “ஆமா. இதுக்கு பெயர் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம். உங்களுக்கு ஆபரேஷன் துரியோதன் பத்தி தெரியுமா?”

    “ஆஃப் கோர்ஸ் சீஃப். நாடாளமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியிருக்காங்க. ஆளும் கட்சிகளிருந்து எதிர்கட்சி மாநில கட்சிவரை அனைவரும் மாட்டினாங் இதில். அதை கோப்ரா போஸ்ட்-னு ஒரு பத்திரிகை வெட்வெளிச்சமாக ஆக்கியருக்காங்க”.

    “அது மாதிரி ஒரு பிரம்மாண்டத்தை நாம ஏன் செய்யக்கூடாது?”.

    ஒரு நிமிடம் மௌனம் சாதித்துவிட்டு “அவசியம் சீஃப் ” என்று உற்சாகமாக கூறினான்.

    'Would you like to be part of such a sensation?'

    (நீங்கள் இந்த மாதிரி ஒரு திருப்புமுனை முயற்சியில் பங்க கொள்ள விரும்பிகிறீர்களா?)

    “நிஜமாகவா சீஃப்?"

    'Chief. It will be a lifetime opportunity'

    (இது என்னுடைய வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. நான் தயார்”.

    “நல்லது. என்னப் பண்ணலாம்னு யோசியுங்க. அப்புறம் என்னை வந்து பாருங்க.. வாழ்த்துக்கள்”.

    “என் பாக்கியம்” என்று விட்டு உற்சாகமாய் வெளியே வந்தான்.

    ரவி எதிர்பட “மச்சான் சௌக்கியமா?” என்று விசாரித்தான்.

    “என்னடா சந்தோஷமா இருக்கே? வா தம் அடிச்சிகிட்டே பேசலாம்”.

    “நீ தம் அடி. நா எப்ப அடிச்சிருக்கேன் அந்த கருமத்தை? நான் டீ குடிக்கிறேன்”.

    அலுலக உணவு விடுதியில் ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்தார்கள்.

    “மச்சான் எங்க அப்பா எங்கடா இருக்காங்க?”

    “இது என்னடா முட்டாள்த்தனமான கேள்வி. உங்க அப்பா அமெரிக்காவிலே இருக்காரு. உங்க அம்மாவும் தான்”.

    “அக்கா தங்கச்சி அண்ண தம்பிங்க?”

    “என்னடா உளர்ற. உனக்கு யாரும் கிடையாது. நீ ஒன்டிக் கட்டை. ஆமாம் என்ன லூசு மாதிரி இதேல்லாம் என்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க?”

    “இல்லைடா. இமயமலையில் உயரத்தில இருக்க ஒரு சிகரத்தில ஒரு சாமியாரை பேட்டி எடுக்கப் போறேன். அங்க போனவங்க யாரும் இதுவரை உயிரோடு திரும்பியதில்லை”. எடுத்துக் கொண்ட காரியத்தின் ரகசியத்தை கருதி ஏதோ கதை சொன்னான். இவனைவிட பெரிய கதையாசிரியன் உண்டோ?

    “வேணாம்டா மச்சான். இது ரொம்ப ரிஸ்க். நீ ஏதாவது த்ரிஷா ஜோதிகான்னு உள்ளூர்ல பேட்டி எடுத்துட்டு ஜாலியா இருப்பியா? அதைவிட்டுட்டு இமயமலை போறானாம்”.

    “ரவி சாதாரணமா வாழ்ந்த சாகிற ஒரு மனுஷனா இருக்க விரும்பலைடா. நம்ம பேரு உலகம் பூரா பரவனும். பிபிசி சிஎன்என் இங்கேர்ந்தெல்லாம் வாய்ப்பு வரனும். அதுலதான்டா த்ரில்.

    ஏதோ செய். பிரச்சனையின்னா என்னை கூப்பிடு. பாலும் ஊத்துவேன். சங்கும் நானே ஊதுவேன்” என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தான்.

    மீண்டும் தன் அறைக்கு வந்து மேசையில் இன்று எழுதிய எண்ணைப் பார்த்தான். 4 என்று இருந்தது. ஒரு எண்ணம் தோன்றியது.

    முதலாளியை அழைத்தான். ரகசியமாய் கூறினான்.

    “Brilliant idea, Rajesh. Go ahead. But be careful. Meet me later to discuss in details” என்றார்.

    யோசித்துப் பார்த்தான். உடல் சூடு அடைந்து காதின் பக்கம் காற்று அடித்தது. இதை நான் செய்யத்தான் போகிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Newbie Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Manama, Bahrain
    Posts
    17
    Post Thanks / Like

    2
    தமிழக அமைச்சரவை.

    பத்தாவது முறையாக இந்த பட்டியலைப் படித்தான் ராஜேஷ்மணி 11. இரவு பணிக்கு வருபவர்கள் வந்திருந்தனர். அவன் மேசையின் மேல் மூன்று காலியான டீ கோப்பைகள். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாததால் வெளியே சென்று வரவேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை.

    கணினியில் தட்டித்தட்டி பல விஷயங்களளை சேகரித்திருந்தான். 10 வயதில் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் அடித்ததற்காக திருப்பி அவரை அடித்துவிட்டு ஓடிய சிறுவன் பலப்பல குற்றங்கள் புரிந்து விட்டு இன்று அமைச்சரவையில். கல்வி மந்திரி.

    நிலத்தகராறில் தம்பியின் கைகளை வெட்டிவிட்டு பல படிகளைத் தாண்டி இன்று சுகாதாரத்துறை மந்திரி.

    ராமேஸ்வர கடல்களில் பல முறை படகுகளில் நடக்கும் சட்டவிரோத செயல்களை பிடிக்கச் சென்ற காவலர்களிடம் சிக்கய ஒருவர் இன்று மீன் வளத்துறை அமைச்சர்.

    பரம்பரையாக அரசியலில் இருந்த வரும் குடும்பத்திலிருந்த வந்த ஒருவர் இன்று போக்குவரத்து துறை அமைச்சர். தெரிந்த எந்த குற்றத்திலும் மாட்டியதில்லை. மாட்டாவிட்டால் குற்றம் செய்ததாக ஆகிவிடுமா?

    இன்று அவன் எழுதிய எண் 4. அவன் குறித்து வைத்திருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4.

    மொபைலில் பாஸை அழைத்தான். ஒரு நிமிட மௌனம். “இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன் சீஃப் ”.

    தலைசோடு ( ஹெல்மெட்) எடுத்துக் கொண்டு கிளம்பினான். லிஃப்ட் ஓட்டுபவரிடம் அக்பர் நாளைக்கு கார் எடுத்துட்டு வருவேன் நீங்க காலையில வீட்டுக்கு போயிட்டு என் பைக்கை ஓட்டிகிட்டு வந்துடங்க” என்றான்.

    “சரி சார்” என்றுவிட்டு கதவை திறந்துவிட்டான் அக்பர்.

    அலுவலக கட்டிடத்திலிருந்து 1 நிமிட நடை. மரங்கள் நிறைந்த சோலையில் அவன் அலுவலகம். காட்டில் வந்தது போல ஒரு அமைதி. காய்ந்த சருகுகள் மீது ஒவ்வொரு காலாக வைத்து அந்த சருகுகள் நொறுங்கும் சத்தத்தில் “செய்யலாமா வேணாமா” “செய்யலாமா வேணாமா” என்று பாடினான்.

    பீட்டர்ஸ் சாலை பிடித்து அண்ணாசாலைக்குள் நுழைந்து ஜெமினி மேம்பாலம் பிடித்து வேகமாக கீழே சறுக்கி நுங்கம்பாக்கம் சாலையில் கைகளில் காற்று சில்லென்று அடிக்க இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு பைக் ஓடியது. அவன் எண்ணமோ அதைவிட வேகமாக ஓடியது.

    நீர் லாரி ஓடி பள்ளமாக இருந்த சாலை இப்போது சரியாகிவிட்டது. ஆனாலும் அவன் பைக் பழக்க தோஷத்தில் மெதுவாக சென்றது. வள்ளுவர் கோட்டத்திற்கு ஏதிரே 12 மணிக்கும் மேலே திறந்திருக்கும் ஒரு தேனீர் கடையில் வண்டியை நிறுத்தினான்.

    இன்னும் 15 நிமிடம். அதற்குள் ஒரு குளியல் போட்டுவிட்டு சாந்தோம் பீச்சில் பாஸை சந்திக்க வேண்டும். முடியுமா? பாதியில் கப்பை வைத்துவிட்டு பணம் தராமல் நகன்றான். வழக்கமாக வரும் கடை. நட்பு சில நேரத்தில் நல்லது. ஆனால் அவன் செய்யும் தொழிலுக்கு நட்பு நல்லதல்ல. எத்தனைப் பேருக்கு அவனை தெரியாமல் இருக்கிறதோ அத்தனை நல்லது.

    அவசரமாக கோடம்பாக்கம் பிரிட்ஜ் கடந்து லிபர்டி பார்க் எதிரே உள்ள சந்தில் பைக்கை நிறத்திவிட்டு அவசரமாக வீடு திறந்து முதல் மாடிக்கு சென்றான். அவன் மேசையின் மேல் ஒரு போஸ்ட் இட். இந்த முறை அதில் எண்கள் இல்லை. அவன் கையெழுத்தும் இல்லை.

    மின்னல் குளியல். சாதாரண உடைக்கு மாற்றம். காரை கராஜிலிருந்து எடுத்த விரட்டினான்.

    5 நிமிடம் தாமதமாக போய் சேர்ந்தான். அவன் முதலாளியோ அங்கு முன்பே வந்திருந்தார்.

    தயாரித்து வைத்திருந்த பட்டியலை காண்பித்தான். அந்த நான்கு பெயரையும் காண்பித்தான். பிறகு தன் திட்டத்தை விவரித்தான்.

    “நல்லா யோசிச்சிட்டீங்களா? இது ரொம்ப ரிஸ்க்கா இருக்கும் போலிருக்கே. ஆனா இது நடந்தா இது தொலைக்காட்சி அகராதியில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்”

    “சீஃப் இது செஞ்சே ஆகனும். இதப்பாருங்க” என்று வீட்டிலிருந்து அவன் எடுத்துவந்த அந்த போஸ்ட் இட்டை காண்பித்தான்.

    அவர் உறைந்து போனார்.

    அந்த நாலு அமைச்சர்களில் நானும் ஒருவன். சந்திக்கத் தயார். எப்போ, எங்கே என்று சொல். - அமைச்சர் கரி.நீலவாணன்



  4. #3
    Junior Member Newbie Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Manama, Bahrain
    Posts
    17
    Post Thanks / Like
    3


    கரி. நீலவாணன் வீட்டில் ஒரே கூட்டம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வீட்டுத்தோட்டத்தில் ஒரு மணி நேரம் உலவும் பழக்கம் உள்ளவர் அன்று எழுந்திரிக்கவில்லை.

    பத்திரிகை டிவி வானோலி உள்நாட்டு வெளிநாட்டு நிருபர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

    நீலவாணன் இயற்கை எய்தவில்லை. யாரோ அவரை செய்ற்கையாக மேலே அனுப்பினர் என்ற செய்தி மக்களை அதிர வைத்திருந்தது.
    தொண்டர்கள் திரளாக வந்துக்கொண்டிருந்தனர்.

    மையிலாப்பூர் திருவல்லிக்கேணி பெரியவர்கள் டிவி முன் அமர்ந்துக் கொண்டு “கெட்டவாளுக்கெல்லாம் நல்ல சாவே வராது. கொஞ்சமாவது நல்லது பண்ணியிருந்தா இவாளுக்கு இந்த நிலமை வந்திருக்குமா? பகவான் எல்லாத்தையும் பார்த்துண்டுதான் இருக்கார்” என்ற ஊர் நியாயம் பேசிக்கொண்டிருந்தனர்.

    முதல்வர் தலமை காவல் ஆனயரை கூப்பிட்டு 24 மணி நேரத்திற்குள் கொலையாளியை கண்டு பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    பல முறை கரி. நீலவாணனிடம் வம்பளத்த எதிர்கட்சிகள் எங்கே பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் தங்களை கொலை கேசில் உள்ளே தள்ளிவிடுவார்களோ என்று பயந்திருந்தனர்.
    உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அவரின் அரசியல் விரோதிகள் மலர் வளையம் எடுத்து சென்றனர்.

    வீட்டிற்கு முன் பலத்த காவல். யாரையும் உள்ளே விடவில்லை. தூரத்திலிருந்து தொண்டர்கள் பார்த்துச் சென்றனர்.
    மகாபலிபுரம் ரோட்டில் இரவு முழுதும் தூங்காமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ராஜேஷுக்கு 5.50க்கு தொலைபேசியில் அழைப்பு.

    ராஜேஷ்இட்ஸ் வெரி சீரியஸ். நீலவாணனை இன்னிக்கு 4.30 மணிக்கு யாரோ கொன்னுட்டாங்க. உங்க லிஸ்ட்ல இருந்த 4 பேர்ல ஒருத்தர் இல்லை. நீங்க இப்ப ஜாக்கிரதையா இருக்கணும். உடனே டிவி ஸ்டேஷனுக்கு வாங்க. மத்ததை அப்புறம் பேசுவோம்.

    இரவு முழுதும் தூங்காமல் இருந்தது இப்படி ஒரு செய்தி வந்தது இவை சேர்ந்து அவனுக்கு தலை சுற்றியது. டைடெல் பார்க் அருகே வந்த பிறகு வேகமாக வண்டியை திருப்ப முயன்றபோது வண்டி அருகிலிருந்து மரத்தை மோதி நின்றது. தலையில் பயங்கர அடி. கையை தலையில் வைத்து எடுத்தான். கை முழுவதும் ரத்தம். மொபைல் எடுத்து சீஃப் எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்து. டைடல் பார்க் கிட்ட என்றுவிட்டு மயங்கிவிழுந்தான்.

    கண் திறந்து பார்த்தபோது அடையாரில் ஏதோ ஒரு தனியார் மருத்துவமனையில்.

    பாஸ் மிகவும் கோபத்திலிருந்தார். “என்ன காரியம் பண்ணிட்டிங்க ராஜேஷ்என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க அடையார் கிட்ட?”
    சீஃப் ஏன் இப்படி டென்ஷனா இருக்கீங்க? நாம டிஸ்கஸ் பண்ண விஷயத்தைப் பத்தி தீவிரமா யோசிச்சுகிட்டு இருந்தேன். நேரம் போனதே தெரியலை”

    “நீங்க ஒரு சீரியஸ் பிரச்சனையில மாட்டிகிட்டு இருக்கீங்க. அமைச்சர் கரி. நீலவாணனை யாரோ கொன்னுட்டாங்க”

    “தெரியுமே சீஃப். அதைத்தான் காலையிலே போன்ல சொன்னீங்களே. அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

    ராஜேஷ் புரியாம பேசாதீங்க. நீங்க இந்த விபத்து பண்ணாம இருந்திருந்தீங்கன்னா போலீஸ் வந்திருக்காது. போலீஸ் வராம இருந்திருந்தா உங்ககிட்ட அமைச்சரோட லிஸ்ட் அவங்க கையில மாட்டியிருக்காது. நல்லா ஹைலைட்டரில் நீங்க போட்ட நாலு அமைச்சர்ல ஒருத்தர் கொலை செய்யப்பட்டிருங்காங்க. புரியுதா?

    தலை வலித்தது ராஜேஷுக்கு. தலையில் அடி. மேலும் இந்த செய்தி. மருத்துவமனையின் மருந்து வாசனை. கண்ணை மூடினான்.
    ராஜேஷ்ராஜேஷ்என்று பாஸ் கூப்பிட்டதைக் கூட ஏதோ தொலைவில் பேசுவதாக நினைத்து தூங்கச் சென்றான்.

    பல மணி நேரம் தூங்கியது போல் இருந்தது. வயிறு முட்ட கண் விழித்தான். அவன் படுக்கையை சுற்றி போலீஸ்.

    அதில் மிகவும் சீனியர் போல் இருந்த ஒரு அதிகாரி மிஸ்டர் ராஜேஷ்உங்க கிட்டே இருந்து ஒரு லிஸ்ட் கிடைச்சிருக்கு. அதில 4 பெயரை ஹைலைட் பண்ணியிருக்கீங்க. என்ன அர்த்தம் அதுக்கு?
    அந்த அதிகாரிக்கு பின் நின்றுக் கொண்டு அவனுடைய பாஸ் உதட்டை குவித்து குவித்து ஒலியில்லாமல் இன்டெர்வ்யூ என்று கூறினார்.

    பல முறை டப்பிங் செய்து பழகிய ராஜேஷ்அதை உடனடியாக புரிந்துக் கொண்டான். எந்த சீரியலிலும் ஆங்கிலம் பேசும் ஒரு பாத்திரம் வந்தால் உடனே ராஜேஷ்பேசினா ஸ்டைலாக இருக்கும் என்று அவனை கூப்பிட்டு விடுவார்கள். வேலையே இல்லாவிட்டாலும் ஆபிஸில் இருக்கும் ஜாதியை சேர்ந்தவன். அதனால் பல முறை மற்றவர் வேலையை செய்து முடிப்பான்.
    “சார் இந்த நாலு அமைச்சரையும் இந்த மாசம் பேட்டி எடுக்கனும்னு ப்ளான் போட்டிருந்தோம். இதில என்ன தப்பு?”

    “எதுக்காக இந்த 4 பேரையும் தேர்ந்தெடுத்தீங்க?”

    “சார் தமிழ் நாட்டை வடக்கு தெற்கு கிழுக்கு மேற்குன்னு பிரிச்சா இந்தா நாலு பேரும் திசைக்கு ஒருவராக வராங்க. நான்கு திசையிலிருந்து நான்கு அமைச்சர்கள் என்ற தலைப்பில பேட்டி எடுக்க திட்டம் போட்டிருந்தோம். வேற என்ன சந்தேகம் உங்களுக்கு?”

    அதிகாரி இந்த பதிலில் திருப்தியடைந்தது போல் இருந்தது. அவன் பாஸும் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    “உங்களுக்கு நீலவாணன் கொலை செய்யப்பட்டது தெரியுமா?”

    “தெரியும் சார். எங்க பாஸ் காலையில என்ன பார்க்க வந்தாரு. அப்ப சொன்னாரு”.

    “உங்ககிட்ட அதைப் பத்தி சொல்ல வேண்டிய அவசியம்?”

    “என்ன சார் இது சாதாரணமாகவே நாங்க நியூஸ் மீடியாவில இருக்கறவங்க. அதுவும் இல்லாம நீங்க பேட்டி எடுக்க வேண்டிய அமைச்சர்ல ஒருத்தர் இல்லையின்னு வருத்தத்தோட சொன்னார்”.

    “காலையில மகாபலிபுரம் ரோட்ல என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க?”

    “சார் தினம் ஒரு பீச்சு போவேன். இன்னிக்கு நீலாங்கரை போயிட்டு வந்தேன்” பொய்.
    “ஆல் ரைட். இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தா திரும்பி வருவோம். ஒரு வாரம் ஊர்ல இருங்க” என்று கூறிவிட்டு போலீஸ் பட்டாளம் அகன்றது.

    ஆனால் விட்டுச் சென்ற நர்ஸ் எந்த கோணத்திலும் நர்ஸ் போல் இல்லை.
    இவள் ஒரு பெண் போலீஸ் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
    அதை அவரும் உணர்ந்தது போல அவன் பாஸும் “குட் ஜாப் ராஜேஷ்உடம்பை பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு விடை பெற்றார்.
    ஏதோ நினைவுக்கு வந்தது போல ஜீன்ஸ் பான்டில் கைவிட்டான். அமைச்சர் எழுதியது போல வந்திருந்த போஸ்ட் இட் இருந்தது. போலியாக நர்ஸ் வேடம் இட்டிருந்த போலீஸ் பெண்மணி பார்ப்பதற்குள் மீண்டும் அதை உள்ளே வைத்தான்.

    ஆனால் அவன் செய்வதையெல்லாம் ஒரு சிசிடிவி காமிரா படம் பிடிப்பதை உணரவில்லை.மறுபடியும் தூங்கச்சென்றான்.

  5. #4
    Junior Member Newbie Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Manama, Bahrain
    Posts
    17
    Post Thanks / Like
    4

    ராதிகா. வயது 24. மலர்ந்த முகம். எதிரே வந்தால் உற்று பார்க்கத்தோன்றும் முகம். நளினமான நடை. நாகரீகத்திற்கும் ஆபாசத்திற்கும் இடையில் ஒரு உடை உடுத்தும் பாணி. ஆனாலும் தமிழ் பெண்மணி என்று கண்டு பிடித்து விடலாம். நீளமான முகம். நீலமான கண்கள். இடை வரை வரும் முடியை பார்லர் சென்று கழுத்துவரை ஆக்கியிருந்தாள். கழுத்தில் இருதய வடிவ டாலர் கொண்ட ஒரு செயின். ஹீரோ ஹோண்டா ஆக்டிவா வண்டி. இவள் கதையின் ஹீரோயின்.

    நேராக சூப்பர் டிவியின் வரவேற்ப்பு அறைக்கு வந்தவள் டைரக்டரை சந்திக்க வேண்டும் என்று கூறினாள்.

    “முன்கூட்டியே வாங்கிய அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று ரிசப்ஷனிஸ்ட் கேட்க “ஆம்” என்று கூசாமல் பொய் சொன்னாள்.

    “பெயர்?”

    “ராதிகா”.

    “எத்தன மனிக்கு அப்பாயிண்மென்ட்?”

    மெல்லிய இருதய வடிவில் இருந்த கைகடிகாரத்தில் கை உயர்த்தி பார்த்துவிட்டு 10.30 என்றாள்.

    “ஓ. இப்ப 9.45 தான் ஆகிறது. இன்னும் எம் டி வரவில்லை. இப்படி உட்காருங்க” என்று உபசரித்தாள் நந்தினி - சூப்பர் டிவியின் ரிசெப்ஷனிஸ்ட்.

    “நன்றி” என்று கூறிவிட்டு கறுப்பு நிற தோல் சோபாவில் அமர்ந்தாள். அருகில் மேடையில் இருந்த ரீடர்ஸ் டைஜஸ்டை எடுத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டு படிக்கத்துவங்கினாள்.

    நந்தினி. வயது 21 இருக்கும். பணக்கார அப்பாவின் செல்லப் பெண். வேலை செய்வதே வீட்டை விட்டு வருவதற்கு என்னும் நம்பிக்கை கொண்டவள். ராஜேஷ் மீது கொள்ளை பிரியம். ஆனால் இதுவரை அவனிடம் பேசியது இரண்டே வார்ததைகள். அதுவும் பல முறை. குட் மார்னிங். பை. ஒரு முறை “மதியம் சேர்ந்து சாப்பிடலாமா” என்று அவனிடம் கேட்க அவன் “இன்னிக்கு பிஸி” என்று சொன்னதால் கோபம் கொண்டு அவனிடம் பேசாமலே தூரத்தில் நின்று காதலிக்கிறாள்.

    அரை மணிக்கு ஒரு முறை டாய்லெட் சென்று லிப்ஸ்டிக் கரையாமல் இருக்கிறதா முடி கலையாமல் இருக்கிறதா என்று பார்ப்பதே அவளுக்கு வேலை.

    நந்தினி ராதிகாவை பார்த்து புன்னகைத்துவிட்டு டாய்லெட் நோக்கி நடந்தாள். இந்த நேரத்திற்காக காத்திருந்தவளைப் போல சட்டென்று அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். சரளமாக டைரக்டெரின் அறையை நோக்கி நடந்தாள். யாரும் உணர்வதிற்கு முன்பே அவரின் டயரியில் ‘ராதிகா 10.30’ என்று எழுதிவிட்டு சட்டென்று வெளியே வந்து புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினாள்.

    ராஜேஷ்பிரச்சனையினால் வழக்கம் மறந்திருந்த டைரக்டர் ராஜகோபால் நந்தினி சொன்ன காலை வணக்கத்திற்கு பதில் சொல்லாமல் உள்ளே அவசரமாக சென்றார்.

    நந்தினி அவர் அறைக்குள் சென்றுவிட்டாரா என்று பார்த்துவிட்டு இண்டெர்காமில் போன் செய்தாள்.

    “சார் 10.30 மிஸ் ராதிகாவுக்கு அப்பாயிண்ட்மென்ட கொடுத்திருங்கீங்க. அவங்க வெயிட் பண்றாங்க. உள்ளே வர சொல்லட்டுமா?”

    “ராதிகா? நான் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தேனா? எப்ப?” என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டே டயரியை புரட்டினார். அதில் ‘ராதிகா 10.30’ என்று எழுதியிருந்தது. மிகவும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே “ஓகே உள்ளே வரச் சொல்லுங்க” என்றார்.

    “மிஸ் ராதிகா நீங்கள் உள்ளே போகலாம்” என்று சொல்லிவிட்டு வரவேற்பாளினிகளின் முத்திரை சிரிப்பை அளித்தாள்.

    “குட் மார்னிங் சார் உள்ளே வரலாமா?”

    “வாங்க மிஸ் ராதிகா. உட்காருங்க. உங்களுக்கு அப்பாயிண்மென்ட கொடுத்ததா எனக்கு ஞாபகம் இல்லையே?”

    “சார் நான் உங்களுக்கு கால் பண்ணேன் நீங்க இன்னிக்கு வரச் சொன்னீங்க”.

    “எப்போ?”

    “10ம் தேதி”.

    “10ம் தேதி!” யோசித்தார். அன்றுதான் ராஜேஷ்அடிபட்டு ஹாஸ்பிடலில் கூத்து நடந்தது. அந்த குழப்பத்தில் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தது மறந்திருக்கலாம்.

    “ஆல்ரைட். என்ன விஷயமாக வந்திருக்கீங்க?”

    “சார் நான் ஒரு ஜர்னலிஸ்ட். பத்திரிக்கை நிருபர் கோர்ஸ் முடிச்சிருக்கேன். பார்ட்-டைமாக நிருபர் வேலையும் செஞ்சிருக்கேன். ஒரு வட இந்திய சானலுக்கு தமிழ் மொழிபெயர்ப்பும் செஞ்சிருக்கேன்”.

    “பட் எங்களுக்கு இப்ப புதிய நிருபர்கள் தேவையில்லை மிஸ்!”

    “சார் நான் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸத்தில ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கேன். சமீபத்தில வட இந்திய சானல் டுடே அன்ட் டுமாரோவில் வந்த சாமியார்கள் செய்யும் அட்டுழியங்களை அம்பலம் செஞ்ச அன்டர் கவர் நிருபர் நான்தான்” என்றாள்.

    இதை கேட்டதும் ராஜகோபால் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

    “சுவாரசியமாக இருக்கே. உங்களைப்பத்தியும் நீங்கள் செய்த வேலைகளைப்பற்றியும் இன்னும் சொல்லுங்கள்” என்றார்.

    அவள் தன் மென்மையான குரலில் பேசத்தொடங்கினாள். இனிமையான குரல். அழகான தோற்றம். முறத்தால் புலியை விரட்டும் தமிழ் வீரப்பெண். மெல்லிய கைகளை அசைத்து அசைத்து அவள் பேசும் போது வெண்டைக்காயை ஏன் லேடீஸ் ஃபிங்கர் என்று சொல்கிறார்கள் என்று புரியும். அவள் பேச்சில் லயித்துவிட்டார் டைரெக்டர். அவளுடைய சிவந்த உதடுகளையே பார்த்துக்கொணட்டிருந்தவருக்கு அவள் அதற்கு மேல் பேசியது ஏதுவுமே காதில் விழுந்ததாக தெரியவில்லை.

    “வெரி நைஸ். உங்க டாகுமென்ட்ஸ் எல்லாத்தை ஹெச் ஆர் டிபார்மென்டுக்கு கொடுங்க. நீங்க நாளைக்கே வேலைக்கு சேரலாம். சம்பளம் 10000”. என்றார். இரவு நேரத்தில் பணிபுரிய நேர்ந்தால் சாப்பாடு போக்குவரத்து அனைத்தும் கம்பெனியின் செலவு என்றும் மற்ற பல சௌகரியங்களை விரிவாக சொன்னார்.

    “மிக்க நன்றி” என்று கூறிவிட்டு பணிவாக வெளியே சென்றாள். நந்தினிக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

    தனது ஹோண்டா ஆக்டிவா மீது அமர்ந்துக் கொண்டு ஸாம்ஸங் மொபைலை எடுத்து “போன காரியம் சக்சஸ்” என்று சொல்லிவிட்டு வைத்தாள்.



Similar Threads

  1. Replies: 26
    Last Post: 19th July 2012, 03:42 AM
  2. Replies: 4
    Last Post: 8th May 2012, 09:09 PM
  3. Replies: 4
    Last Post: 16th May 2011, 05:30 PM
  4. Replies: 0
    Last Post: 27th April 2011, 03:04 AM
  5. Replies: 24
    Last Post: 16th February 2011, 11:08 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •