சமூக சேவையில் ஆத்மதிருப்தி கிடைக்கிறது! மாரி ஜார்ஜ்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருபவர் ஜார்ஜ். அதோடு, மாரி, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் செய்யலாம் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சமூக சேவையில் ஆர்வம் கொண்டவரான ஜார்ஜ், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றிய பிள்ளைகள் உள்ளிட்ட பலரது திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உதவிகள் பெற்று தருகிறார்.


இதுபற்றி ஜார்ஜ் கூறுகையில், சென்னை ஸ்பெசல் ஒலிம்பிக் என்ற பெயரில் வருடந்தோறும் நிகழ்ச்சி நடத்துகிறேன். இதில், முழுக்க முழுக்க உடல்ஊனமுற்ற பிள்ளைகள் 75 சதவிகிதமும், மனநலம் குன்றிய பிள்ளைகள் 25 சதவிகிதமும் இருப்பார்கள். எல்கேஜி பிள்ளைகளுக்கு நடத்துவது போன்ற விளையாட்டு போட்டிகள் வைப்போம். கடந்த மூன்று வருடங்களாக இதை நடத்தி வருகிறேன். எனக்கென ஒரு டீம் உள்ளது. இதற்கு என்ஜிஓக்கள் வந்து கலந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஸ்பான்சர் செய்வார்கள். பிள்ளை களுக்கு உணவுகள் வழங்குவார்கள். சான்றிதழ், மெடல் எல்லாம் கொடுப்பார்கள்.


மேலும், சமீபத்தில் கண்ணு தெரியாத ஒரு பெண்ணுக்கு ஜி.வி.பிரகாஷ் பாட வாய்ப்பு கொடுத்தார் அல்லவா. ஆனால் நாங்கள் அந்த மாதிரி பெண்ணுக்கு உதவிகள் செய்ய மாட்டோம். அந்த பெண்களை இந்த நிலைமைக்கு கொண்டு வர அவரது பெற்றோர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள். அதனால் அவர்க ளுக்குத்தான் நாங்கள் உதவிகளும், விருதும் கொடுப்போம். அதுவும் வீடுதேடி சென்றே கொடுப்போம்.


அதேமாதிரி சென்னையில் வெள்ளம் வந்தபோது ஒரு தம்பதியினர் இலவசமாக மெழுகுவர்த்தி கொடுத்தார்கள். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தினால் இன்னும் பெரிய அளவில் சமூக சேவை செய்வார்களே என்பதால், அவர்கள் பேமிலி மெம்பர்களை வைத்தே அவர்களுக்கு விருது கொடுக்க வைத்தோம். அப்படி செய்வதால் அவர்களது பேமிலியும் அவர்கள் செய்த சமூகசேவையை பற்றி உணருவார்கள். முன்பு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என அவர்களை திட்டியவர்கள் கூட நாங்கள் உற்சாகப்படுத்துவதைப் பார்த்து அவர்களை அங்கீகரிப்பார்கள்.


.அவர்களுக்கு ஒரு விருது கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பு கொடுத்து, இவர்களுக்கு அவர்களை உதவி செய்ய வைப்போம். அதன்பிறகு அந்த சமூகஆர்வலர்கள் அவர்களிடம் உதவி பெற்று இன்னும் அதிகப்படியான சமூகசேவை செய்வார்கள். பின்னர் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே தொடர்பு இருக்காது. 1998ல் இருந்து இந்த விசயத்தை தொடர்ந்து செய்து வருகிறேன்.


இப்போது நான் ஓரளவு முகம் தெரிந்த நடிகராகிவிட்டதால், இந்த உதவியை இன்னும் அதிகப்படியாக செய்யவிருக்கிறேன். டைரக்டர் பாலாஜிமோகன் என்னோட சோசியல் ஒர்க் ப்ரண்டுதான். தனுசும் என்னோட ஈவன்டுகளுக்கு வந்திருக்கிறார். முக்கியமாக நாங்கள் எந்த டோனர்களிடம் பணம் வாங்குவதில்லை. ஈவண்டில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை அவர்களை செய்து கொடுக்க சொல்லி விடுவேன். சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்றுதிறனாளி, மனநலம் குன்றிய பிள்ளைகளை உற்சாகப்படுத்தவே இதை செய்து வருகிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக் கிறது என்கிறார் அது இது எது ஜார்ஜ்.



நன்றி: தினதந்தி