Results 1 to 10 of 185

Thread: 'Vennira Aadai' SHREEKANTH

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்

    1969-வாக்கில் காங்கிரஸ் பேரியக்கம் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு நின்றபோது, தமிழகத்தைப்பொறுத்தவரை காங்கிரஸ் என்றால் அது பெருந்தலைவரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் என்றாகிப் போனது. வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் வலுவாக இருந்தபோதிலும் தமிழகத்தில் அது ஒரு 'லெட்டர்பேட்' கட்சி என்ற அளவில்தான் இருந்தது. இ.காங்கிரஸுக்கு தொண்டர்கள் பலமில்லை.

    தமிழகத்தைப்பொறுத்தவரை திரைப்பட கலைஞர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களில் பங்கெடுத்த அளவுக்கு காங்கிரஸில் பங்கேற்கவில்லை. இன்னும் பலர் எந்த அரசியல் இயக்கத்தின்பக்கமும் சாராமல் தானுண்டு தங்கள் சினிமா உண்டு என்றிருந்தனர். முத்துராமன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன் போன்ற பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச்சார்ந்தவர்கள். அறுபதுகளில் துவங்கி காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரே கலைஞராக நடிகர்திலகம் மட்டுமே விளங்கினார். இந்நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயக்கம் பிளவுண்டபோது நடிகர்திலகமும் பெருந்தலைவர் பக்கம் துணை நிற்க, அவரோடு தோளோடு தோள் நின்று ஸ்தாபன காங்கிரஸ்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டவர்கள் மூவர். அவர்கள் சசிகுமார், ஸ்ரீகாந்த், பிரேம் ஆனந்த். இவர்களில் பிரேம் ஆனந்த் கட்சியில் இருக்கிறார் என்பதற்காகவே நடிகர்திலகம் தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்தார்.

    இவர்களில் சசிகுமார், இந்திய விமானப்படையில் பணியாற்றியவராதலால் 'கேப்டன் சசிகுமார்' என்ற பெயரும் உண்டு. (இதே போல 'நீலமலைத்திருடன்' படத்தில் நடித்த ரஞ்சன், விமான பைலட்டாகப் பணியாற்றியதால் அவருக்கும் கேப்டன் ரஞ்சன் என்ற பெயர் உண்டு. இவர்களெல்லாம் 'ஒரிஜினல் கேப்டன்கள்'). சசிகுமார், இறுதிமூச்சுவரை பெருந்தலைவரின் தொண்டனாகவே இருந்து மறைந்தார். தீ விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக் காப்பாற்ற போராடியதில் இருவருமே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மூன்று நாட்கள் போராடியபோது, வாழை இலையில் கிடத்தப்பட்டு, நடிகை கே.ஆர்.விஜயாவின் செலவில் ஒரே அறையில் ஆறு ஏர்-கண்டிஷன்கள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். அந்நேரம் சின்னஞ்சிறுவனாக இருந்த அவர்களின் ஒரே மகன் விஜயசாரதி அப்போதைய நடிகர் சங்கத்தலைவராக இருந்த நடிகர்திலகம், செயலாளர் மேஜர், பொருளாளர் வி.கே.ஆர். ஆகியோரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். (விஜயசாரதி இப்போது தொலைக்காட்சித் துறையில் நடிகர் மற்றும் அறிவிப்பாளராக புகழ்பெற்று விளங்குகிறார்).

    இவர்களோடு, ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் பெருந்தலைவரின் தொண்டனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மேடைப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர்தான் ஸ்ரீகாந்த். 1973-வாக்கில் தமிழ்நாட்டில் கடும் விலைவாசி உயர்வு ஆட்கொண்டபோது, பெருந்தலைவரின் ஆணைப்படி ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் விலைவாசி உயர்வை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து போராட்ட ஊர்வலம் கிளம்பி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாவார்கள். தினமும் ஒவ்வொரு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட, தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர். அப்படி நான்காம் நாள் தலைவர்களோடு தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் காங்கிரஸ் கொடிபிடித்து ஊர்வலம் போய் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் ஊர்வலத்தைக்காண வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக நின்று வாழ்த்தினர். அதிலும் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட அன்றைக்கு கடும் கூட்டம்.

    ஏழாம் நாள் திங்களன்று பெருந்தலைவர் காமராஜரே ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற செய்தியை அறிந்த அன்றைய கலைஞர் அரசு, முதல்நாள் மாலையே அதுவரை கைது செய்திருந்த அனைவரையும் விடுதலை செய்தது. இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜ் திட்டமிட்டபடி மறுநாள் போராட்டத்தில் கலந்துகொண்டார். அன்றைக்கு யாரும் கைது செய்யப்படவில்லை. (கலைஞர்தான் நரியை நனையாமல் குளிப்பாட்டுபவராச்சே. தன் ராஜதந்திரத்தைக் கைக்கொண்டார்). ஆனாலும் பெருந்தலைவர் விடவில்லை. "என் நண்பர் கருணாநிதி என்னை கைது செய்யாமல் விட்டது எனக்கு மகிழ்ச்சியல்ல. விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்தால்தான் மகிழ்ச்சி" என்று அறிக்கை விட்டார்.

    பெருந்தலைவரின் மறைவு வரை ஸ்தாபன காங்கிரஸில் இருந்த ஸ்ரீகாந்த், அவரது மறைவுக்குப்பின்னும் அங்கேயே தொடர்ந்தார். நடிகர்திலகம் போன்றோர் இந்திரா காங்கிரஸில் சேர முடிவெடுத்தபோதும் கூட அங்கே செல்லாமல், பா.ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்து வந்தவர், 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியாக மாறியபோதும் அங்கேயே இருந்து, 1977 பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் பா.ராமச்சந்திரனை ஆதரித்தும், 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

    இதனிடையே காந்தி மண்டபத்தின் அருகே பெருந்தலைவரின் நினைவிடத்தின் மேலே வைக்கப்படுவதாக இருந்த பெரிய கைராட்டை, எமர்ஜென்ஸி காலத்தின்போது அகற்றப்பட்டது. கட்டிடம் வெறுமனே மொட்டையாகக் காட்சியளித்தது. அப்போது மீண்டும் கைராட்டையை அவரது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கோரி கவர்னர் மாளிகைக்குச் சென்று மனுக்கொடுத்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களோடு ஸ்ரீகாந்தும் சென்றிருந்தார். மத்தியில் ஜனதாகட்சி ஆட்சியமைத்தபின்னர் 'கைராட்டை' மீண்டும் பெருந்தலைவர் நினைவிடத்தில் இடம் பெற்றது. பின்னர் ஜனதா கட்சி உடைந்து சிதறுண்டபின், ஸ்ரீகாந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

    பெருந்தலைவர் மறைந்த பின் நடிகர்திலகம் எடுத்த அரசியல் முடிவுக்காக அவரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்ததால், நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின. (அப்போது நடிகர்திலகம் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடரவேண்டும் என்பதே ரசிகர்களில் பெரும்பாலோரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது). ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே ஸ்ரீகாந்த் இருந்தார். ஒருகாலத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லை என்றிருந்த நிலை மாறத்தொடங்கியது. இந்நேரத்தில் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர் நடிகர்திலகத்தின் படங்களில் துணைப்பாத்திரங்களில் இடம்பெறத்துவங்கவே, சிவாஜி படங்களில் ஸ்ரீகாந்த் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். (அதே சமயம் நடிகர்திலகத்தைப்பற்றி ஸ்ரீகாந்தை விட பல மடங்கு கடுமையாக விமர்சனம் செய்திருந்த எம்.ஜி.ஆர்.பக்தரான தேங்காய் சீனிவாசன், சிவாஜி படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறத்தொடங்கினார்).

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •