பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே வருகிறது ஷங்கரின் ஐ!

பெரிய படங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கவும், போட்ட பணத்தை முடிந்தவரை எடுக்கவும் ஷங்கரின் ஐ படத்தை பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே திரையிடுகின்றனர்.பொங்கலுக்கு ஆம்பள, ஐ, என்னை அறிந்தால் ஆகிய மூன்று படங்கள் வெளியாவதில் உறுதியாக உள்ளன.

இவற்றில் ஐ மிகப் பிரமாண்ட பட்ஜெட் படம். ரூ 150 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். உலகளவில் 20000 (இருபதாயிரம்) அரங்குகளில் வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதைய நிலபவரப்படி 5000 அரங்குகளாவது கிடைக்குமா என்பதே உண்மை.தமிழகத்தில் உள்ள மொத்த அரங்கிலும் வெளியிட முயற்சிக்கின்றனர். ஆனால் 3 படங்கள் வெளியாவதால் தலா 300 அரங்குகள் கிடைத்தாலே பெரிய விஷயமாகிவிட்டது.இந்த நெருக்கடியைத் தவிர்க்க, ஐ படத்தை பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே வெளியிட முடிவு செய்துள்ளனர். அப்படி வெளியிட்டால் 500 அரங்குகளுக்கு மேல் கிடைக்கும். ஒரு வாரம் வசூல் பார்த்த பிறகு, 300 அரங்குகளாகக் குறைத்துக் கொள்ளலாம் என்று திட்டம். அப்படிச் செய்தால், விஷால் மற்றும் அஜீத் படங்களுக்கும் போதிய அரங்குகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.இந்த ஏற்பாடு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஏற்புடையதாக உள்ளது.