Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    மகாத்மாவும் மக்கள் தொண்டரும்


    நாளிதழ்களை புரட்டும்போது மனம் மகிழத்தக்க வகையில் பெரிதாக ஒன்றும் இருக்காது என்று தெரியும். என்றாலும் சில செய்திகள் மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. சமீபத்தில் கூட, அன்னை தெரேசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறிய கருத்துக்கள் பற்றிய எனது ஆதங்கத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது, அடுத்த துயரம்.

    ‘மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட். பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆதரித்தார். அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது. அவர் தேசத்தந்தையாக அழைக்கப்பட தகுதி உடையவரா?’ என்றெல்லாம் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேட்டிருக்கிறார். கேட்டவர் சாதாரண ஆசாமியா? என்றால் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.காரரோ? என்றாலும் புரிந்து கொள்ளலாம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவிகளை வகித்த பெருமகனார் திரு.மார்கண்டேய கட்ஜூ.

    உத்தமர் காந்தியின் கருத்துக்களையும் கொள்கைகளையும் யார் வேண்டுமானாலும் மறுக்கலாம். ஜனநாயகத்தில் அதற்கு உரிமை உண்டு. காந்தியாரே கூட இதை வரவேற்பவர்தான் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது. ஆனால், அவரோடு மாற்றுக் கருத்துடையோர் கூட சொல்லத் தயங்குபவற்றை அவரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும் அவரது கருத்துக்கள் முட்டாள்தனமானவை என்றும் கட்ஜூ கூறுவது ஏற்க முடியாதது. அதுவும் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர், இப்போதும் பிரஸ் கவுன்சில் தலைவராக இருப்பவர் இதுபோன்ற பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கக் கூடியது மட்டுமல்ல, இதுபோல, தேசத் தந்தையை, தேசியக் கொடியை, தேசிய சின்னத்தை அவமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமும் கூட.

    ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு சட்டம் படித்தவரே நீதிமானே இப்படி பேசினால், எங்கு போய் முட்டிக் கொள்வது? இதே சாதாரணமானவர்கள் இதுபோன்று கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது தேசவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பாயும். ஆனால், கட்ஜூ என்ன குப்பனா? சுப்பனா?மேல்தட்டு மனிதர் அல்லவா? அதனால், மாநிலங்களவையில் அவரை பூச்சரம் சுற்றப்பட்ட மெத்தென்ற பட்டுக் குஞ்சலத்தால் செல்லமாக தட்டி லேசாக கண்டித்திருக்கிறார்கள்.

    கட்ஜூ அவர்களின் தரமான சிந்தனைக்கும் ஆழ்ந்த அறிவுக்கும் சமீபத்திய இன்னொரு உதாரணம் உண்டு. டெல்லி சட்டப் பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ...‘‘பா.ஜ.வின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை அறிவித்தது தவறு. அவரை விட அழகான, ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி பா.ஜ.வில் இணைந்த ஷாஜியா இல்மி (பெண்மணி)யை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் பா.ஜ.வெற்றி பெற்றிருக்கும்’’........இது அரசியல் மேதை கட்ஜூ உதிர்த்த முத்து.

    அன்னை தெரேசா, உத்தமர் காந்தியார் போன்ற நாட்டுக்கு உழைத்தவர்களை, மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்களை, அவர்களுக்கு தொண்டாற்றியவர்களை இப்படி தரக்குறைவாக பேசுவது இப்போது பேஷனாகி விட்டது.

    நினைத்துப் பார்க்கிறேன்..... கலைத்துறையிலும் அரசியலிலும் தன் ஊதியத்தையும் உழைப்பையும் மக்கள் நலனுக்காக செலவிட்ட பொன்மனச் செம்மலை என்னவெல்லாம் பேசினார்கள்? திமுகவில் இருந்து தலைவர் வெளியேற்றப்பட்டபோது, அவரை, காங்கிரசின் ஏஜெண்ட் என்றார்கள். அதிமுகவை ‘ஒட்டு காங்கிரஸ்’ என்றார்கள். அந்நிய செலாவணி மோசடியில் இருந்து தப்பிக்கவே, காங்கிரசின் மிரட்டலுக்கு பயந்து திமுகவை பிளந்தார் என்றெல்லாம் கட்ஜூகளுக்கு அண்ணன்கள் அள்ளி விட்டார்கள். இந்தப் படம் (அதிமுக) 100 நாள் ஓடுமா? என்று ஏகடியம் பேசினார்கள்.

    அதெல்லாம் உண்மை என்றால், காங்கிரசில் தலைவர் ஐக்கியமாகி இருக்க வேண்டுமே? திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவோடு இந்திரா காங்கிரஸ் போட்டியிட விரும்பியபோதும், திரு.மோகன் குமாரமங்கலம் தலைவரை சந்தித்து பேசியபோதும்,

    (இங்கே ஒரு விளக்கம். குமாரமங்கலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது நினைவு வந்ததால் எழுதுகிறேன். நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் நமது இளஞ்சிங்கம் சகோதரர் திரு.யுகேஷ் பாபு போன்ற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறிப்பிடுகிறேன். திரு.யுகேஷ் பாபு, ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் என்று, சகோதர உணர்வோடு, அன்போடு கோருகிறேன். எல்லா தகவல்களுமே எப்போதாவது, எதற்காவது கைகொடுக்கும்.

    1926ம் ஆண்டு ஆங்கிலேயேர் ஆட்சியில் சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியும் காங்கிரசிலேயே ஒரு அணியாக இருந்து செயல்பட்ட சுயராஜ்யா கட்சியும் போட்டியிட்டன. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை.காங்கிரஸ்காரர்கள் நீதிக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற டாக்டர் பி. சுப்பராயனை சந்தித்து, அவரையும் சில உறுப்பினர்களையும் காங்கிரசுக்கு கொண்டு வந்து டாக்டர் சுப்பராயனையே முதல்வராக்கினர். அந்த டாக்டர் பி.சுப்பராயனின் மகன்தான் திரு.மோகன் குமாரமங்கலம். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த அவர் பின்னர், காங்கிரசில் சேர்ந்தார். இந்திரா காந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். 1973ம் ஆண்டு விமான விபத்தில் காலமானார். இவரது சகோதரி பார்வதி கிருஷ்ணன். 1974ம் ஆண்டு கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவரின் ஆதரவோடு கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்போது நடந்த கோவை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் திரு.அரங்கநாயகம் வெற்றி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களின் மகன்தான் காங்கிரசில் இருந்து பின்னர் பா.ஜ.வுக்கு சென்று திரு.வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்ற மறைந்த திரு. ரங்கராஜன் குமாரமங்கலம்.)

    விஷயத்துக்கு வருகிறேன். திரு.மோகன் குமாரமங்கலம் சந்தித்து காங்கிரசுக்கு ஆதரவு தர கோரியபோதும், அதை ஏற்காமல் 6மாதக் குழந்தையான அதிமுக என்னும் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடும் என்று தலைவர் அறிவித்தார். மக்களின் ஆதரவோடு தலைவரால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மாயத்தேவர் தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார்.

    ஸ்தாபன காங்கிரசின் என்.எஸ்.வி. சித்தன் இரண்டாவது இடத்தையும் திமுகவின் பொன். முத்துராமலிங்கம் 3வது இடத்தையும் பெற்றனர். இந்திரா காங்கிரசின் வேட்பாளர் சீமைச்சாமிக்கு டெபாசிட் போனது. இதன் மூலம் திராவிட இயக்கத்தை கட்டிக்காக்கும் விடிவெள்ளி, அண்ணாவின் தம்பி என்பதை தலைவர் நிறுவினார். 4 ஆண்டுகளில், தமிழகத்தில் நல்லாட்சியையும் நிறுவினார். பின்னர், அவர் உடல் நிலை சரியில்லாமல் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டதைக் கூட மனிதாபிமானமின்றி ஏளனம் செய்தனர்.

    நம்நாடு திரைப்படத்தில் ஒரு காட்சி.... அநியாயத்தை தட்டிக் கேட்கும் தலைவரை ரங்காராவ் குழு அடித்து சாலையில் காந்தி சிலையின் கீழே போட்டிருக்கும். அங்கே வரும் செல்வி. ஜெயலலிதா தலைவரின் மயக்கத்தை தெளியவைத்து, சிலையாக நிற்கும் காந்தியிடம் நியாயம் கேட்டு குமுறுவார். அதற்கு தலைவர், ‘‘அவரிடம் போய் சொல்கிறாயே. அவருக்கு நேர்ந்த கதியை மறந்து விட்டாயா?’’ என்று கேட்பார். நான் மிகவும் ரசித்த காட்சி.

    என்ன செய்வது?..

    பாவிகளுக்காக மனம் வருந்தி, மக்கள் கடைத்தேற வழிகாட்டிய ஏசுபிரானை சிலுவையில் அறைந்த உலகம்........

    உலகம் உய்ய ஓரிறைக் கொள்கையை அருளிய நாயகம் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் உயிரைப் பறிக்க விரட்டிய உலகம்........

    இன வெறிக்கு எதிராக குரல் கொடுத்து அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்ற உலகம்........

    கட்ஜூ இப்படி தைரியமாக கருத்து கூற சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அக்கிரமக்கார உலகம்........

    தலைவர் என்ற பெயரில் மக்கள் தொண்டராய் வாழ்ந்து ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளலுக்கு தோட்டாவை பரிசளித்த நயவஞ்சக உலகம்........

    நன்றி கெட்ட உலகம்.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Thanks orodizli, Richardsof thanked for this post
    Likes orodizli, ainefal, Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •