Quote Originally Posted by Murali Srinivas View Post
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் கையில் இருந்தும் உள்ளே போவதற்கு சிரமப்பட்ட அன்றைய சூழல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.

டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 43 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -

(தொடரும்)

அன்புடன்
முரளி சார் உங்கள் ஞாபக சக்தி மிகமிக அபாரம்.
மிகுதியையும் உடன எழுதிவிடுங்கள் ஆர்வம் அதிகமாகிறது.

(எனது தனிமடல் பாருங்கள்)