Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    ராஜாவின் படங்களுக்கு நன்றி முத்தையன்.

    அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். ராஜா! இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! படங்களைப் பார்த்ததும் இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!

    இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் 'ராஜா' ரசிகர்களுடன் ஆப்பிள் மாலைகளுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 54. ஆனால் ராஜா மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (ராஜாவாக யாரோ சிவாஜியாம். அவருக்கு அப்போது வயது 44 ஆம். இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.)

    ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே. அவன் எடையே 50 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி? அவனுடைய அந்த ஹேர் ஸ்டைல் இருக்கிறதே! நெற்றியின் முன் மொத்தக் கற்றையாய் புரளும் கண் கொள்ளா அழகு. அந்த வசீகர வதன முகம். மன்மதன் இவன் அழகைக் கண்டு எங்கோ வெட்கி ஓடி விட்டானாம். அவன் கண்கள் 'துறுதுறு'வென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? கண்களை அங்குமிங்கும் உருட்டி நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?

    லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? வைரங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வைராக்கியம் பிடித்தவளையும் தன் வலையில் விழ வைக்கும் சாமார்த்தியக்காரன். 'கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை' கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?

    இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே 'டபக்'கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். எதிரியை சரியாக ஆழம் பார்ப்பான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிருவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும். 'யேய்! என் பெயர் ராஜா' என்று கூறி முடிவாக உதைத்து அனுப்புவான்.

    இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் ராஜாவின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஐந்து பூதங்களுமே இவனுடைய ஐந்து அடிக்கும் அடக்கமாகி இவனுக்கு அடிமைகள். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! ராஜா அறிமுகமாவதே ஜெயிலில்தான்.

    வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய இன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.

    இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
    தீராத விளையாட்டுப் பிள்ளை. கோட், பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்கப் பட்டுப் போகுமாம்.

    இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி! எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி நடந்தபடியே காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன்.

    தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டு பரீட்சித்தால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். ராஜா என்பான் அப்புறம் இல்லை என்பான். சேகர் என்பான். கவர்ச்சிக் கள்ளன். திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். கொள்ளைக்கார கும்பலை மடக்கும் போது, தன் ஜோடியிடம் கூட தான் யாரென்று வாயால் சொல்லாமல் 'நான் ஒரு போலீஸ்தான்' என்று ஒரு சிறு தலையசைவில் துப்பாக்கி கொண்டு ஜாடையில் காட்டுவான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே. சூதுவாதுகளை அவை கொண்டே வெல்வான்.

    சகோதரன் என்று தெரியாமல் அவனுடன் துள்ளித் துள்ளி கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கார்ப் அழகாக காற்றில் பறக்க இவன் மோதும் போது கடல் அலைகளைவிட ஆர்ப்பாட்ட சப்தம் அரங்கங்களில் எழும். 'ராஜா.... ராஜா இல்ல' என்று அங்கேயும் மாறி மாறி உதைபட்டு பின் உடன்பிறந்தவனை உதைப்பான். உணர்ந்ததும் உற்சாகம் கொள்வான்.

    வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாச கிளைமாக்ஸ் போர் குருஷேத்திரப் போர் போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.

    தன் தாயைக் கொடுமைப்படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான். தாயைத் துன்புறுத்தியவனை அதே முறையில் துன்புறுத்தி இன்புறுவான்.

    அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம். அவனின் இந்த அற்புதப் படைப்பை அவனே வியந்து வியந்து பார்த்து மீண்டும் வியப்பானாம்.

    இவன் மனங்களை மட்டுமா கொள்ளையடித்தான்? பணங்களையும் கொள்ளையடித்தான். ஆம்! வசூலிலும் இவன் எவருமே நெருங்க முடியாத ராஜாதான். பாரடைஸ் இன்னும் சொர்க்கபுரியானது. இவன் அழகு உருவத்தைப் பார்ப்பதற்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது. இவனை எதிர்த்த கூட்டம் கூட இவன் ஸ்டைலில், அழகில் மயங்கி இவனை ஒளிந்து ஒளிந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தது.

    இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன்.

    அவன்தான் எங்கள்

    எவர்க்ரீன் 'ராஜா'.

    எங்கள் இதய 'ராஜா'

    ('ராஜ' சேவை தொடரும்)
    Last edited by vasudevan31355; 19th August 2015 at 07:55 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks sss, Russellbpw, Russellmai, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •