-
3rd April 2017, 05:29 PM
#11
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 170– சுதாங்கன்.

முக்தா பிலிம்ஸ் தயாரித்த படம் ‘தவப்புதல்வன்’! சென்னை பைலட் தியேட்டரில் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் கதை, வசனத்தை தூயவன் எழுதியிருந்தார்.
தூயவன் ஒரு காலத்தில் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தவர். தூயவன் ஒரு இஸ்லாமியர்! அவர் மிகவும் பிரபலமடைந்தது மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவிற்காக அவர் எழுதிய ‘தீர்ப்பு’ நாடகத்தின் மூலமாகத்தான். அந்த நாட்களில் இந்த நாடகம் மிகப்பிரபலம்!
அடுத்து ஏவி.எம். ராஜனுக்காக ‘பால்குடம்’ என்கிற நாடகத்தை எழுதினார். இளையராஜாவை பஞ்சு அருணாசலத்திற்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் மூலமாகத்தான் இளையராஜா இசையமைப்பாளரானார்.
அவர் மகன் இக்பால் இன்றைக்கு திரையுலகில் பிரபல இயக்குநர். அவர் மனைவி ஒரு பிரபல எழுத்தாளர். இயக்குநர் – நடிகர் பாக்யராஜ், பாரதிராஜாவிடம் சேருவதற்கு முன்பாக முதலில் தூயவனிடம்தான் உதவியாளராக இருந்தார்.
‘கேள்வியும் நானே பதிலும் நானே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ ஆகிய படங்களை தயாரித்தவர் தூயவன். மாலைக்கண் நோய் வரும் ஒரு கதாநாயகனின் கதைதான் ‘தவப்புதல்வன்’!
கதாநாயகனின் குடும்பத்தில் பரம்பரையாக மாலைக்கண் நோய் இருக்கும். தனக்கு மாலைக்கண் இருப்பது தன் தாய்க்கு தெரியக்கூடாது என்று நினைத்து தடுமாறுவார் கதாநாயகன் சிவாஜி. அடிப்படையில் அந்த கதாபாத்திரம் ஒரு பாடகன். ஓட்டல்களில் பாடுவார்.
அந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு ஆங்கில பாடல் இருக்கும். LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE என்பது ஆங்கில வரிகள். இந்த ஆங்கில பாட்டுக்கு சிவாஜிக்காக அஜித் சிங் என்ற பாடகர் குரல் கொடுத்திருப்பார். இந்த படத்தில் அத்தனை பாடல்களுமே பிரபலம். ‘இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்’ ‘அது இறைவன் அருளாகும்’ என்ற பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அத்தனை பிரபலம் அந்த பாடல். ‘வசந்த மாளிகை’. இந்த படம் தெலுங்கில் முதலில் எடுக்கப்பட்டது. அதற்கு பெயர் ‘பிரேம்நகர்’. அதை தமிழில் டி. ராமாநாயுடு எடுத்தார். சிவாஜியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று ‘வசந்த மாளிகை’. இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருப்பார். அத்தனை பாடல்களும் மிகப்பிரபலம். இன்றைக்கு எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாட்டும் `மயக்கமென்ன இந்த மவுனமென்ன’ பாடல்தான். இந்த படத்தின் சாயல் கமல்ஹாசன் நடித்த `வாழ்வே மாயம்’ படத்தில் தென்படும்.
1973ம் வருடம் சிவாஜி 7 படங்களில் நடித்தார். பாரதவிலாஸ், ராஜராஜசோழன், பொன்னூஞ்சல் எங்கள் தங்க ராஜா, கவுரவம், மனிதருள் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை. பாரத விலாஸ் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம். ஏ.சி. திருலோகசந்தரின் நிறுவனமான சினிபாரத் இந்தப் படத்தை தயாரித்தது. திருலோகசந்தரே இயக்கியிருந்தார். இன்றைக்கும் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் இந்த படத்தில் வரும் `இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு! என்பதை எல்லா சேனல்களுமே ஒளிபரப்பிக்கொண்டிருக்கும். எல்லா பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார் படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன். இந்திய நாடு என் வீடு பாட்டில், அந்த வீட்டில் வசிக்கும் பல மொழி மதக்காரர்களும் சேர்ந்து இந்த பாட்டை பாடுவார்கள். தெலுங்கு குடும்பத் தலைவன் தெலுங்கில் பாடுவார். அவர் மனைவி கன்னடத்தில் பாடுவார். பஞ்சாபி குடும்பம் இந்தியில் பாடும். கேரள முஸ்லீம் குடும்பம் மலையாளத்தில் பாடும். அப்போது இந்தி பாடலுக்காக இந்தி பிரபல கதாநாயகர் சஞ்சீவ் குமாரை அந்த காட்சியில் இருக்க வைத்திருப்பார்கள். மலையாளத்திற்கு மது, தெலுங்கிற்கு நாகேஸ்வர ராவ் இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சிவாஜி கேட்டு கொண்டதற்காக வந்து தோன்றி விட்டு போனார்கள். சென்னை ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி. உமாபதி இந்தபடத்தை எடுத்தார். இந்த படத்தின் கதையை உருவாக்கியவர் அரு. ராமனாதன். இவர் ஒரு பிரபல எழுத்தாளர். பிரசுரகர்த்தா. இவர் நிறைய சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறார். அந்த நாட்களில் அதாவது 60களில் காதல் என்று ஒரு மாதப் பத்திரிகையை நடத்தினார். பிரேமா பிரசுரம் என்பது அவருடைய மிகப்பிரபலமான பதிப்பகம். இவர் கதை எழுத, ஏ.பி. நாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி ‘ராஜ ராஜ சோழன்’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். தமிழில் வந்த முதல் சினிமாஸ்கோப் படம் இதுதான். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவாஜி இந்தப் படத்தில் ராஜராஜ சோழனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. `பொன்னூஞ்சல்’ இந்த படத்தை கோமதி சங்கர் பிக்சர்ஸ் சார்பில் கே.ஸ். குற்றாலிங்கம் தயாரித்தார். இந்தப் படத்தை சி.வி ராஜேந்திரன் இயக்கியிருந்தார். கட்டபொம்மன் படத்திற்கு வசனமெழுதிய சக்தி கிருஷ்ணசாமி இந்த படத்திற்கு வசனமெழுதியிருந்தார். ஆனால் இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்திற்கு ஆரம்ப நாள் வசூலை தேடிக்கொடுத்தது எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்போதெல்லாம் ஒரு படம் ரீலிசாவதற்கு முன் பாடல்கள் வானொலியில் வந்துவிடும். இலங்கை வானொலியைப் போலவே சென்னை வானொலி நிலையமும், விவித் பாரதி என்று ஆரம்பித்து பாடல்களை முன்கூட்டியே ஒலிபரப்பத் தொடங்கியது. ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்ற பாட்டு அப்படி ஒரு பிரபலம் அடைந்தது.
அப்போதெல்லாம் விவித் பாரதியின் மக்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு வாக்களிக்க வேண்டும். அந்த வருடத்தில் இந்த பாடல் தொடர்ந்து ஏராளமான வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தது. இந்த படம் சென்னை பிளாசா தியேட்டரில் வெளியானது. சிவாஜிக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்திருந்தார். ‘எங்கள் தங்க ராஜா’ இந்த படத்தை தெலுங்கு படத்தயாரிப்பாளர் ராஜேந்திரபிரசாத் தயாரித்து இயக்கியிருந்தார். தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தின் தமிழாக்கம் இது!
படத்திற்கு சின்னப்ப ரெட்டி என்பவர் கதை எழுதியிருந்தார். திரைக்கதை வசனத்தை எழுதியவர் பாலமுருகன். இசை – கே.வி. மகாதேவன். அவரது நிறுவனத்திற்கு பெயர் கஜபதி ஆர்ட் பிக்சர்ஸ். இதில் சிவாஜிக்கு மிகவும் மாறுபட்ட வேடம். படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த படம் ‘கவுரவம்’. இந்த படம் முதலில் யு.ஏ.ஏ. குழுவினரின் நாடகம்! இந்த நாடகத்திற்கு பெயர் ‘கண்ணன்’ வந்தான். யு.ஏ.ஏ. என்பது ஒய்.ஜி மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதி நடத்தி வந்த நாடகக்குழு.
(தொடரும்)
-
3rd April 2017 05:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks